வாசமாய் நிறைந்திருக்கும் சகமனிதனின் நேசம்…….
”வாசல்-2021” – பத்தாவது ஓசூர் புத்தகத் திருவிழா தொகுப்பு நூல் குறித்து நான் அறிமுகம் எழுதும் போது , ஆதவன் தீட்சண்யா ,பழ .பால சுந்தரம் இருவரது
சிறுகதைகளைக் குறிப்பிட்டு ”ஆக இந்த இரு கதைகளும் மொழி ,இனம் ,மாநிலம் என்கிற வேலிகளைத் தாண்டி மனிதம் பேசுகிறது .வாழ்வின் வலியைப் பேசுகிறது . ” எனக் குறிப்பிட்டேன்.
இப்போது பழ.பாலசுந்தரத்தின் சிறுகதைத் தொகுப்பு ”காவேரி ஓரம்” வாசித்தேன் . அன்று நான் வியந்த
“பொன்னார்” சிறுகதையையும் “ கடக்கால்” எனும் இன்னொரு கதையையும் இணைத்தது
போல் “ பொன்னாற்றின் கடக்கால் பழ.பாலசுந்தரம்
சிறுகதைகளை முன்வைத்து” என அணிந்துரைக்கு
கமலாலயன் தலைப்பிட்டிருப்பது மிகை அல்ல . நிஜம். அவற்றை முத்திரைக் கதைகளாக
அவர் தேர்ந்திருப்பாரோ ?
ராஜஸ்தான் சிறுநகர் ஆல்வாரின் தண்ணீர் தாகம் தீர்க்க ஆழ்துளைய்க்
கிணறு அமைக்க நாமக்கல்லில் இருந்து போன தொழிலாளர்களின் உலுக்கும் அனுபவப் பதிவே ”பொன்னார்”.தண்ணீருக்காக தன் ஒற்றைக் குடிசையை
இடிக்கவும் உடன்பட்ட ஏழை ; “ இருளில் கையைப்
பற்றிக் கொண்டு ,தனக்கு இருபது வயதில் ஒரு பெண் இருப்பதாகவும் ,அவனுக்கு விருப்பமென்றால்
அவளை அனுப்பி வைப்பதாகவும் ,எப்படியாவது கிணறு பூர்த்தியானால் போதும் …” என சொன்னவரின்
கையை உதறிய நவலடி ,.. தண்ணீருக்கான வாழ்வின் வலியும் பொங்கும் மனிதமும் ஒன்று கலந்த
சிறுகதை .அடடா ! எப்படி இந்தக் கதை அவருக்கு கிடைத்தது என ஒரு கட்டுரையே எழுத வேண்டும்
போலிருக்கிறது .
தான் கடுமையாக வேலை செய்து எழுப்பிய கட்டிடத்தில் இன்று பெரிய பேக்டரி
ஆயிரகணக்கில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என பெருமிதம் பொங்க தன் மனைவி மல்லிகாவுக்கு
சொல்லி ,அதைக் காட்ட ஆசையோடு அழைத்துப் போகிறான் கட்டிடத்தொழிலாளி செல்வமணி .அங்கு
ஆலை மூடப்பட்டு சிதிலமடைந்து கிடக்கிறது . “ இங்க வேல செஞ்ச அத்தன பேரு கதியும் என்னாச்சோ..”
உருகும் செல்வமணி . இக்கதை இன்னொரு உயரத்தைத் தொடுகிறது .
அரசு அலுவலகங்களில் நடக்கும் கூத்தை பகடி செய்யும் “தென்னைக்
கூத்து “ படித்து சிரித்தேன் .மெய் .மெய்யைத் தவிர வேறில்லை . மேலதிகாரிகளை
குளிர்விக்க செய்யும் காமெடிகள் நிறைய உண்டு . இளநீராக வாங்கி குவிக்க ; வந்த அதிகாரி சர்க்கரை இல்லாத காபி
கேட்பதாக முடிகிறது . இங்கு ஒரு நல்ல சம்பவம் நினைவுக்கு வந்தது . [ நூலறிமுகத்துக்கு
தேவை இல்லை .ஆயின் தெரிய வேண்டிய செய்தி என்பதால் பதிகிறேன்.]
என் தோழர் சோமங்கலம் கிராமசேவக் சு.செல்வரங்கன் [ தமுஎச சென்னை செங்கை செயற்குழு
உறுப்பினராக இருந்த சுப.செல்வம்தான்] சொன்னது . அவசரகாலம் . சென்னை அருகே குன்றத்தூரை
அடுத்த சோமங்கலம் கிராமத்தில் மாதிரி கிராம திட்டத்தை துவக்கி வைக்க பிரதமர் இந்திராகாந்தி
வருகை தந்தார் .ஏற்பாடுகளின் கெடுபிடி அவசரகாலத்தில் கேட்கவா வேண்டும் .விமானநிலையத்தில்
இருந்து ஹெலிகாப்டரில் சோமங்கலம் அங்கிருந்து விமான நிலையம் என ஏற்பாடு .
அதிகபட்சம் ஒரு மணிநேர நிகழ்வு. தாசில்தார் தலைமையில் ஒரு குழு
.இளநீர் ,பழங்கள் , காபி ,டீ ,பிஸ்கட் ,பிரட் எல்லாம் ரெடி .கடுமையான சோதனை . இந்திரா
காந்தி வந்தார் .மேடை பரபரப்பானது .மேடையில் உட்கார்ந்ததில் இருந்து அவர் பதட்டமாகி
நாலா பக்கமும் பார்க்கிறார் .கலெக்டர் ,அதிகாரிகள் திணறல் .
