நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8

Posted by அகத்தீ Labels:

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 8.

 

ஒரு பொய்ச்செய்தியை அதிகார பீடத்தில் உள்ளவர் கசியவிடும்போது அச்செய்தி , எப்படி இறக்கை கட்டி வேகமாகப் பறந்து உண்மைச் செய்தியாகவே நம்பும் அளவுக்கு பதிந்துபோகும் என்பதற்கான ஓர் சாட்சி நான் . இப்படி செய்திகளை கசியவிட்டு ஆட்டம் காட்டுவதில் எம் ஜி ஆர் வல்லவர் .

 

சரி ! நடந்ததைச் சொல்கிறேன் . 1982 பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தல் . சிபிஎம் கட்சியானது திமுக ,அதிமுக இரண்டு அணியிலும் இல்லை . சில குட்டிக் கட்சிகளோடு தனி அணி . ஜக்கையன் [ அதிமுக ] , இராமகிருட்டினன் [திமுக] , அப்துல் வஹாப் [சிபிஎம்] உட்பட 22 பேர் போட்டி . அன்றைய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியில் கொடைக்கானலும் அடக்கம் . நான் கிட்டத்தட்ட மூன்றுவாரம் அங்கே தங்கி இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன் .

 

கடைசி நாள் பிரச்சாரத்திற்கு தோழர் ஆர் உமாநாத்தும் நானும் ஓர் காரில் கொடைக்கானல் மலையேறிக்கொண்டிருக்கிறோம் . மேலும் இரண்டு தோழரும் உண்டு . ஓர் போலீஸ் ஜீப் எங்களைத் தடுத்து முதலமைச்சர் எம் ஜி ஆர் கொடைக்கானல் பிரச்சாரம் முடித்து கீழே வந்து கொண்டிருக்கிறார் . ஆகவே கொஞ்சம் ஓரம் கட்டி நில்லுங்கள் என்றார் . நின்றோம் . உமாநாத்தும் நானும் கீழே இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம் . முதல்வர் வண்டிவரும் ஓசை கேட்டது . சட்டென்று எங்கள் முன் எம் ஜி ஆர் வண்டி நின்றது . எம் ஜி ஆர் கீழே இறங்கினார் . வேறு யாரையும் கிட்டே அனுமதிக்கவில்லை .

 

 “ காம்ரேட் ஆர்யு சவுக்கியமா ? காம்ரேட் பாப்பா பிரச்சாரத்துக்கு வரவில்லையா ? காம்ரேட் பாப்பாவுக்கு ஒடம்பு சவுரியம் இல்லேன்னு கேள்விப்பட்டேன் . ”என சடசடன்னு கேட்டார் .

 

உமாநாத் . “ ஆம் .அவருக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லை..”என்றார் . “ ஒடம்ப நல்லா கவனிச்சுக்குங்க , வேணும்னா சொல்லுங்க ஸ்பெஷல் டாக்டரை ஏற்பாடு செய்யுறேன் …” என சொல்லியவாறே எம் ஜி ஆர் கிளம்பிவிட்டார் .

 

எல்லாம் இரண்டு நிமிடத்தில் முடிந்தது .

 

எம்ஜிஆரைத் தொடர்ந்து கே.ஏ.கிருஷணசாமியும் ,ராகவானந்தமும் வேறொரு காரில் இருந்தபடியே கையை ஆட்டிவிட்டுச் சென்றனர் .

 

கொடைக்கானல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மாலை நாங்கள் கீழே இறங்கினோம் . அதிர்ச்சி காத்திருந்தது .

 

 “ கொடைக்கானலில் எம்ஜிஆர் –உமாநாத் திடீர்

 சந்திப்பு ; அதிமுகவுக்கு மார்க்சிஸ்ட் ரகசிய ஆதரவா ?” என்பது போன்ற செய்திகள் இறக்கை கட்டி பறந்தன . கலைஞர் கடும் விமர்சன அறிக்கை .

அதிமுக ஜெயித்தது .திமுக தோற்றது .பழி சிபிஎம் மேல் விழுந்தது . கலைஞர் சிபிஎம் – அதிமுக ரகசிய உறவென கடிதம் தீட்டினார் . தேர்தல் முடிவைத் தொடர்ந்த விமர்சனங்களில் இந்தப் பொய்யே ஓங்கி நின்றது .

 

நண்பர்களும் தோழர்கள் சிலரும் கூட இந்நேரத்தில் ஆர்யூ ஏன் எம்ஜிஆரைச் சந்தித்தார் எனக் கேள்வி எழுப்பினர் .

 

எம்ஜிஆர் தன் நம்பிக்கைகுரிய மக்கள் குரல் பத்திரிகையாளர் மூலம் கசியவிட்ட பொய் உண்மைபோல் இன்றும் வரலாற்றின் இருண்ட பக்கத்தில் நிலைக்கிறதே ! ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல் நடந்ததை சிபிஎம் எவ்வளவு விளக்கியும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை . உமாநாத்தோடு அந்த நொடியில் நின்ற நான் மட்டுமே சாட்சி !! என் செய்ய ? எம் ஜி ஆர் இது போன்ற செய்திகளை பரப்புவதில் வல்லவர்.அவர் வாய்திறந்து இவற்றை வெளியே பேசவே மாட்டார் ! அதுதான் அவரின் சாமர்த்தியம் !!!

