ஏப்ரல் : 23 - இன்று , “உலக புத்தக நாள்.”
புத்தகங்களின் பெருமையைப்
பேசிப்பேசி ஓய்வதற்கான நாளல்ல ; மாறாக புத்தகங்களை ஆயுதங்களாக்க வேண்டிய நாள் .
அந்த ஆயுதங்கள்
யார் கையில் ,யாரை நோக்கி என்பது மிகவும் அடிப்படையான கேள்வி .
v
உங்கள்
புத்தகம் மதம் பிடிக்கத் தூண்டுகிறதா ? மனிதனாக்க உந்துகிறதா ?
v
உங்கள்
புத்தகம் சாதி அழுக்கை சுமக்கிறதா ? சமத்துவத்தை பேசுகிறதா ?
v
உங்கள்
புத்தகம் சுயநலக் கூட்டுக்குள் அடைக்கிறதா ? பிறருக்காக கண்ணீரும் செந்நீரும் சிந்தச்
சொல்கிறதா ?
v
உங்கள்
புத்தகம் யார் சொன்னாலும் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பச் சொல்கிறதா ? கேள்வி கேட்கத்
தூண்டுகிறதா ?
v
உங்கள்
புத்தகம் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறதா ? பூபாளம் இசைத்துப் புரட்டிப் போடுகிறதா
?
v
உங்கள்
புத்தகம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டச் செய்கிறதா ? விசாலப்பார்வையால் மானுடசமுத்திரம்
நாமென கூவச் சொல்கிறதா ?
v
உங்கள்
மன நிம்மதிக்காகப் படிக்கிறீர்களா ? மனதைக் குடையும் கேள்விகளுக்கு விடைதேடிப் படிக்கிறீர்களா
?
v
உங்கள்
கண்ணெதிரே நடக்கும் அநீதிகளை நியாப்படுத்தப் படிக்கிறீர்களா ? அநீதிகளுக்கு எதிராய்
வெகுண்டெழப் படிக்கிறீர்களா ?
நீங்கள்
எவ்வளவு பக்கம் படித்தீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ ? அதைவிட கற்றபின் அதற்கொப்ப
நின்றீர்களா என்பதும் மிகமிக முக்கியம்.
நான் எல்லோரையும்
போல முதலில் ரசிகனாக – வாசகனாகவே இருந்தேன் .என் தொடர் வாசிப்பு என்னை வேறு தளத்துக்கு
கொண்டு சென்றது .நான் களப் போராளி ஆனேன் .
அதன் பின் என்
வாசிப்பும் ,பேச்சும் ,எழுத்தும் எப்போதும் என் களப் போராட்டத்தின் இன்னொரு பக்கமாகவே
மாறிப்போனது .
இதனாலேயே , என்னை எழுத்தாளனாகவே கருதாத எழுத்துலக பிரம்மாக்கள் இங்கு
உண்டு .எனக்கு கவலை இல்லை .
கடைக்கோடியில்
இருக்கும் ஒரு இளைஞன் அல்லது இளைஞி என் எழுத்தைப் பார்த்து பேச்சைக் கேட்டு சிவப்பின்
பக்கம் திரும்பிப் பார்த்தாலே போதும் .
அதுவே
என் வெற்றி. அந்தத் திருப்தி எனக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது .இனியும் என் பயணம்
அத்திக்கில்தான்…
நான்
எழுதியவற்றில் கைவசம் உள்ளவற்றை [ சில கைவசம் இல்லை ] கூட்டிக் கணக்குப் பார்த்தாலே
சுமார் மூவாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் இதுவரை சிறுதும் பெரிதுமாய் நூல்
வடிவம் பெற்றுள்ளன . மகிழ்ச்சி . இன்னும் வாய்ப்பு பெறாத எழுத்துகளும் நிறைய உண்டு
.
நான் இதுவரை எத்தனை
பக்கங்கள் வாசித்தேன் எத்தனை நூல்கள் வாசித்தேன் என கணக்கு வைக்கவில்லை ; அது தேவையும்
இல்லை .
நான்
வாசித்த நூல்கள் என்னுள் விளைவித்த தாக்கங்களை என் எழுத்து நெடுகக் காணலாம். என் ஒவ்வொரு
புத்தகத்தின் பின்னாலும் ஏராளமான புத்தகங்கள் உண்டு .
நேற்றும் வாசித்தேன்
இன்றும் வாசிக்கிறேன்
சாகும் வரை வாசித்துக் கொண்டே இருப்பேன் .
ஏப்ரல் : 23 உலக புத்தக நாள்
வாழ்த்துகள் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
23/4/2022.
0 comments :
Post a Comment