உரைச் சித்திரம் : 6

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 6

 



எதைத் தொட்டாலும்

இயற்கையைத் தொடாமல் பாடமாட்டார் … …. ….

 

 

கடற்கரை எனில் எவ்வளவோ இருக்கும் . ஒவ்வொன்றையும் உற்று நோக்கி ரசித்து வியந்து வாழ வேண்டும் . இயற்கையின் அற்புதங்கள் தோண்டத் தோண்ட சுவைக்கும் .

 

அதோ பாருங்கள் அந்தக் கடற்கரையில் !

 

ஒரு பெண் ஆமை ஊர்ந்து நகர்ந்து செல்கிறது . அதுவும் நிறைமாதக் கர்ப்பமான பெண் ஆமை . இப்போதோ சிறிது நேரத்திலோ முட்டை இட்டுவிடும் .

 

கடல் மண்ணில் படர்ந்திருக்கும் அடும்புக் கெடியை சிதைத்து – மணலைத் தோண்டி குழியாக்கி – அதில் முட்டையிட்டு பின் மணலால் மூடி அவ்விடத்தை மேடாக்கிவிடும் அந்த பெண் ஆமை . எப்படித் தெரியுமா ?

 

கோடு  வட்டு விளையாட்டு ; அதாவது கோலிக்குண்டை குழியில் வீழ்த்தும் விளையாட்டு .அதுபோல் தான் தோண்டிய குழியில் முட்டையிட்டு மூடிவிடும் அந்த பெண் ஆமை . அந்த முட்டை வளைந்த யானைத் தந்தம் போன்று வெண்மையாக இருக்கும் .  புலால் நாற்றம் மிக்கதாய் இருக்கும்.

 

முட்டையிட்டுவிட்டு பெண் ஆமை நகர்ந்து போய்விடும் .அதன் பின் அதன் இணையான பிளந்த வாயை உடைய ஆண் ஆமை வந்து அந்த முட்டையை அடை காத்து நிற்கும் . எதுவரை தெரியுமா ?

 

முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும் வரை காத்து நிற்கும் .

 

ஆக ,ஆமைகள் கூட முட்டை இடுவதிலும் குஞ்சு பொரிப்பதிலும் ஆணும் பெண்ணும் சமபங்கு வகிக்கும் அறம் வியக்கவைக்கிறது .

 

இயற்கையின் இந்த அற்புதத்தை விவரித்துவிட்டு ; அதைத் தொட்டு மேலே செல்கிறார் நம் புலவர்.

 

இப்படிப்பட்ட ஆமைகள் மிகுந்துள்ள கடற்கரைச் சோலையை தன் வலிமையான குதிரை பூட்டிய தேரில் கடந்து வருகிறான் நம் கவிதை நாயகன் . எப்படி வருகிறான் தெரியுமா ?

 

முன்பு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகய் கள்ளத்தனாக வந்து போனவன் ; இன்று ஊரெல்லாம் அறிந்து கொள்ளும்படி மிடுக்காய் வருகிறானாம்.

 

அன்று தனியே வந்தவன்,இப்போது தோழர்களோடு வருகிறானாம். அவர்கள் அந்த ஊர்ப்பெண்களெல்லாம் வேடிக்கை பார்க்கும் படி ஆரவாரமாய் கூக்குரலிட்டபடி வருகிறார்களாம் .

 

அன்று குதிரை வேகமாய் ஓடாமல் மெதுவாய் தேரை ஓட்டிக்கொண்டு வந்தவன். இன்று குதிரை  கம்பீரமாய் சடக் சடக்கென பாய்ந்து வரும்படி ஓட்டிக்கொண்டு வருகிறானாம்.

 

இதனைக் கண்டு அஞ்சுகிறாயா தோழி ! அஞ்சாதே ! ஊரறிய மணம் முடிக்கவே வருகிறான் எனத் தோழி சமாதானம் செய்தாளம் .

 

கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் அமைந்த குமுழிஞாழல்  ஊரில் வாழந்த நப்பசலையார் எனும் பெண்பாற் புலவர் இவ்வாறு பாடி இருக்கிறார் . அகநானூற்றில் இப்பாடல் இடம் பெற்றிருக்கிறது .

 

காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை எனப்படும் . அந்நிலம் பொதுவாய் மேடு பள்ளம் மிகுந்ததாய்க் காணப்படும் .

 

தேர்க் குதிரைகளை தாட்டுக் குச்சியால் முடுக்கினால் அம்பு போல் வேகமெடுக்கும் மிகுந்த ஓசை எழும் ஆகவே அப்படிச் செய்யாமல் கடிவாளத்தைப் பதமாகப் பிடித்து ஓசை படாமல் நைசாக வருவானாம் .

