நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 15.

Posted by அகத்தீ Labels:

 

 

கட்சி அமைப்பு ,கூட்டுச் செயல்பாடு என வரும் போது தன்னைவிட அமைப்பு பெரியது என்கிற புரிதலோடு மேலிருந்து தொடங்கி கீழ்வரை செயல்படும் போது மட்டுமே விளைவு நன்றாக இருக்கும் .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 15.

 

நான் தோழர் வி பி சிக்கும் ,தோழர் எ.நல்லசிவனுக்கும் பதிலியாய் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன் .இருவருமே மிகுந்த உரிமையோடு என்னை கேட்பார்கள் . நானும் அவர்கள் கேட்டால் தட்டாமல் ஒப்புக் கொள்வேன் .

 

ஒரு முறை சென்னை மே தினப் பேரணியில் தோழர் ஏ என் பேசவேண்டும் .எனக்கு வேறு இடத்தில் கூட்டம் . எதிர்பாராவிதமாக என் கூட்டம் ரத்து ஆகிவிட்டது . ஏ என் என்னை அழைத்து , “ எனக்கு காய்ச்சலாய் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை , எனக்குப் பதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் .” எனக் கேட்டுக்கொண்டார்.

 

” நீங்கள் சொல்லி நான் பங்கேற்காமல் இருப்பேனா ? ஆனாலும் இது மே தினப் பேரணி , ஏஐடியுசி சார்பிலும் பெரிய தலைவர் வருகிறார் , நான் போனால் சரியாக இருக்குமா ?” என நான் கேட்டேன் .

 

தோழர் ஏ என் சத்தமாகச் சிரித்தார் , “ இந்தத் தொண்டையை வச்சுகிட்டு நான் பேசிறதவிட நீங்க பேசினா தோழர்கள் ஏற்றுக்கு வாங்க , ஏஐடியுசி தலைவரை கடைசியில் பேசச் சொல்லிட்டு நீங்க முதலில் பேசிவிடுங்க புரொட்டோகால் சரியாயிடும்..” என்றார் நானும் சென்றேன் . எஐடியுசி சார்பிலும் வேறு தோழரே வந்திருந்தார் .பிரச்சனை இல்லை .நான் சிறப்புப் பேச்சாளராகி விட்டேன் .

 

 

இந்த இடத்தில் இன்னொரு அனுபவம் .பால்பண்ணைத் தொழிலாளர்களுக்காக மூலக்கடையில் ஓர் கூட்டம் . அன்று விபிசிக்கு பதில் நான் .திமுக பேரவை சார்பில் செ.குப்புசாமி . ஏஐடியுசி சார்பில் தோழர் கே.டி.கே .தங்கமணி. நான்தான் இருப்பதில் சின்னப் பையன் எனவே முதலில் நான் பேசிவிடுகிறேன் என்றேன் . “ காம்ரேட் ! முதலில் அணுகுண்டு பட்டாசை வெடிச்சிட்டு அப்புறம் ஊசிவெடியை போட்டா நல்லா இருக்காது .நான் முதலில் பேசிவிடுகிறேன் .” என்றார் கே.டி.கே . ஒருவழியாய் குப்புசாமியை கடைசி பேச்சாளராக்கி நான் அவருக்கு முன் ,கேடிகேவுக்கு பின் பேசினேன் .

 

தோழர் ஏ என் , தோழர் கே டி கே போல் ,தோழர் எம் ஆர் வி போல் இளம் தோழர்களை முன்னுக்கு நிறுத்த ஆசைப்படும் தலைவர்கள் அரிது . எல்லாம் தனக்குத்தான் தெரியும் , நான்தான் எல்லா மேடையிலும் முன்னால் இருக்க வேண்டும் என ஆசைப்படாமல் , உரிய இடத்தில் உரிய தோழரே முன்னிறுத்தும் அருங்குணம் அவர்களின் தனிச்சிறப்பு .

 

நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ,கட்சியிலிருந்து தோழர் பி.ராமச்சந்திரன் எங்களுக்கு பொறுப்பாக வழிகாட்டிவந்தார் .அவருக்கும் எனக்கும் பல நேரங்களில் முடிவெடுப்பதில் முரண்பாடு தலைநீட்டிவிடும் . தோழர் ஏ.என் அவர்களைச் சந்திக்க திருவல்லிக்கேணி தேரடி அலுவலகம் செல்வோம் .மாடியில் ஏ என் இருப்பார் .போய் பார்த்தது பேச ஆரம்பிப்போம் வழக்கமாக நீண்ட நேரம் பேசும் ஏ என் டக்கென்று தலையிட்டு . “ காம்ரேட் பி ஆர் சி ! யூத் ஏதோ புதுசா யோசிக்கிறாங்க … செய்து பார்க்கட்டும் … தப்பு வந்தால் பின்னாடி திருத்திக்கலாம் “ என்பார் . என்னைப் பார்த்து , “ சுபொ ! நீங்க யோசிப்பது திட்டமிடுவது எல்லாம் சரிதான் , கொஞ்சம் கட்சித் தலைமயோட பேசியிருக்கலாமே ! இனி கவனமா இருங்க !” கூட்டம் முடிந்துவிடும் .

