நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.

Posted by அகத்தீ Labels:

 அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 7.
“ தந்தியென்றால் / முன்பெல்லாம் / பட்டிக்காட்டார் பதறிப்போய் / அது என்னவென்று அறிவதற்கு /துடியாய்த் துடிப்பார்.” என கலைஞர் கருணாநிதி ஓர் கவியரங்கக் கவிதையில் பாடியிருப்பார் .
பிறப்பு செய்தியோ இறப்புச் செய்தியோ தந்தி மூலமே அறிய முடியும் ; வேறு தகவல் தொடர்பு கிடையாது .இந்தத் தந்தியோ ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப முடியும் . ஆகவே தந்தி வந்தாலே கிராமப்புறத்தில் அறிய பெரும் பதட்டம் நிலவும்.
இந்த நினைவலையில் முதல் பகுதியில் செய்திகளை ARPPAATTAM என தங்கிளீஸில்தான் அனுப்ப வேண்டும் என்றிருந்த அன்றைய செய்தியாளர் அனுபவத்தை சுட்டி இருந்தேன்.
இந்தச் சூழலில் மாநிலங்களவை உறுப்பினராயிருந்த அன்புத் தோழர் ஏ .நல்லசிவன் இதற்கானப் போராட்டத்தை துவக்கினார் . தமிழில் தந்தி அடிக்க முடியும் என தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கப்பட்ட சான்றாதாரங்களோடு வாதிட்டார் .வென்றார் . அதுவும் உடனே கிடைத்துவிடவில்லை கடும் போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது .
தமிழில் தந்தி கொடுக்கும் வசதியை பெற்றுத் தந்தார் . அதற்காக மாநிலம் முழுவதும் பல மையங்களில் பாராட்டு விழா நடந்தது . மாவட்டம் நினைவில் இல்லை . குமரியோ /புதுவையோ பாராட்டு விழாவில் நானும் பேசினேன் .
“ தமிழில் தந்தி கொண்டு வந்துவிட்டோம் , ஆனால் இப்போதும் போலீஸ் ஸ்டேஷன் போனால் நாலு வார்த்தை தாட்டுப்பூட்டுண்ணு இங்கிளீஸ்ல பேசினால் சார்னு கூப்பிட்டு மரியாதையாக உட்காரவைக்கிறானுக தமிழில் பேசினால் விரட்டுறானுக… “என நான் பேசினேன்.
அடுத்து வந்த தோழர் ஏ என் என் பேச்சைத் தொட்டு பேசினார் , “ போலீஸ் ஸ்டேஷன் மட்டுமா தாலுகா ஆபிஸ் ,கலெக்டர் ஆபீஸ் எங்கும் இதே லட்சணம்தான் .நம்மாளு கோர்ட்டுக்கு போறான் .வக்கீலுக்கு பீஸை அள்ளிக் கொடுக்கிறான் . எங்க வக்கீலு இங்கிளீஸ்ல பிச்சு வாங்கிறாருன்னு பெருமையா நாலு பேருட்ட சொல்லிக்கிறான் .ஆனா கேஸ் தோற்றுப் போகுது .வக்கீலு சரியா பேசினாரா ? தப்பாப் பேசினாரா ?நமக்காகப் பேசினாரா ? எதிரிக்காக பேசுனாரா ? நமக்குத் தெரியாது . .கோர்ட் தமிழில் நடந்தால் இதெல்லாத்தையும் நாமள கண்காணிக்கலாமே . கோர்ட் ,போலீஸ் , தாலுகா ஆபீஸ் ,கலெக்டர் ஆபீஸ், படிப்பு எல்லாம் தமிழில் வேண்டும்.” என்றார் .
தோழர் ஏஎன் பேச்சில் அடுக்குமொழி இருக்காது . சாதாரண பாமர மொழிதான் இருக்கும் .ஆனால் வாதம் வலுவாக இருக்கும் . தமிழ் மக்களுக்கா உழைப்பாளி தமிழ் மக்களுக்காக வலுவாக வாதிடுவார் ஆனால் ,குரல்தான் அவர் எதிரி !
அவர் அந்த பேச்சினூடே சொன்ன இன்னொரு செய்தி , “ டிரான்ஸ்போர்ட் ,இபி , மில் , பேக்டிரி எங்கும் தொழிலாளிக்கு மெம்மோ கொடுக்கிறாங்க . இங்கிளீஸ்லதான் கொடுக்கிறாங்க . ‘ எனக்கு இங்கிளீஸ் தெரியாது ,தமிழில் கொடுங்கன்னுன்னு ‘ நம்ம தொழிலாளி பதில் கொடுக்கிறான் .போராடித்தான் எங்கும் தமிழைக் கொண்டுவர வேண்டியுள்ளது .”
இதே காலகட்டத்தில் மாணியாடர் படிவம் , வங்கிப் படிவம் எல்லாம் தமிழில் வேண்டுமென குமரி அனந்தன் போராடி வென்றார் . கூகுள் பே , டிஜிட்டல் மணி இல்லாத காலம் , போதுமான வங்கிக் கணக்கு எல்லாம் இல்லை .பெரும்பாலோருக்கு மணியாடர் மூலமே மகனோ கணவரோ அனுப்பும் பணம் , முதியோர் பென்ஷன் உட்பட கிடைக்கும் நிலை . இச்சூழலில் இந்தப் படிவங்களெல்லாம் ஆங்கிலத்தில் என்பது எவ்வளவு கொடுமை .
