நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

Posted by அகத்தீ Labels:

 

“ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 9.

 

[ தோழர்கள் கே எம் , ஏபி ,ஏஎன் , ஆர்யு என நான்கு பேரைச் சுற்றியே நினைவலைகள் சுழல்வது ஏன் என தோழர்கள் சிலர் கேட்கின்றனர் . நூற்றாண்டு நாயகர் என கட்சி அறிவித்த நான்கு பேரையே இப்போதைக்கு நினைவுகூர்கிறேன்  . தோழர் விபிசி ,பி ஆர் பரமேஸ்வரன் ,அப்துவஹாப் ,பி ராமச்சந்திரன் , கே எம் ஹரிபட் , கே.ரமணி , டி ஜனகிராமன் ,உரா வரதராஜன் ,மைதிலிசிவராமன் ,ஜானகி அம்மாள் ,பாப்பா உமாநாத் , கஜபதி ,பிஜிகே கிருஷ்ணன் , செல்லமுத்து ,தனுஷ்கோடி ,ஹேமச்சந்திரன் ,எஸ் கே சீனிவாசன் ,சி.பி.தாமோதரன்  என நான் நினைவுகூர வேண்டிய  பெரும்பட்டியல் உண்டு .காலமும் களமும் பின்னர் அனுமதித்தால் பார்க்கலாம்.]

 

 “ தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்” என்ற தலைப்பு இன்றைக்கும் தேவைப்படுகிற ஒரு களமே . அன்றைகே தோழர் கே .முத்தையா அது குறித்து எழுதினார் என்பது அடிக்கோடிட்டு பதிய வேண்டிய தகவல் . அப்போது அவர் பெரிதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவராய் ஒரு சாராரால் பார்க்கப்பட்டனர் . அவரின் ஆய்வு எல்லை போதுமானதாக இல்லாமல் இருக்கலாம் ; இன்னும் ஆழமாக சொல்ல வேண்டியதாய் இருக்கலாம் ; ஆயின் சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பே இது குறித்து பேசத்துவங்கியவர் என்பதுதான் முக்கியம் .இன்றைக்கு மேலும் அப்பார்வை ஆழமாக அகலமாகச் செல்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

மேலும் தோழர் ஏ பியின் தந்தை அமிர்தலிங்கய்யார் ,பரமேஸ்வரய்யர் செய்த ராமாயண ஆராய்ச்சியை சார்ந்து [ அதை அப்படியே மொழியாக்கம் செய்யாமல்] “ ராமாயணம் உண்மையும் புரட்டும் “ தொடரை கே எம் செம்மலரில் எழுதிய போது அது தேவையா எனக் கேள்வி எழுப்பியோரில் நானும் உண்டு .

 

ஆயின் இன்றைக்கு அது எவ்வளவு அடிப்படைத் தேவை என்பதை என்னால் இப்போது உணர முடிகிறது .இராமாயணத்துக்கோ ,மகாபாரத்ததுக்கோ தென்இந்தியாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை , எங்கோ வட இந்தியாவில் ஓர் மூலையில் இனக்குழுக்களிடேயே நடந்த மோதலில் முகிழ்த்த கதையை ஊதி ஊதி இப்படி ஆக்கிவிட்டார்கள் என்கிற உண்மை எவ்வளவு முக்கியமானது இன்றைக்கு .

 

இராமாயணம் ,மகாபாரதத்தை வெட்டியும் ஒட்டியும் மாறுபட்ட பலகோணங்களில் மீண்டும் மீண்டும் நாவல்கள் எழுதப்படும்போது சிலப்பதிகாரம் ,மணிமேகலை போன்றவை அவ்வாறு பெரிய அளவு செய்யப்படாதது ஏன் ? [ ஒரு சில முயற்சிகள் உண்டு ] “ சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்” என தோழர் கே.எம் எழுதியத் தொடர் இக்கோணத்தில் முக்கியத்துவம் பெறுகிறதே . ஆயின் இராமயண ஆய்வுத் தொடரை கே எம் எழுதிய போது சந்தித்தது போன்றே  இத்தொடரின் போதும் விமர்சனத்தைச் சந்திதார் .

 

கவிஞர் இளவேனில் அளவு கே .முத்தையாவை கேலியும் கிண்டலும் செய்தவர் இல்லை ; ஆனால் அந்த இளவேனிலுக்கு பெண் கேட்டு ஓர் தந்தையின் இடத்தில் தன்னை நிறுத்தி வேளச்சேரிக்கு கே எம் போனபோது நானும் செந்தில்நாதனும் உடன் இருந்தோம் .அத்திருமணத்தை முடிக்க எல்லாவகையிலும் துணைநின்றார் . அப்போது அவரிடம் ஓர் கேள்வி கேட்டோம் , “ இளவேனில் உங்களைக் கடினமாக விமர்சிப்பவர் .நீங்கள் அவருக்காக இப்படி அலைகிறீர்களே ?” ஓர் சிரிப்பை உதிர்த்துவிட்டு சொன்னார் , “ இளவேனில் திறமையான நல்ல எழுத்தாளர் ,பல்வேறு திறன் கொண்டவர் .இளம் தோழர் .அவரை காப்பாற்றுவது நம் பொறுப்பு.” இதுதான் தோழர் கே.எம் இயல்பு.

