நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 12.

Posted by அகத்தீ Labels:

 

“காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டதுஇன்பம்” என்கிற ஒளவையின் சொல்லுக்கு முழுப்பொருளாய் வாழ்ந்து முடிந்த உமாநாத் –பாப்பா நமக்கு என்றும் முன்னுதாரணம் .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 12.

 

 வானிலும் உயர்ந்ததாய்

கடலிலும் ஆழமானதாய்

பிறப்பு இறப்பிலும் விந்தை மிக்கதாய்

காலத்தைவிட அதிகமானதாய்

ஒன்று இருப்பதை நான் கண்டு கொண்டேன்

முன்பு அறிந்திராத ஒன்றை இப்போது அறிந்து கொண்டேன்.”

 

இது கலில் ஜிப்ரான் காதலைக் குறித்து எழுதிய ஓர் கவிதை .

 

தோழர் ஆர் உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுத என்னைப் பணித்தார் தோழர் கே .வரதராசன் . தோழர் ஆர்யு எழுதி வைத்திருந்த ஆங்கில குறிப்புகளில் இருந்து விவரங்களை தேர்வு செய்தும் , அவரோடும் பாப்பாவோடும் குடும்பத்தாரோடும் உரையாடியும் என் பாணியில் நூலை எழுதினேன் . ஒவ்வொரு அத்தியாயத்திலும் திருக்குறளை இணைத்தேன் .பாரதி ,பாரதிதாசன் , பட்டுக்கோட்டை கவிதைகளையும் கோர்த்தேன் . தோழர் கே.வி யிடம் கொடுத்தேன் .

 

 “ அகத்தி ! தோழர் ஆர்யு கொங்கிணி .தமிழில் திக்காமல் பேசவே குறிப்பு வைத்து பேசப் பழகியவர் . நீயே அதையும் இதில் எழுதியிருக்கிறாய் .அவர் வரலாற்றில் திருக்குறளா ? இதை அவர் ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை . பேசிப்பாருங்கள் .” என்றார் கே.வி . நான் ஆர்யுவிடம் டிராப்டைக் கொடுத்துவிட்டேன் . இரண்டு நாள் கழித்து போனேன் .

 

“ காம்ரேட் எஸ்பிஏ ! நீங்க நல்லாத்தன் எழுதியிருக்கீங்க .. ஒன்றிரண்டு திருத்தங்கள் ஆங்காங்கு செய்திருக்கேன் .ஆனால் குறள் ,கவிதை எல்லாம் பாப்பாவுக்கு பிடிச்சிருக்கு …சரியான்னு எனக்குத் தெரியலை … காம்ரேட் கேவி கிட்ட பேசுறேன்னு சொல்லி போணில் பேசினார் . அவர் ஒகே சொன்னார் .

 

அத்தோடு . “ 15 வது அத்தியாயத்தில் உங்க காதலைப் பற்றி வர்ணிச்சிருக்கான் ,16 வது அத்தியாயத்தில் கலில் ஜிப்ரான் காதல் கவிதை [ இங்கு ஆரம்பத்தில் உள்ள கவிதை ] சேர்த்து எழுதியிருக்கான் … அது பற்றி நீங்கதான் முடிவெடுக்கணும்னு கேவி போட்டும் கொடுத்துவிட்டார் .

 

ஆர்யு குலுங்கிக் குலுங்கி சிரித்தார் . “நானும் பாப்பாவும் அதை ரசித்தோம் .கரெக்டாத்தான் இருக்கு . கலில் ஜிப்ரான் கவிதை சூப்பர் .என் அன்றைய உணர்வை சரியா பிரதிபலிக்குதுன்னு” ஒரு போடு போட்டார் . எனக்கு மகிழ்ச்சி .

 

 “காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டதுஇன்பம்” என்கிற ஒளவையின் சொல்லுக்கு முழுப்பொருளாய் வாழ்ந்து முடிந்த உமாநாத் –பாப்பா நமக்கு என்றும் முன்னுதாரணம் . எனவேதான் நானும் அவர் வாழ்க்கை வரலாற்றில் காதலுக்கு உரிய இடம் கொடுத்தேன் . அது பிழையில்லை என்பதே என் முடிவு .

