குடும்பம் எனும் அமைப்பு தின்று தீர்த்த எம் பெண்களுக்காக ….
“சும்மா இருக்கும்
பெண்களென்று யாருமில்லை என்பதால் எல்லா பெண்களுமே உழைக்கும் பெண்களே” ! அனைத்து பெண்களுக்கும்
மார்ச் 8 உலக பெண்கள் நாளில் ”உரிமைப் போர்
தொடர்க!” என தோழமையுடன் வாழ்த்துகிறேன் .
இந்நாளில்
எல்லா பாலினத்தவருக்கும் , அருள்மொழியின் “
டைரி” எனும் சிறுகதைத் தொகுப்பை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த “டைரி” இதற்குப் பொருத்தமானதே !
“ இது அவரது முதல் தொகுப்பு என்பதற்கான அடையாளம்
ஒரு கதையில்கூட இல்லை” என்று ச.தமிழ்ச் செல்வன் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.
“ குடும்பம் எனும் அமைப்பு தின்று தீர்த்த எம் பெண்களுக்காக
“ எனஇக்கதைகளை சமர்ப்பணம்
செய்யும் அருள்மொழியின் முன்னுரையை முதலில் படித்துவிடுங்கள் .
“…. பெருமையை
ஒதுக்கி வைத்துவிட்டு நமது குடும்பங்களில் என்ன நடக்கிறது என்பதை குறைந்தபட்ச நேர்மையுடன்
அணுகுவோமானால் நாம் சற்றே பண்படக்கூடும் .” என முன்னுரையில் சொல்லிச் செல்லும் அருள்மொழி
தன் சிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான கதைகளை அதற்கே அர்ப்பணித்திருப்பது பாரட்டத்
தக்கது .
பெண்ணியம்
பெண்ணுரிமை என்றெல்லாம் பொதுவாக நாம் பேசிச் செல்லலாம் ; ஆயின் உயர் மேட்டுக்குடியின்
பெண்ணியமும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க பெண்ணியமும் ஒன்றல்ல . வர்க்க வர்ண படிநிலைக்கு
ஏற்ப இதிலும் ஏற்ற தாழ்வு உண்டு .ஆனாலும் எல்லா பெண்களும் குடும்ப அமைப்பில் மல்லுக்கட்டிக்
கொண்டுதான் இருக்கிறார்கள் .இங்கு ஆண் மைய சாதி மைய சமூக ஒடுக்குமுறை படிநிலைக்கு ஏற்ப
வேடம் தரித்து நிற்கிறது .
இங்கே 14
கதைகள் .அனைத்தும் கொங்கு மண்டலத்தில் நிகழ்கிறது . எல்லா கதைகளும் கொங்கு மண்டலத்தில்
ஆணாதிக்கம் ,சாதியம் இவை எப்படி புன்னகைத்துக் கொண்டே பேயாட்டம் போடுகிறது என்பதை நன்கு
பகடி செய்கிறது .
“ அதிகாரம்”என்ற
முதல் கதை பெண் பஞ்சாயத்து தலைவி ” ஆதிக்க சக்திகளிடம்” மல்லுக்கட்டும் அவலம் சித்தரிக்கப்பட்டுள்ளது
. “ ஏம்மா இத்தன பொம்பிளைக இருக்கீங்க ஒரு காப்பி டீ போட்டுக் கொடுக்க முடியாதா ?”
,என நாட்டாமை மாணிக்க வாசகம் சொல்வதும் ; “ ஆமாங்ணா .. அடுத்த தடவ நம்ம கவுன்சலர் எல்லமாவ
அரலிட்டர் பாலும் அவியவூட்டு எருமயக் கறந்து கொண்டாறச் சொல்லிறலாம் . கவுன்சிலருக்கு
கவுன்சிலரும் ஆச்சு காப்பிக்கும் காப்பியியும் ஆச்சு”என்றார் [பஞ்சாயத்து பிரசிடெண்ட்]
தெய்வநாயகி . அனைவரும் சிரித்தார்கள். தெய்வநாயகியும் எல்லம்மாவும் சிரிக்கவில்லை.
“..பலவந்தம் பண்ணுறவன் கொழுத்த சாதிக்காரனா இருந்தா
செத்தவ அக்கா தங்கசின்னாலும் அமிக்கீட்டு இருப்பீங்க .. எளச்ச சாதிக்காரன் மறுவாதியா
தாலிகட்டி குடுத்தனம் பண்ணுனாக் கூட இவனுக மானக்கூதியில மயிறு எந்திரிச்சுக்கும்…”
என “காட்ட
வித்துக் கள்ளக் குடிச்சவன்” கதையில் விழும் நெற்றியடி,” அங்காளி பங்காளி” கதையில் வேறொரு வகையில் வெளிப்பட்டிருக்கும் “
ஒரு டாக்டராயினும்
தன் விருப்பம் போல் செயல்பட முடியாத குடும்ப நிர்ப்பந்தம் தற்கொலையில் முடிந்த பெண்ணின் கதையைச் சொல்லும்
“ கோழைத்தனமும்” கதையாயினும் சரி ; தன்
கர்ப்பத்துக்கு காரணம் குடும்பத்துக்கு உள்ளேயே இருப்பதை சொல்லாமலே கருக்கலைப்பில்
செத்துப்போன “ மல்லி” கதையாகட்டும் குடும்பம்
செய்த கொலைகள் தானே !
