உரைச் சித்திரம்- 5
ஏழு சுவரங்கள் பதினான்கு இசைக்கருவிகளுடன் அற்புத
ஆட்டம்…
திருவாலங்காடு . திரு ஆலங்காடு என்பதே மருவி திருவாலங்காடு ஆனது .
ஆலமரங்கள் மிகுந்த அடர் வனத்தில் ஊர்ந்தும் உருண்டும் மெய்வருத்தி சிவனைத் தரிசிக்க காரைக்கால் அம்மையார் சொல்கிறார்,
“ நான் ஏன் இவ்வளவு உடல் வருத்தி அந்த சிவனைச் சந்திக்கச் செல்கிறேன் தெரியுமா ?”
பதிலும் அவரே சொல்கிறார் ,
துத்தம் ,கைக்கிள்ளை ,விளரி ,தாரம் , உழை ,இளி ,ஓசை என ஏழு சுவரங்களில் சிவன் அழகாகப் பாடுவானாம் . அதுமட்டுமா ?
பண்ணோடு பாடலும் பாடுவான் . சும்மாவா ?
சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணி, துந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை என பதினான்கு இசைக் கருவிகளை வாசித்து நன்கு இசையோடு பாடி நடனம் ஆடுவானாம்.
இப்படி ஒரு அற்புத இசைக் கச்சேரியை நடனத்தைக்
காண கேட்க எவ்வளவு சிரமப்பட்டும் ஊர்ந்தும்
உருண்டும் செல்லலாம்தானே !
திருவாலங்காடு மூத்த திருப்பதிகத்தில் காரைக்கால் அம்மையார் பாடலில் காட்சிப்படுத்தியதையே மேலே விவரித்தேன்.
இது பக்தி இலக்கியமே . ஆயினும் தமிழ் இசை மரபை ,இசைக் கருவிகளின் செழுமையைப் பட்டியலிட்டிருக்கிறார் . இதன் மூலம் ஓர் செய்தியையும் சொல்லியிருக்கிறார் சைவப் பழம் காரைக்கால்
அம்மையார் .ஆம் . தமிழ் பண்பாடு எதற்கும் சளைத்ததல்ல ;மாறாக
மூத்தது .செழித்தது என முழக்கி இருக்கிறார்
சிவனுக்கு தமிழ் தெரியாது என தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திமிராக தமிழை இழிவு செய்யும் யோகி ஜக்கி வசுதேவ் போன்றவர்களின் நெற்றிப் பொட்டில் அறைந்து பதில் சொல்லுகிறது அல்லவா இப்பாடல்?
அது போகட்டும் .இன்னொரு வர்ண்னையைப் பார்ப்போம் !
நாடு செழிக்க மழை பொழிய வேண்டும் .மழை பொழியும் போது வானம் இருண்டிருக்கும் . அப்போது பெருத்த அதிர்வுகளோடு இடி முழக்கும் .
அதுபோல் இடியென முழங்கும் “முழவு”,”ஆகுளி” .இவை இரண்டுமே உறுதியான வாரால் கட்டப்பட்ட தோல் இசைக் கருவிகள் !
நுட்பமாக உருக்கி தகடாகத் தட்டின ‘பாண்டில்’ மற்றும்
மின்னும் நீண்ட,பீலியை அழகான தழையாகக் கட்டிய ‘கோட்டு’போன்ற நுட்பமான இசைகருவிகள்,
யானையின் பெரும்மூச்சினைப் போல ஓசை எழுப்பும் ‘உயிர்த்தூம்பு’,
இளி என்னும் நரம்பின் இசையை ஒலிக்கும் குறுவடிவான மேலான ‘குறும்பரந்தூம்பு’,
பாட்டோடு உடன்பட்டு இசைக்கும் இனிய ‘குழல்’,
நடுவில் நின்று இசைக்கும் மெல்லிய ஒலி உடைய ‘தட்டை’,
அனைவரும் விரும்பும் கூர்மையாக ஒலி எழுப்பும் வலிமையான வாயுடைய ‘எல்லரி’,
அழகாக இசைக்கும் ‘பதலை’,
இவற்றையும் இவை போன்ற இன்ன பிற இசைக் கருவிகளையும் கனிந்த பலாப் பழத்தை மகிழ்வோடு தோளில் சுமப்பது போல் சுமந்து சென்றனர் பாணர்கள் என்கிறது மலைபடுகடாம் எனும்
சங்க இலக்கியம்.
கேடகவே முறுக்கேறுகிறது . இசை என்பது முத்தமிழில் ஒன்று . இசை தமிழ் வற்றா அருஞ்சுனை .
இங்கேதான் இந்த வளமான பெருமைமிகு பாரம்பரியத்தை மறுத்து -திட்டமிட்டு நாட்டுபுற இசையை ,வளமான தமிழ் இசையைப் புறக்கணித்து- கர்நாடக சங்கீதத்தைத் தூக்கிப் பிடித்து - தமிழில் இசை என்றாலே கர்நாடக இசை ,நாட்டியம் என்றாலே பரதநாட்டியம் என ஓர் பொய்மையை கட்டமைத்திருக்கிறார்கள் .
தமிழின் இசைப்பாரம்பரியமும் , நாட்டியப் பாரம்பரியமும் மிக உயர்ந்தது .சங்க இலக்கியங்கள் குறிப்பாக பரிபாடல் ,மலைபடுகடாம் ,நற்றிணை ,அகநானூறு ,புறநானூறு
உள்ளிட்டவை உரக்கப் பேசும் .தேவாரம் ,பன்னிரு திருமுறை ,சிலம்பு மற்றும் காப்பியங்கள் தமிழ் இசை மரபை விரிவாக பதிவு செய்திருக்கிறது .
பழந்தமிழர் உருவாக்கிய தாளக் கருவிகள் ஏராளம். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார். இவர் பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்த சில தாளக் கருவிகளை நூற்பா ஒன்றில் தருகிறார். நூற்பா சொல்வதைப் பார்ப்போம்.
“பேரிகை படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசு கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
ஆசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறை.”
இப்பாடலுக்கு
பொழிப்புரை பதவுரை தேவை இல்லை . வெறும் பட்டியல்தான் .ஆயின் நம் இசைப்
பாரம்பரியத்தின் பெருமிதம்.
பட்டியல் முடிவற்றது .
ஆர்வமுள்ளோர் தேடித்தேடி வாசிப்பீர் ! வாசகருக்கும் சொல்வீர் !
நான் இசைப் புலவனோ ஞானியோ அல்ல .இது குறித்து பல ஆய்வுகள் வந்துள்ளன . ஆங்காங்கு நுனிப்புல் மேய்ந்து கொறித்ததில் ஒன்றிரண்டை இங்கே சொன்னேன்
அவ்வளவுதான் .
ஒரு பெருத்த சந்தேகம் , தமிழர் இசைக்கருவிகள் பட்டியலில் “ ஜால்ரா” இடம் பெற்று
இருந்ததா ?
"துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணி துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்து
அத்தனை விரைவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திருஆலங்காடே"
- (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்: 9)
“திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர் “
[ மலைபடு கடாம்]
சு.பொ.அகத்தியலிங்கம்
. 4/4/2022.
0 comments :
Post a Comment