நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 16.

Posted by அகத்தீ Labels:

 

 

எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு பகுதி .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 16.

 

நாடாளுமன்றமோ சட்டமன்றமோ எதுவாயினும் அவையும் வர்க்கப் போராட்டத்தின் இன்னொரு களமே என்பது கம்யூனிஸ்ட்டுகளின் பார்வை . ஆயினும் அதனை வலுவாக வெளிப்படுத்தியவர் ஒரு பட்டியலிட்டால் தோழர் ஏ.கே.கோபாலன் முதலிடத்தில் இருப்பார் . தமிழகத்தில் இருந்து பட்டியலிட்டால் ஆர் உமாநாத் , என் சங்கரய்யா , கே.ரமணி ,ஏ.பாலசுப்பிரமணியன் , எ.நல்லசிவன் போன்றோர் முன்வரிசையில் இருப்பார்கள் . ஆர் உமாநாத் சட்ட மன்றத்தில் ஆடிய ருத்திர தாண்டவங்களை வரலாறு பெருமையோடு பதிவு செய்திருக்கிறது , நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு குறித்து நாளை ஓருவர் ஆய்வு செய்தால் இவர்களைத் தவிர்க்கவே முடியாது .

 

இன்றைக்கு நாடாளுமன்றமோ சட்டமன்றாமோ முன்பு போல் இல்லை ; அது முழுமையாய்ச் சீரழிந்து போய்க் கிடக்கிறது .அதை மீட்கவே பெரும் போராட்டம் தேவைப்படுமே !

 

தோழர் ஆர் .உமாநாத்தோடு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத  உரையாடிக் கொண்டிருந்த காலத்தில் ஓர் நாள் சொன்னார் ;

 

“ எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு பகுதி . ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவ மோதல் அதில் நான் சிபிஎம் பக்கம் நின்று உட்கட்சிப்போர் நடத்தினேன் .

 

பின் நக்சலைட் பிரிந்த போது அதை எதிர்த்து தத்துவப் போரில் பங்கேற்றேன் , ஏஐடியுசி யிலிருந்து பிரிந்து சிஐடியு உருவாக்க நடந்த போராட்டத்திலும் என் பங்கு உண்டு .

 

இப்படி நானும் தோழர்களும் நடத்திய உட்கட்சிப் போராட்டங்களின் வரலாறே நெடியது .

 

பதவிக்கோ தனி நபரை எதிர்த்தோ நடந்த சண்டை அல்ல ; அவை வர்க்க சமரசமா ,வர்க்கப்போராட்டமா என்கிற கோட்பாட்டுரீதியான சண்டை . நான் வர்க்கப் போராட்டம் என்பதின் பக்கம் உறுதியாக நின்றேன் . “

 

தோழர் ஆர்யு சொன்னது எதுவும் மிகையல்ல . ஓர் முறை தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் சொன்னார் ,” கட்சி வரலாற்றை போராட்டங்களின் வரலாறாகச் சொல்லலாம் ; தியாகங்களின் வரலாறாகச் சொல்லலாம் , உட்கட்சி தத்துவப் போராட்டங்களின் வரலாறாகச் சொல்லலாம் . மூன்றுமே சொல்லப்பட வேண்டியதுதான் .”

 

அதுமட்டுமா ? காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ்டாக ,சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்டாக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சிபிஎம் ஆக அன்றைய தலைமுறை நடத்திய தத்துவப் போர் அவர்களை பக்குவப்படுத்தியது என்றும் சொல்லலாம் . அது மிகை அல்ல.

 

உட்கட்சிப் போராட்டம் குறித்து தோழர் ஆர்யு தன் அனுபவமாகச் சொன்ன ஒன்றை அந்நூலில் பதிவு செய்தேன் . இப்போதும் அதை அறிவது நன்றே .

 

உமாநாத் சொன்னார் ,”என் இளமைக் காலங்களில் உட்கட்சி விவாதங்களில் என்னோடு யாராவது கருத்து மாறுபட்டாலோ ,என்னை விமர்சித்தாலோ உடனே குறுக்கிட்டு என் நிலையைக் கூற ஆரம்பித்து விடுவேன். உணர்ச்சி வசப்பட்டதும் உண்டு . ஆனால் காலம் போகப்போக நான் பக்குவப்பட்டேன் .

