“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

Posted by அகத்தீ Labels:

 



“இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

 

நீண்ட நாட்களாக வாசிக்க நினைத்திருந்த இந்த புத்தகம் இப்போதுதான் வாசிக்கக் கிடைத்தது .  தாமதமாகவேனும் சரியான புத்தகத்தை வாசித்த மனநிறைவு .

 

“ காகஸி ஹை பைரஹன்” எனும் உருதுமொழியில் சுக்தாயால் எழுதப்பட்ட சுயசரிதை ; ஆங்கிலம் வழி தமிழுக்கு தந்திருக்கிறார் சசிகலா பாபு .

 

ஒரு நாவலைப்போல் விரியும் இந்த சுயசரிதை இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னுமாக வாழ்ந்த சுக்தாயின் சொந்தக் கதை மட்டும் அல்ல ; அன்றைய இஸ்லாமிய குடும்பத்தில் பெண்களின் வாழ்க்கை வலியையும் உரிமை வேட்கையையும் ஒருங்கே சொல்லும் ஒரு வரலாற்று பதிவு எனினும் மிகையாகாது .

 

உருது இலக்கியங்களில் கவிதைக்கு தனி இடம் உண்டு . இந்நூலும் உணர்ச்சி கொப்பளிக்கும் கவித்துவத்தோடு நெய்யப்பட்ட உரைநடையே .இதனை ஆங்கிலம் மூலம் தமிழுக்கு கொண்டு வந்த பின்னும் இதனை உணர முடிகிறது எனில் ; உருது மொழியிலேயே வாசித்தால் சொக்கிவிடுவோம் போல. மொழிபெயர்த்தவருக்கு பாராட்டுகள் .

 

”படிப்பெதற்கு பணம் சம்பாதிக்க வழி காண்பீர்!” என இப்போதும் சில மூளைவீங்கிகள் உளறிக்கொண்டிருக்கும் நேரத்தில் , கல்வி கற்கவே பெண்கள் எவ்வளவு போராட வேண்டி இருந்தது , அதிலும் இஸ்லாம் சமூகத்துக்குள் இருந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் கல்விக்காக சுக்தாய் நடத்திய போராட்டம் நிச்சயம் நாம் அறிய வேண்டிய செய்தி .

 

இந்த நூலின் சாரம் என்ன ? ஆரம்பத்திலேயே ஒரு பத்தி வருகிறது , “ எப்படியோ பால்யத்தைக் கடந்துவந்தேன்.ஏன் பால்யத்தின் மீது இத்தனை புகழ்ச்சிப் பாடல்களை இயற்றுகின்றனர் என எனக்குப் புரிவதில்லை . [இஸ்மத் சுக்தாயின் சிறுகதையான ‘பச்பன்’ அதாவது ‘பால்யம்’ ,பால்யத்தின் மீதான வறண்ட உணர்ச்சியற்ற பார்வையைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும்.] தடைகளையும் இடர்பாடுகளையும்தான் பால்யம் இயம்புகின்றது . ஒருவர் வளர்ந்து பெரியவராகும் போதுதான் அநீதிக்கு எதிராகப் போரிடக்கூடிய தகுதியை அடைகிறார் .எட்டு சகோதர சகோதரிகளின் அன்பையும் நேசத்தையும் அனுபவித்ததாலேயே ,நான் பெரியவளாக வளர மிகவும் ஆர்வமாயிருந்தேன். உடன் பிறந்தோருக்கு மகன்களும் மகள்களும் பிறந்த போது எனக்கு கிடைத்த புது மூப்பு நிலையால் நான் அதீத மகிழ்வுற்றேன் .ஏற்றதாழ்வுகளும் பணக்காரர்களுக்கும் இடையே இருப்பது மட்டுமல்ல ; ஆண்களுக்கு பெண்களுக்கு இடையே உள்ள அதிகார உறவில்தான் அதீத வேறுபாடு நிகழ்கிறது.”

 

இந்நூல் நெடுக இந்த அடிசரட்டிலேயே நகர்கிறது .

 

 “ …… ……. எத்தகைய பெரிய அறிவுஜீவியாகவே ஒருவர் இருந்த போதும்,எதிர்க்கும் ஒரு பழக்கம் எனக்குள்ளது .எத்தகைய ஒரு கெட்ட பழக்கம் இது . அவருடைய கோட்பாடுகளில் உள்ள ஓட்டைகளைத்தான் நான் முதலில் காண்கிறேன். ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கும் முன்னர் அதிலுள்ள உடன்பாடற்ற விஷயங்களைத்தான் ஒருவர் ஆராய வேண்டும் . ஒன்றிற்கு பெயரளவில் இருக்கும் மதிப்பைக் கொண்டு என்னால் அதனை உடனடியாக ஒப்புக் கொள்ள முடியாது .நான் வளர்ந்து பேசத்துவங்கியதும் உதிர்த்த முதல் சொல் ‘ஏன்?” இந்த ‘ஏன்’ என்னைப் பல வேதனைகளுக்கு உள்ளாக்கியது.”

 

அன்றைய கெடுபிடியான காலகட்டத்தில் எல்லாவற்றையும் “ ஏன்” என்று கேள்வி கேட்ட சுக்தாய் வீட்டில் சமூகத்தில் எவ்வளவு பெரிய சவாலை எதிர் கொண்டிருப்பாள் ? கல்வி கற்க அவள் விடாப்பிடியாக போராடி படித்தது என்பதே இந்நூலின் முழுக்கதை எனச் சொல்லிவிடலாம் .

