அகத்தின் ஆழம் அறிந்த தமிழ்

Posted by அகத்தீ Labels:

 






 


அகத்தின் ஆழம் அறிந்த தமிழ்

[ 2023 ஆண்டின் கடைசி நூலறிமுகம் இது .

2024 ன் முதல் அடிவைப்பாகவும் கொள்க .

காதல் பாடலை இசைத்துக் கொண்டே புத்தாண்டில் நுழைக !

புத்தாண்டு வாழ்த்துகள் : சுபொஅ.]

 

 

 ன்னும் ஒரு முறை

சொல்லுகிறேன்.

வள்ளுவனைச்

சாமியார் கீமியார்என்று

யாரவது

கதைவிட்டால்

எனக்கு

கெட்ட கோபம் வரும் !”

 

என ஆர்.பாலகிருஷ்ணன் சீறி இருக்கிறார் . அதில் நியாயம் இருக்கிறது . அறம் ,பொருள் போல் இன்பத்தையும் கொண்டாடிய வள்ளுவர் வாழ்வியல் வழிகாட்டிதானே ! ” இப்படி ஒரு தீயா !”நூல் நெடுக வள்ளுவர் கொண்டாடிய காதலை இன்றைய சூழலோடு இணைத்து மகிழ்ந்து கொண்டாடுகிறார் நூலாசிரியர் . இந்தத் தீ எனக்கு மிகவும் பிடித்துவிட்டது .நீங்களும் இந்தத் தீயை வாரி அணைத்தால் மகிழ்வீர்கள் என உறுதிகூறுகிறேன்.

 

 “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை “ என நம் பண்பாட்டின் அடிமுடி காண ஆழமான அடர்த்தியான நூலை முப்பதைந்து ஆண்டு உழைப்பில் நமக்கு வழங்கிய ஆர்.பாலகிருஷ்ணன் தான், வள்ளுவன் யாத்த இன்பத்து பாலிலும் நம்மை திக்குமுக்காட வைத்திருக்கிறார் .அதுதான் அவர் சிறப்பு .

 

 “ வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார் என்று அவள் உள் மனம் சொன்னது” என பன்மாயக் கள்வன்நூலில் சொன்னவர் .இந்நூலில் சொல்லுகிறார்

 

“கள்ளுண்ணாமைக்கு

தனி அதிகாரம்

வகுத்த வள்ளுவர்

கள்ளையும் காமத்தையும்

ஏன் ஒப்பிட்டார் ?

காமத்தைக் கெளரவிக்கத்தான்.”

 

அத்தோடு நிற்காமல் இழுத்து “ என்னதான் இருந்தாலும் ‘வள்ளுவன் என்னும் தீராக் காதலன்’ அல்லவா!” என அவரை காதலராகவே மாற்றிவிட்டார் .  ‘பன்மாயக் கள்வன்’க்கும் ’இப்படி ஒரு தீயா!’க்கும் இடையே ஓர் பரிணாம வளர்ச்சி . ஆம் அங்கு ’உள்மனம் சொன்னது’ ;இங்கு உண்மையாகவே ஆகிவிட்டது .

 

அடுத்து இன்னொரு இடத்தில் சொல்கிறார் ,

 

“காதலியின்

வாயில் ஊறும்

உமிழ்நீரைத்

தேன் – பால் கலவை எனத்

தேர்ந்து தெளிந்தவன்

விஞ்ஞானியா !

மெய்ஞானியா !

இரண்டும் இல்லை

அவள் மெய்யுறு புணர்ச்சியின்

மேன்மை உணர்ந்தவன்

இயல்பினால் இல்வாழும்

இயல்பான மனிதன்!”

 

இப்படி அலசி ஆய்ந்து தெளிந்த ஆர் .பாலகிருஷ்ணனுக்கு “வள்ளுவனைச்

சாமியார் கீமியார்என்றால் கெட்ட கோபம் வரத்தானே செய்யும் ?

 

வள்ளுவரின் இன்பத்து பாலை எடுத்து ஒவ்வொரு குறளுக்கு பதவுரை ,பொழிப்புரை எழுதவில்லை ஆர்.பாலகிருஷ்ணன். மாறாக அன்று வள்ளுவன் சொன்னவை இன்றும் காதல் விதியாய் இயங்குவதை நிகழ்காலந்தொட்டு சொல்லுவதுதான் இந்நூலின் சிறப்பு . பணி ஓய்வு பெற்ற பின்னும் இயங்கும் இவரின் பார்வையில் இன்றைய இளைஞரின் காதல் ஈர்ப்பு அட்டகாசமாய் அமர்ந்திருக்கிறது .கிழவன் என்னையும் பேசவைத்துவிட்டது .

