போராட்ட களத்தில் பூத்த நெருப்பு மலர்

Posted by அகத்தீ Labels:

. எப்போதுமே போராட்டக் களங்களில் உயிர்ப்பான கவிதை பூக்கும் . இந்திய விடுதலைப் போராட்டமோ ,ரஷ்யப் புரட்சியோ , சீனப்புரட்சியோ ,வீரவியட்நாம் எழுச்சியோ எதுவும் விதிவிலக்கல்ல . 381 நாள் இந்திய நாட்டையே உலுக்கிய விவசாயிகளின் உறுதியான போராட்டம் இலக்கியத்திலும் வேர்விட்டது . நா.வெ.அருளின் “ பச்சை ரத்தம்” கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய போராட்ட தளபதிகளில் ஒருவரான தோழர் ஹன்னன் முல்லா தன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் . “ பஞ்சாபில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் இயக்கத்தின் வெவ்வேறு அத்தியாயங்களைச் சித்தரிக்கும் வகையில் இயற்றப்பட்டதாக அறிகிறேன். பல இளைஞர்கள் பாடல்கள் எழுதினார்கள் .மாநிலத்தில் உள்ளவர்கள் மிகுந்த ஆர்வமுடன் பாடி வருகிறார்கள் .ஹரியானாவில் பல நாடுப்புறப் பாடல்கள் இயற்றப்பட்டன . பஞ்சாப் மற்றும் ஹரியானா மட்டும் இல்லை ; பல மொழிகளில் பல இலக்கியங்கள் கிளர்ந்து வந்தன.”என்கிறார் . தமிழிலும் பலர் பாடல் எழுதினர் ;கவிதை புனைந்தனர் .அவற்றை தொகுக்க வேண்டும் . இந்த போராட்ட களத்தில் உயிரோவியமாய் உதித்ததுதான் நா.வெ.அருளின் “பச்சை ரத்தம்” இரத்தமும் ,சதையும் ,கோபமும் ,அறமும் கொப்பளிக்கும் கவிதைகள் . “உதிரமும் உழவர்களும் ஒன்று உயிரணுக்களை வாழவைக்கும் உதிரத்தைப் போலவே உலகத்தை வாழவைக்கும் உழவர்கள்.” என மிகச் சரியாய் குறிக்கிறார். “ ஒரு கட்டளையில் பசியின் குறைந்தபட்ச உத்திரவாதம் நீக்கப்படுகிறது. மறு கட்டளையில் வயல் வெளிகள் முழுவதும் பணத்தாள்கள் நடப்படுகின்றன. மூன்றாம் கட்டளையில் வயல் வெளிகளே சொந்தமில்லாமல் போய்விடுகின்றன.” மோடியின் கொடூர வேளாண் சட்டங்களை இதைவிட எளிதாய் அழகாய்ச் சொல்ல சொற்கள் ஏது ? “ போராட்டத்தில் மரித்துப் போனவர்களின் எலும்புகள் மந்திரத் தனமையாக மாறிவிடுகின்றன. அவ்வெலும்பு மஜ்ஜைகளில்தாம் கல் இதய மனிதர்களுக்கான வாய்க்கரிசி தயாராகின்றன .” வெறும் கோவம் மட்டுமல்ல ; அறச்சீற்றம் ; தொலை நோக்கு . “விவசாயிகளுக்காக எழுதப்படும் ஒவ்வொரு கவிதையும் ஆன்மாவில் எழுதி தோலில் மிளிர்கிறது.” என நா.வெ.அருளின் கவிதை வரிகள் அவரின் இந்நூல் முழுமைக்கும் அப்படியே பொருந்திப் போகிறது . “ கவிதைக்கு உவமை அழகு .அந்த உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும் . இந்தக் கவிதைத் தொகுப்பில் “ ருத்திர தாண்டவம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதை ஒரு புதிய கவிப்பார்வையைத் தருகிறது .”என த.உதயச் சந்திரன் தன் அணிந்துரையில் சொல்லியிருப்பது மிகையன்று. விவசாயிகளுக்கு நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் நூல் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் பெ.சண்முகம். “ வெளியே தெரிவதில்லை எனினும் விதைக்குள் புதைந்து கிடக்கும் விருட்சத்தைப் போல அவன் ரெளத்திரம் பிரமாண்டமானது .” அவற்றை கவிதையாய் யாத்திருக்கும் நா.வெ.அருளின் பச்சை ரத்தமும் பிரமாண்டமானதே ! இப்போதும் பலர் சொல்லுகின்றனர் கவிதை நூல் விற்பதில்லை .மெய்தான் .ஆயின் இது கவிதை நூலல்ல ;அதற்கும் மேல் “ ஓர் நல்ல கவிதை எங்கே பிறக்கும் ; எப்படிப் பிறக்கும்” என்பதன் நேரடி சாட்சியான - இலக்கணமான நூல் . இந்நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளிவந்திருப்பது மகிழ்வான செய்தி . இதனை வாங்கி வாசிப்பது நம் கடமை . வாழ்த்துகள் அருள் ! தொடர்க உம் கவிதைப் பயணம் ! சு.பொ.அகத்தியலிங்கம். 10/5/2022.

0 comments :

Post a Comment