நானும் முருகனும்” அல்லது ”ஞானம் பெற்ற கதை

Posted by அகத்தீ Labels:

 

நானும் முருகனும்”
அல்லது
”ஞானம் பெற்ற கதை”
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் உள்ள முருகப் பெருமான் சன்னதியில்தான் எனக்கு குழந்தையாய் இருந்த போது முதன்முதல் சோறூட்டப்பட்டது . என் வீட்டிலும் மாமா ,பெரியம்மா ,சித்தி எல்லோர் வீட்டிலும் குழந்தைகளுக்கு சோறூட்டும் நிகழ்ச்சி அங்குதான் . ஆக , சோற்றோடு முருகன் எனக்கு அறிமுகமாகிவிட்டார் . என் அம்மா வீட்டார் வழக்கப்படியே எல்லாம் நடந்தன.
தெற்குத் தெருவில் ஒரு காவடி மடம் உண்டு . ஊரிலுள்ள ஒவ்வொரு காவடி மடமும் ஒவ்வொரு சாதிக்கானது . நான் குறிப்பிடும் காவடி மடம் என் அம்மா குடும்பத்தாரோடு தொடர்புடையது . ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூருக்கும் , மருங்கூருக்கும் காவடி எடுக்கும் இரு விழாக்கள் நடை பெறும் . காவடிக்கு முன் வேல் தூக்கி ஆடுவதில் சின்ன பிள்ளைகளுக்குள் போட்டியே இருக்கும் . அட்டையில் வேல் செய்து ஆடுவோரும் உண்டு .அப்படி வேல்தூக்கி ஆடுவதில் ஆர்வமுள்ள சிறுவனாகவே அகத்தியலிங்கமாகிய நான் இருந்தேன்.
தினசரி தாணுமாலயன் கோவிலில் நடக்கும் தேவாரப் பாடசாலைக்கு அவர்கள் தினசரி தரும் அரவணை ருசிக்கே செல்லும் சிறுவர்களில் நானும் ஒருவன் . மிகச் சிறு தொகை பணமும் மாதா மாதம் கிடைக்கும் . அப்போதெல்லாம் இடையில் பட்டுத் துண்டு , கழுத்தில் சிவப்பு கயிற்றில் உத்திராட்சம் ,காதில் கடுக்கன் , நெற்றி ,கை ,வயிறு எங்கும் விபூதிப்பட்டை இவற்றோடு ‘ மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு…..” வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்…” என வாய் தேவாரம் உச்சரிக்கும் .
தாணுமாலயன் கோயிலின் உள்ளே சுற்றி சுற்றி வருவதும் அதன் கலை அழகில் சொக்கி நிற்பதும் எனக்குப் பிடிக்கும் . இப்போது போல் அன்று அக்கோயில் வியாபார ஸ்தலம்போல் ஆகவில்லை . அமைதியும் சுவர் நெடுக எழுதப்பட்ட பதிகங்களும் ஈர்ப்பானவை .
ஒரு முறை எங்க காவடி மடத்தில் 41நாள் அதுதான் ஒரு மண்டலம் பூஜை நடந்தது . அப்போது மதிய சாப்பாடு காவடி மடத்தில் . வீட்டில் சோறு ஆக்க மாட்டார்கள். அந்த 41 நாட்களும் பள்ளி மதிய வேளை உணவுக்கு விடும் போது காவடி மடத்தில் சாப்பாடு பரிமாறுவர் . நானும் தினசரி அங்கு சாப்பிடச் செல்வேன் . என் அண்ணன் , அக்கா உட்பட மொத்த குடும்பமும் அங்குதான் சாப்பிடும் . தம்பிக்கு அந்த அனுபவம் கிடைத்திருக்காது .அவன் குழந்தை .
