இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

Posted by அகத்தீ Labels:

 

இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

 

 

என் நினைவு அடுக்குகளில் எங்கே தடவினாலும் மறக்க முடியாத தோழர் ஒருவர் என்னோடு பேசத் தொடங்கிவிடுகிறார் .

 

ஆம் .இன்று என்னோடு  பேசியவர் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களில் ஒருவர் , இன்று ஆலமரமாய் ஓங்கி வளர்ந்திருக்கும் அச்சங்கத்தின் விதையும் வேருமாய் இருந்தவர் தோழர் பூ.நா.மூர்த்தி .

 

நான் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் அவரோடு பழகிய நாட்கள் மறக்க முடியாதவை .அப்போது சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியில் நான் செயல்பட்டேன் . வாலிபர் அமைப்பு எங்கும் பரவ வேண்டும் அதற்கு போக்குவரத்துத் தொழிலாளிகள் எந்த உதவியும் செய்யத் தயார் என சொன்னவர் .செய்தவர் .

 

அவர் உடல் நலிவுற்ற போது சந்திக்கும் என் போன்ற தோழர்களிடம் . “ வேளாவேளைக்கு சாப்பிடுங்கள் , உடல் நலத்தைப் பேணுங்கள் .நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது கட்சி ஆரோக்கியமாக இருப்பதற்கு மிக அவசியம்.” என வலியுறுத்துவார் .

 

அவரிடம் பழைய பிரசுரங்கள் ,ஆவணங்கள் எல்லாம் நிறைய உண்டு .அவர் மறைவுக்குப் பின் அவரது மருமகன் மூர்த்தி மூலம் பெரியமேடு தோழர் தண்டபாணி [அஞ்சல்துறை ஊழியர்] வழி பெரியமேடில் அமைக்கப்பட்ட தோழர் பி.ராமமூர்த்தி நூலகத்துக்கு வழங்கப்பட்டது . இப்போதும் அது இருக்கலாம்.

 

பொதுவாய் போக்குவரத்து தொழிலாளிகளுக்கோ ,மின் ஊழியர்களுக்கோ ,ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கோ தொடர்பு இல்லாத கிராமமோ நகரமோ இருக்கவே முடியாது . அவர்கள் நினைத்தால் எங்கும் நம் அமைப்பை விதைத்துவிட முடியும் . தோழர் ஏ.கே.கோபாலன் எழுதிய “ நான் என்றும் மக்கள் ஊழியன்” சுயவரலாற்று நூலில் இத்தகைய அனுபவத்தைப் பதிந்திருப்பார்.

 

சென்னையில் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் ஆரம்ப நாட்களில் பல போக்குவரத்து தொழிலாளர்களும் மின் ஊழியர்களும் தங்கள் தொடர்புகள் மூலம் புதிய இடங்களில் வாலிபர் முன்னணி கிளை துவக்க உதவியதை எண்ணிப் பார்க்கிறேன் .

 

வாலிபர் சங்கம் பரவ குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களும் ,மின்வாரிய ஊழியர்களும் என தோள் கொடுத்த அனுபவம் சொல்லச் சொல்ல விரியும்.

 

வாலிபர் சங்கம் தன் நிதித் தேவைக்கு உண்டி ஏந்தி சென்ற போதெல்லாம் இவர்கள் கொடுத்த அரவணைப்பு சொல்லில் அடங்கா . சம்பள தினத்தில் போக்குவரத்து டெப்போக்கள் ,மின்வாரிய அலுவலகங்கள் செல்வோம் . வாயிலில் நின்று உண்டி வசூல் செய்வோம் .உடன் நின்று நிதி வசூலுக்கு உதவுவதோடு டீயும் , உணவும் தந்து வழியனுப்பிய நிகழ்வுகள் அடடாவோ அடடா!