 

இப்போதும் சிபிஎம் கட்சிக்கு எதிராய் வதந்திகளும் பொய்களும்  ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து இப்படித்தான் பரப்பப்படுகிறது .உண்மையைவிட இந்த போலிச் செய்திகள் வலுவாய் பேசப்படுகிறதே ! அதுவே வேதனை ! தோழர்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் !

 

CCAU – CAMPAIGN COMMITTEE AGAINST UNEMPLOYMENT வேனையின்மை எதிர்ப்பு நடவடிக்கைக்குழு : 1990 பிப்ரவரி முதல் ஜூன் வரை நடத்திய பிரச்சார இயக்கம் , நிறைவாக குமரி ,நாகை ,ராமேஸ்வரம் , நீலகிரி என நான்கு முனையிலிருந்து பிரச்சாரப் பயணம் , சென்னைக் கடற்கரையில் பேரணி என உத்வேகம் ஊட்டிய நிகழ்வு . சிஐடியு ,வாலிபர் சங்கம் , மாணவர் சங்கம் , மாதர் சங்கம் ,அரசு ஊழியர் சங்கம் , இன்சுரன்ஸ் ,மத்திய , மாநில ஊழியர் அமைப்புகள் என விரிவாக ஒன்றிணைக்கப்பட்ட அமைப்பு .

 

இவ்வமைப்பு உருவாக்கத்திலும் ஆர் .உமாநாத் காட்டிய அக்கறையும் வழிகாட்டலும் முக்கியமானது .ஏ.கே .பத்மநாபனும் நானும் இதில் கூடுதல் பங்காற்றினோம் . ஒரு கூட்டத்தில் பிரச்சாரத்தை ஒட்டி ஒரு சிறுபிரசுரம் கொண்டுவர யோசிக்கப்பட்டது .எல்லோரும் காம்ரேட் ஆர்யூ அந்த பிரசுரத்தை எழுதலாம் என்றனர் .டக்கென்று ஆர்யூ தலையிட்டு சு.பொ.அகத்தியலிங்கம் எழுதட்டும் ,பின் எல்லோருக்கும் சுற்றுக்கு விடட்டும் .எல்லோரின் யோசனைக்கு பிறகு அதனை நான் பார்த்துக் கொடுக்கிறேன் என்றார் .நான் “ வேலை இனியும் கனவல்ல…” என்ற பிரசுரத்தை எழுதினேன் .சுற்றுக்கு விட்டேன் . சில திருத்தங்களுக்குப் பின் இறுதியாக உமாநாத் பார்வைக்கு கொண்டு போனேன் . முழுதாக வாசித்தார் . இப்படியே இருக்கட்டும் என்றார் .பிரசுரம் வெளிவந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது .

 

அதன் பின் ஓர் நிகழ்வில் பேசிய ஒர் மத்தியதர ஊழியர் தலைவர் இப்பிரசுரத்தை எழுதிய உமாநாத் என குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார் . பிரசுரம் சிசிஎயு சார்பில் வந்ததே தவிர யார் பெயரிலும் அல்ல.நான் அந்த கூட்டத்தில் இல்லை . இறுதியில் பேசிய உமாநாத் இப்பிரசுரத்தை எழுதியது சு.பொ.அகத்தியலிங்கம்தான் நானல்ல எனக் குறிப்பிட்டு என்னைப் பாராட்டியுள்ளார் . பின்னர் ஓர் முறை வாலிபர் சங்க நிகழச்சிக்கு அங்கு சென்ற போது தோழர்கள் இந்நிகழ்வைச் சொன்னார்கள் . ஊழியர்களின் திறமையை பங்களிப்பை உரிய முறையில் அங்கீகரித்து மதிப்பளிக்கும் குணம் ஆகப்பெரியது . அது உமாநாத்திடம் நிரம்ப உண்டு .

 

வேலையின்மை உச்சத்தை எட்டும் இக்காலகட்டத்தில் மீண்டும் CCAU போன்ற முயற்சிகள் பெரிதும் தேவை அல்லவா ?

 

தோழர் என் .சங்கரய்யா சாதி மறுப்பு காதல் திருமணம் எனில் முன்னுரிமை கொடுத்து பங்கேற்பார் . ஆர்யுவுக்கு அத்துடன் சடங்கு மறுப்பும் சேர்ந்தாக வேண்டும் . தாலி எடுத்துக் கொடுக்கும் புரோகிதராக நான் வரமாட்டேன் என விடாப்பிடியாக ஆர்யு சொல்லிவிடுவார் . வந்துவிட்டாலும் அதனை தான் செய்யமாட்டார் .வேறு யாரையாவது பணித்துவிடுவார் .அப்போதும் பேசும்போது தாலி தேவை இல்லை என பேசுவார் . பாலின சமத்துவத்தில் அதிக அக்கறை காட்டினார் . அது குறித்து பேச நிறைய உண்டு . பேசுவோம் தொடர்ந்து .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

8 ஆகஸ்ட் 2021.

 

 

0 comments :

Post a Comment