நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 5.

Posted by அகத்தீ Labels:

 “எதிரிகூட பாராட்டிவிடுவான் நம் தலைவர்கள் பாராட்டவே மாட்டார்கள் ; இன்று திட்டவில்லையா ? அதுவே பாராட்டு..” என நாங்கள் ஆசிரியர் குழுவில் பேசிக்கொள்வோம்.




நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 5.

தோழர் .கே .முத்தையா , அப்துல் வஹாப் இருவரும் இல்லையேல் இன்றைய தீக்கதிரின் அடித்தளம் இல்லை . ஒருவர் ஆசிரியர் குழுவில் இன்னொருவர் நிர்வாகத்தில் என மொத்த சுமையையும் விமர்சனத்தையும் சொல்லடிகளையும் சுமந்தவர்கள் .

தீக்கதிரைப் பற்றி பேசுவதும் தோழர் கே.எம் ஐப்பற்றி பேசுவது வேறுவேறாகவா இருக்க முடியும் ?

.’’நம்முடைய கருத்தோட்டத்தின்படி, நம்முடைய செயல்களின் தொடக்கப்புள்ளி ; நமக்குத் தேவையானதொரு அமைப்பை நாம் உருவாக்குவதற்கு முன்னோடியாக நாம் எடுத்து வைக்கும் முதல் அடி என்பது ஓர் அரசியல் பத்திரிகை .
நாம் உருவாக்கும் அமைப்பை வளர்த்தெடுத்து, ஆழமாக்கி, விரிவான முறையில் உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கானப் பிரதான இழையாக தேவைப்படுவது என்பது ; நமக்கான ஓர் அகில ரஷ்ய அரசியல் பத்திரிகையைத் துவக்குவதே ஆகும்.
நம் அனைவருக்கும் தேவையானது ஓர் அரசியல் பத்திரிகை. அத்தகைய பத்திரிகையின்றி, பொதுவாக சமூக ஜனநாயகத்தைக் கட்டுவதும், அடிப்படையான கொள்கை உறுதியுடன் நம்முடைய பிரச்சாரத்தை, கிளர்ச்சியை முறையுடன் முன்னெடுத்துச் செல்வதும் முடியாது.
தனிநபர் நடவடிக்கை, வட்டார அளவிலான துண்டுப்பிரசுரங்கள், சிறுவெளியீடுகள் போன்ற வடிவங்களுடன் நம் பொதுவாக திட்டமிட்ட முறையில் கிளர்ச்சிகளை நடத்திட நமக்கு ஒரு பத்திரிகை அவசியம் .
அந்தத் தேவை இப்போது உருவாகியிருப்பதுபோல முன்னெப்போதும் உருவானதில்லை. அத்தகையதொரு பத்திரிகையின்றி, நாம் நம்முடைய கடமையை - மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நிலவும் அரசியல் அதிருப்தியையும் எதிர்ப்புணர்ச்சியையும் ஒன்றிணைத்து, ஒருமுகப்படுத்தி, தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை - முழுமையாக செய்துமுடிக்க முடியாது.’’

மேலும் அவர் கூறுகிறார்: ’’ஆயினும், பத்திரிகையின் பங்களிப்பு என்பது, கட்சியின் சிந்தனைகளைப் பரவச் செய்தல், ஊழியர்களுக்கு அரசியல் கல்வியை அளித்தல் மற்றும் அரசியல் நண்பர்களை அணிசேர்த்தல் ஆகியவற்றுடன் மட்டும் சுருங்கிவிடவில்லை.

ஒரு பத்திரிகை என்பது ஒரு கூட்டுப்பிரச்சாரகன், ஒரு கூட்டு கிளர்ச்சியாளன் மட்டுமல்ல, அது ஒரு கூட்டு அமைப்பாளனும் ஆகும்.’’

மேலே சுட்டியவை அனைத்தும் “எங்கிருந்து தொடங்குவது?” என்ற நூலில் தோழர் லெனின் வலியுறுத்தியது ஆகும்.

இதனை மனதில் நிறுத்தி மார்க்ஸிஸ் கட்சி உதயமாவதற்கு முன்பே களத்திற்கு வந்தது தீக்கதிர் நாளேடு . லெனினால் நடத்தப்பட்ட ஏடு இஸ்கரா ; அதன் பொருள் தீப்பொறி . அதன் அடியொற்றியே தீக்கதிர் என தமிழில் பெயர் சூட்டப்பட்டது . ஆரம்பத்தில் தோழர் அப்பு ஆசிரியராக இருந்தார் .சிறிது காலம் தோழர் என் சங்கரய்யா ஆசிரியராக இருந்தார் .