 

“ நிக்காஹ் எனும் வைபவம் முக்கியத்துவம் வாய்ந்ததுதானா ?” இக்கேள்வி இன்றைக்கு ஓரளவு சுலபம் ,ஆனால் அன்றைக்கு துணிந்து கேட்டு ஓர் தனித்த பாதையில் பயணித்த சுக்தாய் நிச்சயம் ஓர் எடுத்துக்காட்டுதான். அதே சமயம் பந்த பாசம் அன்பு நேசம் எல்லாவற்றையும் உதறிவிட்ட தனிக்காட்டு சுயநலமியாக பயணித்த பாதை அல்ல ;  அனைத்திலும் மூழ்கித் திளைத்துக் கொண்டே தன் தனித்துவம் மிக்க பாதையை சமைத்தவள் சுக்தாய் .அதன் எதிர்ப்பும் போராட்ட வலியும் உணர்ச்சி பிரவாகமாகவும் அறிவார்ந்த விவாதமாகமவும் நூல் முழுக்க வியாபித்து இருக்கிறது .

 

சாதக் ஹசேன் மண்ட்டோவுக்கு எதிராகவும் இஸ்மத் சுக்தாய்க்கு எதிராகவும் ஒரே நேரத்தில் ஓர் வழக்கு நடந்தது .ஆபாசமாக கதை எழுதிவிட்டதாகவே அவ்வழக்கு . இருவரும் நிர்பந்தங்களுப் பணிந்து  மன்னிப்பு கேட்காமல் , அதனை துணிச்சலுடன் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்றது சாதாரணமானது அல்ல . இன்றும் வழிகாட்டும் செய்தி அது.

 

அன்றைய இஸ்லாம் சமூகம் ,குடும்ப அமைப்பு , இந்து ,கிறுத்துவ உறவுகள் ,மதவெறியைத் தூண்டும் முயற்சிகள் , மதமாற்ற முயற்சிகள் ,மத வெறி பரவல் ,பத்தாம்பசலி வாழ்க்கை முறை ,குழந்தைத் திருமணம் , சாதியம் , ஸதி என உடன்கட்டை ஏற்றும் வழக்கம் ,நாவாப்பின் பொறுப்பற்ற ஆடம்பர நிர்வாகம் ,அதிகார வர்க்கம் , அனைத்தையும் மீறி மக்களிடையே மிளிரும் நல்லிணக்கம் , கிறுத்துவ கல்வி நிறுவனங்கள் தந்த ஜனநாயக வெளி ,காங்கிரஸ் ,முஸ்லீம் லீக் , புதிய சமூகப் பார்வை ,கம்யூனிசம் , உருது இலக்கியம் சந்தித்த சவால்கள்  , ஒரினச் சேர்க்கை ,எது ஆபாசம்  இப்படி போகிற போக்கில் சுயசரிதையோடே பொதிந்துள்ள சமூக அக்கறைமிக்க செய்திகள் வியக்க வைக்கின்றன .

 

நெகட்டிவ் அப்ரோச் ,நெகட்டிவ் கேர்ள் என சுலபமாக மேதாவிகள் கடந்துவிடக்கூடிய ஒரு பாத்திரமாகவே தன்னை அடையாளப் படுத்தும்  சுக்தாய் வாழ்வின் உள் பொதிந்துள்ள வெப்பமும் வினாக்களும் ஒரு பாசிட்டிவ் சமூகத்தை நோக்கிய முன்னெடுப்பே !

 

அலிகார் ,லாகூர், ஆக்ரா ,டெல்லி என பல நகரங்களின் பயணிக்கும் இந்நூல் ஒரு சமூகவியல் விவரிப்பையும் தருகிறது .

 

இஸ்லாமியர் சொல்லும் ‘தோசாக்’ எனும் நரகம் , இந்துக்கள் சொல்லும் ‘நரகம்’ ,கிறுத்துவர்கள் சொல்லுல் ‘ஹெல்’ எனும் நரகம் இவற்றை எல்லாம் சுக்தாய் பகடி செய்வது சுவையானது .அவர் நாத்திகரல்ல .அவருக்கு இறையன்பு இருக்கிறது . ஆனால் அச்சம் இல்லை . கேள்விகள் கேட்கும் உறுதி இருக்கிறது . பரந்த வாசிப்பு இருக்கிறது . அவர் எழுதுகோல் நிமிர்ந்து நின்றது .சவால்களை எதிர் கொண்டது .

 

இந்நூலை சுருக்கமாய் எழுதிவிட முடியாது .அந்த உணர்ச்சியையும் சுயமரியாதைக்கான கல்விக்கான அன்பும் உறுதியும் மிக்கஓர் பெண்ணின் போராட்டத்தையும் வாசித்து அறிவீர் !

 

வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை , ஆசிரியர் : இஸ்மத் சுக்தாய் ,

தமிழில் : சசிகலா பாபு , வெளியீடு : எதிர் வெளியீடு ,

தொடர்புக்கு : 04259 226012 / 99425 11302 , பக்கங்கள் : 404 , விலை : ரூ.400/

 

 

சுபொஅ.

05/12/2023.

 

 


0 comments :

Post a Comment