சிங்காரவேலரின் அறிவியல் பார்வையே இன்றைய தேவை

Posted by அகத்தீ Labels:

 

சிங்காரவேலரின் அறிவியல் பார்வையே 
இன்றைய தேவை 


—-சு.பொ.அகத்தியலிங்கம் 

‘விடைகளைக் கண்டுபிடிப்பது மட்டும் அல்ல, வினாக்களை எழுப்புவதும் அறிவியலின் பணியே’ என்பார் அறிவியல் அறிஞர்  ஐன்ஸ்டீன். 

தமிழ்ச் சமூகத்தை நோக்கி ஓயாது கேள்வி களை விதைத்து, பகுத்தறிவுச் சிந்தனையைத் 
தூண்டி யவர் சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர்.

“உலகில் மனிதன் அறியாமையில் நிறைந்திருந்த காலை, கல்லிலும் தூணிலும்,  துரும்பிலும்,  செடி யிலும், நிலத்திலும், நீரிலும், பாழ்வீட்டிலும்,  குட்டிச் சுவர்களிலும், பருத்தியிலும், பட்சியிலும், நோயாளி யிடத்திலும்,    வைத்தியம் கொண்டவர்களிடத்திலும்  பேயோ?  பிசாசோ?  காற்றோ?  கருப்பனோ? அண்ணன்மாரோ? கன்னிமாரோ? சாத்தானோ? சனியனோ? வசிப்பதாக கற்பனை செய்துவந்தான்

.’  ‘‘விஞ்ஞானம் பரவப்பரவ இந்த பேய், பூத கோஷ்டியெல்லாம் பறந்தோடிப் போகின்றன. ஆனால் அந்தகார இருளடைந்த இந்த நாட்டிலோ ஒவ்வொரு வீட்டிலும் இந்த பொய் தேவதைகள் வாசம் செய்யும் இடமாகத் துர்ப்பாக்கிய வசமாகி விட்டது. இந்த இருளைப் போக்கி மெய்ஞானத்தை நாட்டில் அறிந்து நடக்கும் காலம் எக்காலமோ?” 

என சிங்காரவேலர் வேதனைப்பட்டதன் விளைவு. 
1935 ல் தள்ளாத வயதில்-76 வயதில் அறிவியல் ஞானத்தைப் பரப்ப  ‘புதிய உலகம்’ என்ற ஏட்டைத் துவக்கினார்.

சுமார் 87 ஆண்டுகளுக்கு முன்னர் வேதனைப் பட்டாரே, அதே நிலையா இன்று. இல்லையே!. 

இன்று விஞ்ஞான ஒளி எளிதில் கிடைக்கிறது. இருபத் தோராம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் இதுவரையிலும் அறிவியல் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது

. தகவல் தொழில் நுட்பம் உலகை விரல் நுனியில் அடக்கிவிட்டது. பட்டனைத் தட்டினால் அறிவியல் தகவல்கள் கொட்டுகின்றன. 

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அறிவியல் கண்டுபிடிப்புகளும் கருவிகளும் இல்லாமல் நம் வாழ்வில் ஒரு நொடிகூட நகரவில்லை. 

ஆனால் அந்தகார இருள் போய் விட்டதா? மூட நம்பிக்கை முடை நாற்றம் அகன்றுவிட்டதா?  “மெய்ஞான முறையைப் பெரும்பான்மை மக்க ளுக்குத் தெரிவிக்காமல் அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும் தினசரி பழக்க வழக்க ஒழுக் கங்களிலும் அறிவுடையோரும் தங்கள் பகுத்தறிவை உபயோகப்படுத்தாமல் மூடப்பழக்கங்களுக்கும் மூட எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர். தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு இந்த அறி யாமையே முதற்காரணம்.”

