ஆவணங்களைத் தேடி….
நான் என் கட்சி
அரசியல் வாழ்வில் நினைவுகளை அசைபோட்டு பதிவுகள்
சிலவற்றைப் போட்டேன் . அதனையொட்டி தோழர்கள்
சிலர் அப்போதைய புகைப்படங்களை சேர்த்து பதிவிடலாமே என கருத்து தெரிவித்தனர் .
முதலாவதாக அன்றைய
காலகட்டத்தில் அலைபேசி கிடையாது ,ஷெல்பி கலாச்சாரத்துக்கு வாய்ப்பே இல்லை . ஒரு ஆர்ப்பாட்டத்தை
புகைப்படம் எடுத்து தீக்கதிருக்கு அனுப்புவது என்றாலே பணம் தேவைப்படும் காலம் எனவே
அக்காலத்தில் படங்கள் குறைவு .
இரண்டாவதாக , தங்களை
முன்னிலைப் படுத்துவதை பெரிதாக விரும்பாத காலம் அது . நான் பொதுவாக புகைப்படங்களில்
ஆர்வம் காட்டியதில்லை . புகைப்பட சேகரிப்பும் என்னிடம் இல்லை .எனக்குத் தேவையும் இல்லை.
‘ஊரிலே கல்யாணம் மார்பிலே சந்தணம்’ என்பது போல எந்த
நிகழ்வாயினும் அதில் தாம் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படாவிட்டாலும் - அழைப்பிதழிலே
பெயர் இடம் பெறாமல் இருந்தாலும் , மேடையில் கூச்சப்படாமல் ஏறி உட்காருவோர் அப்போதும்
உண்டு . போட்டோக்களில் எங்கே நின்றால் உட்கார்ந்தால் தன் முகம் நன்கு பதிவாகும் என்கிற
கணக்கோடு நிற்போர் உண்டு . இப்போதும் அத்தகையோர் உண்டு .
மேடையில் யார்யாரை
எங்கெங்கு உடகாரவைப்பது என்பது நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பொறுத்தது . அதற்கென சில
ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியமும் கூட . ஆனால் சிலருக்கு அது பொருட்டே அல்ல .
அன்றும் இன்றும் இதனை நாகரீகமாக உணர்த்துவது எளிதாக இல்லை .
சிலருக்கு இயல்பாகவே
போட்டோ ஃபேஸ் இருக்கும் .அழகாகத் தெரிவர் . எவ்வளவு பெரிய கூட்டத்திலும் அவர் முகம்
பளிச்சிடும் .சிலரை எத்தனை போட்டோ எடுத்தாலும் உம்மென்றே இருப்பார் . சிரிப்பு மருந்துக்கும்
இருக்காது .
பொதுவாய் போட்டோ
கான்சியஸ் - போட்டோவின் மீதான கவனம் முன்னைவிட இப்போது அதிகரித்திருக்கிறது .சில வேளை
கொஞ்சம் அதீதமாகவும் போய்க் கொண்டிருக்கிறது .
ஆயிரம் சொன்னாலும்
புகைப்படங்கள் முக்கிய ஆவணம் என்பதை மறுப்பதற்கில்லை . ஆகவே புகைப்படங்களையும் ஆவணப்படுத்துவது
தேவையாகிறது .
நம்முடைய மூத்த
முன்னோடிகள் பலரை நாம் மறந்தே விட்டோம் . பெயரை நினைவுக்கு கொண்டு வருவதே மிகச் சிரமம்
. முகத்தை நினைவுக்கு கொண்டு வருவது இன்னும் சிரமம் .
தயவுசெய்து கட்சி
அலுவலகங்களில் புகைப்படங்களின் கீழ் பெயரை
குறிப்பிட்டு வையுங்கள் .இயன்றால் அவரைப் பற்றி மூன்றோ நான்கோ வரிகளில் சிறு குறிப்பும்
வைத்தால் நல்லது . புதிதாக வருவோர் அறிந்துகொள்ள ஏதுவாகும் .
