இயல்பு நிலை திரும்பியது …

Posted by அகத்தீ Labels:

 

இயல்பு நிலை திரும்பியது …

 

 “அந்த ஊர் இன்னும் மூழ்கிக்கிடக்கிறது”

டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது

அவசர அவசரமாக

“ சிறகடிக்க ஆசை “ சீரியலுக்கு மாற்றினார்.

நான்கு நாட்கள் முன்பு வரை

வெள்ளத்தில் தத்தளித்த  இந்த ஊர் வாசி .

 

முகத்தைச் சுழித்து திரும்பிப் படுத்தார்

பெரியவர் பேசவிருப்பமில்லாமல்

நேற்றின் நினைவுகள் சுழன்றன..

 

தரைத்தளம் வெள்ளத்தில் மூழ்க

முதல் மாடியை தண்ணீர் முத்தமிட

மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து

சோற்றுக்கும் தண்ணிக்கும்

கரெண்டுக்கும் நெட்டுக்கும்

அல்லாடிய பொழுதுகள்

எதிரிக்குகூட வரக்கூடாதென

இறைவனை வேண்டிய பொழுதுகள் .

 

இக்கட்டில் தவிக்கும் போது

அண்டை அயலாலுனும் அடுத்த வீட்டுக்காரனும்

சாதி மதம் கடந்த தன்னார்வலர்களும்

கைகொடுத்ததை பசி தணித்ததை

நன்றி என ஒற்றை வார்த்தையில் கடப்பதா

பெரியவர் பெருமூச்சு விட்டார் .

 

வெள்ளம் வடிந்தது வீட்டை துடைக்க

சமையலை தொடங்க வேலைக்கு செல்ல

பாதியில் நின்றுபோன கடன் முயற்சியை தொடங்க

பெண்பார்க்க … திருமணத்தில் பங்கேற்க..

 துட்டி கேட்க … பயணம் போக…

எல்லாம் பழைய வேகத்தோடு சூடுபிடித்தன.

 

மக்கும் மக்காத குப்பை
எல்லாவற்றையும் தெருவிலும்
சாக்கடையிலும் வீடியடித்தனர் பழையபடி...

 

 

மழை துவங்கும்முன் விட்ட இடத்திலிருந்து

 கணவன் மனைவி சண்டையைத் தொடங்க

பிள்ளைகள் அடம்பிடிக்க

முழுவீச்சில் இயங்கத் தொடங்கியது வீடு.

 

வெள்ளத்தில் சோற்றுப் பொட்டலத்தை

சுமந்து வந்து தந்த பக்கத்து வீட்டுக்காரனோடு

பழைய சண்டையை மீண்டும் வீட்டார் துவங்க

“இயல்பு நிலை மீண்டதென”

கேலி செய்துகொண்டே வெளியே ஓடினான்

குசும்புக்கார பொடியன் .

 

“அந்த ஊர் இன்னும் மூழ்கிக்கிடக்கிறது”

டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது

அவசர அவசரமாக

“ சிறகடிக்க ஆசை “ சீரியலுக்கு மாற்றினார்.

நான்கு நாட்கள் முன்பு வரை

வெள்ளத்தில் தத்தளித்த இந்த ஊர்வாசி .

 

சுபொஅ.

22/12/23.

 

 


0 comments :

Post a Comment