இருப்பினும் தீக்கதிர் எனும் ஏடு வார ஏடாகவும் ,பின்னர் நாளேடாகவும் மலர்ந்த போது , “கம்யூனிஸ்ட் கட்சியில் பத்திரிகை என்பது முன்னுரிமைப் பணி,” என்ற லெனினியப் பார்வையை உள்வாங்கி அதற்கென தம்மை அர்ப்பணித்தோர் தோழர் கே.முத்தையாவும் , அப்துல் வஹாப்புமே .

போதிய வசதிகளும் , பண ஏற்பாடும் ,ஊழியர்களும் இல்லாத காலத்தில் அன்றாடம் ஒவ்வொன்றுக்கும் மல்லுக்கட்டி , தீக்கதிர் அலுவலகத்திலேயே இராப்பகலாக் கிடந்து தீக்கதிரை நிலைநிறுத்தியதில் தோழர் கே. முத்தையா ,அப்துல்வஹாப் இருவரின் பங்கை வார்த்தைகளில் வடிக்க முடியாது .

ஆயினும் தீக்கதிரும் கே .முத்தையாவும் எப்போதும் கடும் விமர்சனத்துக்கு உட்பட்டனர் . சென்னையில் கவிஞர் இளவேனில் தீக்கதிரை சதா நையாண்டி செய்வார் . இளவேனில் வி.பி.சியின் ஆத்மார்த்த சீடர் , சென்னையில் வார்க்கப்பட்டவன் என்பதால் என்னுள்ளும் அந்த விமர்சனக் கண்ணோட்டம் நிரம்பி வழிந்தது .

1984 கட்சி மாநில மாநாட்டில் நான் தீக்கதிரையும் கே.முத்தையாவையும் கடுமையாக விமர்சித்தது இப்பின்னணியில்தான். ஆனால் 1994 ல் தீக்கதிர் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியரான பின்னரே கட்சிப் பத்திரிகையில் செயல்படுவதில் உள்ள சிரமத்தையும் , சவாலையும் அனுபவித்து உணர்ந்தேன் .

தமிழ்நாட்டைப் போல வேறெந்த மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சியும் தனக்கென பத்திரிகை நடத்துவது என்பது மிகக்குறைவு . தமிழ்நாட்டில் திராவிட இயக்க வளர்ச்சியில் அக்கட்சித் தலைவர்களால் நடத்தப்பட்ட ஏடுகளின் பங்கு மிக அதிகம் .இப்பொதும் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல திமுக ,அதிமுக ,திக என எல்லா கட்சிக்கும் ஏடு உண்டு .அதிலும் நாளேடுகளும் உண்டு .அவற்றிலும் முரசொலி ,தீக்கதிர் ,விடுதலை ,ஜனசக்தி ஆகிய ஏடுகள் ஆற்றும் பணியும் பங்களிப்பும் முக்கியமானது .

இந்த கட்சி நாளேடுகளோடு ஒப்பிட்டு தீக்கதிரை விமர்சிப்பது சரியானதே .ஆனால் பெரும் கட்டமைப்போடும் ஆள் பலத்தோடும் பணபலத்தோடும் வலம்வரும் முதலாளித்துவ ஏடுகளோடு தீக்கதிரை ஒப்பிட்டு தோழர்கள் சிலர் விமர்சிக்கும் போது வலிக்கும் .

ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒரு டீம் வேலைசெய்யும் ஏடுகளையும் மூன்று நான்கு பக்கங்களை ஒருவரே கவனிக்கும் தீக்கதிருக்கும் இருக்கும் சிரமத்தை சாதாரண கட்சித் தோழர்கள் புரிந்து கொள்வது கடினமே .ஆனால் பொறுப்பானவர்களே புரியாமல் சில நேரம் பேசும் போது ஏற்படும் வலி இருக்கே , மிக அதிகம் .

“எதிரிகூட பாராட்டிவிடுவான் நம் தலைவர்கள் பாராட்டவே மாட்டார்கள் ; இன்று திட்டவில்லையா ? அதுவே பாராட்டு..” என நாங்கள் ஆசிரியர் குழுவில் பேசிக்கொள்வோம்.

