உரைச் சித்திரம் : 11.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 11.

 

மழைக் காதலும் ; காதல் மழையும்…

 

காதலர் குழந்தைகள் போல் மழையில் நனைவர் .மழை கொட்டும் போது ஏதாவது கொறித்துக் கொண்டே கதை பேசும் காதலர் கொடுத்துவைத்தவர் என்பர் .காதலுக்கும் மழைக்கும் இருக்கும் தொடர்பு சங்க இலக்கியத்தில் விரவிக் கிடக்கிறது . ஒன்றிரண்டை இங்கு நாமும் கொறிக்கலாம்.

 

 “ உன் குவளை மலர் கண்ணுக்கு ஏன் இந்த வருத்தம் ? அணிகலன் அணிந்த அல்குலின் வரிவனப்புக்கு ஏன் இந்த வாட்டம் ? கருணை இல்லாமல் உன்னை இப்படி கண்ணீரில் தவிக்கவிட்டு மலை காடென நெடுந்தொலைவு சென்றுவிட்டாரே உன் காதலன் ! வருந்தாதே தோழி ! வெகு சீக்கிரம் வந்துவிடுவார்….” என தலைவியை தேற்றினாள் தோழி .

 

 “ தோழி ! நானறிவேன் .என் வருத்தமோ வேறு .அதோ பார் காலையிலேயே  கொண்மூக் கிளை எனப்படும் மழை மேகம் வருகிறது. அலை எழுப்பும் பாட்டொலி அடங்கி பனியில் கிடக்கும் கடலில் இருந்து நீரை அள்ளிக் கொண்டு வருகிறது . கருவுற்றிருக்கும் யானைபோல் மழை மேகம் வானில் அங்கும் இங்கும் அலைகிறது . இது மழைக்காலம் முடியப்போகிறது பனிக்காலம் தொடங்கப் போகிறது . இக்காலத்தில் மலரும் பிடவம் பூ எங்கும் மணம் வீசுகிறது . இந்த ஊதல் காற்றும் குளிரும் அவரை வருத்துமே என நான் வருந்துகிறேன்.” என தலைவி தோழிக்கு மறுமொழி தந்தாள்.

 

அகநானூறில் கருவூர் கலிங்கத்தார் இப்படிச் சொல்கிறார் என்றால் குறுந்தொகையில் புலவர் பெருங்கண்ணார் இன்னொன்றை வரைந்து செல்கிறார் .

 

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு காம இச்சை உள்ளுக்குள் அலை மோதுகிறது .இதனை காமநோயென சங்க இலக்கியம் சொல்லும். இந்நோயில் அல்லலுறும் தலைவி தோழிக்கு சொல்கிறாள் ,

 

“ தோழி ! திங்கள் அதுதான் நிலவு வளர்பிறையில் நாளொரு மேனியாய் வளர்வதுபோல் என் காதல் நோய் பெருகுகிறது ;உடல் மெலிந்துவிட்டது ;கைவளை கழன்றுவிட்டது . இளம் தளிரைக் கசக்கிப் பிழிவதுபோல் நான் கவலையால் பிசையப்படுகிறேன். இது மழைக்காலமல்ல , ஆயினும் காலந்தவறிய மழை பெய்யத்துவங்கிவிட்டது .இந்த மழைக்காலம் தொடங்கும் முன்பே என்னவர் வந்துவிடமாட்டாரா என எண்ணுகிறேன் .வராவிடில் மழைக்காலத்தில் கூட இவளை தவிக்கவிட்டுவிட்டாரே என ஊரார் கவலைப்படுவதுபோல் வசை பொழிவாரே . நானும் அதை எண்ணியே கவலையில் மெலிகிறேன்….”

 

பொதுவாய் திருமண விழாக்களில் பேசுவோர் இந்தக் குறுந்தொகைப் பாடலைச் சொல்லாமல் விடுவதில்லை .ஆனாலும் பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே சொல்லுவார்கள் .ஒரு முறை கலைஞர் தலைமையேற்று நடத்துகின்ற திருமணத்தில் ஒருவர் இப்படிச் செய்ய , மனம் நொந்த கலைஞர்  “இந்த ஒரு குறுந்தொகைப் பாடலையாவது பிழையில்லாமல் தெரிந்து கொள்ளக்கூடாதோ!” என தன் பேச்சில் குறிப்பிட்டார்  .

 

அந்தப்பாடலை ஒட்டி ஓர் சித்திரம் : மழையில் முழுக்க நனைந்த காதலர் ஒரு மாடத்தில் ஒதுங்குகிறார் ; அப்போது தலைவிக்கு ஓர் சந்தேகம் எழுகிறது .மழை விடை பெறுவதுபோல் இவரும் விடைபெற்று விடுவாரோ என சந்தேகக் கண்ணோடு தலைவரை நோக்குகிறார் ; குறிப்பறிந்த தலைவர் சொல்லுகிறார் ,

 

“ என் தாயும் உன் தாயும் உறவினாரா ? இல்லை .என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா ? இல்லை . உறவின் வழியாகவா நாம் சந்தித்தோம், பழகினோம் , காதல் கொண்டோம் ? இல்லையே ?

 

[ இங்கே நீ என்ன சாதி , நீ என்னமதம் என கேட்டா காதல் கொண்டோம் ? என விரித்துப் பொருள் கொண்டாலும் பிழை இல்லை.]

 

செம்மண் நிலத்தில் மழை பொழிகிறது . செம்மண்ணும் மழைநீரும் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்துவிடுகிறது .அதுபோல் நாம் அன்பால் கலந்துவிட்டோம் .”

 

இதனைப் பாடியவர் பெயரைக்கூட செம்புலப்பெயல்நீரார் என்றே சங்க இலக்கியம் பதிவு செய்து கொண்டது .

 

ஆம் காதல் சாதி ,மதம் ,எல்லாவற்றையும் மீறி இதுபோல் அன்பால் கலக்கச் செய்யும் .ஆகவேதான் சாதி ,மத வெறியர் காதலுக்கு எதிராய் கத்தியைத் தூக்குகின்றனர் .

 

நாம் காதலைத் தூக்கிப் பிடிப்போம் !

மானுடத்தை வாழவைப்போம் வான்மழைபோல்….

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று

5

பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி,
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
காலை வந்தன்றால் காரே மாலைக்

10

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே?

15



  [கருவூர்க் கலிங்கத்தார் , அகநானூறு 183.]

 

 

வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

 

புலவர் பெருங்கண்ணார் ,குறுந்தொகை 289.

 

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

 

 [ புலவர் :செம்புலப் பெயல்நீரார் ,குறுந்தொகை :40.]

 

 

மழைக் காதலும்

காதல் மழையும்

தமிழர் ரசனை மட்டுமல்ல பண்பாடும்கூட …

 

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/5/2022.

 

0 comments :

Post a Comment