 

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் போக்குவரத்திலும் மின்வாரியத்திலும் மம்மது ,ரைமாண்ட் ,செல்வராஜ் ,அன்பழகன் ,சின்னத்துரை ,மதுரை ,முத்துசாமி இப்படி  ஏராளமான தோழர்கள் பெயரைக் குறிப்பிட ஆசை ஆயினும் எனக்கும் ஞாபக மறதி உண்டே , எனவே ஒருவரைக் குறிப்பிட்டு இன்னொருவரை குறிப்பிடாவிட்டால் பிழையாகிவிடுமே என் செய்ய ?

 

எடுத்துக்காட்டாய்ச் சொல்வதாயின் சென்னை வியாசர்பாடி ,பக்தவச்சலம் நகர் ,சாஸ்திரி நகர் சுற்றுவாட்டாரம் முழுவதும் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப உறுதுணையாக இருந்த தோழர்கள் லூர்து ,ராமு உள்ளிட்ட போக்குவரத்துத் தோழர்களைச் சொல்லலாம்.

 

தோழர் கேசவமூர்த்தியைச் சொல்லாமல் இருக்க முடியாது . போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் ஆகி பல வருடம் வழக்கு நடத்தி பணியில் சேர்ந்தவர் .கொஞ்சம் கரடு முரடாகப் பேசுவார் .கட்சி மீதான விசுவாசத்திலும் ஓடோடி உதவி செய்வதிலும் , போராட்டம் எனில் முன்நிற்பதிலும் சளைக்காத தோழர் கேசவமூர்த்தி. தோழர் புலவர் கஜேந்திரனோ இனிக்க இனிக்க பேசி அரவணைப்பவர் . திருவள்ளூர் மாவட்டத்தில் இவரால் வெங்கம் பகுதியில் கிடைத்த தொடர்புகள் குறிப்பிடத்தக்கது .

 

பட்டியல் பெரிது எனவே முழுவதும் சொல்லவில்லை.

 

அதேபோல் இந்தியன் ஆயில் டி எஸ் ரங்கராஜன் ,எல் ஐ சியில்  கே என் கோபாலகிருஷ்ணன் , ரிசர்வ் வங்கி உ.ரா.வரதராஜன் .முண்டன் என பல தோழர்கள் இளைஞர்களுக்கு கொடுத்த ஆக்கமும் ஊக்கமும் அளவில .

 

இன்றைக்கு அரசின் கண்ணும் காதும் மூக்கும் கிராமம் குக்கிராமம் வரை உண்டு என சொல்லுவார்கள் .அது உண்மையே .

 

ஆயின் போக்குவரத்தும் மின்சாரமும் கல்வியும் எங்கும் வியாபித்து இருக்குதே .நம் உழைக்கும் வர்க்கம் அரசியல் ஞானம் பெற்றால் – அரசியல் விழிப்பு பெற்றால் – அரசியல் அர்ப்பணிப்பு வரப்பெற்றால் நம்மைவிட வலைப்பின்னல் போன்ற வலு யாருக்கு கிடைக்கும் ?

 

ஆரம்பப்பள்ளி ,உயர்நிலைபள்ளி ஆசிரியர்களுக்கு சமூக விழிப்புணர்வும் வர்க்க அரசியல் விழிப்புணர்வும் உறுதியாகிவிட்டால் நாம் விரும்பிய மாற்றம் வெகுதொலைவில் இல்லை .

 

விடுதலை போராட்ட காலத்தில் இருந்தது . தமிழகத்தில் திராவிட அரசியலின் தோற்ற காலத்தில் இருந்தது ,கேரள மேற்குவங்க மாநிலங்களில் துவக்க கால இடதுசாரி அரசியலின் வேராய் இருந்தது .

 

இப்போது மதவெறிக்கு எதிரான போரில் மிக வலுவாய்த் தேவைப்படுகிறது .

 

இதைச் செய்யும் மந்திரவாதி யாரோ ?

 

உழைக்கும் வர்க்கத்தை அரசியல்படுத்துவதே ஆகும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

12/4/2022.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment