நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 3.

Posted by அகத்தீ Labels:

 எந்தப் பிரச்சனையைக் கொண்டு போனாலும் அதனை மேலோட்டமாகக் கேட்டு போகிற போக்கில் ஏதேனும் சொல்லும் வழக்கம் அவரிடம் கிஞ்சிற்றும் கிடையாது .

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 3.தர்க்கம் புரிவது அல்லது விவாதிப்பது ஒரு அரிய கலை . தன்னோடு உரையாடுகிறவர் சொல்வதை காதுகொடுத்துக் கேட்பது மட்டுமல்ல ; “READ BETWEEN LINES.” எனும் ஆங்கிலச் சொலவடை ஒன்று உண்டு .அதாவது சொல்வதையும் சொல்லாமல் விட்டதையும் இணைத்துப் புரிந்து கொள்வது அல்லது சொற்களுக்குள் உள் நுழைந்து உண்மையைத் தேடுவதும் என்பதாகும் . அதற்கும் மேல் மார்க்சியப் பார்வையில் வரலாற்று சமூக பின்புலத்தோடு புரிந்து கொள்வதுமாகும் .
தோழர் ஏஎன் என அன்போடு அழைக்கப்படும் தோழர் ஏ.நல்லசிவனிடம் விவாதிக்கிற ஒவ்வொருவரும் பெறும் அனுபவம் அதுவே . அவர் எந்தப் பிரச்சனை ஆயினும் பிரித்து மேய்ந்துவிடுவார் என அவரைப் பற்றி வேடிக்கையாகச் சொல்வோம் .
எந்தப் பிரச்சனையைக் கொண்டு போனாலும் அதனை மேலோட்டமாகக் கேட்டு போகிற போக்கில் ஏதேனும் சொல்லும் வழக்கம் அவரிடம் கிஞ்சிற்றும் கிடையாது . முழுமையாய் புரிந்து நாம் ஏற்றுக்கொள்கிற விதத்தில் வழிகாட்டக்கூடியவர் . அதற்காக மணிக்கணக்காக உட்கார்ந்து பேச சலிக்கவே மாட்டார் .அப்படி ஒரு கம்யூனிஸ்ட் வார்ப்பு அவர் .
நான் வாலிபர் சங்கப் பொறுப்பில் இருந்தபோது பலமுறை பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்திருக்கிறேன் .
விருதுநகர் வாலிபர் சங்க மாநில மாநாட்டில் நம் தோழர்கள் கொல்லப்படும் போது நம் எதிர்வினை எத்தகையதாக இருக்க வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது .அரசியலாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் என்று பொதுச் செயலாளராகிய நான் பதில் சொன்னேன் . விவாதம் முடிந்தது .மாநாடு ஏற்றுக்கொண்டது .
மாநாடு முடிந்தபின் ஓர் தோழர் அந்த விவாதத்தைக் குறிப்பிட்டு சில விமர்சனங்களை முன்வைத்து தோழர் ஏஎன்னுக்கு கடிதம் எழுதி இருந்தார் .
தோழர் ஏ என் என்னைக்கூப்பிட்டு விபரம் கேட்டார் .நான் நடந்ததைச் சொன்னேன் . அதன் பின் தோழர் எ என் சொன்னார் , “ நீங்கள் சொன்ன பதில் சரிதான் . ஆனால் அதை முன்வைத்த விதம்தான் தப்பு . எதிரியோடு வாதம் செய்கிற போது அவரைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு .அதற்கேற்பச் செய்ய வேண்டும் . மக்களிடம் பேசும்போது அவர்களை வென்றெடுக்க வேண்டும். அதற்கேற்ப கன்வின்சிங் டோனில் அதாவது ஒப்புக்கொள்ள வைக்கிற முறையில் விவாதம் அமைய வேண்டும் . கட்சி அமைப்புக்குள் தோழர்களின் தவறான அணுகுமுறையை அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் , ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதே சமயம் கறாராக இருக்க வேண்டும் . சுயவிமர்சனமாக நமது பிழைகளை ஒப்புக்கொள்ளுவதன் மூலமே தோழர்கள் தங்கள் தவறுகளை உணரவைக்க முடியும் .”