 

மாடியிலிருந்து படி இறங்கும் போது பி ஆர் சி சிரிச்சுகிட்டே சொல்லுவார் , காம்ரேட் ஏ என் என்ன சொல்லுவார்னு நினைச்சனோ , அதைத்தான் சொன்னார் .” அப்புறம் பார்த்தசாரதி கோயில் அருகிலுள்ள காபி கடைக்கு அழைத்துப் போய் காபியும் வடையும் வாங்கித் தருவார். சட்டென்று கோவிப்பதிலும், அடுத்த நொடியே வாரி அணைப்பதிலும் பிஆர்சிக்கு நிகர் பிஆர்சியே ! . அவரோடு சண்டை போட்டால் . அடுத்து காபி வடை உறுதி!!

 

ஒரு முறை வாலிபர் சங்க மாநிலக்குழு எடுத்த முடிவு .ஓரே ஒரு மாவட்டத்தில் மட்டும் அமுலாகவில்லை . விசாரித்த போது கட்சி மாவட்டச் செயலாளர் குறுக்கிட்டு நிறுத்தியது தெரிந்தது . நான் இதை புகாராக ஏ என் பார்வைக்கு கொண்டு சென்றேன் . அவர் செயற்குழுவிலும் பேசி .  “ இது தவறு , வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஜனநாயக பூர்வமான முடிவை அமலாக்க தடை போடக்கூடாது .மாற்று கருத்து இருப்பின் கட்சி மாநிலக்குழுவுக்கு தெரிவிக்கலாம் .” என ஓர் சுற்றறிக்கையை அனுப்பிவிட்டார் . அந்த மாவட்டச் செயலாளர் பெரும் பொறுப்புக்கு வந்த பின்னும் என் மீது கோபம் கொண்டவராகவே நெடுங்காலம் இருந்தார் .

 

இப்போது சிபிஎம் கட்சி மாநாடுகள் துவங்கிவிட்டன . தோழர் ஏ என் மாநிலச் செயலாளராக இருந்தபோது ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி , கட்சிக்குள் கோஷ்டி சண்டை . அப்போது தோழர் ஏ.என் கொடுத்த விளக்கம் இன்றும் பொருந்தும்.

 

“ கொசுவுக்கு பிளவை நோய் வந்தது மாதிரி , நம்ம கட்சியில கோஷ்டி சண்டை . கட்சியை வளர்க்கச் சொன்னா கோஷ்டியை வளர்க்கிறீங்க ! நாம் சும்மா இருந்தாலும் அந்நிய வர்க்க கருத்துகள் பாட்டாளி வர்க்க கட்சியில் ஊடுருவிவிடும் . அவற்றுக்கு எதிராக நாம்தான் உறுதியா போராடணும் இல்லேண்ணா கோஷ்டி சண்டையில கட்சியே காணமல் போய்விடும்…”

 

மேலும் சொன்னார் ,” கொள்கை ,கோட்பாட்டு ரீதியான உள் கட்சி சண்டை இல்லை இது . முழுக்க முழுக்க பதவி ,தனிநபர் ஈகோ சார்ந்தது .இந்த கோஷ்டிச் சண்டையை நம் கட்சியியில் அனுமதிக்க முடியாது .மாவட்டச் செயலாளர் என்பவர் மாவட்டத்துக்கே செயலாளர் அல்ல ; மாவட்டக் குழுவின் செயலாளர் . மாவட்டக்குழு முடிவுகளை எக்சிகியூட் பண்ணும் செயல்படுத்தும் நிர்வாகி அவ்வளவுதான் . திமுக ,அதிமுக போல குறுநில மன்னர் அல்ல . இந்தப் புரிதல் எல்லோருக்கும் தேவை . மாநிலச் செயலாளர் நான் . அப்படி எனில் மாநிலக்குழுவின் செயலாளர் .அவ்வளவுதான் . அகில இந்திய பொதுச் செயலாளர் எனில் மத்தியக்குழுவின் செயலாளர்தான் .இந்தப் புரிதல் வலுவாக இருந்தால் கோஷ்டி சண்டை ஏன் ?”