இவ்வாறு அடித்துக் கூறும்போது அவர் `தினசரி பழக்க வழக்க ஒழுக்கங்களிலும்’ எனக் கூறுவதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். ஏனெனில் அவர் மெய்ஞானம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறபோது, அது, ஏதோ அறிவு ஜீவியாக எல்லோரும் பின்னால் ஒளிவட்டத்தோடு திரிய வேண்டும் என்கிற கற்பனை மயக்கத்தினால் அல்ல. மேலும்; எந்த ஞானம் எல்லா ஞானத்தையும் விட சிறந்தது என்ற கேள்விக்கு,” சயன்ஸ் (அறிவியல்) ஒன்றே என்று மாபெரும் ஞானியாகிய ஹெர்பர்ட்ஸ் பென்ஸர் தெரிவித்ததை நாம் நம் தமிழ் மக்களிடம்  அறி முகம் செய்கிறோம்” என்கிறபோதும் அன்றாட வாழ் வோடு உரசிப்பார்க்கும் பார்வையையே முன் வைக்கிறார். 

அவர் இந்தப் பார்வையை எங்கிருந்து பெற்றார்? 

அவர் சைவ சமய நம்பிக்கை மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், இளமையில் பௌத்த சிந்தனையால் கவரப்பட்டு படிப்படியாக மார்க்சிய சிந்தனைக்கு உயர்ந்தவர். அதனையே தன் வாழ்நாள் முழுக்க  பிரச்சாரம் செய்தவர். அவர் பௌத்த மரபின் தொடர்ச்சியாக நாத்திக சிந்தனைக்குத் தாவினார் என்பதையே பொதுவாக பலரும் வழிமொழி கின்றனர். 

ஆனால் பேராசிரியர் வீ. அரசு வேறொரு கோணத்தை முன்வைக்கிறார்.

“தோழர் சிங்காரவேலர் ஐரோப்பிய புத்தொளி மரபை உள்வாங்கித் தமிழ் மண்ணில் செயல் பட்டவர். இங்கிருந்து பகுத்தறிவுக்கு முரணான அனைத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தவர்” என்று சுட்டிக்காட்டுகிறார். 

சிங்காரவேலர்  நாத்திகம் மற்றும் பகுத்தறிவை முன்வைக்கும்போது அன்றைக்கு தமிழகத்தில் வலுவாக இருந்த சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவை எள்ளி நகையாடவில்லை. மாறாக அதனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தினார். 

பெரியார், சாதி இழிவை துடைத்தெறிய வெறி யோடு செயல்பட்டார். சாதி இழிவை ஒழிக்க அதனை நியாயப்படுத்திய சாஸ்திரம்,  சம்பிரதாயம், சடங்குகள், வேதங்கள், பிராமணியம், மனுநீதி என அனைத்தையும் தர்க்க வாதங்கள் மூலம் தகர்த் தெறிந்தார். அதன் மூல ஆதாரமான மதத்தை - அந்த மதத்தின் இருப்புக்கு ஆதாரமான கடவுளை நிராக ரித்தார். 

ஆகச் சமூக அடித்தளத்திலிருந்து கடவுள் மறுப்பைக் கைக்கொண்டார். பின்னர் பரிணாமக் கோட்பாட்டையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். ஆயினும் புராண சாஸ்திர எதிர்ப்பே பெரி யாரிடம்  கூர்முனையாக இருந்தது. 

ஆனால் சிங்காரவேலர், சமூக அடிமைத் தனத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வேரறுக்கச் சிந்தித்தார், செயல்பட்டார். எனவே அறிவியலை ஆயுதமாக்கினார். மதத் தத்துவங்கள் மீது அறிவியல்பூர்வமான கேள்வி எழுப்பினார். 

பரிணா மக்கோட்பாட்டை அதாவது -படிமலர்ச்சி கோட் பாட்டை –புவியின் தோற்றத்தை – பிரபஞ்சத்தின் சுழற்சியை, இதர அறிவியல் நிரூபணங்களை  அடிப்ப டையாகக் கொண்டு கடவுள் - மத மறுப்பில் ஈடுபட்டார்.

