நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 14.

Posted by அகத்தீ Labels:

 


 

இந்த கீதை எதுக்கு உபயோகப்படும் ?  ஒரு கைக்கடிகாரம் கொடுத்திருந்தால் மணி பார்க்கவாவது உதவும் என்றாராம்

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 14.

 

 தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் எழுதிய காந்தியம் சுரண்டல் வர்க்கத்தின் கேடயம்.” என்கிற சிறு வெளியீடு அக்காலத்தில் எங்களால் கொண்டாடப்பட்டது . அன்றைய இடதுசாரி இளைஞர்களிடம் ஓங்கி இருந்த காந்திய எதிர்ப்புக்கு நல்ல தீனி அது . இப்போது இத்தொடரை படிக்கிற தோழர் ஒருவர் அந்நூல் பற்றி கேட்டார் .  கால ஓட்டத்தில் காந்தியைப் பற்றிய பல மதிப்பீடுகள் மாறிவிட்டன என நாம் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது .

 

முதலாளிகள் தர்ம கர்த்தாக்களாக விளங்க வேண்டும் என்கிற காந்தியின் தர்ம கர்த்தா தத்துவதையும் , சனாதன வர்ண தர்மத்தின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதென அவர் சொன்னதையும் மையப்படுத்தியே அந்த வெளியீடு அமைந்திருந்தது .அந்த விமர்சனத்தை இப்போதும் நாம் நிராகரிக்கவில்லை .ஆயின் காந்தி இன்றும் தேவைப்படுகிறார் எனும் பொருளில் காந்தியை மேலும் பயில வேண்டியுள்ளது .

 

காந்தி விடுதலைப் போராட்ட தலைவராக உயர்ந்தது எப்படி? அவரின் தத்துவ நிலைபாடுகள் முதலாளித்துவத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தபோதும் இறுதிநாட்களில் அவர் சோர்ந்தது ஏன்? தர்மகர்த்தா தத்துவம் ‘அகிம்சா தத்துவம்' எனஅவர் நம்பிய கோட்பாடுகள் தோல்வியடைந்தது ஏன்? வெகுமக்களை போராட்ட களத்துக்கு திரட்டிய அவரே அதற்கு எதிராகவும் நிலையெடுத்த தத்துவமயக்கம் ஏன்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் தத்துவப் பார்வையோடும் எளிமையாய் “ மகாத்மாவும் இசமும்” நூலில் விளக்கியிருக்கிறார் இஎம்எஸ். அதனை இன்றைய இளைஞர்கள் படிப்பது அவசியமே . ஆயினும் , மதவெறி பேயாட்டம் போடும் காலத்தில் காந்தி இன்னும் தேவைப்படுகிறார் . ஏன் ?

 

பிபன் சந்திரா எழுதிய “மகாத்மா- மதச்சார்பின்மை- மதவெறி” எனும் சிறிய வெளியீடு [ அ.குமரேசன் மொழியாக்கம் ] இன்றைக்கு காந்தி எப்படி நமக்கு நெருக்கமாகிறார் என்பதைச் சொல்லும் . காந்தி மதநம்பிக்கையாளர் ஆனால் மதவெறிக்கு எதிரான போரில் தன்னையே பலிதந்தார் .அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் அவரவர் முனையிலிருந்து அன்றைக்கு காந்தியை விமர்சித்தனர் .அதே நேரம் விடுதலைப் போரில் அவரின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரித்தனர் . விடுதலைப் போரில் துளியும் பங்கேற்காத ஆர் எஸ் எஸ் தான் காந்தியை கொலை செய்தது . ஆன்மீகவாதியாய் தன்னை வரித்துக்கொண்ட காந்தியின் குரு கோகலேவும் சீடர் நேருவும் பகுத்தறிவாளர் என்பது காந்தியின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் .

 

ஆகவே மீண்டும் சொல்கிறேன் ,இன்றைக்கு மதவெறிக்கு எதிரான போரில் காந்தி தேவைப்படுகிறார் . அதே வேளையில் காந்தியைப் பற்றிய முழுமையாக அறிய மேலும் வாசிப்பீர் !

 

ஒர் தோழர் காந்தியை கடுமையாக குறைகூறி பேசிவிட்டார் ; அவரை தோழர் ஏபி அழைத்து காந்தியின் தத்துவம் மீது நமக்கு விமர்சனம் உண்டு ,ஆயின் காந்தி மாபெரும் தலைவர் .அவர் பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றார் .இந்த பேச்சினூடே , “  ‘காந்தி – ஜோசி கடிதப் போக்குவரத்து’ நூல் படித்துள்ளீர்களா ? போய் படியுங்கள்.” என்றார் .அப்போது அருகிலிருந்த நான் அப்புறம்தான் அந்த நூலைத் தேடிப்படித்தேன் .இன்றும் படிக்க வேண்டிய நூல் அது .

