ஓர் இலக்கிய நூலை முன்வைத்து…..
கடந்த கால இலக்கியங்களை இலக்கியப் போக்குகளை விமர்சன முறைகளை மீண்டும் மீண்டும் மறு ஆய்வு செய்வதில் பிழையில்லை .தேவையும் கூட . ஆயின் எதற்காகச் செய்யப்படுகிறது எப்படிச் செய்யப்படுகிறது என்பது மிகவும் முக்கியம் . நான் அண்மையில் படித்த இரண்டு இலக்கிய நூல்கள் என்னுள் கோபத்தையும் கேள்விகளையும் உசுப்பிவிட்டன.
ஜனவரி 18 ஆம் தேதி நான் எழுதிய முகநூல் பதிவை மீண்டும் அசை போட்டேன்.
“அவர் தட்டையாக எழுதுகிறார்
இவர் நெட்டையாக எழுதுகிறார்
இவர் மட்டையாக எழுதுகிறார்
அவர் மொக்கையாக எழுதுகிறார்.
அவர் எழுதுவது எல்லோருக்கும் புரிகிறது ;அதெல்லாம் எழுத்தா?
இவர் உரக்கப் பேசுகிறார்.அது பிழை
இவர் பேசுவது புரியவே இல்லை;சபாஷ்!
வெடிப்புற பேசலாமா ? உள்ளுக்குள் முணுமுணுக்கணுமா ?
இவர் தத்துவ நீரோட்டம் இல்லாமல் எழுதுகிறார் ;அவர் மேலிருந்து கீழ் பார்க்கிறார் :இவர் கீழிருந்து மேல் பார்க்கிறார்.
இவர் அரசியலாக எழுதுகிறார். அவர் அரசியலற்று உளறுகிறார்.
இவர் வக்கிரமாக எழுதுகிறார்.அவர் வறட்சியாக எழுதுகிறார்.
இவர் இவரெல்லாம்தான் எழுத்தாளர். இல்லை இல்லை என் லிஸ்ட்தான் ஆகச்சிறந்தது.
கரிசல்காட்டு எழுத்து மட்டுமே எழுத்து .இல்லை இல்லை தஞ்சைதான்.
சென்னைக்கார்களுக்கும் மற்றவர்களுக்கும் எழுதவே தெரியாது. இல்லை இல்லை அவங்க மட்டும்தான் சரியாக எழுதுறாங்க..
உச்சமாக "நான் மட்டுமே சரியான எழுத்தாளன்.".இல்லை.இல்லை."நீயெ
விருப்பு வெறுப்பு மலிந்து கோஷ்டி கோஷ்டியாய் அபஸ்வரம் ஒலிக்கும் எழுத்தாளர்களே !
அட போங்கப்பு ! நீங்களும் உங்க சண்டையும்...
எழுதுவது யார் என்பது பிரச்சனையே அல்ல. எதை எழுதுகிறாய் ?யாருக்கு எழுதுகிறாய் ?
எங்கள் வலியை ரணத்தை வாழ்க்கையை சந்தோஷத்தை சங்கடத்தை முட்டலை மோதலை பிரச்சனைகளை எழுதுங்கள் .அது எங்களை எழுந்து நிற்க வைக்க வேண்டும் .முடக்கி மூலையில் படுக்க வைத்திடக் கூடாது. அம்புடுத்தான்.
கிளம்பு கிளம்பு காற்று வரட்டும் !”
இது எந்த ஒரு நூல் சார்ந்த விமர்சனமும் அல்ல ; குறிபிட்ட யார் மீதான விமர்சனமும் அல்ல ; முழுக்க முழுக்க என் மனோபாவம் . ஆயின் என் இந்த மனோபாவத்தை அண்மையில் நான் படித்த நூல்கள் மீண்டும் உறுதி செய்தன.
“ மனித உளவியலை சாதியையும் முதலையும் கொண்டு தீர்மானிப்பதற்கும் இனத்தையும் ,மதத்தையும் கொண்டு தீர்மானிப்பதற்கும்மிடையில் அப்படி என்ன வேறுபாடு இருக்கிறது என்ற நியாயமான குழப்பம் வாசகனுக்கு ஏற்படத்தான் செய்கிறது .” இப்படி டொமினிக் ஜீவா எழுத்து குறித்த தன் கட்டுரையில் ஜிஃப்ரி ஹாசன் கூறியிருப்பது சரியானதுதானா ?