வரலாற்று ஆய்வாளர் செந்தில்பாபு, ‘சிங்கார வேலரின் அறிவியல் பார்வையும் சுயமரியாதை இயக்கத்தினரின் பகுத்தறிவுப் பாதையும்’ என்ற தன் கட்டுரையில் ஒப்பிட்டுக் கூறுகிறார். ‘மனிதன் கடவுளைக் கண்டுபிடித்தான்; அதே மனி தன்தான் இப்போது அறிவியல் சாதனை கள் அடிப்படையில் கடவுளை மறுக் கிறான். 

இந்தச் சிதைக்க முடியாத அடித்தளப் பாறையின் மீதே, நாத்தி கப்போராட்டத்திற்கான கோட்டையைக் கட்ட வேண்டும்” என்று சிங்காரவேலர் சொன்னதை மேற்கோள்காட்டி இறுதியில் முடிவுக்கு வருகிறார் செந்தில் பாபு:

“அறிவியல் வெளிப்பாட்டுப் பணியை ஒரு  புரட்சிகர கம்யூனிஸ்ட் எவ்வாறு அரசியல் நட வடிக்கை ஆக்கியுள்ளார் என்பதை நாம் காண முடியும். சிங்காரவேலரின் பிந்திய ஆண்டுகள் அன்றைய கொந்தளிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியலினூடே அறிவியலைப் பரப்பும் பணிக் காகவே செலவழிக்கப்பட்டது.’’ அதுவும் யாரை நோக்கி என்பது அடிப்படை யானது. 

1931 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முதல் நாத்திகர் மாநாட்டில் உரையாற்றும் போது சிங்காரவேலர் குறிப்பிட்டார். ‘இங்கே இருக்கும் கூட்டத்தவர்கள் முதலாளிகளாகவும் சிறு முதலாளிகளாகவும் இருக்கின்றீர்கள். ரிக்‌ஷா இழுக் கின்றவன் எங்கே? வண்டி இழுக்கின்றவன் எங்கே? இங்கே உங்கள் வேலை இல்லையா? ஏன்?  எங்கள் மீன் பிடிக்கும் குப்பங்களிலும் சேரிகளிலும் நுழைந்து, ஏன் அங்கிருப்பவர்கள் மூடத்தனத்தை போக்கலாகாது?”

அவர் கேள்வியின் நியாயம் ஆழமானது. 

இந்தியா முழுமையும் நாத்திக அமைப்புகளும் நாத்திக ஏடு களும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவா யின. அதில் பெரும் பங்கு தமிழ் நாட்டுக்குரியது எனில் மிகை அல்ல.  

1875 வாக்கில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு கருத்து களைப் பரப்ப ‘ இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ உருவானது. பின்னர் இது ‘சென்னை லெளகீக சங்கம்’ எனப் பெயர் பெற்றது. 

1882 ல் முதல் பகுத்தறிவு ஏடான ‘தத்துவ விவே சினி’ துவங்கப்பட்டது. பு.முனுசாமி நாயக்கர், அமரம்பேடு முத்துசாமி முதலியார், எம்.மாசிலா மணி ஆகியோர் இவ்வேடு வெளிவர காரணமா யினர். அப்போது பகுத்தறிவு இயக்கம் படித்தவர்க ளின் குறுகிய வட்டத்திலேயே இருந்தது.

இது முதற்கட்டம். 

1920க்கு பிறகு பெரியார் வருகைக்கு பிறகே பகுத்தறிவு மக்கள் இயக்கமானது.

இது இரண்டா வது கட்டம். 

இந்த இரண்டாவது கட்டம் பெரியார்  சிங்காரவேலர் கூட்டுறவால் நிகழ்ந்தது. அதற்கு அந்த சர்வதேசிய,தேசிய நிலைமைகள் அப்போது நிலவின என்பார் தேவ.பேரின்பன் தன் கட்டுரை ஒன்றில். 

1931 நாத்திகர் மாநாட்டில் சிங்காரவேலர் எழுப்பிய  கேள்வி செயலுக்கான விதையானது. இன்னும்  சொல்லப்போனால் “மக்களுக்கான அறிவியல்” என்பதை முன்னெடுத்தவர் சிங்கார வேலர். இன்றைக்கு அதை மேலும் வலுப்படுத்த வேண்டி யதல்லவோ தொழிலாளி வர்க்க வரலாற்றுக் கடமையாகும். 