ஒருவரை தீக்கதிரில் பணியாற்றும் கடைசி நொடிவரை தினசரி வசைபாடும் தலைவர்கள் ,தீக்கதிரைவிட்டு வெளியேபோன மறு நிமிடமே கொண்டாடத் துவங்கிவிடுவார்கள் . இதை அனுபவித்தால்தான் அதன் வலியும் கசப்பும் புரியும் .

தினசரி பணத்துக்கு அல்லாடி அங்கே இங்கே புரட்டி பத்திரிகை கொண்டுவருவது பெரும்பாடு ; கட்சிக் கடமையாய் அதைச் செய்துவிட்டு பெருங்கையால் குட்டுப்படும் வேதனை இருக்கே சொல்ல முடியாது .இது நிர்வாகத்தின் வலி .

இன்னும் சொல்ல நிறைய இருக்கு எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் கொட்ட முடியாதே ; கொட்டக்கூடாதே ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறாய் சொன்னதே இவை . இவற்றிடையேதான் தோழர் கே.எம் இயங்கினார் என்பது சாதாரணச் செய்தி அல்ல .

“கட்சி ஏட்டைப் படிப்பதும் விற்பதும் பரப்புவதும் கட்சித் தோழரின் முதன்மைக் கடமை , மேலும் கட்சி ஏட்டில் பணியாற்றுவது முதன்மைக் கட்சிப்பணி” என்பார் தோழர் இஎம்எஸ் . இதைவிட கட்சிக்கு வேறென்ன பெரிய வேலை என்பார் தோழர் ஈ .கே .நாயனார் . இதனை உணர்வதிலும் உணர்த்துவதிலும் பெறும் வெற்றியும் தோல்வியுமே கட்சியின் வளர்ச்சியில் பிரதிபலிக்கும்.

’’நம் பத்திரிகை என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு தீப்பொறியையும் விசிறிவிடும் கொல்லனின் துருத்தி போன்று இருப்பதுடன், மக்களின் நேர்மையான சீற்றங்களை ஊதி, ஊதி காட்டுத் தீயாக கொழுந்துவிட்டெரியச் செய்யும் பணியையும் செய்வதாகும். இன்றையதினம் அது ஆற்றும் பணி மிகவும் மந்தமானதாகவும், சிறிய அளவினதாகவும் இருக்கலாம், ஆனால் தொடர்ந்து முறையாக முயற்சி மேற்கொள்ளப்படுகையில், ஒரு பயிற்சி பெற்ற போராளிகளின் சேனை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவாகி, அதன் முறையான பயிற்சியைப் பெற்றுவிடும்.’’

“செய்ய வேண்டியது என்ன ?” எனும் நூலில் தோழர் லெனின் சுட்டியதை ஏற்றி ; அதை நோக்கி நம்பிக்கையோடு தோழர் உழைத்வர் தோழர் கே.எம். . இன்று நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் வருகை பத்திரிகையின் பங்கை குறைத்துவிட்டதா ? பார்வையை மாற்ற வேண்டுமா ? பின்னொரு நாளில் விவாதிப்போம் .
1978 ஏப்ரல் 17 ,18 தேதிகளில் கோவைமாவட்டம் விளாங்குறிச்சியில் கூடி சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி ,வேலை அல்லது நிவாரணம் “ கோரிக்கையை உருவாக்கி கோவையிலிருந்தும் ,குமரியிலிருந்தும் சைக்கிற் பேரணிக்கு திட்டமிட்ட போது மூத்ததோழராய் தோழர் .கே.முத்தையாவும் , கே.ரமணியுமே உடன் இருந்து வழிகாட்டினர் என்பதும் எத்தனைபேர் நினைவில் வைத்திருப்பார்கள் ?
தீக்கதிரில் மூழ்கிக் கிடந்த போதும் ,அத்துடன் தமுஎகச பணி ,கலை இலக்கிய ஈடுபாடு , தமிழ் – தமிழர் பண்பாடு குறித்த பரந்த அக்கறை என தோழர் கே எம் பார்வையும் பரப்பும் விரிந்தது . அதையும் கட்டாயம் பேசவேண்டும். பேசுவோம்.

சு.பொ.அகத்தியலிங்கம் .
4 ஆகஸ்ட் 2021.

0 comments :

Post a Comment