மேலோட்டமாகப் பார்த்தால் நடுநிலையோடு சொல்லப்பட்டதாகத் தோன்றும். உள் நுழைந்து பார்ப்பீர் ! சாதிய ஒடுக்குமுறை , முதலாளித்துவச் சுரண்டல் ஒடுக்குமுறை இவற்றுக்கு எதிரான எழுத்தும்; மத,இன அடிப்படையிலான எழுத்தும் ஒன்றா ? சாமர்த்தியமான நடுநிலை எப்போதும் இறுதியில் வலதுசாரி அரசியலாக திரிந்துவிடும் அபாயம் உண்டே !
“எனது விமர்சனப் பார்வை என்பது ஒரு படைப்பாளியின் கோட்பாட்டு தளத்தில் அங்கீகாரம் ,மறுப்பு எனும் இரட்டை எதிர்நிலையிலிருந்து உருவாவதில்லை . படைப்பாளி மீதான ஏற்றுக்கொள்ளலோ நிராகரிப்போ அவரது பிரதிகள் மீதான ஆழமான வாசிப்பிலிருந்து தொடங்கப்பட வேண்டும் .” என முன்னுரையில் சொல்லுகிறார் ஜிஃப்ரி ஹாசன்.
ஆனால் ,கைலாசபதி , சிவதம்பி , நுஃமான் , மு.பொ, சிவசேகரம் உள்ளிட்ட பலரின் முற்போக்கு பார்வையை மிகவும் குறுகிய வறட்டு சூத்திரமாகவே ஜிஃப்ரி ஹாசன் பார்க்கிறார் என்பது நூலை கூர்ந்து வாசிக்கிற யாரும் உணர முடியும் . இவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரென்றோ அவர்கள் அவதானிப்பில் பிழையே இல்லை என்றோ கூறவில்லை . முன்னைவிட இன்றைக்கு பார்வைப் பரப்பு விரிவடைந்திருக்கிறது கூர்மை அடைந்திருக்கிறது . அதனையும் சேர்த்துப் பார்க்கவும் யாரும் தடையாக இல்லை .ஆயின் அந்த முற்போக்கு மரபை நேர்கோட்டுப் பார்வை ,தட்டைப் பார்வை என நூலாசிரியர் நூல்நெடுக மெல்ல நிராகரிப்பதை என்னால் ஏற்கமுடியவில்லை .
டொமினிக் ஜீவா ,ரஞ்ச குமார் ,நந்தினி சேவியர் , சட்டநாதன் , உமாவரதராஜன் , சேரன் , நீர்வை பொன்னையன் ,ஷோபா சக்தி , நோயல் நடேசன் ,சயந்தன் ,சாத்திரி , தஜ்ஜல் , தில்லை ,ஓட்டமாடி அறாபத் என அதிநான்கு எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன் எழுதிய “ எழுத்தின் தடம் ஈழப்படைப்பு வெளி” நூல் பேசுகிறது .இதில் டொமினிக் ஜீவா ,சாத்திரி ,ஷோபா சக்தி போன்ற சிலரின் எழுத்துகளே நான் வாசித்தவை .ஆகவே நூலாசிரியரின் இலக்கியப் பார்வையை என்னால் முழுசாக அலச முடியாது .
ஆயினும் இந்நூல் பேசும் சுத்த இலக்கியம் எனக்கு உடன்பாடன்று . நான் சார்பானவனே . ஆகவேதான் மேலாண்மை ,சின்னப்பபாரதி ,சமுத்திரம் ,டி .செல்வராஜ் , காஸ்யபன்,பொன்னீலன் உள்ளிட்ட இடதுசாரி முன்னத்தி ஏர்களை நிராகரிக்கும் போக்கு உடன்பாடில்லை என அப்படி எழுதுவோரிடம் என் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
இந்நூலை கூர்ந்து வாசிப்பீர் ! விமர்சிப்பீர் ! இதுவே என் வேண்டுகோள்.
எழுத்தின் தடம் : ஈழப் படைப்புவெளி ,
ஜிஃப்ரி ஹாசன் ,
தாயதி வெளியீடு ,
கிடைக்கும் இடம் : பாரதி புத்தகாலயம் ,
044 24332924 .
பக்கங்கள் : 160 ,விலை : ரூ.160/
சுபொஅ.
6/3/2023.
0 comments :
Post a Comment