 

அடுத்தவர்கள் கருத்தை பொறுமையாகச் செவிமடுக்கவும் , அடுத்தவர் விமர்சனத்தை பொறுமையாக எதிர்கொள்ளவும் ,என் சுற்று வரும்போது சரியானவற்றை ஏற்கவும் , இதரவைகளை நிதானமாக எடுத்துச் சொல்லவும் கற்றுக்கொண்டேன் .

 

கமிட்டி உறுப்பினர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்காமல் உணர்ச்சிவசப்படுவடுவது தோழர்களை வளர்க்க உதவாது என்பது மட்டுமல்ல காரியத்தையும் கெடுத்துவிடும் . .சில நேரங்களில் எதிர்விளைவும் ஏற்படுத்தும் . இவை புரட்சிகர கட்சிக்கு உரிய பாரம்பரியமல்ல .இதனை அனுபவத்தில்தான் கற்றுத் தேர்ந்தேன் .”

 

இந்த வாக்குமூலம் நமக்குச் சொல்லுவது என்ன ?

 

நான் எப்போதும் நிதானமானவன் பக்குவமானவன் என சுய தப்பட்டம் அடிக்காமல் ,கட்சிக்குள் பயிற்சியும் அனுபவமுமே எனக்குக் கற்றுக் கொடுத்தன ; என்னைப் பக்குவப்படுத்தியது என்று கூறுகிற அவரது நேர்மையே அவரது பக்குவமான அணுகுமுறைக்கு சாட்சி .

 

 “ கட்சிக் கடுப்பாடு என்பது தாம் கட்சி முடிவுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விசுவாசமாய் இருப்பது என்பது மட்டுமல்ல ; அதற்கு மாறான போக்கும் செயல்பாடும் யாரிடம் எந்த மட்டத்தில் தலைதூக்கினாலும் அதை எதிர்த்து அதற்குரிய கமிட்டிகளில் விட்டுக்கொடுக்காமல் போராடுவதுமாகும் ..தவறு நடக்கும் போது கண்ணுற்றால் இதில் எனக்கு சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிச் செல்வதும் கட்சிக்கு ஊறு விளைவிப்பதே ஆகும் . “ எனச் சுட்டும் உமாநாத் ஒரு போதும் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை . தவறுகளை எதிர்த்து சமரசமின்றி சண்டை போடுவார் .

 

அந்த உட்கட்சிப் போராட்டத்தை பொதுவெளியில் நடத்த முடியாது .நடத்தக் கூடாது .உரிய கமிட்டியில் முறையாக நடத்த வேண்டும் .இப்போரில் நாம் சொல்வதே சரி என்று சொல்லிவிட முடியாது .தன் உணர்வுகளைவிட கட்சி முடிவே மேலானது என ஏற்கும் பக்குவமும் வேண்டும் .

 

இங்கு ஓர் அனுபவத்தைச் சுட்டுவது பொருந்தும் , “ ஓர் முறை இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஓர் கிளையில் விவாதம் . அது ஓர் முக்கியமான அறிவுஜீவிகளின் கிளை என்பதால் ,கடைசியில் கட்சிப் பொதுச் செயலாளர் இஎம்எஸ் அந்தக் கிளைக்கு நேராக வந்தார் . விவாதம் நடந்தது .

 

இறுதியில் இஎம்எஸ் சொன்னார் , “ நான் கட்சியின் நிலை பாட்டைச் சொன்னேன் . நாம் கட்சி நிலைபாட்டில்தான் நிற்க முடியும் . உங்களுக்கு மாற்று கருத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டு , ஆனால் கட்சி கருத்தைத்தான் வெளியே சொல்ல வேண்டும் .நாளையே நீங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபனமானால் , கட்சி தன்னை திருத்திக் கொள்ளும் . கட்சி சொன்னது சரியானால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் . இப்போது கட்சி நிலைபாட்டோடு நில்லுங்கள்.” என்றார் .

 

அமைப்பு பிரச்சனை ஆயினும் , கோட்பாட்டு பிரச்சனை ஆயினும் உட்கட்சிப் போராட்டத்தின் எல்லை இதுவே !

 

கட்சிக்குள் கணவனும் மனைவியும் முழுநேர ஊழியராய் இருந்தால் , வீட்டு வாடகை ஒன்று என்பதால்  மனைவிக்கு கொஞ்சம் குறைவாகக் கொடுப்பது அன்றைய பொதுவான நடைமுறை . கட்சியின் பொருளாதார நெருக்கடியால் எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கையே இது .

