அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ?

Posted by அகத்தீ Labels:

 

அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ?

 


அதுவரை அவை அனைத்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தன .வாத்துகளும் மற்ற சிறு பறவைகளும் நதி நீரில் நீந்தி விளையாடி வயிறு நிறைய உண்டு வசித்தன . விரைவில் வரப்போகும் துன்பத்தைப் பற்றி பெரிய பறவைகளுக்குத் தெரியும் .சீக்கிரமே குளிர் காலம் வந்துவிடும் ; குளிரின் தீவிரத்தால் நதி நீர் முழுவதும் உறைந்து பனிக்கட்டியாகிவிடும் ;உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் வெகுதொலைவுக்குப் பறந்து செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவற்றிற்கு அழுத்தமாய் நினைவிருக்கிறது.”

 

 “ ஒரு விதத்தில் அது சாகசப் பயணம்தான் .நதியிலிருந்து நீண்ட நெடுந்தூரத்தில் மிதமான குளிர் நிலவும் இடம் ஒன்று இருக்கிறது . எல்லா பறவைகளும் கூட்டமாக அங்குதான் பறந்து செல்ல வேண்டும் . அந்தப் பயணத்தின் முக்கியத்துவம் புதிய தலைமுறைப் பறவைகளுக்குத் தெரியாது .ஆனால் பெரிய பறவைகள் மவுனமாக இருந்தன . மகிழ்ச்சியாக இருப்பது போன்று காட்டிக்கொண்டன .சவால்கள் நிறைந்த ஆபத்தான பயணத்தைப் பற்றிச் சொல்லி சிறிய பறவைகளுக்கு அச்சமூட்ட வேண்டாம் என்று அவை நினைத்திருக்க வேண்டும்.”

 

“ சில பறவைகளுக்கு அந்த நெடும்பயணம் அவ்வளவு கஷ்டமாக இருக்காது .வலிமை வாய்ந்த சிறகுகளை வீசி  எவ்வளவு நேரம் வேண்டுமானலும் அவற்றால் சோர்வின்றி பறக்க முடியும் .ஆனால் பலவீனமானப் பறவைகளால் அப்படிச் செய்ய முடியாது . தாள முடியாத வலியில் சிறகுகளும் உடலும் துவண்டு போய் பல பறவைகள் பாதியிலேயே செத்துவிழும் . சிறு பறவைகளைத் தின்னக் காத்திருக்கும் கொடூரமான பெரிய பறவைகளும் உண்டு . அவை கூட்டமாக வந்து சிறிய பறவைகளைக் கொத்திக்கொண்டு போய்விடும். வயதான பறவைகள் ,குஞ்சுப் பறவைகள் , நோயாளிப் பறவைகள் ஆகியவற்றின் நிலைதான் மிகவும் கஷ்டம். குறித்த இடத்திற்கு சென்றுவிடுவோம்  என்ற எந்த உறுதியும் இல்லாமல்தான் அவை பயணைத்தைத் தொடங்கும் .பறந்து பறந்து களைப்படையும் பறவைக்கு எந்தப் பறவையாலும் உதவி செய்ய முடியாது . களைப்படைந்த பறவை கீழே விழுவதைப் பார்த்துக்கொண்டே பறப்பதைத் தவிர வேறு வழியில்லை . பயணத்தின் போது ஓய்வெடுக்கவோ வந்த வழி திரும்பிச் செல்லவோ அனுமதி இல்லை .எந்தப் பறவையாவது அப்படிச் செய்ய முற்பட்டால் மற்ற பறவைகள் அதைக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட்டு சென்றுவிடும். ஒதுக்கப்பட்ட அந்தப் பறவை தனியாகப் பயணத்தைத் தொடர்வது என்பது பேராபத்தான காரியமாகும்.”

 

“ அழகான அம்மா” என்கிற தலைப்பில் தமிழில் மொழியாக்கம் செய்து ஐம்பது ரஷ்ய சிறார் கதைகளை யூமாவாசுகி தொகுத்திருக்கிறார் . நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு . 352 பக்கங்கள் .ரூ.290 /விலை .

 

இந்நூலில் “ சிற்கொடிந்த வாத்துக் குஞ்சு” என்கிற திமித்ரி மாமின் சிபிரியாக் எழுதிய கதையின் முதல் மூன்று பத்திகளையே இங்கு தொகுத்துத் தந்துள்ளேன் .

 

அந்த வரிகள் சிறாருக்கு மட்டுமா ? இல்லை .இல்லை . இன்றைய இந்தியாவின் அரசியல் சவாலுக்கும் உருவகமாய்ப் பொருந்திப் போகின்றதே !

 

சு.பொ.அகத்தியலிங்கம். 16/4/2022.

0 comments :

Post a Comment