 

காதலர்கள் வாட்ஸ் அப்பில் /இன்ஸ்டாகிராமில் சாட் செய்வதை கவிதை ஆக்குகிறார் வள்ளுவரின் ‘புலவி நுணுக்கம்’ குறள் சார்ந்து ;

 

“ ‘இன்ஸ்ட்டாகிராமில்’

அவள்

தும்மினாலும்

இருமினாலும்

‘ஆட்டின்’ போடாமல்

தூங்கிவிடுவாயா நீ!

தூங்க விடுவாளா அவள் !” 

 

இப்படி  “’20 ஸ் கிட்ஸ் என்று அறியப்படும் இருபால் இளைஞர்களே !”என அழைத்துச் சொல்லுகிறார் .

 

சொல்லுவது மட்டுமா ? ‘புணர்ச்சி மகிழ்தல்’ குறள் சார்ந்து தீட்டுகிற சித்திரம் பாரீர் !

 

“ எனக்கு என்னவோ

’பிரெஞ்சு’தான் பிடிக்கிறது

என்றான்.

“பிரெஞ்சு டோஸ்ட்”

என்று புருவத்தை உயர்த்தினாள்.

 

“இல்லை

பிரெஞ்சு’ டேஸ்ட்”

 

அவள் உதடுகள்

சிலிர்த்தன.”

 

இந்த வரிகளூடே வள்ளுவத்தை பேசுகிறார் ஆர்.பாலகிருஷ்ணன் .

 

“களைத்துப் போனது

கணிப்பொறித்திரை

‘வேண்டாம் விடு’ என்றது

விசைப் பலகை…

கண்கள்

கெஞ்சின கையெடுத்து..

அடித்து துவைத்து

கசக்கிப் பிழிந்து

காயப் போட்ட துணியாய்

உடம்பு…

அதைவிடக் கந்தலாய்

மனசு…”

 

வள்ளுவனின் இன்பத்துப் பாலையும்  இன்றைய இளசுகளையும் சரியாய் எடை போட்டு சரியான விகிதத்தில் கலந்து தந்திருக்கிறார் .

 

வள்ளுவனின் “ நிறையழிதல்” சார்ந்து

 

 “ கணினியைக் கட்டி அழு !

‘கோட்’ எழுதித் தேய்ந்த

உன் “ வீணாய்ப்போன”

விரல்களுக்கு

‘அலெக்ஸா’ விடம்

ஆசை முத்தம்

கேட்டு வாங்கு

 

‘பைத்தான்’ பைத்தியமே

அந்த

‘சைத்தானிடமே பார்த்துக் கொள்

இனிமேல் வைத்தியம்!

என்னிடம் வராதே!

நள்ளிரவில்

வாட்ஸ்அப்பில்

‘வாழ்த்தினாள்’”

 

‘கடுப்பேத்துகிறார் மை லார்டு!”

 

இப்படி இளசுகளின் மொழியில் பிழிகிறார் வள்ளுவன் தந்த காதலை.

 

“ ஒரு நோக்கில்

‘காதல் வைரஸ்’

அடுத்த நோக்கில்

‘ஆண்டி வைரஸ்’ “

 

எனவள்ளுவனின் குறிப்பறிந்து வாலிப மொழியில் சொல்லிவிட்டார் .

 

நிகழ்கால செய்திகள் ,பண்பாட்டு அரசியல் எல்லாம் கலந்து கட்டுகிறார் காதல் சித்திரத்தை

 

“ ஓவாப்பிணி

உலகெங்கும் ஊரடங்கு

முகக்கவச மனிதர்கள்

கழுவிக்கழுவிக் கரைந்த கைகள்

நேரலையில் வழியும்

பூமியின் துயரம்

பேரச்சம்.

 

தேசிய நெடுஞ்சாலையில்

நடந்து தேயும்

புலம்பெயர் தொழிலாளர்கள்!

