சடங்கு சம்பிரதாயங்களை மீறுகிறப்
போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் வீட்டுக்குள்ளும் நடத்த வேண்டியிருக்கிறது .இதில் தோல்விகூட
கிடைக்கலாம் , ஆயினும் விடாது முயற்சிக்க வேண்டும் . குடும்ப ஜனநாயகமும் இந்த போராட்டமும்
முரண்படவும் நேரிடலாம் .தொடர்ந்து பயிற்றுவிப்பதன் மூலமே சாத்தியமாகும்.
நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 11.
என் தம்பி ஐயப்பனுக்கு தோழர்
ஏ நல்லசிவன் தலைமையில் ராஜபாளையத்தில் திருமணம் நடந்தது . போராட்ட களத்திலும் சிறையிலும்
தோழர் ஏஎன் உடன் ஒன்றாக இருந்த கட்சியின் மூத்த
தோழர் எம் .மீனாட்சிசுந்தரத்தின் மகள்தான் மணமகள் . தோழர் டி .ஜானகிராமன் ,வே .மீனாட்சிசுந்தரம்
முயற்சியில் இத்திருமணம் கைகூடியது .
திருமணத்தில் வாழ்த்திப் பேசும்போது
தோழர் ஏ என் சொன்னார் , “ தோழர் சுபொ தன் திருமணத்தை மட்டுமல்ல தன் தம்பி திருமணத்தையும்
ஐயர் இல்லாமல் நடத்தியுள்ளார் . பாராட்டுக்குரியது அதே போல் தோழர் எம் எம் எஸ் சும் தன் வீட்டாரை ஒப்புக் கொள்ளவைத்து
இப்படி திருமணத்தை நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது . இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால்
,நான் என் வீட்டாரை இது போன்ற திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை . நான்
தோற்ற இடம் , தோழர் சுபொவும் எம் எம் எஸ்சும் ஜெயிச்சிருக்காங்க…மனசாரப் பாராட்டுகிறேன்
.”
இப்படி மனம் திறந்து பாராட்டவும்
பேசவும் திறந்த மனதும் துணிச்சலும் தேவை . இங்கு என் நினைவுக்கு ஓர் செய்தி வருகிறது
. அவசரகாலம் முடிந்ததும் சென்னை இராயபுரத்தில் சிபிஎம் மாநில மாநாடு நடைபெற்றது . அம்மாநாட்டில்
நெல்லைத் தோழர் பாலவிநாயகம் தன் விவாதத்தின் ஊடே தோழர் ஏஎன் வீட்டில் சடங்கு ,சம்பிரதாயம்
கடைப்பிடிப்பது சரியா என கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பினார் . இறுதியில் தொகுப்புரை
வழங்கிய தோழர் ஏபி சொன்னார் .கட்சித் தோழர்கள் சடங்கு சம்பிரதாயத்தை தவிர்க்க வேண்டு . அதிலும் கட்சி மாநில , மாவட்ட
மட்டத்திலுள்ள தோழர்கள் இது கட்டாயம் தவிர்க்க வேண்டும். தோழர் ஏஎன்னுக்கும் அதையே
வலியுறுதுகிறோம் .அவர் வீட்டுச் சூழல் காரணமாக சில சமரசங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கிறது
. எல்லோருக்கும் இந்த சவால் இருக்கிறது . கம்யூனிஸ்டுகள் வீட்டில் சர்வாதிகாரியாக இருக்கமுடியாது
. இருக்கவும்கூடாது . ஏனையோர் நம்பிக்கையை நசுக்க முடியாது . இது மிகவும் சிக்கலான
பிரச்சனை . கம்பியில் நடப்பது போன்ற சர்க்கஸ் .”
என் தம்பி கல்யாணத்தில் தோழர்
ஏஎன் பேசியதை மேற்கண்ட சம்பவத்தோடு இணைத்துப் பார்த்தால் அவர் உள்ளத்தில் நீண்டநாள்
புழுங்கிக் கொண்டிருந்த விஷயம் என உணரலாம்.
மூத்த தோழர் சோம்நாத் சாட்ட்ர்ஜி
தன் தந்தை மறைவை ஒட்டி தந்தையின் கடைசி விருப்பப்படி கடுமையாக சடங்காச்சாரத்தை கடைப்பிடிக்க
நேர்ந்தது .ஊடகங்களில் பரபரப்பானது . கட்சியின் மத்தியக் குழுவும் அவருக்கு கண்டனம்
தெரிவித்தது .
சடங்கு சம்பிரதாயங்களை மீறுகிறப்
போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் வீட்டுக்குள்ளும் நடத்த வேண்டியிருக்கிறது .இதில் தோல்விகூட
கிடைக்கலாம் , ஆயினும் விடாது முயற்சிக்க வேண்டும் .குடும்ப ஜனநாயகமும் இந்த போராட்டமும்
முரண்படவும் நேரிடலாம் .தொடர்ந்து பயிற்றுவிப்பதன் மூலமே சாத்தியமாகும்.
இதே போன்ற இன்னொரு கேள்வி தொடர்ந்து
கட்சிக்குள் விவாதமாகும் .கட்சித் தோழர்கள் தன் மனைவியை மாதர் சங்கத்தில் இணைப்பது
,பிள்ளைகளை மாணவர் ,வாலிபர் சங்கங்களுக்கு அனுப்புவது இரண்டிலும் தொய்வு உள்ளதே . அதிலும்
வழிகாட்டியாக இருக்க வேண்டிய தோழர்களே சறுக்குவதும் நடக்கிறதே .