 

அதே போல் பெரியார் மீதும் அளப்பரிய மதிப்பு வைத்திருந்தார் .சமூக சீர்திருத்தப் பார்வையும் செயல்பாடுகளும் கம்யூனிஸ்டுகளுக்கு தேவை என்பதில் உறுதியானவர் . எம் ஆர் வெங்கட்ராமனும் , ஏ.பாலசுப்பிரமணியமும் பிறப்பால் பார்ப்பனர்களே ஆனால் ஒரு துளியும் அந்த வாசனை இல்லாதவர்கள் . எம் ஆர் வெங்கட்ராமன் சிறையில் இருந்தபோது அவரது மைத்துனர் அவருக்கு பகவத்கீதை புத்தகம் ஒன்றை கொண்டுவந்து கொடுத்தாராம் . அவரிடம், “ இந்த கீதை எதுக்கு உபயோகப்படும் ?  ஒரு கைக்கடிகாரம் கொடுத்திருந்தால் மணி பார்க்கவாவது உதவும் என்றாராம் எம் ஆர் வி.

 

மநுதர்மத்திலிருந்து பல அம்சங்களை தலைப்புவாரி தொகுத்து ஒரு கடுரையாக்கி தட்டச்சு செய்து வைத்திருந்தேன் .அதை தோழர் இரா. வேணு எடுத்து ஆர் ராமராஜிடம் கொடுக்க அது தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் கைக்கு போனது .கூப்பிட்டு விசாரிப்பார் எனக் காத்திருந்தால்  இரண்டொரு நாளில் அது தீக்கதிரில் பிரசுரமானது . அதை அனுப்பி போடச் சொன்னது ஏபி என்பதை பின்னர் அலுவலகச் செயலாளர் சுந்தர்ராமன் மூலம் அறிந்து கொண்டேன் .

 

அதைத் தொடர்ந்து தோழர் ஏபியோடு பேசும் போது சொன்னார் , “ பகவத் கீதை ,அர்த்த சாஸ்திரம் , மனுதர்மம்” மூன்றும் பிராமண ,சத்திரிய ,வைசிய வர்ணத்தாரைக் காக்க எழுதப்பட்டவையே . சூத்திரர் ,பஞ்சமர்களுக்கு எதிரானது . இவை உழைப்பாளி வர்க்கத்திற்கு எவ்விததிலும் பயன்படாதென்பதை மிகப் பொறுமையாக விளக்க வேண்டும் .இது குழந்தைகளுக்கு கசப்பு மருந்து ஊட்டுவதுபோல் கடினமான வேலைதான் . மிகுந்த எச்சரிக்கையோடு பொறுப்பாக பக்குவமாகச் செய்ய வேண்டும் . வாலிபர் ,மாணவர் சங்கம் அவ்வேலையினை தன் வேலைத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் .


இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்பதில் தோழர் ஏபிக்கு எப்போதும் முனைப்பு உண்டு . அப்போது கட்சி மாநிலக்குழு அலுவலகம் சென்னை குக்ஸ் சாலையில்தான் தற்காலிகமாக இயங்கி வந்தது . மாநிலம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுப்பும் போது நான் ,கே சி கருணாகரன் ,நன்மாறன் , கோவை பாலகிருஷ்ணன் ,பி.ஆர் நடராஜன் ,திண்டுக்கல் ஜெயராமன் ,வடலூர் இடிமுழக்கம் மகாதேவன் [ இவர் கட்சியில் இப்போது இல்லை.] என பலரை கட்டாயம் பட்டியலில் சேர்க்கும் படி அலுவலகச் செயலாளரிடம் சொல்லிச் சேர்ப்பார் .அதுபோல் பெண்களை பேச்சாளராக அனுப்புவதில் ஆர்வம் காட்டினார் .  “கிணற்றுல தூக்கிப் போடு தானா நீச்சல் கற்றுக்குவாங்க” என்பார் .

 

எம் ஜி ஆர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வந்தது , சிபிஎம் எம் ஜி ஆரை ஆதரித்தது .மாயத்தேவர் போட்டியிட்டார் .கடும் வன்முறையை ஆளும் திமுக ஏவியது . எம் ஜி ஆர் கட்சி தொடங்கிய புதிது எனவே வன்முறையை எதிர் கொள்ள  தோழர் ஏபி உடன் இருந்து வழிகாட்டினார் , “ ஊழியர் கூட்டத்தில் அடிவாங்கிட்டு கட்சி ஆபீஸூக்கு தோழர்கள் யாரும் வராதீர்கள் .அடிச்சிட்டு வாங்கன்னு “ சொன்னார் .தோழர் ஏபியின் சொல் கட்டளையானது . வன்முறையை கம்யூனிஸ்ட்  தோழர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றனர் .மாயத்தேவர் வென்றார் .