இதே காலகட்டத்தில் சிறையிலிருந்த பகத்சிங் “நான் ஏன் நாத்திகனானேன்?” என்ற புத்தகத்தை ஜீவா மொழிபெயர்க்க பெரியார் வெளியிட்டார்.  அந்தப் புத்தகம் தர்க்க ரீதியாகவும் அறிவியல் ரீதியா கவும் கடவுளை மறுத்தது. 

பெரியார் தன் பாணியில் கடவுளை மறுக்கிறபோதும் சிங்காரவேலர், பகத்சிங் போன்றோரின் அறிவியல்பூர்வமான 
ஆக்கங்க ளையும் துணைக்கொண்டார். சிங்காரவேலர் அறிவியல் ரீதியாக மதத்தையும் கடவுளையும் விமர்சித்த பாங்கே தனி. 

சிங்காரவேலர் தன் கட்டுரைகளில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பேசுவனாக அமைந்தன.ஆயின் அதனை முழுதாக வாசித்தால் அறிவிய லையும் மதச்சிந்தனையும் ஒப்பிட்டு பகுத்தறிவை தூக்கிப் பிடிப்பதாகவே அவை அமைந்திருப்பதைக் காணலாம். அதுவும் அவரது எழுத்து அறிவுஜீவி நடையில் சிக்கல் சிடுக்குள்ளதாக அமையாமல் எளிமையானதாக அழுத்தமானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பாட்டாளி வர்க்கத்தை தத்துவ ரீதியாக தயார் செய்யும் அரசியல் கடமையாகவே அதனைச் செய்தார்.

 “சென்ற 25 வருடங்களாகச் செய்துவரும் ஆராய்ச்சியில்;அணுக்களும் அணுத்திரள்களாகிய நாமும் ; இழுக்கும்(ஈர்ப்பு ) சக்தியால் (அட்ராக்ஷன்) கட்டுண்டு தனிப்பொருளாக இருந்து வருகின்றோம். ஆதலின் தமது தேகமும்[உடலும்] அதற்கு கீழே உள்ள அணுக்களும் அணுத்திரள்களும் இவை களுக்கு மேலே உள்ள சூரிய,சந்திர, நட்சத்திரக் கூட்டங்களும் ஈர்ப்பால் கட்டுண்டு பிரபஞ்சத்தில் உலவுகின்றன. 

இதைத்தவிர, வேறெந்த அறிவோ, மனசோ, சைதன்யமோ, சத்தோ,சித்தோ? ஆன்மா வோ? கடவுளோ? தெய்வமோ? நம்மையும் நமக்கு மேலும் கீழுமுள்ள பொருட்களை நடத்துவதை மனி தர்களாகிய நாம் அறியோம்.” 

ஆம், அறியவில்லை. இப்படி அறிவியல் உண்மைகளின் மீது நின்று கேள்வி எழுப்பினார்

. “அறிவியல் தகவல் அறிவு” வேறு, “அறிவியல் பார்வை” வேறு. அறிவியல் பார்வையைத்தான் சிங்காரவேலர் வலியுறுத்தினார்.  

அறிவியல் பார்வை என்பது சாதாரண வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கிற ஒவ்வொன்றையும் அறிவியல் பூர்வமாக கேள்விக்கு உட்படுத்தி பரிட்சித்துப்பார்ப்ப தும் அப்படிப் பார்ப்பதன் மூலம் உண்மை யை அறிய முயற்சி செய்வதும் என்பதே சிங்காரவேலரின் திடமான நம்பிக்கை. 

பொதுவாக சிங்காரவேலர் நம்பிக்கையை இரண்டு வகைப்படுத்துவார். 

ஒன்று சரியான நம்பிக்கை. மற்றொன்று சரியற்ற நம்பிக்கை

“காற்றால் புயலடிக்கின்றது என்பது முதல் நம்பிக்கைக்கு திருஷ்டாந்தம் [சாட்சி]. வாயு தேவனால் புயலடிக்கின்றது என்பது சரியற்ற நம்பிக்கை” என அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் எடுத்துரைத்தார்.