இப்படி ஒரு நாள் சாப்பாட்டுக்கு போகும் போது என் பள்ளித் தோழன் பாலசுந்தரத்தை அழைத்துப் போய் பந்தியில் உட்கார்ந்துவிட்டேன் . ஒரு வாய் வைக்கும் முன் “ எவண்டா ! சாதி கெட்டப் பயலை எல்லாம் பந்தியில உட்கார வச்சது ?” என்கிற உறுமலோடு என் மாமா முறையிலான ஒருவர் என் அருகிருந்த பாலசுந்தரத்தை தூக்கி வெளியேற்றினர் .
எனக்கு ஒன்றும் புரியவில்லை . கோவித்துக் கொண்டு நானும் வெளியேறினேன் . சாப்பிடவில்லை .மதியம் பள்ளிக்கூடமும் போகவில்லை . மறுநாள் அங்கு சாப்பிடப்போக மறுத்துவிட்டேன் .என் அம்மா வீட்டில் தோசை தந்த ஞாபகம் .அதன் பிறகு அந்த காவடி மடமே பிடிக்கவில்லை ,காவடி ஆட்டத்தில் வேல் எடுத்து ஆடலும் நின்று போனது .
பின்பொரு நாள் அதே பாலசுந்தரமும் நானும் சேமியா ஐஸ் வாங்கி தின்றதைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து மாமா உதைத்ததும் மாறாத வடுவாய் நினைவில் உள்ளது . அவன் தலித் என்பதே பிரச்சனை . அவன் வீட்டிற்குப் போனதும் குற்றச்சாட்டில் அடங்கும். அவன் நட்பு காரணமாக டிரில் வாத்தியார் என்னையும் அவர் பீரியடில் சேர்க்கமாட்டார் .நான் பள்ளி நூலகத்தை சரணடையும் நேரமாக அது மாறிப்போனது . விளையாட்டு ஆர்வத்திற்குப் பதில் புத்தக ஆர்வம் என்னை ஆட்கொண்ட கதை இதுவே . அந்த பாலசுந்தரம் சின்ன வயசில் இறந்தும் போனான் .
இவை எல்லாம் என்னுள் ஒரு தேடலை உசுப்பியது. குழிச்சப்பத்து மூலையில் அன்று சாணார் என்று அழைக்கப்பட்ட நாடார் மற்றும் இதர அடிநிலை சாதிகள் ரதவீதிக்கு வராமல் தடுக்கும் ’தெருமறிச்சான்’ அங்குதான் இருந்தது . இந்த தெருமறிச்சானைப் பற்றி கதைகதையாய் சொலுவார்கள் . பெரும்பாலான கட்சிக் கூட்டங்கள் அந்த தெற்குத் தெரு மூலையில்தான் நடக்கும் . குறிப்பாக கம்யூனிஸ்ட் ,திமுக ,திக கூட்டங்கள் நடக்கும் இவற்றைக் கேட்பதற்கு எனக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் .
கோயிலுக்குள் நடக்கும் பல பாகுபாடான செயல்கள் , அங்கு நேரில் கண்ட அக்கிரமங்கள் என்னை மேலும் மேலும் குடையத் தொடங்கின . எனக்கு அமைந்த சில ஆசிரியர்கள் வேறு கேள்விகளை விதைத்தனர் . சாதி அமைப்பின் மீது முதல் கோவம் நெஞ்சில் கனல்விடத் தொடங்கியது .அதுவே மெல்ல பெரிதானது.
நான் பத்தாவது வகுப்பு முடித்து பதினோராம் வகுப்புக்கு [எஸ் எஸ் எல் சி ] சென்னை வந்து விட்டேன் .என் குடும்பமும் அதற்கு சில மாதங்கள் முன்பே பிழைக்க சென்னை வந்து விட்டது .
நான் சென்னை வந்ததும் முதன் முதலாக பெரியார் திடல் போய் பெரியாரைச் சந்தித்தேன் .அவர் என் குடும்ப நிலவரத்தைக் கேட்டுவிட்டு ஒழுங்காகப் படி என புத்தி சொல்லி அனுப்பி வைத்தார் .
இப்படி சமூக ஞானமும் அரசியல் ஞானமும் மெல்ல என்னுள் மொட்டவிழத் தொடங்கியது ……
சுபொஅ.

0 comments :

Post a Comment