 

அவசர காலதிற்கு முன்பே காங்கிரஸ் இண்டிகேட் ,சிண்டிகேட் என இரண்டாகப் பிரிந்தது . இண்டிகேட் சிண்டிகேட் ரெண்டும் சாபக்கேடு என தோழர் ஏபி பேச்சு முழக்கமாகவே ஆனது .காமராஜர் இறந்தபோது சிண்டிகேட்டில் அதாவது பழைய காங்கிரஸில் இருந்த காங்கிரஸ்காரர்களை பிடிக்க இண்டிகேட் என்ற இந்திரா காங்கிரஸ் முயற்சித்த போது தோழர் ஏபி பேச்சு சிறுவெளியீடானது .

 

 “ பந்தலிலே பாகற்காய் / போகையிலே பார்த்துக்கலாம் / ஐயையோ வித்துக்கில்லோ விட்டிடிருக்கேன்,” என்கிற கிராமியக்கதைச் சொல்லி அரசியல் நையாண்டி செய்திருப்பார் .அது அன்றைக்கு பிரபலமானது .

 

தோழர் ஏபி எங்கு பேச்சை முடிக்கும் போது , “ காக்கை நோக்கறியும் ,கொக்கு டப்பறியும் . நீங்கள் காக்கையா இருக்கப் போறீங்களா ? இல்லை கொக்கா இருக்கப் போறீங்களா ?” என்ற உதாரணத்தைச் சொல்லியே முடிப்பார் . அதாவது காக்கையை அடிக்க கல்லை எடுக்கும் முன்பே காக்கா பறந்துவிடும் ;கொக்கு சுடுப்பட்டு வீழும் . நாம் காக்கையாகத்தானே இருக்க வேண்டும் ?

 

ஒரு முறை தோழர் ஏபிஐ பார்க்கும் போது அவர் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்து அடிக்கோடிட்டு படித்துக்கொண்டிருந்தார் . பழையபடி அறிக்கையைப் படிக்கிறீங்க என்றேன் .கணக்கு வைக்கவில்லை .ஒவ்வொரு முறையும் படிக்கும் போது புரிதல் மேம்படுது ,தெளிவாகுது என்றார் .திரும்பத் திரும்ப சில நூல்களைப் படிக்கணும் ; சில நூல்களை மறுவாசிப்பும் செய்யணும் . மறுவாசிப்பு என்பது பட்டறிவு படிப்பறிவு இரண்டும் தந்த ஞானத்தோடு மேலும் தெளிவு பெற படிப்பதாகும் .

 

  தோழர் இஎம்எஸ் எழுதிய ‘வேதங்களின் நாடு' ‘இந்திய வரலாறு' மகாத்மாவும் இசமும்' ‘நேருவின் கொள்கையும் நடைமுறையும்' ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' ‘இந்திய பொருளாதார திட்டமிடலும் நெருக்கடிகளும்' ‘சோஷலிசத்திற்கான இந்தியப் பாதை' என்கிற ஆறு புத்தகங்களையாவது வரிசையாகப் படித்தால் இந்திய சமூக அரசியல் வரலாற்றைப் பற்றிய ஒரு  பார்வை கிடைக்கும். மலையாளிகளுக்கு கேரள சமூகம் குறித்து அவர் எழுதிய நூல் மேலும் ஒரு போனஸ். தமிழில் அப்படி ஒரு நூல் இல்லாதது பெருங்குறையே. எது எப்படியோ இந்நூலை வாசிப்பது அரசியல் பயிற்சியின் அடிப்படையாகும். ஆனால் அப்படியே சூத்திரம் போல் படிப்பதல்ல ; இன்றுவரை வளர்ந்திருக்கிற சமூகப்பார்வையோடு அவற்றை மறுவாசிப்பு செய்ய வேண்டும் . இளைய தலைமுறை அதனைச் செய்வார்களாக !


ராமச்சந்திர குஹா எழுதிய “ இந்திய வரலாறு – காந்திக்குப் பின் “ இரண்டு பாகங்களும்கூட இந்த வரிசையில் தகவலறிய பயன்படும் .அதே நேரம் நூலாசிரியரின் கம்யூனிஸ்டுகள் மீதான கடும் விமர்சனமும் வெறுப்பும் நூலின் பல இடத்தில் தலைநீட்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டே படிக்க வேண்டும்.

 

இன்னும் பேசப்பேச நீளும் … பேசுவோம்.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24 ஆகஸ்ட் 2021.

 

 


0 comments :

Post a Comment