 

இப்படி இரவில் வரும் அவனது கூரிய தேர்ச் சக்கரத்தில் சிக்கிய அடும்புக் கொடி பாம்பு படம் எடுப்பது போல் உயருமாம் ; படம் எடுத்த பாம்பின் உச்சியில் நெய்தல் மலர் சூடியது போல் அக்காட்சி இருக்குமாம் .

 

 

மழை பொழிந்து ஓய்ந்திருக்கிறது .மழை நீர் பள்ளங்கள் தோறும் தேங்கி இருக்கிறது .

பல இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் இசைப்பதுபோல் வாயைப் பிளந்து தவளைகள் தேங்கிய நீரில் குதித்தபடி உற்சாகமாய் இரைகின்றன .

 

சிறிய புதர்கள் நிறைந்திருக்கிறது .அப்புதர்களில் பிடவம் பூக்கள் நீண்ட காம்புகளுடன் பூத்து செந்நிலப் பரப்பில் வெண்மணல் போலக் கொட்டிக் கிடக்கின்றன.

 

 

வழி நெடுக நச்சுப்பை விரித்தபடி நிற்கும் நாகப் பாம்பு போல கோடல் மலர்கள் இதழ்களை விரித்திருக்கின்றன.

 

 

வளைந்த கொம்புகளை உடைய இரலை மான்  அங்கே தேங்கி இருக்கும் நீரை - தெளிந்த நீரைப் பருகிவிட்டு தான் விரும்பும் பெண் துணையோடு மகிழ்ந்து குலாவுகிறது.

 

 

தேரை ஓட்டிச் செல்பவனே ! இப்படி அழகும் அமைதியும் பூத்துக் குலுங்கும்  குளுமை மிகுந்த காட்டின் வழியே உன் தேரை ஓட்டிச் செல்வாயாக !

 

 

தேரை இழுத்துகொண்டு ஓடும் குதிரை களைப்படைந்துவிடாமல் இருக்குமாறு பார்த்து பக்குவமாய்த் தேரை ஓட்டிச் செல்வாயாக !

 

பிடரி மயிர் கொய்யப்பட்டுவிட்ட குதிரை . அதனை லாவகமாக ஓட்டு ! கழுத்து மணியோசை ஊரை எழுப்பிவிடாதபடி ஓட்டு !

 

 

என் மீது காதல் கொண்ட பெண்ணை – அழகிய மாநிறம் கொண்ட பருவ மங்கையை – விரைந்து நான் காதல் பொங்க தழுவ வேண்டும் !

 

 

என் ஆசை அறிந்து தேரினை ஓட்டிச் செல்வாயாக !

 

 

போர் முடிந்து ஊர் திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனுக்கு சொல்லுவதாய் இப்பாடலை எழுதி இருக்கிறார் பொதும்பிற் புல்லாளங் கண்ணியார் எனும் பெண்பாற் புலவர் .

 

 

அகநானூறு காட்டும் இவ்விரண்டு காதல் காட்சியிலும் செய்தி என்னவோ மிகச் சிறியதுதான் .ஆனால் ,அதைச் சொல்லுவதற்கு முன் இயற்கையை வியந்துரைக்கும் பாங்கு அற்புதம் .அற்புதம் .

 

 

சங்க இலக்கியம் நெடுகிலும் வீரத்தை பாடினாலும் , காதலைப் பாடினாலும் , துயரத்தைப் பாடினாலும் ,அறிவுரை சொல்லப் பாடினாலும் வாழ்க்கையோடு இயைந்த எதைப்பாடினாலும் அது இயற்கையோடு இயைந்திருக்கும் .

 

 

இயற்கையைத் தொடாமல் எதையும் பாடவே தெரியாது சங்கப் புலவனுக்கு . அப்படி இயற்கையோடி இயைந்து வாழ்ந்தவர் தமிழர் எனில் நமக்கு சொல்லவே இனிக்கும் தானே ! வேறெந்த மொழியிலும் இந்த அளவு இயற்கையோடு ஒன்றிய இலக்கியம் இல்லை என்கின்றனர் ஆய்ந்தறிந்த பெருமக்கள்.

 

 

மாதிரிக்கு இரண்டை இங்கே காட்சிப் படுத்தினேன். இரண்டும் பெண்பாற் புலவர் பாடியது என்பது சிறப்புச் செய்தி.

 

 

இன்னும் பலதை பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது பார்க்கலாம்.

 

 

“ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?

நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.

 

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த     5

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:

 

 

முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல

வாவு உடைமையின் வள்பின் காட்டி,   10

ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி

 

 

செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி

நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,

பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,

இர வந்தன்றால் திண் தேர்; கரவாது    15

 

 

ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்

அரவச் சீறூர் காண,

பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.”

 

 [ அகநானூறு : 160 ]

 

 

 

“படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,

 

வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;

 

ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.”

 

அகநானூறு : 154

 

எதைப்பாடினாலும் அது இயற்கையோடு இயைந்து பாடுக !

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

9/4/2022.

0 comments :

Post a Comment