 

தமிழ் – தமிழர் – தமிழ்ப்பண்பாடு – தமிழர் உரிமை என்கிற கோணத்தில் சிந்தித்தவர் தோழர் கே .எம் ; அதற்காக செயல்பட்ட்டவர் . அவரது முயற்சியும் உழைப்பும் பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்பட வேண்டும் . திறமையான இளம் தோழர்களை இனங்கண்டு [நான் உட்பட] அரவணைத்து அழைத்துச் செல்வதில் தோழர் கே.எம் பெரும் முனைப்பு காட்டியவர் .

 

தீக்கதிர் மட்டுமல்ல செம்மலரும் அவர் அரவணைப்பில் வேர்பிடித்து வளர்ந்ததுதான் . தமுஎகசவும் அவரின் வியர்வையிலும் இரத்ததிலும் நாற்றாகி பயிராகி செழித்து வளர்ந்ததே !

 

கையால் அச்சுக்கோர்த்து டிரெடில் மிஷினில் அச்சிட்டு வெளிவந்த காலத்திலிருந்து கணினி ,நவீன அச்சு இயந்திரம் ,நவீனத் தகவல் தொடர்பு என படிப்படியான வளர்ச்சியில் தானும் அதன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நிற்பது பெரும் சவாலே .அதனை கே எம் எதிர்கொண்டார் .

 

இப்போது இனி நாளேடு அச்சுப்பத்திரிகை தேவையா ? எல்லாம் இண்டர்நெட் , சமூக வலைதளம் என பாயும் உலகில் நாம் இன்னும் பத்தாம் பசலியாய் இருக்கலாமா ?கேள்வி எழுகிறது . கூடாது .

 

நவீனமான எதையும் நாம் புறக்கணிக்கக்கூடாது . கால ஓட்டத்தில் எங்கேயும் நம் பின்தங்கிவிடக்கூடாது .ஆயின் சுரண்டும் வர்க்கம் எவ்வளவுநாள் நம்மை அனுமதிக்கும் ?

 

தேஷ்டைஷீ “ எனும் கட்சியின் வங்காள வார ஏட்டின் பொன்விழாவில் 2012 ல் பேசும்போது இன்றைக்கும் கட்சி ஏடுகள் தேவையா எனும் கேள்விக்கு பதில் அளித்து தோழர் சீத்தாராம் யெச்சூரி சொன்னவற்றை இங்கு அசைபோடல் தேவைப்படுகிறது ..

 

 “கட்சிப் பத்திரிகையின் முக்கியத்துவம் தொடர்கிறது என்பது மட்டுமல்லமிகவும் சரியாகச் சொல்வதென்றால் இன்றையதினம் எவ்வளவுதான் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதிலும்,  நம் முன் உள்ள சவால்களை எதிர்கொண்டிட கட்சி ஏடுகளின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதே உண்மையாகும்.

 

ஒவ்வொரு காலகட்டத்திலும்ஆளும் வர்க்கங்கள்  தங்கள்  சமூகத்தின் மீது அவர்களுடைய தத்துவார்த்த மேலாதிக்கத்தை செலுத்திக்கொண்டே எப்போதும் தங்கள் வர்க்க ஆட்சியை கெட்டிப்படுத்திக்கொள்வார்கள். 

 

மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கூறியிருப்பது போல, ’’ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள் ஒவ்வொரு சகாப்தத்தின்போதும் ஆளுகின்ற சிந்தனைகள்தான். அதாவதுபொருளாய சக்திகளை ஆளுகின்ற வர்க்கம்அதே சமயத்தில்  தன் நாட்டில் உள்ள அறிவுஜீவிகளையும் ஆண்டுகொண்டிருக்கிறது. பொருளாய உற்பத்திச் சாதனைகளைப் பெற்றிருக்கும் வர்க்கம் தன் கட்டுப்பாட்டில் சிந்தனாவாதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறது.’’

 

ஆளும் வர்க்கங்களின் சிந்தனைகளின் மேலாதிக்கம்தான்கிராம்சி விளக்குவதைப்போன்றுஅரசால் மட்டும் அமல்படுத்தப் படுவதில்லைஅதன் பின்னணியில் இருந்து வலுவானதோர் அமைப்பு அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.  ஆளும் வர்க்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னல் அதனைச் செய்து கொண்டிருக்கிறது.”

 

மேலும் விளக்குகிறார் , “இவ்வாறாக மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலாச்சாரம் இருப்பதில்லை. மாறாகமுதலாளித்துவம்  தாம் விரும்பக்கூடிய விஷயங்களை ,மக்கள் விரும்பக்கூடிய விஷயமாக’  தங்கள் விளம்பரங்களின் மூலம் கட்டமைத்துவிடுகிறார்கள்.

 

இவ்வாறு இவர்கள் நம் கலாச்சாரத்தின் மீது தொடுக்கும் தாக்குதலை நாம் சமாளித்து முறிய்டிப்பது எப்படிமுதல் கட்டமாகஉலகமயம் மற்றும் வகுப்புவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள கலாச்சாரப் படையெடுப்புகளினால் மதிமயங்கி மழுங்கிக் கிடக்கும் மக்களிடம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி ஒரு கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். அவர்களின் கலாச்சார மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முறியடித்திட இது மிகவும் அவசியம்.”

 

இவற்றை  கட்சி ஏடும் கட்சி அமைப்பும் இல்லாமல் சாதிக்க முடியுமா ? கட்சி அமைப்பு ,கட்சி ஏடு தீக்கதிர் ,செம்மலர் ,தமுஎகச , தமிழ்பண்பாடு என்கிற வட்டத்துக்குள் தன்னை ஒப்புகொடுத்த  தோழர் கே எம் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து பேசுவோம்.

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10 ஆகஸ்ட் 2021.

 

0 comments :

Post a Comment