சென்றது இனி பாடமாக …

Posted by அகத்தீ Labels:

 


சென்றது இனி பாடமாக …

 

 


 “சென்ற ஆண்டைப் போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு பிறக்கிறது.

சென்ற ஆண்டைப்போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு வாழ்த்துப் பாடுவோம்

சென்ற ஆண்டைப்போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு சபதம் ஏற்போம்

சென்ற ஆண்டைப்போல்….”

 

 “நிறுத்து நிறுத்து

நீ என்ன சொல்ல வருகிறாய் ?”

 

”ஆண்டென்பது

இயற்கை வகுத்த கணக்கு

இதுதான் தொடக்கம் என்பது

மனிதன் வகுத்த கணக்கு

வரலாறு நெடுகிலும்

எது தொடக்கம் என்பதிலே

இருக்கு ஏகப்பட்ட பிணக்கு

 

சம்பளக் கணக்கும் வங்கிக் கணக்கும்

பிறந்த நாளும் இறந்த நாளும்

மணந்த நாளும் மறக்க முடியாத நாளும்

இதுக்குள்ளேதான் இருக்கு

எப்படி வாழ்வாய் இனி

இந்த காகேரியன் காலண்டர் இல்லாமல் …”

 

“ அய்யையோ குழப்பாதே !

ஆங்கிலப் புத்தாண்டுக்கு

ஏன் இந்த பல்லாண்டு “

 

“ ஆங்கிலப் புத்தாண்டு என்று எவன் சொன்னான் ?

மூளை குழம்பியவனோ !

காகேரியன் புத்தாண்டு என்பதுதானே நிஜம் .

காலம் என்பது வற்றா பெருநதி

காலண்டர் என்பது அதன் ஒரு துளியிலும் ஓர் அணு

அது காகேரியனாக இருந்தால் என்ன ?

வேறெதுவாக இருந்தால் என்ன?

 

 

நாம் காகேரியனையும் கொண்டாடுவோம்

தைமுதல் நாளையும் கொண்டாடுவோம்

ஒன்று வாழ்வின் கூறு

இன்னொன்று பண்பாட்டின் வேர் !

எதோடும் இணையாத சித்திரை ஏன் ?

சனாதனம்  நமக்கு  ஒவ்வாத விஷக் கணக்கு

சாகாத தமிழ் நமக்கு – தந்த

’தை’க்கு சொல்லுவோம் எந்நாளும் நல்வாழ்த்து!

 

ஜனவரி முதல் நாளையும் தை முதல் நாளையும்

கொண்டாடுவோம் குதூகலமாய்!

 மது போதை கூடாது ! மத போதை கூடாது !

சாதி போதை ! இன போதை கூடாது !கூடாது!

வேகம் வேண்டவே வேண்டாம் !

கொண்டாடுவோம்  குதூகலமாய்!

ஜனவரி முதல் நாளையும் தை முதல் நாளையும்

 

 

“சென்ற ஆண்டைப் போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு பிறக்கிறது.

சென்ற ஆண்டைப்போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு வாழ்த்துப் பாடுவோம்

சென்ற ஆண்டைப்போல்

இந்த ஆண்டும் புத்தாண்டு சபதம் ஏற்போம்

சென்ற ஆண்டைப்போல்….”

 

சென்றது இனி பாடமாக

செல்லும் வழி செம்மையாக

 

 

சுபொஅ.

28/12/23.

 

 


0 comments :

Post a Comment