கடவுள், தலைஎழுத்து,முன்வினைப் பயன்,மோட்சம்,நரகம்,மறுபிறப்பு,ஜோதிடம்,ஜாதகம்,சகுனம்,ரேகை பார்ப்பது,சகுனம் பார்ப்பது,குறி சொல்வது, பேய்,பிசாசு,பில்லி சூனியம்,மந்திரம்,தந்திரம்,தீ மிதிப்பது,அலகு குத்துவது,சாமி ஆடுவது, மெஸ்மரிசம்,ஹிப்பனாட்டிசம்,டெலிபதி என சிங்காரவேலர் தொடாத விசயமே கிடையாது. 

ஒவ்வொன்றையும் கேள்விகளால் குடைந்தார். அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து அம்பலப்படுத்தினார். 

புவியின் தோற்றம்,பிரபஞ்சத்தின் இயக்கம்,பரிணாமக் கொள்கை என இவர் எழுதிய அறிவியல் செய்தி களுக்கு கணக்கே கிடையாது.இன்றல்ல சுமார் 85 வருடங்களுக்கு முன்பே தமிழில் இவற்றை எழுதி னார் என்பதே சிறப்பு. 

மதநம்பிக்கைகளை இழிவுபடுத்துவதாக அவர் மீது குற்றப் பத்திரிகை வாசிக்க முடியாது. மத ஆபாசங்களை பெரியாரைப்போல பச்சையாக பேசியவரல்ல சிங்காரவேலர். பெரியார் பாணி அன்றைய தேவைகளில் உருவானது என்பது வேறு சங்கதி.   

இந்துமதம்,கிறிஸ்துவம்,இஸ்லாம்,பெளத்தம்,சமணம்,நாட்டுப்புற சமயம் என எதையும் விட்டுவைக்கவில்லை. கூர்மையாக விமர்சித்தார். 

முற்போக்கான சமயம்,திராவிட சமயம்,தமிழ்ச் சமயம் என தேடி அலையவில்லை. மத அபினி போதை தெளிவதற்கு பகுத்தறிவு கஷாயத்தை ஓயாது புகட்டியவர் சிங்காரவேலர்.

அப்படிப் புகட்டும் போது மத உணர்வைப் புண் படுத்திவிட்டனர்,மத நிந்தனை என குறுக்குச் சால் ஓட்டுவோரை சிங்காரவேலரும் எதிர் கொண்டி ருக்கிறார். 

அவர் எழுதினார், “ சிசுக் கொலையை நிறுத்திய போதும்,உடன் கட்டை ஏறுவதைக் குற்ற மாக்கிய போதும்,‘மதம் அழிந்துவிட்டது, மதங்க ளுக்கு ஆபத்து’ என சில பத்திரிகைகள் ஊளை யிட்டன. 
சாரதா சட்டம் நிறைவேற்றிய போதும் எத்தனை பத்திரிகைகள் அதற்கு எதிராய்க் கூச்ச லிட்டன.” இன்றும் அதுதானே நிலை

. “விசுவாசி,” “ஐயுறாதே” என்பது மதங்களின் பாதையாகவும் “கேள்வி கேள்,” “சந்தேகி” என்பது அறி வியல் பாதையாகவும், பார்வையாகவும் உள்ளது. 

மதங்களைப் பற்றிய விமர்சனம்தானே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் அடித்தளம். ஆனால் மதங்களை அறிவியல்பூர்வமாகக் கூட விமர்சிக்க முடியாத ஒரு பாசிச சமூகச் சூழல் இன்று நிலவு கிறதே ஏன்? 

ரிச்சர்ட் டாக்ஃ கின்ஸ் என்கிற மேலைதேச மரபணு விஞ்ஞானியும் பகுத்தறிவாளரும் தன் பத்து வயது மகளுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் கூறுவார்: “துப்பறியும் நிபுணர்கள் பல்வேறு ஆதா ரங்களைத் திரட்டி உண்மைகளை கண்டறிவதுபோல் எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” 

கடவுள், புனிதநூல், பழம்பெருமை எல்லாம் இத்தகு விமர்சனத்துக்கு உட்பட்டதே என்பதே பகுத்தறிவாளர் வாதம். இது ஒரு பாதை.

