இடி முழக்கமாய் எழும் இளைஞர்களுக்கு

Posted by அகத்தீ Labels:

 

இடி முழக்கமாய் எழும் இளைஞர்களுக்கு

தோழமை ஆதரவாய் உரக்கப் பேசுவீர் !

 

 


வேலை கேட்பவர்களாக அல்ல கொடுப்பவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் என்கிறார் ஆளுநரி ரவி .

 

இளைஞர்கள் மீது ஏன் இவருக்கு திடீர் அக்கறை ?எப்போதும் இல்லாத அக்கறை . நீட் நீக்கத்தில் இல்லாத அக்கறை , தமிழ்நாட்டில் வாழ்வோருக்கே தமிழ்நாட்டில் வேலையில் முன்னுரிமை என்கிற சட்ட முன்வரைவில் கையெழுத்துப் போடாத அக்கறை….????

 

வேலையின்மை விஷச் சூறாவளியாய் இளைஞர்கள் கனவுகளைப் பிய்த்து எறிந்து கொண்டிருக்கிறது . இரண்டு கோடிப் பேருக்கு வேலைதருவதாய் சொன்ன மோடி ஏமாற்றிவிட்டார் . வீட்டுக்கு இரண்டு பேர் வேலையின்றி தவிக்கும் பேரவலம்.

 

சிறுதொழிலும் சில்லறை வியாபாரமும்தான் நிறைய பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தது .மோடியின் சீரழிந்த கொள்கைகளால் அவை நசிந்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன .

 

ஒன்றிய அரசு - கார்ப்பரேட் களவாணி கூட்டுசதியால் வேலைவாய்ப்பின் ஊற்றுக்கண் தூர்க்கப்படுகிறது .

 

வேலையில்லா இளைஞர்களைத் தூண்டிவிட்டு சாதி மத கலவரத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்து குளிர்காய மோடி அரசும் மதவெறி சக்திகளும் திட்டமிடுகிறது.

 

வேலைதர வக்கில்லை என ஒப்புக் கொள்ளும் நேர்மையின்றி நீங்களே வேலைகொடுப்பவராக மாறுங்கள் என நரி ஊளையிடுவது செய்தியை திசை திருப்பவே !

 

நாளை தமிழ்நாட்டின் நான்கு முனைகளில் இருந்து புறப்பட்டு 3000 கி.மீ பயணித்து 11 வது நாள் மே 1 அன்று திருச்சியை அடையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க சைக்கிள் பேரணிக்கு முன்னாள் வாலிபர் சங்க ஊழியன் என்கிற முறையில் இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்பான தோழர்களே ! நண்பர்களே ! ஊடகங்கள் இதை எல்லாம் பரபரப்பு செய்தி ஆக்காது ; தலைப்புச் செய்தி ஆக்காது ; ஆடு அண்ணாமலை கக்கும் நச்சுப் பொய்களையே மாவரைத்துக் கொண்டிருக்கும் !!

 

ஆகவே ! முகநூலில்,டுவிட்டரில் , வாட்ஸ் அப்பில் ,யூ டியூப்பில் , டெலிகிராமில் , இன்ஸ்டாகிராமில் இன்ன பிற சமூக ஊடகங்களில் செயல்படும் ,தலைநீட்டும் ,முகங்காட்டும் நண்பர்களே ! தோழர்களே !நான் அன்போடு வேண்டுகிறேன். அருள்கூர்ந்து செவிமடுங்கள் ! செய்யுங்கள் !   

“ ஆம் .. ஆம்…வாலிபர் சங்க சைக்கிள் பேரணிச் செய்தியை சுமப்பதே அடுத்த பன்னீரெண்டு நாட்களும் உங்கள் பணியாகட்டும் !கடமையாகட்டும் !”

 

எல்லா மதம் சார்ந்தவர்களுக்கும்

அனைத்து சாதியினருக்கும்

எந்த மொழி பேசுபவராயினும்

எந்த பாலினமாக இருப்பினும்

எந்தக் கட்சியை அமைப்பைச் சார்ந்தவராயினும்

எதிலும் சம்மந்தப்படாமல் ஒதுங்கி நின்று புலம்புவோராயினும்

அனைவருக்கும் வேலைவாய்ப்பின் வாசல் திறக்கப்பட வேண்டும்

இடி முழக்கமாய் எழட்டும் நம் குரல் !

இந்தியாவின் விடியலுக்கு இந்த முழக்கமே சங்கொலியாகட்டும் !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

20/4/2022.

 

குறிப்பு :

 

DYFI Tamil Nadu

@DyfiTamilNadu  · Political Organization முகநூல் தளத்தில் நிறைய சுவரொட்டிகள் /வீடியோக்கள் இருக்கின்றன . உடனே அவற்றைப் பகிர்ந்து இப்போதே உங்கள் தோழமை ஆதரவைத் தொடங்கலாமே !

 

0 comments :

Post a Comment