ஒரு கிராமத்துப் பெண் அவசரமாக மேடையேற அதிகாரிகள் தடுக்க ,இந்திரா
தலையிட அந்தப் பெண் அருகே போகிறாள் . இருவரும்
பேசுகின்றனர் . இந்திரா அந்தப் பெண்ணோடு இறங்கி போகிறாள் . அதிகாரிகள் ,பாதுக்காப்பு
படை எல்லோரும் பீதியடைந்தனர் .யாரையும் கூட வரக்கூடாது என இந்திரா தடுத்துவிட்டார்.
அந்தப் பெண்ணின் குடிசைக்குப் போய் ஓலை மறைப்பில் அவசர அழைப்பை நிறைவேற்றிவிட்டு
, அந்த பெண் கொடுத்த தண்ணீரையும் குடித்துவிட்டு
வந்தார் .
அன்று பேசிய போது இந்திரா சொன்னார் ,” அந்தப் பெண்ணுக்கு இந்தி
,இங்கிலீஸ் தெரியாது .எனக்குத் தமிழ் தெரியாது .ஆனால் ஒரு பெண்ணின் உணர்வை இன்னொரு பெண்ணால் உணர முடியும்.மொழி
தடை அல்ல .ஆண்களுக்கு பெண்ணின் வலி தெரியாது . இந்த ‘மாதிரி கிராமம்’கூட ஆண்களின் மாதிரி
கிராமம்தான் . பெண்களின் கோணத்தில் அவர்களிடம் பேசி தேவைகளைக் கேட்டறிந்து திருத்துங்கள்
பெண்களின் மாதிரி கிராமமாய்’.”என்றார். இன்றும் அசை போட வேண்டிய செய்தி அது .
” நியாயப் பிஞ்சு” எனும் கதை குழந்தைகளின் மாசற்ற உள்ளத்தின் பிழிவு.
காகங்களை நேசிக்கும் அருணா , தான் கண்டெடுத்த
கோழிக்குஞ்சை சாப்பிட்டு விட்டதால் காக்கைகளிடம்
டூ விட்டுவிட்டு நாய்க்கு சோறு வைக்கும்போது கள்ளங்கபட மற்ற அன்பு சிரிக்கிறது .
“ஆற்றுப்படை ” கதையை படித்த பின் “ அஞ்சு ரூபாய் குடுக்கிறீங்களாண்ணா ? குதிச்சுக்
காட்டுறேன்..” என ஒரு சிறுவன் குரல் தூங்க விடாமல் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
.ஒகனேக்கல் அருவியில் நாற்பதடி பாறை மீது நின்று எண்பதடி ஆழ அருவிக்குள் குதிக்கும்
சிறுவர்களின் வலிமிகுந்த வாழ்க்கைப் பாட்டினை நூறடி பறையிலிருந்து குதித்து செத்துப்போன
சிறுவனை .. மீண்டு குதிக்க பாறை ஏறும் அவன் தம்பியை எழுதும் போதே வார்த்தை எனக்கு தடுமாறுகிறது .
குதிரை வண்டிக்காரனின் மானுட பாசத்தை பேசும் “பரிமாற்றம்” , அமைப்புகளை உருவாக்க முன்நின்றோர்
உதாசீனப் படுத்தப்படுவதை பேசும்.“தேன்கூடு”
,முதுமையின் வலியையும் சுயமரியாதையையும் பேசும் “நெல்லுக்கு இறைத்த நீர்”, நொடியும் நடுத்தர
வர்க்க வாழ்வைப் பேசும் “ மறுகோணம்” “ நறும்புனல்”, விளைநிலம் ரியல் எஸ்டேட் ஆவதை
சுற்றி பின்னப்பட்ட “உழுதுண்டு வாழ்வாரே”,
“புலம்” , புகுந்த வீட்டின் கொடுமையைப்
பேசிய “நீர் நீதி”, டிவி வருகையால் தன்
பேரனோடு கதைக்கும் இனிய பொழுதைத் தொலைத்த பாட்டியின் மனப்போராட்டத்தை சொல்லும் “வதம்”, நாட்டு விடுதலைக்காக வேரில் நீர்
பாய்ச்சியவரின் சொல்லப்படாத கதையைச் சொல்லும் “மறைமுகம்” தன்னலம் பாராது பொதுப்பணியில் அர்ப்பணிப்போர் வாழ்வின் இறுதியில்
மனம்வெதும்பும் காட்சியைப் பார்த்திருக்கிறோம் . அது சார்ந்து அமைப்புகளை உருவாக்க
முன்நின்றோர் உதாசீனப் படுத்தப்படுவதை பேசும்.“தேன்கூடு”
; இப்படி நூல் முழுவதும் மனதில் நிறைகிறது .
தேர்ந்த படைப்பாளி கமலாலயன் அணிந்துரையில் நன்கு திறானாய்வு செய்துள்ளார்
; நான் அதற்கும் மேல் என்ன சொல்ல.
மொத்தம் 15 கதைகள் . எந்தக் கதையும் சிக்கல் சிடுக்கில்லாதவை ,எளிமையானவை
ஒவ்வொன்றிலும் வாசமாய் நிறைந்திருக்கும் சகமனிதனின்
நேசம் . பழ.பாலசுந்தரம் தொடர்ந்து சிறுகதை நாவல் என பயணிக்க வாழ்த்துகள் .
காவேரி ஓரம் , [ சிறுகதைகள்] ,ஆசிரியர் : பழ. பாலசுந்தரம் ,
வெளியீடு
: மலர் புக்ஸ் , தொடர்புக்கு : 9382853646 / 8825767500
பக்கங்கள்
: 116 , விலை : ரூ.130/
சு.பொ.அகத்தியலிங்கம்.
14/12/2023
0 comments :
Post a Comment