சுப்பாராவ்
எழுதிய “ தாத்தாவின் டைரி” எப்படி ஆணாதிக்க கண்காணிப்பாக இருந்ததைச் கன்னத்தில் அடித்துச்
சொல்லும் ; அதன் பிறகு இத்தொகுப்பிலுள்ள “டைரி” எனும் தலைப்புக் கதை எப்படி குடும்பமும்
வயதுக்கு வந்த பெண்ணை சந்தேகத்துடன் கண்காணிப்பதை படீரென அறைந்து சொல்கிறது . “ டைரி
எழுதறது நல்ல பழக்கம்டா .. நீயும் எழுது” என்றார் அப்பா ./ “ என்ன எழுதறது ?” செல்வி
கேள்வி. / “ தினமும் நடக்குறத எழுது ,பள்ளிக்கூடத்தில
நடந்தது, என்ன பாத்தே ,எங்க போனே ,அப்படி என்ன வேணும்னாலும் எழுது” அப்பா சொன்னார்
. கதையின் இறுதியில் “ அம்மா விசுக்கென்று திரும்பினாள்./அவள் கையில் டைரி இருந்தது
.” …..செல்வி அன்றிலிருந்து டைரி எழுதவில்லை. ”நம்பிக்கை” கதையும் இதே செய்தி வேறு சூழலில் வேறுமாதிரி . “ தன் மேல்
நம்பிக்கையுமில்லை.ஒன்றுமில்லை .எப்போதும் சந்தேகத்துடன் வேவு பார்த்துக் கொண்டேதான்
இருக்கிறார்கள் …” / “ நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பதுபோல் நடித்தால் போதுமானது
.என்ன அந்த நாடகத்தை எல்லோரும் பார்க்கும்படி பெரிதாக நடத்த வேண்டும்…” இந்த வரிகள் சமூகத்தில் பெண் மீது குடும்பமும்
,குடும்பத்தின் மீது பெண்ணும் கொண்டுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடுகள். அதுதான் இன்றைய
சமூக யதார்த்தம் . ஆம். மேலைநாடுகள் போல நம்
சமூக திறந்த சமூகம் [open society ]அல்ல இருண்மை [hypocrite society]
சமூகம் .எப்போது இதிலிருந்து வெளியேறப் போகிறோம் ?
“ தியாகம்
“ என்ற கதை இந்தியன் கிரேட் கிச்சன் படம் போல் அடுக்களைக்குள் அடைப்பட்ட வாழ்வின்
வலியை பெருமிதமாகக் கொண்டாடும் தேசத்தில் அதன் மீதான மெல்லிய எதிர்வினை .
“ பஞ்சாயத்து
டி வி” “ பந்தம்” இரண்டு கதைகளும் சாதியம் எப்படி இண்டு இடுக்கெல்லாம் சிலுப்பிக்கிட்டு
நிற்கிறது என்பதை போட்டுடுறைக்கிறது . எம்ஜிஆர் இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்க்க பந்தலுக்கடியில்
உட்கார வைக்கப்பட்டவர்களுக்கு காப்பி போல ஒன்றை சட்டியைக் கழுவி கொதிக்கவைத்து ...
சிரட்டைகளை எடுத்துவர செய்த போது … பண்பாட்டின்
மீது சாதியம் எச்சில் உமிழ்ந்தது “ பஞ்சாயத்து
டிவி” .
அன்பை நேசத்தை
புரிந்து கொள்ள முடியாத , “ அதென்ன பொழுதண்ணிக்கும் நாசுவமூட்டுக்கு போற ..” என்ற சுடு
சொல் , பள்ளியிலும் சாதிக்கொரு அணுகுமுறை ,பந்தம் பிடிக்க மட்டும் வரணும் இந்த அசிங்கம்
பிடித்த பண்பாட்டை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் மனச்சாட்சி அற்ற சமூகம் இது .உடைத்துக்
காட்டும் “ பந்தம் “ .
