நமக்கு ஒண்ணுன்னா தெய்வத்திட்ட முறையிடலாம் தெய்வமே கலங்கி நிண்ணா…. ??? !!!!

Posted by அகத்தீ Labels:

 

நமக்கு ஒண்ணுன்னா தெய்வத்திட்ட முறையிடலாம்

தெய்வமே கலங்கி நிண்ணா…. ??? !!!!

 

எங்கே தலைதெறிக்க கூட்டமாக ஓடுகிறீர்கள் ?” – என ஓடிக்கொண்டிருந்த ஆண் பெண் கடவுள்களைப் பார்த்துக் கேட்டேன்.

 

 “ மறிக்காதே ! பேச இதுவா நேரம் ? வழியைவிடு ! மோடி பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் அவரிடம் போய் கேள்வி கேள் ! உம் பத்திரிகையாளர் புத்தியை எங்களிடம் காட்டாதே !” - என ஓடிக்கொண்டே சொன்னார்கள் கடவுள்கள் !

 

 “ முருகா ! தமிழ்க் கடவுளே ! நீயாவது சொல்லப்பா ?” என் இறைஞ்சினேன்.

 

 “ என் வேலையும் பிடுங்கிக் கொண்ட கூட்டம் வருது ….” என மூச்சிரைக்க சொன்னபடி முருகனும் ஓட்டம் பிடித்தார் .

 

“ என்னடா கடவுள்களுக்கு வந்த சோதனை ?” என புலம்பியபடி ஓரமாக நின்றேன் .

 

அப்போது என் காலை யாரோ செல்லக்கடி கடிப்பதுபோல் உணர்ந்தேன் . குனிந்து பார்த்தால் எலியார் . “ என்ன?” எனக் கேட்டேன். “குனி” என சைகை காட்டியது .

 

குனிந்தால் காதைக் கடித்துவிடுமோ எனப் பயந்தபடி குனிந்தேன் .காதில் ரகசியம் சொல்லிவிட்டு ஓடிச் சென்றது .

 

“ பிள்ளையாரை  ‘கலவர பிள்ளையாராக்’கிவிட்டனர் , ராம நாமத்தை  ‘கொலை கோஷ’மாக்கிவிட்டனர் , அனுமன் பஜனையை  ‘இடிப்பு முழக்க’மாக்கிவிட்டனர் , முருகன் வேலையும் களவாட முயற்சித்தனர் ,துர்க்காவையும் விட்டுவைக்கவில்லை .. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு திருவிழாவையும் வெறுப்பை விதைக்கும் ஆட்டமாக்கிவிட்டனர் … கடவுள்கள் என்ன செய்வர் ? செய்வதறியாது ஓடிக்கொண்டிருக்கின்றனர் மீட்பரைத் தேடி …. !!!!”

 

– இதுதான் எலி காதில் சொன்ன ரகசியம் .  “உரக்க வெளியே சொல்லாதே!” என உத்தரவிட்டதால் .ரகசியமாக இங்கு பதிவு செய்திருக்கிறேன்.

 

 “ டேய் ! ஓடு ! ஓடு !” – என பழையபடி கூச்சல் கேட்டுத் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்.

 

சுடலை மாடன் ,கருப்பசாமி , எசக்கியம்மா , மாடத்தி என ஆணும் பெண்ணுமான நாட்டுப்புற தெய்வங்கள் ஓடிக்கொண்டிருந்தன .

 

எம் தெய்வமாயிற்றே  , நான் உற்றுப் பார்த்ததும் சற்று நின்று என்னிடம் பேசிவிட்டு ஓடின …. என்ன பேசியது ?

 

“ ‘பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி’  ‘சாமி பிடிக்கிறவன்’ வறான் . எங்க வாயிலிருந்த கறி சோற புடுங்கிட்டு பொங்கலோ புண்ணாக்கோ எதையோ திணிக்க வறான் … எங்களுக்கு புரிஞ்ச மொழியில நீங்களும் பேசுவீங்க நாங்களும் பேசுவோம் … இப்ப என்னடான்னா யாருக்குமே எதுவும் புரியாத ஒரு செத்த மொழி பேசுறான் …. சாமி பிடிக்கிறவண்ட்ட ஜாக்கிரத…” என்று சொல்லியவாறே ஓட்டம் பிடித்தன .

 

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத

சாமி பிடிக்கிறவன் ஜாக்கிரத…

 

சுபொஅ. 19/4/2022.

 

 

0 comments :

Post a Comment