இப்படி புனித நூல்களை ஆராயக்கூடாது என்பது மத நம்பிக்கையாளர்வாதம்

. “திருடனைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டில் சோதனை செய்ய நுழையும் போலீஸ்காரர் மனோபாவத்துடன் கீதை யையோ பிற மதத்தவர் கௌரவிக்கும் மார்க்க தரிசன நூல்களையாவது படிப்பதில் பயனில்லை. படிப்பது கூடாது” என்றார் ராஜாஜி.  

இன்று அதற்கும் ஒருபடி மேலே போய் அவை  கேள்விகளுக்கு அப்பாற்பட்டது என்று வாதிடப் படுகிறது.  அறிவியல் கண்டுபிடிப்புகளை கருத்துக்களைக் கொண்டு மதவாத கருத்துக்களை நியாயப்படுத்தும் ஆபத்தான போக்கும் தலைதூக்கியுள்ளது. 

அறிவி யலைப் பற்றி நின்று உண்மையைச் சொல்ல நாம் தயங்கக்கூடாது. அறிவியல் என்பது இத்தகைய சோத னைகளைக் கடந்து வெற்றி பெறவே என்பதறிக ! 

“அறிவியல் பார்வை” எனில் எதையும் யாரை யும் கேள்வி கேட்கவும் விமர்சன ரீதியாக அணுகவும் தயங்கக்கூடாது. இன்று அப்படிப்பட்ட சூழல் உள்ளதா? 

இல்லைதான்,ஆயினும் நாம் மதவெ றியர் முன்பு மண்டியிட முடியாது.

இப்போதும் பொற்கால மாயைகளும் கனவு களும் தொலையவில்லையே! நம்மைத் துரத்து கின்றனவே! 

சிங்காரவேலர் கேட்டார்: “ இந்திய நாடு எந்தப் பொற்காலத்தில் தற்காலத்தை விட 
சிறப்புற்றி ருந்தார்கள் என்று சொல்லக்கூடும், கேட்கின்றோம். 

வேதகாலத்திலா? பிராமண காலத்திலா? சூத்திர காலத்திலா? ஸ்மிருதிகள் காலத்திலா? எனக் கேட்கின்றோம். 

லங்கேஸ்வரனாகிய  ராவணனைக் கொன்ற காலமா? அல்லது குருச்சேத்திரக் காலமா என்று கேட்கின்றோம். அல்லது சேர, சோழ, பாண்டிய ராஜ்ய காலத்திலா என்று கேட்கின்றோம்? 

எந்தக் காலத்தில் 16 ஆயிரம் சமணர்களை 
கழுவ லேற்றிய காலத்திலா எனக் கேட்கின்றோம். எந்தக் காலத்தில் எங்கள் சிவன் உங்கள் பெருமாள் என சண்டை நடந்தனவென்று கேட்கின்றோம். 

பண்டைக் கால ஜனசமூக வாழ்க்கையை உணராமல் வேத ராஜ்யமென்றும், ராமராஜ்யமென்றும், தர்மராஜ்ய மென்றும் பிதற்றுவதில் யாது பிரயோசனம் என்று கேட்கின்றோம்.” 

இப்படி அறிவியல் பூர்வமாக சிங்காரவேலர் கேள்வி எழுப்பிய மரபு தமிழகத்தில் தொடராமல் போனது எப்படி?

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. 
இது சிங்காரவேலர் வாதம். 

உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்

. “பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா 
விஷ யத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். 
எங்கே சுதந்தி ரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்து கின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். 

இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையா ளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே” என்றார். 

இதனை தமிழ்ச் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா? ஆக உலகச் சூழலும், தேசச் சூழலும், தமிழகச் சூழலும் இன்றைக்கு  மிகவும் கவலை அளிப்பதா கவும்,கடினமாகவும் மாறிப்போயுள்ளன. 