 

கம்யூனிஸ்ட் எனில் கிழிஞ்ச வேட்டி , சாயம் போன சட்டைன்னு யார் சொன்னது ? தூய்மையாக அழகாக ஆடை அணிவது பிழையல்ல . தோழர் ஆர்யு எப்போதும் பளிச்சென விதவிதமான வண்ணத்தில் சட்டை அணிவார் . பட்டையான சிவப்புக்கரை வேட்டி .கிளின் ஷேவ் .

 

ஆர்யுவின் நேர்த்தியான உடைக்கு பாப்பாவும் ஓர் காரணம் . இதை நான் உறுதியாகச் சொல்லக் காரணம் . பாப்பாவோடு ஹோசூரில் இருந்து சென்னைக்கு ஓர் பிரச்சார யாத்திரை போனபோது குழுவினரின் உடையை சலைவை செய்துதர சிறப்பு கவனம் செலுத்தினார் . அதுபோல் உணவிலும் அக்கறை காட்டி கவனித்தார் .எல்லோரும் நன்கு உடுத்த , நன்கு உண்ணத்தானே நாம் போராடுகிறோம் என்பார் .தோழர் விபிசியும் உடையில் பளிச்சென இருக்கவே விரும்புவார் .நான் பேண்ட சட்டை / ஜிப்பாவில்  பள்ளி மாணவன் போல் இருப்பதாய் சொல்லி வேட்டி சட்டை /ஜிப்பாவுக்குக்கு என்னை மாற்றியவர் விபிசிதான். .அப்புறம் அதுவே என் உடையாகிப் போனது .

 

”கட்சியில் உள்ள புதிய இளைஞர்கள் ஆடம்பரமாக உடை அணிகிறார்கள் .சரியா ?” என ஒரு முறை தோழர் இஎம்எஸ்சிடம் தேசாபிமானியில் ஓர் கேள்வி கேட்கப்பட்டது .

 

அவர் சொன்னார் , நாங்கள் கம்யூனிஸ்டாக இருப்பினும் காந்திய தலைமுறையைச் சார்ந்தவர்கள் . காந்தியின் எளிமையை பின்பற்றியவர்கள் . எங்கள் காலத் தேவை அது . இன்றைய தலைமுறைக்கு அது தேவை இல்லை . இளைஞர்கள் புதுயுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ; அவர்கள் உடை அதற்கேற்ப இருப்பது சரிதானே ! பகட்டு கூடாது .படாடோபம் ஆகாது . .ஆனால் நவீனமாக அவர்கள் விருப்பத்திற்கு உடை உடுத்துவதில் தப்பில்லை . எல்லோரும் நன்றாக உடுத்த வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், நன்றாக உண்ண வேண்டும் .அதற்காகத்தானே நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

 

சாமியார் பிரேமானந்தா வழக்கு , சிதம்பரம் பத்மினி வழக்கு இப்படி பலவற்றை மேடையில் பேசும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று சிம்ம கர்ஜனை செய்வார் தோழர் ஆர்யு , ஆனால்  பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையோ ,சாதிய ரீதியான இழிவுபடுத்தும் சொற்களையோ தவறியும் அவர் பயன்படுத்த மாட்டார் . மற்றவர் பயன்படுத்தினாலும் அனுமதிக்க மாட்டார் .சில கூட்டுமேடைகளில் இச்சிக்கல் வரும் . ஆர்யு சமரசம் செய்யாமல் அது தமக்கு ஏற்புடையதல்ல என அந்த மேடையிலேயே சொல்லிவிடுவார் . அதுபோல் கட்சி நிலையை சமரசமின்றி எந்த மேடையாயினும் சொல்லிவிடுவார் . அதனால் சில பிரச்சனைகளை எதிர்கொண்டதும் உண்டு

 

கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஒன்றில் தேர்தல் பரிசீலனை முக்கிய நிகழ்ச்சி நிரல் .கூட்டத்திற்கு ஆர்யு தலைவர் . நான் பேசும்போது “ இந்த போஸ்ட்மார்ட்டம் [ postmortem ] ரிப்போர்ட்டில் “ என ஆரம்பித்தேன் . ஆர்யு கொந்தளித்துவிட்டார் .