 

ஆயினும் இது சரியான நடை முறை அல்ல என கட்சி செயற்குழுவில் தொடர்ந்து சண்டை போட்டிருக்கிறார் ஆர் .உமாநாத் . இதைப் பற்றி பேசும் போது ஆர்யு சொன்னார் , “ இது காசு பற்றியது அல்ல ;சமத்துவம் பற்றியது .” கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் போராடி வென்றார் . தனக்கு மட்டுமல்ல கட்சி முழுக்க அமலாக்க வேண்டும் என்றார் .

 

முழு நேர ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் , அவர்கள் பட்டினியிலும் கடனிலும் தவிக்க விட்டால் அது முறைகேட்டிற்கும் ஊழலுக்கும் நாமே வழிசெய்வதாகப் போய்முடியும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆர்யு .

 

ஆர் உமாநாத் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கல்லூரியில் பயிலவும் கட்சி வேலை செய்யவும் வந்த போது தோழர் கே .முத்தையாவின் தோழரானார் . படிப்பை முடிக்கும் முன்பே , படிப்பை பாதியிலேயே உதறிவிட்டு கட்சிக் கட்டளையை ஏற்று சென்னை தலைமறைவு மையத்துக்கு பணியாற்ற வந்தார் . சென்னை தி.நகரில் அம்மையம் இயங்கியது . தோழர் பி.ராமமூர்த்தியோடு உமாநாத்துக்கு அங்கு தொடங்கிய தோழமை இறுதிவரை நீடித்தது .  “தோழர் பி.ராமமூர்த்தியே என் மூன்று மகள்களுக்கும் ஞானத்தந்தை” என ஆர்யு  பெருமையுடன் குறிப்பிடுவார் .

 

பொதுவாக அலுவலகம் வந்தால் படிப்பது ,குறிப்பெடுப்பது ,கூட்டங்களில் பங்கெடுப்பது என திட்டமிட்டு இயங்குவார் . பொதுவான அரட்டைகளில் பங்கேற்கமாட்டார் . வாராந்திரிகளில் வரும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பார் .தேவைப்படும் போது அந்தக் குட்டிக் கதைகளை பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக் கொள்வார் . எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கும் பழக்கம் ஆர்யுவிடம் கிடையாது .  “ஒரு வகையான கறார்பேர்வழி” தோற்றமே அவருக்கு கட்சியில் உண்டு .

 

தன் காதல் இணையர் பாப்பாவின் மரணம் அவரை மிகவும் பாதிக்கவே செய்தது .கடைசி காலத்தை திருச்சியில் கழிக்க விரும்பிச் சென்றார் . அவரின் கடைசி காலத்தைப் பற்றி ஸ்ரீதர் சொல்லுவார் ,

 

“ தினசரி காலை பத்து மணிக்கு அவரை அலுவலுகத்துக்கு வண்டியை அனுப்பி கூட்டிவர வேண்டும் ; மதியம் கொண்டுவிட வேண்டும் . இடையில் ஒரு டீ மட்டும் குடிப்பார் . தினசரி பேப்பர்கள் படிப்பார் .புத்தகம் படிப்பார் . தேவை இருந்தால் மாநிலக்குழுவுக்கு போண் செய்து பேசுவார் . யார் வந்து அவரிடம் என்ன கேட்டாலும் , கட்சி மாவட்டச் செயலாலாளரிடம் பேசுங்க , என கையைக் காட்டி தள்ளிவிடுவார் . சம்மந்தம் இல்லாமல் எந்த விவகாரத்திலும் மூக்கை நுழைக்கவே மாட்டார் . எப்போதும் மிகவும் கட்டுப்பாட்டோடும் கண்ணியமாகவும் நடந்து கொள்வதுதான் ஆர்யு பாணி !

 

இன்னும் பேச எவ்வளவோ உள்ளது …. பேசுவோம்.

 

குறிப்பு : தொடர்ந்து பேசுவோம் , ஆயின் இப்போதல்ல . நான் கண்புரை அறுவை சிகிட்சைக்கு செப் .4 ,9 [ இடது ,வலது ] செல்ல வேண்டும் .அதற்கு முன் வேறு சில அவசர எழுத்துப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது . எனவே சிகிட்சை முடிந்து அக்டோபர் இறுதியில் வருவேன் .,,, காலமும் களமும் அனுமதித்தால் நினைவலைகளைத் தொடர்வேன் . இப்போது விடைபெறுகிறேன் .நன்றி ! நன்றி !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்,

31 ஆகஸ்ட் 2021.

 

 

 

0 comments :

Post a Comment