“தண்ணீர் பைப்” கதையும் சாதியத்தைத்தான் பேசியது
.சாதி தெரியாத போது கிடைத்த மரியாதை “ இது
செம்பாம் மையன்” என்ற ஒற்றை வார்த்தையில் நொறுங்கிப் போனதையும் ; “அடுத்த நாளில் இருந்து
டீக்கடைக்காரரும் வேறு டம்ளரில் டீ கொடுக்க ஆரம்பித்திருந்தார்.” என முடிகிற வரிகள்
பெரும் உறுதலான சாதியத்தை காட்டி நின்றது.
“உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு ” என்கிற பழமொழி
எப்படி பெண்ணின் வயிற்றிலடிப்பதை பெருமையாகச் சொல்லுகிற பழமொழியானதைப் போல் ; வாழ்வின்
யதார்த்தத்தில் பெண்ணிற்கு உணவைக் குறைத்து சாப்பிடப் பழக்கும் கொடுமையை பேசுகிறது
“பிள்ளைக்கறி”
கதை. “அவளுக்கு வேறு போக்கிடம் இல்லை ; அவள் அம்மாவைப் போல.” என்ற கடைசி வரி ஹைகூ போல
கதைக்கே புதுப் பார்வையைக் கொடுத்துவிட்டது.தூக்கத்திற்கும் விளையாட்டுக்கும் தினம்
தினம் பெண்பிள்ளைகள் கெஞ்சும் அவலத்தை விவரிக்கிறது .
“ ஏன் சார் ! பசங்க ஆஸ்ட்ல்ல தினமும் தான் குடிக்கிறாங்க
… எத்தனை பேரை வீட்டுலேயிருந்து கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கோம் ?” என விஜி மேடம்
தன்மையாகக் கேட்டதும் ; இந்த என்கொயரியே பெண்கள் ஆஸ்ட்ல் என்பதால்தான் நடந்திருக்கிறது
என்றும் அவருக்கு விளங்கியது . ” பெண்கள் விடுதி”
ஒரு அதிரடிக் கதை .ஆம். நல்லதோ கெட்டதோ
அதை பாலின பாரபட்சமின்றி சமூகம் அணுக வேண்டுமல்லவா ?
எப்போதும்
ஏழைகளுக்கு கொடுப்பதை இலவசம் என நக்கலும் நையாண்டியும் செய்யும் மேட்டுக்குடித்தனத்தவருக்கு
குத்தூசியாய் சத்துணவில் முட்டையையும் டிவியையும் காட்சிப் படுத்தப்படும் “ பாவாடை” “பஞ்சாயத்து டிவி” கதைகள் சமூகநீதியின் தேவையைச் சொல்லும் .
“ பேச வேண்டிய
கதைகளைப் பேசவேண்டியவர்கள் பேசும்போது அது பெரிதும் நம்பகத் தன்மை கொண்டதாக பெருமதி
பெறுகிறது.அந்த வகையில் இந்தத் தொகுப்பில் அத்தனை கதைகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
இருக்கிறது.” என்கிற சல்மாவின் கருத்தோடு உடன்படுகிறேன்.
“ ஆனாதிக்க மனோபாவமும் சாதியப் பெருமையும் எப்படி
கரங்கோர்த்துச் செயல்படுகின்றன என்பதை துளியும் பிரச்சார வாடை இல்லாமல் வெகு இயல்பாக
கலை அமைதியோடு பேசுகின்றன .” என்கிறார் தமிழ்ச்செல்வன் .
பகடி ,கேலிச்சிரிப்பு
,கோபவீச்சு இவற்றோடு உரக்கப் பேசுவதே இக்கதைகளின் தனிச் சிறப்பு என்கிறேன் நான் . துர்நாற்றத்தை
மணக்க மணக்க எப்படி எழுத முடியும் ? புழுக்கத்தை அமைதியாக எப்படி கடக்க முடியும் ?
வெடிப்புற பேசத்தான் வேண்டும்.
சாதியமும்
ஆணாதிக்கமும் புதிய புதிய வேடம் தரித்து , புதிய புதிய சொல்லாடல்களுடன் தொடர்கிறது
. மெல்லிய மயிலிறகால் வருடி ஓட்ட முடியா பெரும் தீங்கு அது !
அருள்மொழி
! இன்னும் கூர்மையாய், இன்னும் ஆழமாய், இன்னும் வீச்சாய் இன்னும் இன்னும் சிறுகதைகளைத்
தாருங்கள் !
எல்லோரும்
வாசிப்பீர் !
டைரி ,[சிறிகதைகள்]
ஆசிரியர் : அருள்மொழி ,
வெளியீடு
: பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு
: 044 / 24332924/24332424/24330024/
bharathiputhakalayam@gmail.com , www.thamizhbooks.com
பக்கங்கள்
:208 , விலை : ரூ.200/
சு.பொ.அகத்தியலிங்கம்.
8/3/2023.
0 comments :
Post a Comment