கசப்பும்
கண்ணீரின் கரிப்பும் நெஞ்சக்குழிவரை….. .
கட்டங்காப்பியும்
,கட்டஞ்சாயாவும் அதிகம் விரும்பி முன்பு அருந்தியவன் நான் . இப்போதும் கிடைத்தால் விடுவதில்லை
.அதே ஆர்வத்தோடு சம்சுதின் ஹீராவின் ‘கட்டங்காப்பி’யை வாசித்தேன் கசப்பும் கண்ணீரின்
கரிப்பும் நெஞ்சக்குழிவரை இறங்கியது .
மெளனத்தின்
சாட்சியங்கள் ,மயாணக்கரையின் வெளிச்சம் ,சபதக்னி போன்ற நூல்கள் மூலம் ஏற்கனவே நெஞ்சில்
கடும் அதிர்வலைகளை உருவாக்கிய சம்சுதின் ஹீரா கட்டங்காப்பியிலும் அதனைத் தொடர்கிறார்
.
மொத்தம் எட்டுகதைகள்
. ஒவ்வொன்றும் தனித்து பதிந்த முத்திரைகள்
. எனவே ஒவ்வொன்றைக் குறித்தும் சில வரிகள் சொல்ல விழைகிறேன் .
“ ’இத்தன
வருஷத்தில கபீரத் தேடி நீ தானப்பா வந்துருக்க……’…….சில வார்த்தைகள் ஒட்டுமொத்த வாழ்வையும்
ஒரு விநாடியில் பதிலீடு செய்து விடுகின்றன “ ஆம் . அது மட்டுமா வாசிக்கும் நம்மையும்
குற்றவாளிக் கூண்டிலே நிறுத்திவிடுகின்றன . கோவையில் முஸ்லீம் சிறுபான்மையோர் மீது
இந்து மதவெறியர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலை அன்றொரு நாள் மட்டும் கண்டித்தால் போதுமா
? காயங்களை மீண்டும் மீண்டும் தடவிப் பார்ப்பது வன்மத்தை விதைக்க அல்ல ; மதவெறி எந்த
ரூபத்திலும் வேண்டவே வேண்டாம் என்பதன் வெளிப்பாடே ‘தடயம்’ சிறுகதை !
“ அந்தத் தீவு ஒரு பெரிய எழவு வீடு போல் இருந்தது
“ நாடே அப்படி ஆகிவிடக்கூடாதல்லவா ? பெங்குவின் பறவைகளின் ஆன்மக் குரலாய் சுற்றுச்சூழல்
அழிவை எச்சரிக்கும் ‘சிலிர்ப்பின் அந்திமம்’
“ஹேப்பியா
இருந்தா தாதி ஏன்ப்பா அழுகிறாங்க..?” தன் செல்ல மகள் பொம்முவின் வார்த்தைகள் சுட அசைப்போட்ட நினைவில் அந்தக் கட்டங்காப்பியில்
கண்ணீரின் கரிப்பு . தற்கொலை தீர்வல்ல என்பதன் சாட்சி .
மோனியை நாயாக
அந்த வீட்டில் யாரும் பார்க்கவில்லை .” ….தோ.. அங்க இருக்கான் பாரு எம் பையன்..” என்று
சுட்டும் தாய் அம்ரினா , நாயோடு அன்பில் கலந்த சிறுமி ரஜியா , எதிர் பாரா விவத்தில்
உயிரிழக்கும் மோனி .. வீட்டுக்குள் துக்கமும் கோபமும் அழுகையும்… ’மோனி’யை வாசித்தபின்
அன்பின் பரிணாமம் என்னுள் விரிந்தது .
நான் இரண்டு
முறை படித்த சிறுகதை “ அப்பால் ஒரு பயணம்”.
’இறந்தவரைப் பாத்திரமாக்கியும் இறந்தவரே பாத்திரமாகியும் புனையப்பட்ட கதைகள்
ஏராளம் உலவுகின்றன ’ எனக் கோவை சதாசிவம் சொல்வது மெய்யே , ஆயின் இக்கதை பயணிக்கும்
தடம் தனித்து ஓங்கி நிற்கிறது . இஸ்லாமியர்களிடையே
ஆழமாக வேர்விட்டுள்ள நம்பிக்கையான சொர்க்கம் நரகம் இவற்றை மையமாக வைத்து மரணத்தை முன்
நிறுத்தி ஓர் அழுத்தமான புனைவு .தத்துவ விசாரிப்புகளோடும் போதிக்கப்பட்ட கற்பனைகளோடும்
கதையை நகர்த்தும் பாங்கு நன்று . கணக்கு தீர்க்கும் நாளில் புண்ணியத்தின் தட்டு கீழே
இருந்தது .பாவத்தின் தட்டு உயர்ந்திருந்தது . ‘… கடைசியாக வைக்கப்பட்ட புத்தகத்தில்
இவன் [ இறை ]நிராகரிப்பாளன் என்றிருந்தது.முடிந்தது கதை .நிலைமை தலைகீழானது….” … நம்பிக்கை
ஒடிந்த நொடியில் இறைவன் அவனை வரச் சொன்னார் , இறவனை நெருங்கும் போது குரல் கேட்டது
,” அஸ்ஸலாமு அலைக்கும் தோழர்…” . இந்த கடைசி ஒற்றைவரி கதையின் உயிர் . வாழ்வோடு கலந்து
பேசிய சித்தாந்தப் பிழிவு . இதனை ஒரு குறும்படமாக
யாரேனும் இயக்கினால் நிச்சயம் மிக அழகாகவும் அழுத்தமாகவும் இருக்கும் . யாரேனும் முயற்சி
செய்யுங்களேன் .
ஆணாதிக்கத்தை
, பெரிய மனிதர்களின் இன்னொரு முகத்தை ,பலதார
மணத்தின் மீது இஸ்லாம் சமூகத்துக்குள்ளும் முணுமுணுக்கும் எதிர்ப்பை , மென்மையாக ஆனால்
வலுவாகப் பதிவு செய்யும் கதை ‘விடுவிப்பு ‘.தன் மகளின் நல்வாழ்வுக்காக தாய் சாஜிதா எடுத்த முடிவு சட்டப்படி சரியானதாக
இல்லாமல் இருக்கலாம் ஆயின் வாழ்வின் தீர்ப்பு அது .
‘சதுரகிரி வீடு’ எங்கும் இருக்கிறது . அந்த அழுகைச்
சத்தமும் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது . ஹீராவின் பார்வைபோல் இன்னும் ஊடுருவிப்
பாய வேண்டிய திக்கு நிறைய இருக்கு .
‘ வேந்தரைத்
தேடி’ தலைப்புக்கு ஏற்ப இக்கதையும் ஓர் அரசியல் பகடி .ரசிக்க மட்டுமல்ல கொஞ்சம் சிந்திக்கவும்
தூண்டும் கதை .
சம்சுதின்
ஹீராவின் எழுத்துகள் வழி உயிர் பெறும் இஸ்லாமிய கதாபாத்திரங்களும் இதர கதா பாத்திரங்களும்
வெறுப்பின் கொற்றத்துக்கு எதிராக அன்பின் அறத்தை உரக்கப் பேசுகின்றன .
வாசிக்கவும்
உரையாடவும் ’கட்டங்காப்பி’ ………………………….
சுபொஅ.
03 /03
/26 .
கட்டங்காப்பி [ சிறுகதைத் தொகுப்பு] ,ஆசிரியர் : சம்சுதீன்
ஹீரா, வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : www.thamizhbooks.com /
94445 67935 பக்கங்கள் : 112 , விலை : ரூ.120 /