 

மேலும் சொன்னார் , “ வட்டம் ,ஒன்றியம் ,மாவட்டம்னு ஒரு விசிட்டிங் கார்டு இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் ,கெவர்மெண்ட ஆபிஸ் எல்லாம் மரியாதை கிடைக்கும் , கொஞ்சம் அதிகாரம் செய்யலாம் , அப்பாவி மக்களுக்கு சின்ன சின்ன உதவி செய்து கொடுத்துவிட்டு காசு சம்பாதிக்கலாம் ,கட்டப் பஞ்சாயத்து செய்யலாம் என மற்ற கட்சிகளில் நினைப்பதும் ,அதற்காகப் பதவியைப் பிடிக்க எல்லா வித்தையையும் கைக்கொள்வதும் நடக்கும் . பாட்டாளி வர்க்க கட்சியில் – கம்யூனிஸ்ட் கட்சியில் அந்த சீரழிந்த பார்வை தொற்று நோயாக விடலாமா ? அனுமதிக்கலாமா ? அமைப்பு விதிகளையும் வழிகாட்டும் ஆவணங்களையும் கறாராகப் பின் பற்றினால் கோஷ்டியும் வராது , புடலங்காயும் வராது .”

 

மாநிலச் செயலாளர் என்ற பந்தாவை தோழர் ஏ என் அவர்களிடம் மருந்துக்கும் பார்க்க முடியாது .பார்வைக்கு மட்டுமல்ல அணுகுறையிலும் எளிமை . யாரையும் இழந்துவிடக்கூடாது தவறுகளைத் திருத்தி கட்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தம் கொடுப்பார்  .அதற்காக சம்மந்தப்பட்ட தோழரிடம் மணிக்கணக்கில் பேசத் தயங்கவே மாட்டார் .

 

ஒரு விவாதத்தின் போது ஒரு தோழரின் பழைய தவறுகளை பட்டியல் போட ஆரம்பித்தார் இன்னொரு தோழர் . உடனே ஏ என் தலையிட்டு ,” அது முடிந்து போன கதை . அப்போதே அவருக்கு கட்சி தண்டனை கொடுத்துவிட்டது .ஒரு தவறுக்கு ஒரு முறைதான் தண்டனை . இப்போது ஏதாவது செய்தாரா சொல்லுங்கள்… எல்லா நோய்க்கும் ஒரே மருந்து எங்கும் கிடையாது ,” என்றார் .

 

 “ இல்லை தோழர் ..அந்த விஷயத்தில்….” என தொடர்ந்து பழைய கதையையே பேசினார் . ,மீண்டும் ஏ என் குறுக்கிட்டார் , “ தண்டனை என்பது தவறைத் திருத்தத்தான் ,ஆளைக்கொல்வதற்கு அல்ல .ஒவ்வொரிடமும் ஏதாவது ஒரு திறமையும் இருக்கும் ,பலவீனமும் இருக்கும் . பலவீனத்தை விமர்சனம் ,சுயவிமர்சனம் மூலம் சரி செய்ய வேண்டும். ஒரே நாளில் ஒரே மந்திரத்தில் எல்லாவற்றையும் சரி செய்திட முடியாது ,பொறுமையாக வென்றெடுக்கணும் . அவரின் திறமைக்கு உரிய வேலை கொடுத்து அவரை நன்கு தொடர்ந்து பயன் படுத்த வேண்டும் . தொடந்து இயக்கத்தில் செயல்படுவதன் மூலமே திருந்தி பிரகாசிப்பார். ”

 

இன்னும் அவர் சொன்ன எல்லாவற்றையும் சொன்னால் அதுவும் அமைப்பில் அத்துமீறலாகிவிடும் . இதுவே கொஞ்சம் அதிகம் . ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

 

கட்சி அமைப்பு ,கூட்டுச் செயல்பாடு என வரும் போது தன்னைவிட அமைப்பு பெரியது என்கிற புரிதலோடு மேலிருந்து தொடங்கி கீழ்வரை செயல்படும் போது மட்டுமே விளைவு நன்றாக இருக்கும் .

 

கேரியரிசமும் ,கன்ஸ்யூமரிசமும் இப்போது புகாத இடமில்லை .மனம் இல்லை . ஆகவே இக்காலத்தில் ஏ என் போன்றவர்களை இன்னும் நெருங்கிப் படிப்பது அவசியம் அல்லவா ?

 

பேசுவோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

29 ஆகஸ்ட் 2021.

 

 

0 comments :

Post a Comment