இது குறித்து ஓர் விவாதத்தில்
தோழர் ஏஎன் சொன்னார் , ” நம் விருப்பம் ,வேண்டுகோள் எல்லாம் இதுதான் , ஆனால் இதனை மனைவி
மீதோ ,மகள் மீதோ ,மகன் மீதோ கட்டாயமாகத் திணிக்க முடியாதே ! என் போன்றோர் வாழ்வின்
பெருங்காலம் சிறை ,தலைமறைவு ,போராட்டம் எனப் போனதால் குடும்பத்தில் எங்களில் சிலரால்
போதுமான தலையீடு செய்ய முடியாமல் போயிற்று .இன்றைக்கு அப்படி இல்லை . நாம் குடும்பத்தில்
எப்படி நடக்கிறோமோ அப்படித்தான் மனைவியும் பிள்ளைகளும் நம்மை மதிப்பார்கள் . முதலில்
உங்கள் குடும்பம் உங்களைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படி நடந்து கொள்ளுங்கள் .அதன் பின்
நீங்கள் கோருவது தானே நடக்கும் .இது ஒரு வழிப்பாதை அல்ல .இருவழிப்பாதை.” என்றார் .
[ நினைவில் இருந்தபடி எழுதுவதால் வார்த்தைகள் முன்பின் இருக்கும் .ஆயினும் கருத்து
அதுவே ]
சைதை தேரடியில் பெருமுயற்சி
எடுத்து தமுஎகச முதல் கலை இரவை நடத்துகிறது . சென்னையில் இவ்வடிவம் வெற்றிபெறுமா என்கிற
பெரும் கேள்விக்குறியோடுதான் எல்லோரும் இருந்தோம் .தோழர்கள் ஆர் உத்தண்டராமன் , சைதை
ஜே உள்ளிட்ட ஒரு படை இயங்கியது . கலையிரவு
துவங்குவதற்கு கால் மணிநேரம் முன்பு ஒரு முதியவர் முன்வரிசை நாற்காலியில் வந்து உட்காருகிறார்
. அப்போதுதான் பார்க்கிறோம் அவர் ஏஎன் . அவரை நெருங்கி தோழர்கள் மேடைக்கு அழைக்கிறோம்
. நான் கலையிரவைப் பார்க்கவே வந்தேன் .நீங்கபாட்டுக்கு மற்ற வேலைகளை கவனியுங்க என அனுப்பிவிட்டு
விடிய விடிய உட்கார்ந்து கவனித்தார் .பனி கொட்ட ஆரம்பித்ததும் தலையில் துண்டு போட்டுக்கொண்டார்
.
இடையில் இரண்டு மூன்று முறை
டீ கொடுத்த தோழர்கள் சர்க்கரை போட்டு கொடுத்துவிட்டார்கள் . அவரும் குடித்துவிட்டார்
. பின்னர் கேட்கையில் பரவாயில்லை தோழர்கள் கஷ்டப்பட்டு ஓடி ஓடி வேலை செய்யுறாங்க .இது
ஒரு பிரச்சனையே இல்லை என்றார் . இன்னொன்று எப்போது ஸ்விட்டை நீட்டினால் எடுத்து சாப்பிட்டுவிடுவார் .அவர் இயல்பு அப்படி .
தோழர் ஏஎன் ஓர் சினிமாப் பிரியரும்கூட
எல்லா படத்தையும் பார்த்துவிடுவார் . “இரவு சீக்கிரம் சாப்பிட்டால் நைட் ஷோ போகிறார்னு
அர்த்தம்டா ,ஆனா யாருகிட்டயும் சொல்ல மாட்டான் , அவனே ஒற்றையா கிளம்பிவிடுவான்,” என
தோழர் ஆர் ஆர் கேலி செய்வார் . நானும் வேறு சில தோழரும் இரவுக் காட்சிக்குப் போய் திரும்பிப்
பார்த்தால் அவர் இருப்பார் . தோழர் பி ஆர் பியும் சினிமா பார்க்கத் தவறமாட்டார் .
தோழர் ஏஎன் கையில் எப்போதும்
ஒரு பாக்கெட் டிரான்சிஸ்டர் இருக்கும் .ஒரு செய்திவிடமாட்டார் .கேட்பார் .கிரிகெட்
மேட்ச் தொடங்கிவிட்டால் காதோடு டிரான்சிஸ்டரை ஒட்டிவிட்ட மாதிரி திரிவார் . கிரிகெட்
கமெண்டரியைக் கேட்டுக்கொண்டே இருப்பார் . ஏதேனும் கமிட்டிக் கூட்டம் நடந்தால் அடிக்கடி
வெளியே வந்து கிரிகெட் ஸ்கோரைக் கேட்பார் .
புரட்சிக்காரன் ,கம்யூனிஸ்ட்
யாராயினும் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றிரண்டில் கூடுதல் நாட்டம் இருக்கவே செய்யும்
. அது பிழையல்ல .மனித இயல்பு . வேறு எதிலும் நாட்டம் இல்லை வெறுமே மார்கஸ் ,லெனின்
என பஜனை மட்டும் செய்வோம் என்கிற வறட்டுப்பேர்வழிகள் அன்றும் இருந்தனர் .இன்றும் இருக்கின்றனர்
.
அவர்களை “ரோல் மாடல் கம்யூனிஸ்ட்டாக” ஒரு போதும் பார்க்காதீர்கள்
தோழர் ஏஎன் வாழ்க்கை சொல்லும் செய்தி இன்னும் உண்டு !
பேசுவோம் !!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
18 ஆகஸ்ட் 2021.
0 comments :
Post a Comment