சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .
நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 10.
சங்கராபரணம் எனும் திரைப்படம் வந்த பொழுது நடந்த ஓர் நிகழ்வு இங்கு நினைவுக்கு வருகிறது . நான் அப்போது ஒரு சினிமா விடாது பார்க்கும் டைப் . சின்னையாவும் நானும் படம் பார்க்க கிளம்பிவிடுவோம். அதே போல் அப்படத்தையும் பார்த்துவிட்டோம் . மறுநாள் தீக்கதிரில் ஓர் விமர்சனம் .அதைப் படித்ததும் கடுப்பாகி நானும் சின்னையாவும் பேசிக்கொண்டிருந்தோம் .அப்போது பெரம்பூர் கட்சி அலுவலகத்தில்தான் மாநிலக்குழுவும் தற்காலிகமாக இயங்கி வந்தது .எங்கள் பேச்சினூடே தோழர் ஆர் ராமராஜ் வந்தார் . நாங்கள் சொல்வதைக் கேட்டார் . அங்கே வந்த தோழர் ஏ பாலசுப்பிரமணியத்தை அழைத்து விஷயத்தைச் சொல்லி கோர்த்துவிட்டார் தோழர் ஆர் ஆர் .
உடனே ஏபி சொன்னார் , “ இண்ணைக்கு இரவுக் காட்சியில் அந்தப்படத்தை நாம் நாலுபேர் பார்க்கிறோம் . சின்னையா ! டிக்கெட் புக் பண்ணு !” எனச் சொல்லி காசை எடுத்துக் கொடுத்தார் .இரவு படம் பார்த்தோம்.
மறுநாள் சொன்னார் , “ ஒடுக்கப்பட்ட ஓர் சாதியில் பிறந்த ஒரு சிறுவன் கர்நாடக இசையில் மேலெழுந்து வருவது ஓர் பாராட்ட வேண்டிய ஜனநாயகச் செய்தியே ! சினிமா மசாலாவில் நாம் எதிர்பார்க்கிற எல்லாமுமா கிடைக்கும் ? உங்க விமர்சனம் சரியே !” என்றவர் தீக்கதிருக்கு போண் செய்து பேசி இரண்டொரு நாளில் இன்னொரு தோழர் [ எஸ் ஏ பி என நினைவு ] எழுதிய விமர்சனம் வரச் செய்தார் . சாதியத்தை எதிர்க்கிற அல்லது மீறுகிற எதுவாயினும் ஆதரிக்க வேண்டும் என்பதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் குறியாக இருந்தார் .
தோழர் உ.ரா .வரதராசன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய போது அவருக்கு ஓர் கடுமையான நெருக்கடி . கட்சிக்குள்ளும் வங்கி அரங்கிற்குள்ளும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டார் . அப்போது ஓர் நாள் இரவு சுமார் 10 மணிக்கு பழவந்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள எம்ஜிஆர் நகரிலுள்ள என் குடிசைக்கு உ .ரா. வந்தார் .வழக்கம் போல் நான் ,கந்தன் , ரிசர்வ் வங்கித் தோழன் முண்டன் ,ஆர்பிஐ கேண்டின் பத்மநாபன் அவருடன் புறப்பட்டு மீனாம்பாக்கம் விமானநிலையத்திற்கு எதிரே உள்ள தெரு ஓர டீ கடைக்கு சென்றோம் . வறுத்த மீனும் கட்டன் சாயாவும் அங்கே ஸ்பெஷல் . நாங்கள் போகும் போது அரட்டையில் உரா பங்கேற்காமல் சிகெரெட்டை மாறி மாறி புகைத்தவாறே வந்தார் .இரவு மூன்று மணிவரை அங்கிட்டும் இங்கிட்டும் அலைவதும் டீ சாப்பிடுவதும் . புகைப்பதுமாக நேரம் கடந்தது . ஒன்றரைப் பாக்கெட் சிகெரெட்டையாவது உரா காலி செய்திருப்பார்.
வீட்டிற்கு புறப்படத் தயாரானார் . தலைவர் டென்ஷனில் இருக்கார் நாம் வீட்டில் கொண்டுவிட்டுவிட்டு வருவோம் என்றார் தோழர் முண்டன் . வீட்டை நெருங்கியதும் சொன்னார் , “ காம்ரேட் முண்டன்! காம்ரேட் ஏபி சொன்னதை ஏற்கிறேன் .இரண்டொரு நாளில் என் திருமணம் என்றார் .
அதன்படி கோகலே மண்டபத்தில் மிக எளிமையாய் சடங்கு சம்பிரதாயம் அனைத்தையும் புறந்தள்ளி வெறும் கற்கண்டோடு வரதராசன் –சரஸ்வதி திருமணம் நடைபெற்றது . தோழர்களைப் பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் கறார்தன்மையோடும் உறுதியோடும் செயல்பட்ட தோழர் ஏபியின் ஆளுமையும் , பழமையை அடித்து நொறுக்கும் வேகமும் என்னை வியக்க வைத்தது .
