நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 13,

Posted by அகத்தீ Labels:

 


“ அப்படிச் சொல்லு ! நம்ம பரம்பரை மன்னிப்பு கேட்கிற பரம்பரை அல்லடா ! மன்னிப்பு கேட்டேன்னு வை ஜெயில் வாசலிலேயே உன்னை வெட்டிப் புதைச்சிருவேன்…” என தந்தை மகனை மிரட்டுகிறார் .நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 13,

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாணவர்களின் போராட்ட களமாக இருந்தது .தோழர் கே.முத்தையா அந்த போராட்ட களத்தில் புடம் போடப்பட்டவர் . அவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர் , வழக்கம் போல் பிரிட்டிஷ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்கிற வழக்குதான் .

சிறையில் அடைபட்ட கே முத்தையாவைப் பார்க்க அவர் அப்பா கருப்பையா வந்திருக்கிறார் .அவர் ஓர் தகவல் சொன்னாராம் “ காங்கிரஸ் தலைவர் சர் வேதரத்தினம் என்னைச் சந்தித்தார் . மன்னிப்பு கடிதம் கொடுத்தால் முத்தையாவை விடுதலை செய்து விடுவார்கள் என்றாராம்.”

இதனைச் சொல்லிவிட்டு தந்தை மகனிடம் கேட்டாராம் “ ஏண்டா ! மன்னிப்பு கடிதம் கொடுத்திட்டா வரப்போறே ?”

“ ஐயையோ ! இல்லை .இல்லை . மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை …”

“ அப்படிச் சொல்லு ! நம்ம பரம்பரை மன்னிப்பு கேட்கிற பரம்பரை அல்லடா ! மன்னிப்பு கேட்டேன்னு வை ஜெயில் வாசலிலேயே உன்னை வெட்டிப் புதைச்சிருவேன்…” என தந்தை மகனை மிரட்டுகிறார் .

இதுதானாடா ! எங்கள் பாரம்பரியம் ! மன்னிப்பு கேட்பது சவார்க்கர் பாரம்பரியம் , சங்கிகள் பாரம்பரியம் .

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளைத்தான் தோழர் பி.ராமமூர்த்தி ,கே.முத்தையா ,மாதவன் [சிபிஐ] மூவரும் மணந்தனர் . இது சாதிமறுப்புத் திருமணம் என்பதால் தந்தை வரமறுத்துவிட்டார் . தாயும் தம்பியும் மட்டுமே வந்தனர் . கட்சி வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்த போது பெற்றோர் அதனை ஏற்க மறுத்தனர் . நிலபுலம் ,சொத்து எதிலும் நான் பங்கு கோரமாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டே கட்சிப் பணி ஏற்றவர் கே.எம்.

1942 ல் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தோழர் பாலதண்டாயுதமும் சென்னை மாவட்டச் செயலாளராக கே.முத்தையாவும் தேர்வு செய்யப்பட்டனர் . சென்னையில் எம்ப்டன் குண்டு வீசியதில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னையே வெள்ளக்காடானது . கே முத்தையா தன் தோழர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் ஈடுபட்டார்.1946 கப்பற்படை எழுச்சியின் போது கேஎம் சென்னையில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினார் .

தீக்கதிருக்கு முன்பு ஜனசக்தியிலும் ,தாமரை இலக்கிய ஏட்டிலும் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்தான் கே.எம் . அவ்வேடுகளுக்கு ப.ஜீவானந்தம் ஆசிரியராக செயல்பட்டார் . ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுண்டு சிபிஐ ,சிபிஎம் என செயல்படுகிற காலம் வரை அவற்றில் செயல்பட்ட தோழர் கே எம் கட்சி பிரிந்தபோது சிபிஎம்மோடு இணைந்தார் .

தோழர் பி.ராமமூர்த்திதான் தன் சகலை கே .முத்தையாவை சிபிஎம்முக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டதாய் ஓர் விமர்சனம் உண்டு . அது குறித்து ஓர் முறை கே.எம்மிடம் கேட்டேன் .

தோழர் கே எம் சொன்னார், “ தப்பு . தப்பு . அப்படியானால் இன்னொரு சகலை அங்கேயே தங்கிவிட்டாரே ! அவரை ஏன் இழுத்துவரவில்லை .சிபிஎம் செல்கிற பாதைதான் சரி என்கிற கருத்து எனக்கு வலுவாக இருந்ததால் நான் இந்தப் பக்கம் நின்றேன் . இல்லை சிபிஐ பாதையே சரி எனக் கருதியதால் அவர் அந்தப் பக்கம் நின்றார் அவ்வளவுதான் ”

எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்த போது அவரின் கொள்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது “அண்ணாயிசமே” என் கொள்கை என்றார் . விளக்கம் கேட்டபோது ,” சோஷலிசம் ,கம்யூனிசம் ,கேப்டலிசம் மூன்றும் கலந்த சித்தாந்தக் கலவையே அண்ணாயிசம்” என்றார் . இதனை விமர்சித்து “ இதுதான் அண்ணாயிசமா ?” என தோழர் கே.எம் எழுதிய சிறுவெளியீடு அன்றைக்கு எங்களுக்கெல்லாம் மேடையில் பேசுபொருளானது .

கே முத்தையா படைப்புகள் என்று பார்த்தால் ,இமயம் (புதினம்) , ,உலைகளம் (முதல் நாவல்) , விளைநிலம் [நாவல்] இவை இரண்டும் செம்மலரில் தொடராக வெளிவந்தவை,செவ்வானம் (நாடகம்),புதிய தலைமுறை (நாடகம்) ,ஏரோட்டி மகன் (நாடகம் ] இவையும் ஏடுகளில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றவையே . இந்த படைப்புகளை அன்றைக்கு கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவனே ! கட்சி வரலாற்றோடும் , அரசியல் பிரச்சாரம் சார்ந்தும் படைப்புகளை ஆக்கும் வலியும் எல்லையும் அன்றைக்கு எனக்கு உறைக்கவில்லை .

அவற்றில் சிலவற்றை இன்னும் செதுக்கி சிற்பமாக்கி இருக்கலாம்தான் .ஆயினும் விளைநிலம், உலைக்களம். போன்ற நாவல்கள் வெறும் கதையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் வேர் கொண்டபோது சந்தித்த அடக்குமுறைகளை போராட்டங்களை ஜீவத்துடிப்போடு நம்மிடம் பேசும். அம்முயற்சியின் முக்கியத்துவம் எப்போது புரிந்தது தெரியுமா ? கம்யூனிச இயக்க வரலாறு நாவல்களாக போதுமான அளவு வந்துள்ளதா என்கிற கேள்வி முளைத்த போதே !

ஓர் முறை இயக்குநர் பாலுமகேந்திரா என்னை அவர் அலுவலகத்துக்கு அழைத்தார் . கட்சியின் தியாக வரலாற்றைச் சொல்லும் படைப்புகள் பற்றி கேட்டார் .கிட்டத்தட்ட மூன்று மணி நேர உரையாடலின் போதே நாம் படைக்கத்தவறியவைகளின் பட்டியல் விஸ்வரூபமெடுத்தது . அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்னிடமிருந்த கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு அளித்தேன் .அதைப் படித்த பின் பாலுமகேந்திரா சொன்னார் ,” கட்சி கோணத்தில் என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார் ; படைப்பாளி கோணத்தில் கொஞ்சம் சுவையான செய்திகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.”

தோழர் என் .சங்கரய்யா பலமுறை எழுத்தாளர்களிடம் கேட்ட கேள்வி , “ இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் பற்றி நிறைய விமர்சிக்கிற நீங்கள் ,வெண்மணி குறித்து , நம் தியாக வரலாறு சார்ந்தும் எத்தனை படைப்புகள் செய்துள்ளீர்கள் ?”

தோழர் கே எம் எழுதிய நாவல்கள் ,நாடகங்கள் அந்த வகையில் இன்னும் நினைக்கத்தக்கது .

2012 பிப்ரவரி மாதம் “தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்” என ஓர் கட்டுரை எழுதினேன் . அதிலிருந்து சில பத்திகள் இங்கு பொருத்தப்பாடு கருதி சேர்க்கிறேன்.

“கையூர் தியாகிகளின் வீரவரலாற்றைப் பேசும் “நினைவுகள் அழிவதில்லை” (மொழி பெயர்ப்பு - பி.ஆர். பரமேஸ்வரன்) என் நெஞ்சை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியின் பின்புலத்தில் யஸ்பால் எழுதிய “காம்ரேட்” நாவலின் கீதாவை யார்தான் மறக்க இயலும்? இப்படி பல நாவல்கள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை அசைபோட்டு பார்க்கவேண்டும். மேலே குறிப்பிட்ட நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்தவை.”

”தமிழில் சுயமாக எழுதப்பட்ட இத்தகைய நாவல்களை சற்று நினைவுத்திரையில் ஓடவிட்டு பார்க்கிறேன். பெரிய பட்டியல் இருக்கிறது. ஒன்று இரண்டை தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பஞ்சாலைப் போராட்ட வாழ்வைப் படம்பிடித்த தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்”; தேயிலைத் தோட்டத்தில் அட்டைக் கடிகளுக்கு மத்தியில் வதைப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் - கொடுமையை எதிர்த்து அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கம் சேர்ந்த வரலாற்றையும் ரத்தமும் சதையுமாய் பேசும் டி. செல்வராஜின் “தேநீர்”; மலைமக்களின் வாழ்க்கையை எழுச்சியை உயிர்க்காவியமாய் ஆக்கியிருக்கும் கு. சின்னப்ப பாரதியின் “சங்கம்”; சின்னியம்பாளையம் தியாகிகளின் வீரக்கதையை சொல்லும் ராஜாமணியின் “சங்கமம்” ; இந்த வரிசையில் தொண்டு நிறுவனங்களோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் தனுஷ்கோடியின் “தோழன்” இப்படி ஒவ்வொன்றும் நம் இதயத்தில் நுழைந்து மூளையைக் குடைந்து ரத்த நாளங்களை சூடேற்றும்.”

“இந்த வரிசையில் கு. சின்னப்ப பாரதியின் “தாகம்”, ”சர்க்கரை”, டி. செல்வராஜின் ”மலரும் சருகும்”, ச. தமிழ்செல்வனின் ”ஜிந்தாபாத்” உட்பட பல உண்டு. சுபாஷ் சந்திர போஸ் எழுதிய சாம்பவான் ஓடை மற்றும், சிவராமன் போன்ற நாவல்களும் இதே பணியைச் செய்கின்றன.”

[ நினைவிலிருந்து எழுதியதால் பல நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும். அதையும் இக்கட்டுரை வாசிப்போர் சேர்த்துக் கொள்ளலாம் ]”

“கடைசியாக வெளிவந்த டி. செல்வராஜின் தோல் நாவல், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தோளில் சுமக்கவேண்டிய நாவல்.”

[ தற்போது ரயில்வேத் தொழிலாளர் போராட்டம் சார்ந்து ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய “ போராட்டம்.”]

“வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் “குருதிப்புனல்” வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் ”செந்நெல்” வெளிவந்தது.”

[ கீழைத் தீ உட்பட ஒரிரு நாவல்கள் வந்துள்ளன .முழுவதும் நினைவுக்கு வரவில்லை.]

இவை மட்டும் போதுமா?”

“வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா?
பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா?
வாச்சாத்தி கொடூரமும் நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா?
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா?
ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே?
அவரை மையமாக வைத்து ஒரு ஹிந்தி திரைப்படம்கூட தயாராகிவிட்டது. லீலாவதியும், தூக்குமேடை பாலுவும், களப்பால் குப்புவும் இன்னபிற தியாகிகளும் நமது இலக்கிய நாயகர்களாய் உலா வருவது எப்போது?”

தோழர் கே.எம் தன் வாழ்நாளெல்லாம் இதுபோல்தானே சிந்தித்தார் . செயல்பட்டார் .இலக்கியம் படைத்தார். அவர் முயற்சி சிறிதெனினும் முக்கியமானதன்றோ ? அவர் முயற்சி எவ்வளவு பெரிதென இப்போது எண்ணிப்பார்க்க புரிகிறது .

இன்னும் பேச நிறைய இருக்கிறது .
பேசுவோம்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
22 ஆகஸ்ட் 2021. 
See Less

Chinniah Kasi, Ramesh Bhat and 74 others
23 Comments
22 Shares
Like
Comment
Share

0 comments :

Post a Comment