நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 2 .

Posted by அகத்தீ Labels:

 


கூட்டத்தில் முன்னால் இருக்கிற நாலு பேருக்காகப் பேசக்கூடாது . தூரத்தில் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டே கூட்டம் கேட்பவன் ,தொடர்ந்து கேட்கிறானா நகர்கிறானா என்று பார் !



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 2 .
ஒருவர் கம்யூனிஸ்டாக வேண்டுமெனில் வெறுமே உறுப்பினராவது மட்டும் போதாது ; தன்னை கம்யூனிஸ்டாக வார்த்தெடுக்க தனக்குள்ளேயே பெரும் தத்துவப் போராட்டம் ,பண்பாட்டுப் போராட்டம் நடத்தியாக வேண்டும்.
எந்த வர்க்கத்தில் ,எந்த வர்ணத்தில் பிறக்க வேண்டுமென ஒருவர் தனக்குத்தானே தீர்மானிக்க முடியாது . ஆனால் கம்யூனிஸ்டாக மாற பாட்டாளி வர்க்க நலன் ,பாட்டாளி வர்க்க குணத்துக்கு தன்னைத்தானே மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டும் . டீ கிளாசிபிகேஷன் எனப்படும் வர்க்க மறுகட்டமைப்பு அவ்வளவு சுலபமல்ல.
இப்படி எல்லாம் எழுதுவது சுலபம். வாழ்வது சவால் .அந்த சவாலில் வென்று நின்றவர் தோழர் ஏபி என அழைக்கப்படும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியம். அவரின் வாழ்க்கை வரலாற்றை தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார் . வாய்ப்புள்ளோர் வாசியுங்கள் !
தோழர் ஏபி அவர்களை சங்கரன் என்கிற பெயரில் கதாபாத்திரமாக்கி ; அவர் கம்யூனிஸ்டாக வார்க்கப்பட்ட திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர் போராட்டம் ,நகரசுத்தி தொழிலாளர் போராட்டம் இவற்றை களமாக்கி , கம்யூனிஸ்டுகளின் போராட்ட தியாக வாழ்வை “ தோல்” எனும் நாவலாக வார்த்திருக்கிறார் டி.செல்வராஜ் . இளம் தோழர்கள் இந்நாவலை மிக மிக அவசியம் படிக்கவேண்டும் . [ நூல் அறிமுகம் இணைப்பில் உள்ளது ]
சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பார்ப்பண இளைஞன் , வசதியான குடும்பத்தில் பிறந்தவன் , தன்னை ஒடுக்கப்பட்ட மக்களின் ஓர் அங்கமாக மாற்ற தயிர் சாதத்திலிருந்து மாட்டுக்கறிக்கு மாறுவதென்பது பெரும் பண்பாட்டுப் போராட்டமாகும்.தோல்பதனிடும் தொழிலாளர் போராட்ட களத்தில் அது நிகழ்ந்தது . தோழர் ஏபியின் வாழ்க்கை அது .
ஒரு நாள் சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் தோழர் ஏபி சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறார் . நான் உள்ளே நுழைகிறேன் .நிமிர்ந்து உட்கார்ந்தவர் . அருகிலுள்ள நாற்காலியில் என்னை அமரச் சொல்கிறார் . என் வாலிபர் சங்கப் பணிகள் ,என் குடும்பச் சூழல் ,கடைசியாகப் பார்த்த திரைப்படம் எல்லாம் உரையாடலில் இடம்பெறுகிறது .அவர் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் .இச்சூழலில் என் ஐயத்தைக் கேட்டுவிடுவதென தீர்மானிக்கிறேன்.
தோழர் .ஏபியின் விரலில் உள்ள மோதிரத்தை சுட்டிக்காட்டி , “கம்யூனிஸ்டுகளுக்கு தங்க நகை தேவையா?” எனக் கேட்டேன் .
