நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 4.

Posted by அகத்தீ Labels:

 உமாநாத்திடமும் இந்த மெனக்கிடலைக் காணலாம் . ஒரு மணி நேரம் பொதுக்கூட்டத்தில் பேச இரண்டு மூன்று நாட்கள்கூட தயாரிப்பார் .

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 4.



தோழர் ஆர் .உமாநாத் அவர்களை மிகப்பெரும் மேடைப் பேச்சாளராகவே முதலில் நான் அறிந்தேன் . மேடையில் நவரசம் காட்டும் அவரைக் கண்டு வியந்தேன் . ஆயினும் தொழிற்சங்கப் பொறுப்புகளில் நான் இல்லாததால் அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது .
இதில் வேடிக்கை என்னவெனில் அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியது நான்தான் . “ தெளிவாகச் சொல்வதானால் இதன் மொழிநடைக்கு மட்டுமே நான் சொந்தக்காரன் .உள்ளடக்கமும் உயிர்துடிப்பும் தோழர் ஆர் .உமாநாத்துக்கு உரியது .” என அந்நூலின் முன்னுரையிலேயே குறிப்பிட்டிருப்பேன் .
ஆர் ,உமாநாத்தைப் பற்றி பேசத்துவங்கினால் அது பாப்பா உமாநாத்தை பற்றி பேசாமல் முடியாது . கட்சி மாநாடு , மாநிலக்குழு எங்கு பார்த்தாலும் இந்த இணையர் இணைபிரியாமல் சேர்ந்தே இருப்பர் . பாப்பாவின் கால் அறுவை சிகிட்சைக்குப் பின் பாப்பாவை உமாநாத் கவனிப்பதை கூட்டங்களில் பார்ப்போர் வியப்பர் .காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பது மட்டுமல்ல , வாழ்வின் கடைசி துளிவரை காதலித்தவர் என்பது மாபெரும் கொடை . மார்க்ஸ் – ஜென்னி காதல் அப்படிப்பட்டது எனப் படித்திருக்கிறேன் .பாப்பா – உமாநாத் இணையரை நேரில் பார்த்தேன்.
தோழர் ஆர்யு என நாங்கள் தோழமையோடு விழிக்கும் உமாநாத்தோடு எனது அனுபவங்கள் பல . அதில் அவர் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக உழைக்கிற உழைப்பும் , பேச்சிற்கான குறிப்பு தயாரிப்பும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடம்.
இப்போது மு .க .ஸ்டாலின் துண்டு சீட்டு வைத்து பேசுவதாக கிண்டலடித்து தம் அறியாமையை முகநூலில் சிலர் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வதை என்னென்பது ? மேடை ஏறித் தோன்றுவதை பேசுவது பேச்சல்ல . அதில் சிலவேளை அதில் சுவராஸ்யம் இருக்கக்கூடும் .ஆயினும் அது சரியான உரை அல்ல . பேச்சுக்காக மெனக்கெட்டு தயாரிப்பது மூடத்தனம் அல்ல .
லெனின் பதவிக்கு வந்த பின் 1905 புரட்சி பற்றி ஓர் மாணவர் கூட்டத்தில் பேச அழைத்தனர் . லெனின் அதற்காக பழைய ஏடுகள் ,அது தொடர்பாக வந்த கட்டுரைகள் அனைத்தையும் வரவைத்து படித்து குறிப்பெடுத்தாரம் .அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தோழர் கேட்டாராம் , “ 1905 நீங்கள் நேரடியாக பார்த்த போராட்டம் ; அது குறித்து நீங்கள் எழுதியவை அதிகம் .பேசியது அதிகம் ; அப்படி இருந்தும் இப்போது பழைய ஆவணங்களைச் சலிப்பது ஏன்? “
லெனின் சொன்னாராம் , “ அது உண்மைதான் , ஆனால் நான் தவறியும் பிழையான செய்தி எதையும் கூறிவிடக்கூடாதல்லவா ? அதுவும் மாணவர்கள் மத்தியில் பேசுகிறேன் , ஆகவே துல்லியம் மிக அவசியம்.”