இப்போது தந்தி அலுவலகங்களே மூடப்பட்டுவிட்டது .தொழில் நுட்பம் மாறியாச்சு . ஆனால் ,மொபைலுக்கு மெஜேஸ் கூட இந்தியில் அனுப்பும் கொடுமை ; எந்த மொழியிலும் தகவல் அனுப்ப தொழில் நுட்பத் தடை இல்லாத காலத்தில் எல்லாம் இந்தித் திணிப்பு என்பது மமதையின் உச்சம் ;இந்துத்துவத்தை நோக்கிய முயற்சி . இதை எதிர்க்க பழசை எல்லாம் நினைவூட்டினேன் . ஆம் எல்லா முனையிலும் இந்தி திணிக்கப்படுவதை சகிக்க முடியாது . முறியடித்தாக வேண்டும் .
தோழர் ஏஎன் ஐ பெரும்பாலும் அலுவலகத்தில் சாரத்தில்தான் பார்க்க முடியும் . லுங்கி ,கைலி என பலபெயர் இருப்பினும் குமரி ,நெல்லையில் சாரம் என்றே சொல்லுவார் . அதுவும் மூட்டித் தைக்கபடாமல் கட்டும் வழக்கம் .தோழர் ஏஎன்னுக்கு அதுவே மிகவும் பிடித்தமான உடை .
தோழர் ஏ.என் கியூப புரட்சி தின நிகழ்ச்சிக்கு போய்வந்த அனுபவத்தை நான் உட்பட சில தோழர்கள் கேட்டுக்கொண்ட போது பல செய்திகளைச் சொன்னார் இடையிலே மகிழ்ச்சியாகச் சொன்னார் , “ ஏதோ ஒரு நிகழ்வுக்கு போகும் நெரம் நெருங்கிவிட்டதாம் ,இவர் உடன் இருந்த கியூப தோழரிடம் பேசிக்கொண்டே இருந்தாராம் . நேரம் ஆகிவிட்டது புறப்பட வேண்டிய நேரம் ஏஎன் கேட்டாராம் லுங்கியில் பொது நிகழ்வில் பங்கேற்கலாமா ? அவர்கள் சொன்னார்களாம் உடை உங்கள் விருப்பம் .அவரவர் உரிமை .” ஏஎன் சாரத்துடன் ஓர் நிகழ்வில் கியூபாவில் பங்கேற்றதை அவ்வளவு மகிழ்வுடன் சொன்னார் .
இங்கே இன்னொன்றை சுட்டுவதும் பொருந்தும் , சென்னை வியாசர்பாடி ,பக்தவச்சலம் நகர் ,சாஸ்திரி நகர் பகுதிகளில் வாலிபர் சங்கம் சிறப்பாக செயல்பட்ட காலம் ; அங்கே இருந்த ஒரு போலீஸ் அதிகாரி வம்பு இழுத்தார் . சாலையில் வாலிபர் சங்கத்தவர் லுங்கியோடு நிற்பதை எதிர்த்தார் .கைது செய்து மிரட்டினார் .லுங்கியை ரவுடி உடையாக சினிமா சித்தரிப்பது போலவே அவரும் சித்தரித்தார் . இதைக் கண்டித்து அங்கு வாலிபர் சங்கம் சார்பில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினோம் .நான் பங்கேற்று கடுமையாக பேசினேன் .
கூட்டத்திற்கு பின் ஓர் பழைய தோழர் நான் பேசியது சரியல்ல என கட்சிக்கு புகார் செய்துவிட்டார் . தோழர் ஏ என் ஓர் நாள் என்னை அழைத்து இது பற்றிக் கேட்டார் .நானும் நடந்ததைச் சொன்னேன் . பின் ஏ என் சொன்னார் , “ புகார் கொடுத்த தோழரிடம் அவர் பார்வை தவறு என அப்போதே சொல்லிவிட்டேன் . நானே சாரம்தானே விரும்பிக் கட்டுகிறேன் என அவரிடம் சொன்னேன் . பொது புத்தியில் உறைந்துள்ள இந்த பார்வையை மாற்ற நாம் முனைய வேண்டும்,” என்றார் .
தந்தைப் பெரியார் பொது வெளியில் லுங்கியோடு உலவினார் . கலைஞரும் ,ஸ்டாலினும் ,வைகோவும் லுங்கியோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர் . தோழர் ஏ என் , ஆர் .உமாநாத் போன்றோர் லுங்கியை விரும்பி அணிவர் .
லுங்கிக்கு இவ்வளவு பெரிய பதிவு ஏன் என சிலர் கேட்கலாம் . நாம் என்ன உடை உடுக்க வேண்டும் என இந்துத்துவ மதவெறிபினரும் பிற மத அடிப்படை வாதிகளும் உத்தரவிடும் காலம் இது இப்போது , “ எனது உடை எனது தேர்வு “ எனச் சொல்ல வேண்டும் அல்லவா ?
தோழர் ஏ என் பற்றி பேச நிறைய நிறைய உண்டு தொடர்ந்து பேசுவோம் !
சு.பொ.அகத்தியலிங்கம்.
7 ஆகஸ்ட் 2021.

0 comments :

Post a Comment