ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு

Posted by அகத்தீ

 ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு 


 “ பாவங்கள் அதிகரி்த்துவிட்டன 

பாவங்கள் அதிகரித்துவிட்டன

உலகம் அழியப்போகிறது- விரைவில்

உலகம் அழியப்போகிறது..”

பிரசங்கித்தான் மதபோதகன்.


 “புவிமண்டலம் சூடாகிவிட்டது 

புவிமண்டலம் சூடாகிவிட்டது

பேரழிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது – ஆம்

பேரழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது”

எச்சரித்தான் சுற்றுச்சூழலியாளன்.


 “ உலகப் போர் வருகிறது – மூன்றாம்

உலகப்போர் வருகிறது 

மானுடம் பூண்டற்று போகும்- இனி

மானுடம் பூண்டற்றுப் போகும்.”

அரசியல் விமர்சகன் அலறினான்.


 “ கொள்ளை நோய்களின் காலம் தொடங்கிவிட்டது

கொள்ளை நோய்களின் காலம் தொடங்கிவிட்டது

காப்பாற்ற எந்த இரட்சகனும் இல்லை- எங்கும்

காப்பாற்ற எந்த இரட்சகனும் இல்லை.”

சாமக் கோடாங்கியின் உடுக்கை சத்தம் உலகம் முழுவதும் .


 “சகிப்புதன்மை செத்துவிட்டது 

வெறுப்பின் நெருப்பு பரவுகிறது

பேரழிவு பேரழிவு பேரழிவு –உலகம்

பேரழிவின் விழிம்பை நோக்கி மரண வேகத்தில்”

சமூக ஆர்வலர் அபாயச் சங்கு ஊதினார்.


ஆளுக்கு ஆள் அபாயச் சங்கு ஊதினர்

நம்பிக்கையின் சுவடு மருந்துக்கும் இல்லை

‘ மானுடம் தோற்காது’ என நான் 

மெல்ல வாய்திறந்தேன் – என்னை

எல்லோரும் ‘பைத்தியக்காரன்’ என்றனர்.


அங்கே கனத்த அமைதி சூழ்ந்தது  

ஒரு குழந்தையின் அழுகுரல் 

அமைதியைக் குலைத்தது

குழந்தையைத் தாலாட்டியவாறே

தாய் உறுதியாகச் சொன்னாள்

இது புதுயுகத்தின் பிரசவ வலி 


‘ மானுடம் தோற்காது’ 

‘மானுடம் தோற்காது’


சு.பொ.அகத்தியலிங்கம்.

29/4/2022.

0 comments :

Post a Comment