தனிமனித வாழ்வின் வெற்றி, தோல்வி, பிரச்சனை கள், ஒழுக்கம் எதுவாயினும் சமூகம் அரசியல் எதுவாயினும், வரலாறு, தத்துவம், அறக்கோட்பாடு எதுவாயினும் எல்லா இடத்திலும் அறிவியல் பார்வை புறந்தள்ளப்பட்டு வெறும் குருட்டு நம்பிக்கையும் சுயலாபமும் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது.  

இத்த கைய சமூகச் சூழலில் நாம் இன்று சிங்காரவேலரை புதிய அறிவியல் கோணத்தில் மீண்டும் மீண்டும் பேச வேண்டியுள்ளது.

“அரசு என்பதைப் பற்றி பொதுவான கருத்தில் உள்ள அம்சங்களை சிவில் சமுதாயம் என்ற பொது வான கருத்துடன் பொருத்திப்பார்க்க வேண்டும். இந்தப் பொருளில் சொல்லப்போனால் அரசு = அரசியல் சமுதாயம் + சிவில் சமுதாயம். பலவந்தத்தால் பாதுகாக்கப்படுகிற மேலாண்மைதான் என்ற அந்தோனியோ கிராம்ஷியின் கூற்றை இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும்

.” சிவில் சமூகத்தைக் கைப்பற்றுவதே எமது இறுதி இலக்கு” என இந்துத்துவ தலைவர்கள் அடிக்கடி பிர கடனம் செய்வதையும், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மதவாதிகள் சிவில் சமூகத்தின் மீது தங்க ளின் பழமைவாத நுகத்தடியை வலுவாக பிணைக்க முயலுவதையும் இங்கே நினைத்துப்பார்த்தால் நாம் பயணம் செய்ய வேண்டிய தூரமும் பரப்பும் தேவையும் அவசர அவசியமும் புலப்படும்

. “அரசியல் நடத்தவும் குடும்பம் நடத்தவும் அறிவியல் பார்வை தேவை” என சிங்காரவேலர் சொன்னதின் ஆழமும் விரிவும் இப்போது துலக்க மாகிறது. 

பேசப் பேச நீளும். 

சிங்காரவேலர் 1931ல்  “பொதுவு டைமை முழக்கம்” எனும் கட்டுரையில் எச்சரித்த ஓர் செய்தியோடு நிறைவு செய்வோம்.

“நமது நாட்டில் முதன்மையான மூன்று தீமை கள் பரவியுள்ளதைக் காணலாம். 

இந்த மூன்று தீமைகளும் இந்திய தேசம் முழுமையும் பரவியுள்ள தைக் காணலாம்.இம்மூன்று தீமைகளும் இந்திய தேசம் முழுமையும் குடி கொண்டிருக்கின்றன. 
அவை யாவன. மதபேதம்,ஜாதிபேதம்,பொருளாதார பேதம் என்றே காணப்படும். 
இந்திய தேசத்தில் மாத்திரமே இம்மூன்று தீமைகளும் நிலைபெற்றுள்ளன. 

ஆதலில் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தி யாசத்தைப் போக்குவது மட்டும் போதாது. இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசம் ஒழிவதோடு சாதி,மத வித்தியாசங்களும் ஒழிய வேண்டியது மிக அவசியம் ஆகும்.”

“ஆயிரம் ஆயிரம் அறிவியல் கருத்துகளை
முத்து முத்தாகஓயாமல் கொட்டிய சிங்காரவேலரை
விடுமுறை போடாத
காலம் அறியும்
வீடுதோறும் இருக்கும்
தமிழர்கள் அறிய வேண்டாமா?”

என்கிற ஈரோடு தமிழன்பனின் கவிதை எழுப்பும் கேள்வியை எல்லோரும் எழுப்புங்கள்.
விடை தேடுங்கள் ! 

சிங்காரவேலரின் அறிவியல்பார்வை இன்றைக்கு நம் ஒவ்வொருவருக்கும் அவசியத் தேவை.

அறிக ! பின்பற்றுக!

0 comments :

Post a Comment