பொத்தல் விழுந்த

பொதுமனச்சான்று

பகிர்தல் அறத்தில் பழுது “

 

இப்படி விரியும் பின்புலத்தில்

 

“ ஆல்பர்ட்டாவில் [கனடா]

ஆதன் மடியில்

அவள் மனசு

தஞ்சாவூரில்

தனிமையின் பிடியில்

அவள் உடம்பு “

 

இப்படி வள்ளுவனின் ‘படர் மெலிந்திரங்கல்’ விரிகிறது .’வெள்ளத்தில் விழிகள்’ எனும் இக்கவிதை ,”என்ன கொடுமை சரவணன் இது!” பஞ்சு டயலாக்கோடு முடிகிறது .

 

 ‘கண்விழிப்பழிதல்’ குறள் சார்ந்து  “‘ஓஓ’ போடு!” என மகுடமிட்டு ,

 

“ ‘கட்டதொரைக்கு

கட்டம் சரியில்லை’

அப்புறம் வச்சுக்கிறேன் என்று

பின் வாங்கியது கண்!”

 

என கட்டம் கட்டி விட்டார்.

 

 “நாட்டுக் குறள்” என்ற தலைப்பில்  தாஜ்நூர் இசையில் ஆர் .பாலகிருஷ்ணன் எழுதிய ஏழு நாட்டுப்புறப் பாடல்கள் ஒலிப்பேழையாக வந்துள்ளது .அதிலிருந்து சில பாடல்களை இந்நூலிலும் எடுத்தாண்டிருக்கிறார் .

 

“தகையணங்குறுத்தல்” குறளில் வள்ளுவன் சொன்னபடி நாட்டுப்புற பாடலை யாத்துவிட்டார் நூலாசிரியர்;

 

‘குத்தூசி மீசையிப்ப

கொணங்கிப் போச்சுடா..

கோபத்தில் கத்துறது

கொறஞ்சி போச்சுடா..”

 

“அடடே ! அப்புறம் என்னாச்சு !”

 

“மடிச்சு கட்டின லுங்கி இப்ப

எறங்கி நின்னாச்சு…

அவ மனசுக்கேத்த

மனுஷனா மாறி நாளாச்சு”

 

காதல் படுத்தும் பாட்டை நூல் நெடுக உளவியலோடு உருகிச் சொல்கிறார்.

 

 “ கடற்கரையில் நின்று

கடலலையில் கால்நனைத்து

அண்ணாந்து பார்த்து

காதலை நினைக்காதவர்

யாரேனும் இருந்தால்

இரண்டில் ஒன்று நிச்சயம் .

‘ஒருமுறைகூட காதலிக்காதவர்’

அல்லது

‘ஒரு முறைகூட கடல் பார்க்காதவர்’!”

 

இப்படி மானுட இயல்பை வாசித்து வரைந்து காட்டுகிறார் .

 

“காதலிக்கும் பழக்கம்

கொஞ்சம் கொஞ்சமாக

மறந்து வருகிறது .

 

காதலிக்கத் தெரியாத

கைக்கூலிகள் நாம்.

திருமணம் என்பதுகூட

‘போட்டோ ஷூட் நமக்கு”

 

என ஏகடியம் பேசுகிறார் . ஏன் தெரியுமா ? யோசியுங்கள்  நூலை வாசியுங்கள் புரியும் .

 

“ ’சிறந்தது காதல் காமம்

காமத்து சிறந்தது

மெய்யுறு புணர்ச்சி’ என்று

உலகத்தின் காதுகளில்

உரத்துச் சொன்னது

அகத்தின் ஆழம் அறிந்த தமிழ்”

 

இந்த ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் ஈடுபாடும் புரிதலும் காலமாறுதலோடு இணைதலும் இந்நூலின் பெருவெற்றி எனலாம்.

 

இடையில் புள்ளிவிபரம் சார்ந்து சில செய்திகள் சொல்வேன் பொறுத்தருள்க!

 

இன்பத்துப் பாலில் 25 அதிகாரங்களும் 250 குறள்களும் இடம் பெற்றிருந்தாலும் விரல்விட்டு எண்ணத் தக்க குறள்களே பொது புத்திக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது . சிற்பி ,கலைஞர் , சுஜாதா போன்ற சிலரே இதனுள் விரிவாக பயணித்திருக்கின்றனர் . இப்போது ஆர்.பாலகிருஷ்ணன் தொடர்கிறார் .