நம் மாவட்ட சிபிஎம்
கட்சி அலுவலகங்கள் ,இதர அமைப்புகளின் அலுவலகங்களில் ஊரறிந்த தலைவர்களில் புகைப்படம்
இடம் பெறுகிறது மிக்க மகிழ்ச்சி .
ஆயின் , ஒவ்வொரு
மாவட்டத்திலும் நினைவு படுத்த வேண்டிய தோழர்கள் ,வேராய் இருந்த தோழர்கள் பலர் உண்டு
. அவரின் புகைப்படங்கள் உண்டா இல்லையே !
எடுத்துக்காட்டாக,
சென்னை மாவட்டக் குழு அலுவலகங்களின் சுவற்றில் தோழர்கள் கஜபதி , சி பி தாமோதரன் , கே
எம் ஹரிபட் , பி .ஜி .கே .கிருஷ்ணன் , எஸ்
கே சீனிவாசன் , மேயர் எஸ் கிருஷ்ணமூர்த்தி ,ருக்குமணி அம்மாள் , சாரி ,சர்க்கரைச்
செட்டியார் என நீளும் பட்டியலில் உள்ளோர் படங்கள் உண்டோ ?
இதை எழுதும் போது
என்னால் பல தோழர்களின் பெயரையும் முகத்தையும் நினைவுக்கு முழுதாய் கொண்டுவர முடியவில்லை
. சொல்ல வேண்டிய பட்டியல் இன்னும் நிறைய இருக்கிறது என்பதே உண்மை .
சென்னை [ அதாவது
இன்றைக்கு ஆறு மாவட்டங்கள்] வரலாறே எழுதப்படவில்லை
.யாருக்கும் அக்கறை இருப்பதாகவும் தெரியவில்லை .இந்த லட்சணத்தில் இந்தப் படங்களைப்
பற்றியா கவலைப்படப் போகிறார்கள் என தோழர்கள் சிலர் புலம்புவதும் காதில் விழுகிறது
. நாம் சங்கை ஊதிவைப்போம் … யாருக்காவது சரியெனத் தோன்றலாம் அல்லவா ?
இளைய தலைமுறையே
! நீங்கள் உங்கள் முன்னோடிகளைத் தேடித்தேடி உரிய இடம் அளிப்பீர் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஏனெனில் அது காலத்தின் தேவை அல்லவா ?
அதுபோல் நாட்டை
உலுக்கிய போராட்டங்களின் புகைப்படங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதுவும் வரலாற்றின்
ஓர் அங்கமே ! அதுமட்டுமா ? இப்போதெல்லாம் வீடியோக்களும் ஆவணமே ! ஆக ,இனி ஆவணக் காப்பு
என்பது பொருட் செலவும் தொழில்நுட்ப ஞானமும் கலந்ததே !
இடையில் ஒரு நினைவு
, திமுக தொழிற் சங்கமான தொமுச பேரவையின் வரலாறு நூலாக வந்துவிட்டது .சிஐடியு வரலாறு
எப்போது வரும் ?
பத்து ஆண்டுகளுக்கு
முன்பே உலக தொழிற்சங்க உதவியுடன் தமிழக தொழிற்சங்க போராட்ட வரலாறு தொகுக்கும் பணி நடைபெற்றது
.தோழர் சந்திரசேகரன் நாயர் அதில் பணியாற்றியதாக நினைவு .
ஆக ஆவணங்கள் இருக்கும்
. இந்திய மாணவர் சங்கத்தோடு தொடர்புடைய வரலாற்று மாணவர்களும் இருப்பர் . சிஐடியு வரலாற்றை
எழுதலாமே !
ஆவணங்களை சேகரிப்பீர்
! பாதுகாப்பீர் ! நிச்சயம் எதிர்காலம் நம் வரலாற்று வேரைத் தேடும் . தவிக்கவிட்டுவிடாதீர்கள்
!
என் எதிர்பார்ப்பும்
ஆசையும் நிறைவேறும் காலம் விரைவதாக !
சு.பொ.அகத்தியலிங்கம்.
5/4/2022.
.
0 comments :
Post a Comment