வாலிபர் சங்கம் சார்பில் இளம் தோழர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் பழநியில் நடைபெற்றது . நான் அதில் பங்கேற்றேன் .அதில் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் “கட்சித் திட்டம்” குறித்த வகுப்பு எடுக்கிறார் .தோழர் ஏபி ஓர் நாற்காலியில் உடகார்ந்து பேசுகிறார் .எல்லோரும் தரையில் ஜமுக்காளத்தில் இருக்கிறோம் . நான் கல்யாண மண்டப தூணில் சாய்ந்து கொண்டு வகுப்பைக் கேட்கிறேன் .கூட்டம் துவங்கி பத்தாவது நிமிடம் நான் தூங்கிவிட்டேன் . என்னோடு ஐந்தாறு பேர் நிலையும் அதுவே ! ஏபி என்னை அழைத்து எழுப்புகிறார் ,
” நேற்று நைட்டு சினிமாவுக்கு போனீங்களா ?”
“ஆமாம்” என நாங்க தலையாட்ட ,
“ டீக்கடையில் அரட்டை அடிச்சிட்டு எப்போ தூங்குனீங்க ?”
“ மூன்று மணிக்கு மேல்..”
“ இங்க காலையில பொங்கல வேற போட்டுட்டு தூங்க வச்சிட்டானுக …இவங்க டீ தர இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமாம் .எல்லோரும் வெளியே போய் டீ குடிச்சு ஃபிரஷ் ஆகி வாங்க” ன்னு அனுப்பிச்சிட்டாரு .
அப்புறம் அரை மணி நேரத்துக்குபின் வகுப்பு ஆரம்பிச்சிருச்சு ,வகுப்பு முடிந்ததும் .கேள்வி பதில் நேரம். விருதுநகர் பாலதண்டாயுதம் ஓர் கேள்வியை வீசுகிறார் .
“ காம்ரேட் பாலத்தண்டாயுதம் நாலஞ்சு வருஷமா எல்லா வகுப்பிலேயும் இதே கேள்வியைக் கேட்குற நானு ஒரே பதிலை சொல்லுறேன் . இப்பவும் உனக்காகச் சொல்லல இங்க இருக்கிற மற்றவங்களுக்காகச் சொல்லுறேன் “னு ச்சொல்லி பதில் சொன்னார் .
அதைத் தொடர்ந்து சொன்னார் ,” பாலதண்டாயுதம் நீ ஒழுங்கா வக்கீல் வேலையைப் பாரு ! [ எங்கள காமிச்சு] இந்த மாதிரி யூத்துக்கு வழிவிடு ! யூத்துன்னா யாரு ? ஸ்போர்ட்ஸ் ,சினிமா, சயின்ஸ், பாலிட்டிக்ஸ் ,சோஷியல் ரிஃபார்ம் ,சோஷியல் சர்வீஸ் ,காதல் , துணிவு ,எதிர்ப்பு .புரட்சி,தேடல் , இன்னும் ஆயிரம் இருக்கு…. எல்லாம் இருக்கும் .. அதுதான் யூத் .அப்படி எல்லாவற்றுக்கும் இடம் இருந்தால்தான் வாலிபர் சங்கம் . இருபத்தி நாலு மணி நேரமும் மீசையை முறுக்கிக்கிட்டே இருக்கிறது புரட்சி அல்ல ; யூத்தோட கலந்து சமூக உணர்வை மெல்ல ஊட்டணும் … நிச்சயம் இந்தப் பிள்ளைகள் அதைச் செய்வாங்கன்னு நம்பிக்கை இந்தக் கிழவனுக்கு இருக்கு !” [ நினைவில் பதிந்த படி எழுதியுள்ளேன் .முன் பின் இருக்கலாம் ].
இதைவிட வாலிபர் சங்கத்துக்கு யார் வழிகாட்ட முடியும் ?
” ஓர் வாலிபர் சங்கம் முற்போக்கானதா பிற்போக்கானதா என்பதை அளக்கும் கருவி எது ? அந்த வாலிபர் சங்கம் தொழிலாளி விவசாயி வர்க்க உரிமைப் போராட்டங்களோடு தோள் இணைகிறதா ? இல்லையா ? என்பதுதான்.” என்கிற மாசேதுங் மேற்கோளை மிகச் சரியாக அறிவுறுத்துவார் .
அதே சமயம் வாலிபர் சங்கம் கட்சியின் வாலாக அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி கட்சி சொல்வதை திருப்பிச் சொல்வதும் செய்வதுமாக இருக்கக்கூடாது … இளைஞர்களை வென்றெடுக்குமாறு கிரியேட்டிவிட்டியோட சுயமாகச் செயல்படணும்..ஜனநாயகபூர்வமாகச் செயல்படணும் ..துடிப்பாக இருக்கணும் …என உணர்வுபூர்வகாக வழிகாட்டியவர் .
“தப்பு வந்திடுமோ எனத் தயங்காதீங்க ! நாங்களும் தப்பு செய்திருக்கோம் .திருந்தி இருக்கோம் . பயப்படாமல் வேலை செய்ங்கோ ! தப்பு வந்தால் ஒப்புக்கொள்ளுங்க ! திருத்திக்கோங்க ! அவ்வளவுதான் ….. அதுதான் வளர்ச்சியின் சூத்திரம்” என்பார் .
தோள் அணைத்து நம்பிக்கை ஊட்டிய தோழர் ஏபி குறித்து சொல்ல இன்னும் நிறைய உண்டு ! தொடர்ந்து பேசுவோம் !
சு.பொ.அகத்தியலிங்கம் .
16 ஆகஸ்ட் 2021.
0 comments :
Post a Comment