 

 “ காம்ரேட் ! இது மாநிலக்குழு கூட்டம் .இங்கு வாய்க்கு வந்ததை பேசக்கூடாது . இது எலக்‌ஷன் ரிவியூ ரிப்போர்ட் . போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அல்ல ;பிரேதபரிசோதனை அறிக்கை அல்ல .ரிவியூ என்பது கம்யூனிஸ்டு பாரம்பரியம் .பலம்.” என்ப் பொரிந்து என்னைக் கண்டித்துவிட்டார் .

 

அப்புறம் சொன்னார் , இந்த அறிக்கையை முற்றாக நிராகரிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு , இதன் குற்றம் குறைகளை எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் . போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.”

 

நான் அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுவிட்டு தொடர்ந்து பேசினேன் .கடுமையாக விமர்சித்தேன் .காது கொடுத்து புன்முறுவலோடு கேட்டுக்கொண்டிருந்தார் .

 

எனக்கு பின்னால் பேசவந்த தோழர் உரா வரதராசன் , “ தோழர் சுபொ சொன்ன வார்த்தை மிகப்பிழையே !.அதை ஏற்கமுடியாது . ஆர்யு சரியாகத்தான் சுட்டிக் காடியுள்ளார் . ஆனால் இந்த அறிக்கை ஏற்புடையது அல்ல .இது செத்தவன் கையில் கொடுத்த வெற்றிலை பாக்காகத்தான் இருக்கிறது” என்றார் .

 

ஆர்யு உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர் . பின்னர் உணவு இடை வேளையில் என்னை அழைத்து “ உங்களுக்கு விமர்சிக்க முழு உரிமை உண்டு . வார்த்தைகளை எச்சரிக்கையாக வீசவேண்டும் . செயற்குழு ஆளுங்கட்சியுமல்ல ; மாநிலக்குழு எதிர்கட்சியுமல்ல .மாநிலக்குழு முடிவுகளை அமலாக்குவதே செயற்குழு” என் அமைப்பு பாடமே சொல்லிக்கொடுத்தார் .

 

 

ஓர் வேடிக்கையான அனுபவம் . நான்  ஓர் கூட்டத்தில் கலைஞர் எனப் பேசிவிட்டு கீழே இறங்கியதும் , ஒரு அறிவுஜீவி தோழர் அது என்ன கலைஞர் , கருணாநிதி என்று சொன்னால் போதாதா எனக் கேட்டார் .

 

சில நாட்களில் இன்னொரு பொதுக்கூட்டம் . நான் பேச எழுந்தேன் .எதிரே அதே தோழர் .வம்பு எதற்கு என கருணாநிதி எனப் பேசினேன் .மேடையில்  இருந்த சங்கரய்யா நீங்க சொன்ன அரசியல் விமர்சனம் சரியே ! கலைஞர் என்று சொன்னால் நாம் குறைந்து போய்விடமாட்டோம் .நாம் சொல்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள்,மதிப்பார்கள் என்றார் .அவர் பேசும்போது நண்பர் கலைஞர் கருணாநிதி என்றே குறிப்பிட்டார் ஆனால் அரசியல் விமர்சனத்தில் கறாராக இருந்தார் . அது முன்மாதிரியாக இருந்தது .

 

ஆர்யு ,சங்கரய்யா ,ஏபி ,விபிசி போன்ற தோழர்கள் எதிரியை விமர்சிக்கும் போது அதில் கண்ணியம் பேண வேண்டும் என்பார்கள் . நாம் சொல்லுகிற செய்தி வலுவாகவும் நாம் பயன்படுத்தும் சொற்கள் கண்ணியமாகவும் அமைவதே மேடை இலக்கணம்.

 

இன்னும் பேச எவ்வளவோ உள்ளது .பேசுவோம் !!!

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

21 ஆகஸ்ட் 2021.

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment