புத்தகத்தின் தலைப்பு போல் புத்தகமெனில் …
புத்தக அலமாரியை கரையான்கள் தின்று தீர்த்திருந்தன. அங்கு
பாம்புகள் அங்கும் இங்கும் ஊர்ந்து ஊர்ந்து சத்தமாக வாசித்தன.மின்மினிப் பூச்சிகள்
கேட்டு கிறுகிறுத்தன.கடல் அலைகள் பாலைவனத்தில் இந்தக் கதைகளை சுமந்து திரிந்தன .
இப்படியெல்லாம் “ கொட்டாவி” பற்றி எழுதினால்தான் நம்மை
கெட்டஆவி பிடிக்கவில்லை என்று ஒப்புக் கொள்வார்களோ ? .
நாள் தோறும் 100 முதல் 200 பக்கங்கள் வரை எளிதில் வாசித்துக்
கடக்கும் சாதாரண வாசகன் நான்; நூலின் அடர்த்தி மற்றும் ஈர்ப்பு என் வாசிப்பு வேகத்தை
தீர்மானிக்கும்.
ஆனால் வெறும் 96 பக்கங்களையேக் கொண்ட “கொட்டாவி” நூலை மூன்று நாளாக கொட்டாவி விட்டு விட்டு
வாசித்தேன் . கதைகளை விளங்கிக் கொள்ள முடியாமைக்கு என் இலக்கிய அறிவு போதாமையே காரணமாக
இருக்கக்கூடும் .
“கற்பனைக்கும் யதார்த்ததுக்கும் இடையே மொழிகளின்
மாய இழைகளால் பின்னிய” என
வாக்கு மூலமாக பின் அட்டையில் பதிந்திருக்கும் ,இந்நூலை புரிந்து கொள்ள முடியவில்லையே
என்ன செய்ய ?
முன்னுரையை அணிந்துரையை இதை எழுதும் போது மீண்டும் படித்தேன்.
“ நீங்கள் கீழே
விழுகின்ற மழைத்துளிகளை பொறுக்கி எடுப்பவரா ? [ கடைசி கதையில் கிழவி பொறுக்குகிறாள்]
நீங்கள் காதுகளுக்கு கேளாத சொற்களைப் பேசுபவரா ?” உங்களுக்காகத்தான் இந்த “ கொட்டாவி”
, “குழந்தைகளின் கொட்டாவியை ரசிப்பதுபோல்”
ரசிக்கச் சொல்கிறார் அகமது ஃபைசல்.
நூல் நெடுக ஆங்காங்கே வித்தியாசமான உவமையோடு சில கவித்துவ
வரிகள் ; கதையோடு அதனை பொருத்துவது வாசகர் சாமர்த்தியம். அதுபோல் மாய வித்தைபோல ஓவியம் ,பேனா,சிக்ச்ரெட் எல்லாம் எதையோ சொல்லும்
. “கொண்டு கூட்டு பொருள் கோள்” என பள்ளிப்
பாடத்தில் ஓர் இலக்கணம் படித்தது என்னமோ உண்மைதான் . அதற்காக இப்போது தேர்வு வைப்பதா
?
“ சிப்பி வடிவில் அவன் முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன
.அவன் உறங்கும் போது அந்தக் கண்கள் திறந்து கிடக்கும் .அவன் விழிதிருக்கும் போது மூடிக்கிடக்கும்”
அது அகக்கண்ணா புறக்கண்ணா என என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை . தினத்தந்தி கன்னித்தீவு
மாயக்கண்ணாடியை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்தால் தீர்வு கிடைக்கலாம்.
“பாதிக் காடு தன்
கையில் இருப்பதாய் எண்ணியபடி நிமிர்ந்து நிற்கிறது ஆலமரம் “ “கடலுக்குள்ளிருந்து வெளியே
வரும் போது மீன்கள் தங்கள் வயதைக் கடலில் ஓர் ஆடையைப் போன்று கழற்றிப் போட்டுவிடுகின்றன.”
“ வீடென்றால் யாருடைய சத்தமாவது கேட்டுக்கொண்டே இருக்கும்.” “ ஒரு தடவை வாசித்தாலே புரிந்துவிடும் சில புத்தகங்கள்
போல இருந்தது அவரது பெயர் “
இப்படியும் பலவரிகளை ரசிக்கும் படி எழுதிச் செல்கிறார்
.
“மரம் முளைத்தவன்”, “மாய சிகரெட்”, “மேசையின்
கால்களில் நகங்கள்”, “ மீசைக் கண்ணாடி” இப்படி தலைப்புகளைப் படித்ததும் எளிதாக
வாசிக்கும் குழந்தை இலக்கியம் என்றோ , பேய்க்கதை என்றோ எண்ணிவிடக்கூடாது ; முயற்சி எடுத்து வாசிக்க முனைவீர்!!
சரிதான் , புனைவு என்றால் அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும்
?ஆகவே பொறுமையோடு படிக்கணும் . ஓரிரு கதைகள் எனக்கும் புரிந்தது .
அகமது ஃபைசல் போல் சொல்வது எனில் ;புத்தகத்தின் தலைப்பு
போல் இருந்தது புத்தகமெனில் …
அணிந்துரை வழங்கிய தில்லை சொல்லிவிட்டார் .” சிலர் யதார்த்தத்தை விட்டுத் தப்பிச் செல்கின்றனர்
.சிலர் கற்பனையின் புதிர் விளையாட்டுக்குள் சிக்கிக் கொள்கின்றனர் .ஆனால் கற்பனையின்
மாய உலகிற்கும் ,யதார்த்தத்தின் தீர்க்க முடியாத நெருக்கடிகளுக்கும் இடையே திக்கற்று
திகைப்புற்று அலைந்து உழன்றும் சிக்கித் தவிக்கும் விலங்குதான் மனிதன் என நம்புகிறேன்….”
ஆக ,” மனிதன் என்ற சொல்லே உயர்ந்தது “ என்கிற பார்வையை
அல்ல இவர்கள் முன்வைப்பது . மனிதனை சூழ்நிலையின் கைதியாகச் சித்தரிக்கும் பார்வையையே
இவர்கள் நவீன சொல்லாடலில் முன்வைக்கிறார்கள்.
“ ‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் – இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்”
என்கிற பாரதிதாசன் கவிதையைச்
சொன்னால் ; அவர் ஓர் சார்பானவர் என தட்டிக் கழித்துவிடுவார்களோ என்னவோ ?
தாயதி வெளியீட்டில் “எழுத்தின் தடம் : ஈழப் படைப்புவெளி ” நூல் குறித்து 6/3/2023 அன்று
ஓர் விமர்சனம் எழுதினேன் .இன்றும் “ கொட்டாவி” விடுகிறேன் .தாயதியின் செல்நெறி யாது
? யோசிக்க வேண்டியுள்ளது .
அதுபோகட்டும் இவ்வளவு பொடி
எழுத்தில் அச்சிட்டு முதியோர்களை வருத்துவது சரியா ? [ நான் பொதுவாக தலைவலி தைலங்கள் பயன்படுத்துவதில்லை .சிங்கப்பூர் தோழர்
கொடுத்த ‘கோடாலி’ தைலம்கூட சும்மாவே கிடந்தது
.இன்று உபயோகிக்க வேண்டியதாயிற்று ]
கொட்டாவி
, ஆசிரியர் : அகமது ஃபைசல் ,தாயதி வெளியீடு,
கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044
24332924 .
பக்கங்கள் : 96 ,விலை : ரூ.95/
சுபொஅ.
13/3/2023.
0 comments :
Post a Comment