பேச்சினூடே லெனின் சொன்ன உதாரணத்தைச் சொன்னார் , “ எதிரிகளை விமர்சிக்கிற போது பூனை எலியைக் கவ்வுகிற மாதிரி கவ்வ வேண்டும் . நண்பர்கள் தோழர்களிடம் எனில் பூனை தன் குட்டியைக் கவ்வுவதுபோல் கவ்வ வேண்டும்.” ஏற்கெனவே நானும் அறிந்த உதாரணம்தான் எனினும் அதை உதாரணங்களோடு அவர் எடுத்துச் சொன்ன போது அது புது ரத்தம் பாய்ச்சியது போலானது .
இடது சாரி /கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்கட்சி ஜனநாயகம் பேசப்படும் அளவு செயலில் இருக்கிறதா ? சுயபரிசீலனை ஆவணங்கள் வெறும் எட்டுச் சுரைக் காயாகவே அங்கும் மாறிப் போய்விட வில்லையா ? அக்கட்சிகளிலும் மனம் நொந்தோர் இல்லையா ? இவையும் இவைபோன்ற இன்ன பிற கேள்விகளும் எளிதில் புறந்தள்ள முடியாதவையே !
ஆயினும் கம்யூனிஸ் கட்சியில் அமைப்புசார் நடைமுறையே முன்னிலைப் படுத்தப்படுவதால் ; நாயக வழிபாடு குறைவாக இருப்பதால் தீர்வுக்கான வாசல் அடைபடாமல் இன்னும் திறந்தே இருக்கிறது . உட்கட்சி ஜனநாயகம் என்பது பதவிகளுக்கான தேர்வு மட்டுமல்ல ; கொள்கை முடிவுகளை பரந்த விவாதத்தின் மூலம் எட்டுவதும் ஆகும் . உட்கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் நடவடிக்கையாகும் . அது கட்சி வாழ்க்கையின் ஒரு பகுதி .
இதிலும் ஓர் சிக்கல் , சிலர் அதுமட்டுமே கட்சி செயல்பாடாய் கருதி அதையே இருபத்தி நாலுமணி நேரமும் பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருப்பர் , இதன் மூலம் தானும் நொந்து ,கட்சி வளர்ச்சிக்கும் குந்தகம் செய்கின்றவராக உள்ளனர் அந்த சிலர் .
தோழர் ஏ.நல்லசிவன் சென்னை மாவட்ட மாநாட்டு நிறைவுரையின் போது சொன்னார் . “ உள் கட்சிப் போராட்டமும் தத்துவ விவாதமும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர்நாடியே . மறுக்கவே முடியாது .மறக்கவும் கூடாது .அதேவேளை பொதுவெளியில் வேட்டியை உதறக்கூடாது ; ஜட்டியை மாற்றக்கூடாது ; அரிப்பெடுக்கிறது என்பதால் கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் சொறியவும் கூடாது .” என்றார் .
தோழர் எ என் குரல் அவருக்கு மிகவும் தொந்தரவு தரக்கூடியது .நாலு வார்த்தை பேசியதும் கம்மிவிடும் .புரியாது போய்விடும் . ஒரு வேளை அவரின் குரல்வளம் சிறப்பாக இருந்திருப்பின் அவர்தான் தமிழகத்தின் சிறந்த பேச்சாளர் ஆகி இருப்பார் ; பேச்சில் அவ்வளவு செய்தியும் வாதமும் கூர்மையும் இருக்கும் . இதனை மறைந்த மூத்த செய்தியாளர் வில்லியம்ஸ் அடிக்கடிகூறுவார் ; ஏனெனில் அவரின் மேல்சபை உரைகளை தீக்கதிருக்குத் தந்தவர் அவர் . ஆகவே வில்லியம்ஸின் அனுபவ உண்மை மறுக்க முடியாததே !
தோழர் ஏ என் கொள்கை வழிநின்று காட்டிய வழி சொல்லச் சொல்ல நீளும்….. தொடர்ந்து பேசுவோம்…
சு.பொ.அகத்தியலிங்கம் .
31 ஜூலை 2021.


thers
1
Like
Comment
Share

0 comments :

Post a Comment