உமாநாத்திடமும் இந்த மெனக்கிடலைக் காணலாம் . ஒரு மணி நேரம் பொதுக்கூட்டத்தில் பேச இரண்டு மூன்று நாட்கள்கூட தயாரிப்பார் . அவர் பேசுகிற சொல்லுகிற ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரமும் கூடவே சொல்லுவார் .பேச்சில் நிச்சயம் குட்டிக் கதை இருக்கும் .சிரிப்பு இருக்கும் . அந்தக் குறிப்பிலேயே எங்கே நிறுத்த வேண்டும் . எங்கே தான் சிரிக்க வேண்டும் என்பது உடபட குறித்திருப்பார் . கிட்டத்தட்ட அந்தக் குறிப்பே ஒரு திரைக்கதைபோல் இருக்கும் .
எவ்வளவு நேரம் கிடைக்கும் என்பது நிச்சயம் சொல்ல முடியாது . எனவே எதை எதை இன்றைக்கு சொல்லியாக வேண்டும் . எதெது நேரம் இருந்தால் சொல்லலாம் . எதை மற்றவர்கள் பேசாவிட்டால் பேசவேண்டும் என நுட்பமான திட்டமிடல் இருக்கும் .
அவர் பேச்சை குறிப்பெடுத்து எழுதுவது சுலபம் . நிதானமாக ஆனால் அழுத்தமாகப் பேசுவார் . ஆயினும் தான் எழுதிய குறிப்பை தீக்கதிருக்கு அப்படியே கொடுத்து முழுப்பேச்சும் வரவேண்டும் என்பார் .
ஒரு முறை சென்னைத் தீக்கதிருக்கு அவர் தன் குறிப்பைக் கொடுத்தார் ; பொறுப்பாசிரியர் என்ற முறையில் அவர் பேச்சில் இரு பகுதியை பெட்டிச் செய்தியாகவும் , மற்றவற்றை உரையாகவும் தந்தேன் .ஒரு குறிப்பிட்ட பகுதியை நிறுத்திவிட்டேன் ,
மறுநாள் காலையில் தோழர் கே.வரதராஜன் [கே.வி] என்னை தொலைபேசியில் அழைக்கிறார் , உமாநாத் பேச்சில் நான் பிரசுரிக்காமல் விட்ட பகுதி குறித்து விசாரணை . நான் அதில் உள்ள ஒரு தகவல் மிகப்பழையது ;இப்போது இதுதான் நிலை எனச் சொன்னேன் .
கேவி சொன்னார் , இருக்கலாம் .ஆர்யு ஆதாரம் இன்றி எதையும் பேசமாட்டார் என்றார் . வாதம் நீண்டது . முடிவில் ஆர்யுவை அவர் வீட்டில் நான் சந்தித்து அவரிடம் பேச வேண்டும் என முடிவாகியது .
நான் ஆர்யு வீட்டிற்குச் சென்றேன் . முதலில் டீ குடிச்சிட்டு பேசுங்க என பாப்பா சொல்ல டீயும் தின்பண்டமும் வந்தது .சாப்பிட்ட பின் பாப்பாவும் உடன் இருந்தார் .உமாநாத் தான் பேசியதற்கான ஆதாரத்தை அவர் காண்பித்தார் .அது அண்மையில் ஓர் ஆங்கில ஏட்டில் வந்த கட்டுரை . நான் என் கருத்தைச் சொன்னேன் . பிரச்சனை மேற்கு வங்கம் தொடர்பானது என்பதால் ஆர்யு உடனடியாக மேற்கு வங்கத்திற்கு ஃபேக்ஸ் அனுப்பினார் .பதிலும் ஒரு மணி நேரத்தில் கிடைத்தது . அந்த தகவல் மிகப்பழையது என்பது தெளிவானது . என்னைத் தட்டிக் கொடுத்து ஆர்யு பாராட்டினார் . உடனே கே .விக்கும் போண் செய்து விவரம் சொன்னார் .
அதன் பிறகு அவர் எங்கு பேசினாலும் குறிப்பு என் கைக்கு வந்துவிடும் .நான் அதனை தீக்கதிரில் பயன்படுத்திக்கொள்வேன் .
நான் அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதியபின் புத்தகத்தில் அட்டை எப்படி இருக்க வேண்டும் எனக் கேள்வி எழுந்தது . அவருடைய பேச்சுக் குறிப்புகளைக் கத்தரித்து அதில் அவர் உருவத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது என் யோசனை .ஆனால் மாநாட்டில் வெளியிட வேண்டிய சூழலில் அது முடியாமல் போனது . நூல் வந்தது .ஆயின் அட்டை வழக்கம் போல் அமைந்தது . அதுஎனக்கு அது வருத்தமே !
ஆர்யு மறைவின் போது நான் பதிந்தது இணைப்பில் http://akatheee.blogspot.com/2014/05/blog-post_21.html
பேச நிறைய இருக்கு … பேசுவோம்….
சு.பொ.அகத்தியலிங்கம்.
1 ஆகஸ்ட் 2021.

0 comments :

Post a Comment