எனக்கு தங்க நகை பிடிக்காது .நான் கட்சிக்கு வருவதற்கு முன்பே மோதிரத்தை தவிர்த்தவன் . திருமணத்தன்றும் மோதிரம் அணிய மறுத்தவன் .இன்றுவரை அப்படித்தான் . என் உணர்விலிருந்தே அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
அவர் சொன்னார் , [ நினைவில் பதிந்தபடி ] “ காம்ரேட் ! ஒரு வகையில் தங்க நகை மோகம் கம்யூனிஸ்டுகளுக்குக் கூடாது . ஆயின் திருமண மோதிரம் போன்ற சில ஆபரணங்களை பழகிப்போன சமூகத்தில் முற்றாகத் தவிர்க்க முடியுமா ? சாத்தியமில்லை . முடிந்தவரை தவிர்க்கலாம். அது போகட்டும் , என் மோதிரம் திருமண மோதிரமல்ல . இதை மோந்து பார் “ என என் மூக்கில் வைத்தார் .
பின் தொடர்ந்தார் ,” இதில் மாட்டுக்கறி வாசம் வரும் , நகரசுத்தித் தொழிலாளர் வியர்வை வாசம் வரும் … [ நாற்றம் எனச் சொல்லவில்லை வாசம் என்றே சொன்னார் ] ஆம் திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர்களும் ,நகரசுத்தித் தொழிலாளர்களும் எனக்கு ஆசையாய் அணிவித்த மோதிரம் , நான் மாநிலக் கட்சிப்பணிக்காக திண்டுக்கல்லில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அன்பளிப்பாய்த் தந்தது . பணமாய்க் கொடுத்ததை கட்சிக்கு கொடுத்துவிட்டேன் .இதை கட்சி அனுமதிபெற்று அணிந்துகொண்டேன் .உயிர்பிரியும் வரை இது என்னோடு பேசிக்கொண்டே இருக்கும்.” என்றார். இது ஆயிரம் பொருள்சொல்லும் வார்த்தை அல்லவா ?
மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் முன் ஓர் பொதுக்கூட்டம் . நான் என் பாணியில் பேசினேன். மேடையைவிட்டு இறங்கியதும் ஓரிரு தோழர்கள் சர்வதேசிய அரசியல் போதுமான அளவு பேசவில்லை என கருத்துச் சொன்னார்கள் .அந்த நேரத்தில் ஒரு தோழர் வந்து காம்ரேட் ஏபி அழைக்கிறார் என சங்க அலுவலகத்துக்கு கூட்டிப்போனார் .
சரி ! சரி ! சரியாக மாட்டிக்கொண்டோம் என எண்ணியபடி அங்கு சென்றேன் . “ வாடா ! சிங்கக் குட்டி ! சபாஷ் ! நல்லா பேசினாய் … சொன்ன குட்டிக்கதை ரொம்ப பொருத்தமானது .அப்படித்தான் பேசணும் … பேசி முடிஞ்சதும் சில பேரு அதப் பேசலை ,இதப் பேசலைன்னு சொல்லியிருப்பாங்களே ?” என்றபடி என்னை ஒரு பார்வை பார்த்தார் .
“ ஆமாம் !” என தலையை ஆட்டினேன் . அவர் தொடர்ந்தார் , “ கூட்டத்தில் முன்னால் இருக்கிற நாலு பேருக்காகப் பேசக்கூடாது . தூரத்தில் டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டே கூட்டம் கேட்பவன் ,தொடர்ந்து கேட்கிறானா நகர்கிறானா என்று பார் ! நாம் நம்மை நெருங்கத் தயங்குகிறவனை நோக்கித்தான் பேசவேண்டும்…. வீட்டில் இருந்தபடி நம் பேச்சைக் கேட்பவருக்காவும் பேச வேண்டும் ” என உற்சாகமூட்டி அனுப்பினார் .
நான் இன்றுவரை பேசினாலும் எழுதினாலும் வகுப்பெடுத்தாலும் கடைக்கோடியில் இருப்பவரை மனதில் நிறுத்தியே பேசுகிறேன் எழுதுகிறேன். அறிவுஜீவி ஒளிவட்டம் எனக்குத் தேவை இல்லை .எல்லாம் அன்று தோழர் ஏபி கொடுத்த உற்சாகம்.
அவர் சாகும்வரை எனக்கு ஊக்கமும் நம்பிக்கையுமாக இருந்தார் ….
இன்னும் பேசுவோம் …….
சு.பொ.அகத்தியலிங்கம்.
30 ஜூலை 2021.

0 comments :

Post a Comment