 

இன்பத்துப் பாலில் இருந்து 56 குறள்களைத் தேர்வு செய்து , 57 காட்சிச் சித்திரங்களாய் ”பன்மாயக் கள்வனில்” ஆர் .பாலகிருஷ்ணன் காட்சிப் படுத்தி இருப்பார் . 25 அத்தியாயங்களையும் அந்நூல் தொட்டுச் சென்றாலும்படர் மெலிந்திரங்கல்” ,”குறிப்பு அறிவுறுத்தல்எனும் இரு அத்தியாயங்களில் அதிகம் எடுத்தாண்டிருப்பார்.

 

இப்போது” இப்படி ஒரு தீயா!” எனும் இந்நூலில் 20 அத்தியாயங்களில் இருந்து 51 குறள்களை  50 கவிதைகளாய் எடுத்தாண்டிருக்கிறார் .புணர்ச்சி மகிழ்தலில் 8 , தகையணங்குறுத்தலில் 6 , காதற் சிறப்புரைத்தலிலும் படர்மெலிந்திரங்கலில் நான்கு நான்கு என அதிகம் எடுத்தாண்டிருக்கிறார் .சங்க இலக்கியத்தையும் கொஞ்சம் பிசைந்து சுவை ஏற்றி இருக்கிறார்.

 

இந்தப் பட்டியலை இங்கு தருவதன் நோக்கம் இன்னும் எடுத்தாள நிறைய குறள்கள் மிச்சம் இருக்கிறது என ஆர்.பாலகிருஷ்ணனுக்கு நினைவூட்டத்தான்.

 

“ எனவே உலகம் தோன்றியது முதலே  காதல் மேடைகளில் அதே காட்சிதான் ,தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன ;வந்து செல்பவர்கள்தான் வேறுவேறாக இருக்கின்றனர் என்பதை இப்படி நேர்த்தியாக கவிதையாக்கி இருக்கிறார் கவிஞர் .

 

காலண்டர் தான்

மாறுகிறது

மற்றபடி

காலந் தோறும்

‘புலவி’ புதுவேஷம்

போடுகிறது.”

 

இப்படி அணிந்துரையில் இளம்பிறை சொல்வது மிகை அல்ல.

 

 

“ ’டெஸ்டெஸ்தரோன்

ஆண் பாலின இயக்குநீர்

ஈஸ்ட்ரோசன்

பெண்பாலின இயக்குநீர்

இன்பத்துப் பால்

இருபாலின இயக்குநீர்’

 

இங்ஙனம், அறிவியலாக ,அழகியலாக பாலின சமத்துவத்தோடு வள்ளுவனின் இன்பத்துப்பாலை ,அமிழ்தக் கிண்ணத்தில் பருகத் தருகிறார் ஆர் .பாலகிருஷ்ணன்.” என்கிறார் கவிஞர் பழநிபாரதி .

 

என்னுரையில் ஆர் .பாலகிருஷ்ணன் பிரகடனமே செய்கிறார் ;

 

“ நெஞ்சத்தில் காதலும் ஈரமும் இன்றி ஒருவன் ‘ வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தான்’ என்று யாரேனும் சொன்னால் அது கலப்படமற்ற வதந்தி என்று கருதுபவன் நான்,”

 

அப்பிரகடனத்தை நானும் வழி மொழிகிறேன்.

 

டிராஸ்கி மருதுவின் கோட்டோவியங்களின் பெருமை சொல்லவும்  கூடுமோ !

 

நிறைவாய்ச் சொல்வேன் ;

 

இளைஞர்கள் இந்நூலை வாசித்தால்

காதல் விசை கூடும்.

நடுத்தரவயதினர் இந்நூலை வாசித்தால்

தாம்பத்திய நெருக்கம் மிகும்.

கிழவர்கள் இந்நூலை வாசித்தால்

அசைபோடலில் சுகம் கூடும்.

 

 

இப்படி ஒரு தீயா !, குறள் தழுவிய காதல் கவிதைகள்,

ஆசிரியர் : ஆர் .பாலகிருஷ்ணன் , வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு : 24332924 /8778073949

E mail : bharathiputhakalayam@gmail.com , www.thamizhbooks.com

பக்கங்கள் : 240  , விலை : ரூ.250/ 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

30/12/2024.

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment