பனையேறிகளின் வாழ்க்கைப் பாடுகளூடே …

Posted by அகத்தீ Labels:

  


பனையேறிகளின் வாழ்க்கைப் பாடுகளூடே …

 

 

“ இன்னும் பாடு பேசி முடியலையா ?” என குமரி மாவட்டத்தில் சர்வசாதாரணமாக கேட்பார்கள் . பாடு பேசுதல் என்பது கதை பேசுதல் ,வம்பளத்தல் ,கஷ்ட நஷ்டங்களைப் பேசுதல் என பல தொனியில் பயன்படுத்தப்படலாம். மொத்தத்தில் வாழ்க்கைப் பாட்டைப் பேசுவதுதான். இல.வின்சென்டின் “ அக்கானி” நாவல்  நம்மோடு பனையேறிகளின் பாடு பேசுகிறது .

 

குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ,தோவாளை ,கல்குளம் ,விளவங்கோடு,குளச்சல் என ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் ஒவ்வொரு வகையாய் இருக்கும் அதிலும் மேற்கில் பனையேறும் மனிதர்களின் வாழ்க்கைப் பாடும் மொழியும் மிகவும் வித்தியாசமாகவே இருக்கும் , குளச்சல் கடல்புறம் போனால் அத்தமிழ் இன்னொரு விதமாக இருக்கும் . குறிஞ்சி ,முல்லை ,மருதம் ,நெய்தல் என தமிழ்கூறும் நல்லுலகின் நான்கு திணைகளும் உள்ள மாவட்டம் அது . இந்நாவல் அதன் ஒரு பகுதியைக் காட்டுகிறது . விளவங்கோடு மண்ணின் மொழியழகோடு பேசுகிறது.

 

 “ அக்கானி என்பது பனையின் சுண்ணாம்பு தடவிய கலயங்களில் வடியும் கள் . தெளிந்த அக்கானியில் மாங்காய் பிஞ்சைத் தல்லிப் போட்டு குடித்தால் ருசி ஆளைத் தூக்கும். “

 

 “ ‘ அக்கானி’ மேற்கு குமரி மாவட்டப் பனைத்தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல்.” என பொன்னீலன் அணிந்துரையில் சுண்டக் காய்ச்சி சொல்லிவிட்டார் .

 

“கடலுக்கு மீனு பிடிக்கப் போனவனும் ,பனையில அக்காணி எடுக்கப் போனவனும் திரும்பி வந்தாத்தாங் உண்டுன்னு சிம்மாவா செல்லிவச்சனம்.” என்கிற வாழ்க்கைப் பாட்டை ஞான முத்து , தங்கையன் இருவர் சாவு மூலமும் இந்நாவல் காட்சிப் படுத்துகிறது .

 

ஆயின் ஒரே வேறுபாடு ஞானமுத்து சாவுக்கு எந்த அரசு உதவியும் கிடைக்கவில்லை .தங்கையன் சாவுக்குப் பின் அரசு உதவி ரூ.5000 கிடைத்தது . விளவங்கோடு பூட்டேற்றி கிராமத்தில் நடக்கும் கதை இது .இடையில் அங்கு தொழிற் சங்கம் உருவானதும் ,கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடித்ததும் ,கிறுத்துவ இறையியல் அரும்பியதும் நாவலாக பரிணமித்திருக்கிறது .

 

பனையேறுவது மட்டுமின்றி , நெசவு ,மரச்சீனி நடவு ,புளி , கொல்லம் பழம் பருப்பு [ முந்திரி],மா  என பூட்டேற்றியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் வேர்விட்ட இதர தொழில்களையும் வாழ்வின் பாடுகளையும் இந்நாவல் பேசுகிறது .

 

மாத்தூர் தொட்டிப் பாலம் வருவதற்கு முன் நாயர் சாதியினர் மட்டுமே தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வலுவாக இருந்ததையும் ,சாதிய ஒடுக்கு முறையையும் ,தொட்டிப் பாலத்துக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்தில் எல்லா சாதியினரும் விவசாயம் செய்ய முடிந்தததையும் இந்நாவல் பேசுகிறது . தொட்டிப் பாலம் எனச் சொல்லிய போதும் தொங்கு வாய்க்காலாய் 115 அடிஉயரத்தில்  28 தூண்கள் தாங்கி நிற்கும் ஒரு கி மீ கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் ஏற்பாடு .காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது . இன்று குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையம்.

 

 “ வண்டி பள்ளிக்கு போவாதில… காலுதான் பள்ளிக்கு போவும் ,நொண்டாத நட..” என தம்பி மைக்கேலை நடக்க வைத்தாள் ராபேக்கா . பல மைல் நடந்து கல்வி கற்றதால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதன் சாட்சியாய் பூட்டேற்றி .

 

 “ அம்மிங்கிரெ … தூக்கினது தோஷமெங்கி … கெடந்த இடத்திலேயே யாமானக் கொண்டு போடியம் .. பெறவு நீங்க போய் தூக்கிண்டு வாரும் … துக்குல யாமானெ..” இது போன்ற சாதியத்துக்கு எதிரான ஆவேசம் நாவலில் பல உண்டு பூட்டேற்றியில்  சாதியின் கோரமுகமும் அதன் செவிட்டில் அறையும் புதிய எழுச்சியும் கதைப் போக்கில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது . பெரும்பாலும் கிறுத்துவ கதா பாத்திரங்கள் மூலமே நகரும் நாவலில் ஓரிடத்தில் இடம் பெறும் நாடகத்தில் ஓர் வசனம்,

 

 “ சாதிக்கொரு பங்காப் பிரிச்சி பூசெ வச்சா .. அங்கெல்லாம் கடவுளு இருக்க மாட்டாரு பண்ணயார … கல்லும் மண்ணும்தான் இருக்கம். யூதன்மாரு அண்ணு இயேசுவெ சிலுவையில் அறஞ்சி கொன்னுனம் … நீங்க சாதியில அறஞ்சி கொல்லுதிய ..”

 

கிறுத்துவத்திலும் ஊடுருவியுள்ள சாதியை நன்கு தோலுரிக்கிறது நாவல் .

 

சிவலிங்கம் மூலம் அய்யா வழிபாடும் வைகுண்டர் எழுச்சியும் தோள் சீலைப் போராட்டமும் நாவலில் விவரிக்கப்படுகிறது . மேலும் அம்மண்ணில் மெல்ல ஆர் எஸ் எஸ் தலை தூக்குவதையும் காட்சிப்படுத்தியுள்ளார் . மதக்கலவரத்தை தூண்டிவிட ஆர் எஸ் எஸ் செய்யும் சதிவேலைகளை இந்நாவல் தொட்டுக்காட்டியுள்ளது .

 

அரிசி பஞ்ச காலத்தில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியைக் கடத்தி ஜீவனம் நடத்தும் ஏழைப் பெண்கள் குறித்த சித்தரிப்பு நாட்டு நடப்பின் யதார்த்தம் பேசும்.

 

கிளாரா ,ராபேக்கா , தெரசம்மாள் ,சசிகலா , கமலம் ,அமலா ,ரெஜினா ,எலிசபெத் போன்ற ஒவ்வொரு பெண் கதாபாத்திரத்தையும் மிக நுட்பமாகச் செதுக்கி உள்ளார் இல.வின்சென்ட் . அதிலும் கிளாரா ,ராகேக்கா ,சசிகலா மிக நுட்பமான பாத்திரப் படைப்புகள் . இந்நாவலுக்கே கிளாரா என பெயர் சூட்டியிருக்கலாமோ என நான் எண்ணுகிறேன்.

 

கிளாராவும் ராபேக்காவும் எப்போதும் துணிச்சல்காரியாகவும் எங்கும் அநீதி பாரபட்சம் இவற்றுக்கு எதிராக  கேள்வி கேட்பவளாகவும் படைக்கப் பட்டுள்ளனர் . கிளாரா வாழ்வில் ஏற்பட்ட ஓர் பாலியல் வன்மத்தை அவள் எதிர்கொண்ட விதம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது .

 

” இது என்னெக் கேவலப் படுத்துன்னு நீ நெனச்சிய … அந்த ஆணாப் பொறந்தவனெக் கேவலப்படுத்துன்னு நாங் நெனச்சியன் .கருவில கலஞ்சுபோன சிசுக்களும் ,அப்பன் அம்மா பேரு தெரியாத அனாத பிள்ளைகளும் மனித சமூகத்துக்கு ஆண்கள் செய்த துரோகத்தின் அடையாளங்க …இப்ப இது யென் பிள்ளெ .. கலச்சி ரத்தக் கட்டியா பூத்தமாட்டேன் .”

 

“ நீங்க எனக்க வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படுதிய சாமி … நானோ .. எனக்கு வவுத்ல இருக்கிய கொழந்தெ வாழ்க்கெயப் பத்திக் கவலெப்படியன்..”

 

“ கிளாரா நீ மனுஷி .. நீதான் மனுஷி …நீதான் உயர்ந்த மனுஷி..”

 

இந்த கிளாரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் ஆதிக்கத்தை எதிர்த்து வெல்வதும் சிறப்பு .

 

மைக்கேல் ,சார்ல்ஸ் ,வில்சன் ,சேவியர் என இளைஞர்கள் முற்போக்காக , இடதுசாரியாக ,கம்யூனிஸ்டாக பரிணமிப்பது இயல்பாக நடக்கிறது . ஆசிரியர் ஜோசப் ஓர் அரிய பாத்திரப் படைப்பு . மைக்கேல் தன்னை முழுநேர அரசியல் பணிக்கு அர்ப்பணிப்பதுடனும் மைக்கேல் சசிகலா காதல் நிறைவேறுமா கேள்விக் குறியோடும் நாவலில் இருந்து விடை பெறுகிறோம். 

 

இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறை நிறைகளோடு உலவவிட்டிருப்பது நேர்த்தியான செயல் .காதல் , கல்யாணம் ,பருவதாகம் , பாலியல் வன்மம் ,ஆணாதிக்கம் எல்லாம் கலந்த வாழ்வின் பாடுகளை இல.வின்செண்ட் நீரோட்டமாய் சொல்லிச் செல்கிறார் .

 

 “பூட்டேற்றியில் 1958 முதல் 1974 வரை வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்துள்ளேன் . உண்மைகள் மட்டுமல்ல ,புனைவுகளும் கலந்த புதினம் இது . இடைச்செருகலாக 1978 காலத்தை ஒட்டிய நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன . குறிப்பாக விடுதலை இறையியல் சிந்தனைப் போக்கு , அருள் தந்தை எம். எக்ஸ். ராஜாமணி, தோழர் ஜி. எஸ். மணி, தோழர் டி.கொச்சுமணி ஆகியவர்களோடு நடந்த சந்திப்பு , பூட்டேற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் ,பனையேறிகளின் போராட்டம் , இக்கால வழுக்கள் கதையோட்டத்தையும் ,பாத்திரப் படைப்புகளையும் வலுவாக்கின .இவற்றுக்கு வாசகர் உலகம் வழுவமைதி காணும் என நம்புகிறேன்.” என ஆசிரியர் இல .வின்செண்ட் கொடுத்துள்ள வாக்குமூலம் மிக முக்கியம்.

 

நாவலின் பின் பகுதியில் உள்ள அரசியல் சார்ந்த பகுதிகள் ஒரு பகுதி இலக்கியவாதிகளுக்கு பிடிக்காமல் போகலாம். அவை நாவலின் வீரியத்தை குறைத்து விட்டதாக குறை சொல்லலாம். எனக்கோ அப்பகுதி சுருக்கப்பட்டாதாகக் கருதுகிறேன்.இன்னும் கொஞ்சம் விரிவாக்கி இருக்கலாமோ ?

 

 “ஏழைகளின் மீதும் , பாட்டாளிகள் மீதும் அன்பும் அக்கறையும் வச்சிருக்கிய ஒருத்தரு … மார்க்சியத்தையும் லெனினியத்தையும் படிச்சா தீப்பிளம்பாயிருவாரு …அதெக் கூடப் பிறப்புகளின் கரைச்சலோ ,காதலியின் கண்ணீரோ தணிக்க முடியாது… ஒரு புரட்சியில் முங்கி எழும்பினாத்தான் அது தணியும் பாத்துக்களுங்க …” என 1970 களின் மனோ நிலையோடு நிறையும் நாவல் நம் நெஞ்சக்கூட்டில் அதன் அக்னி முட்டையை அடைகாக்க வைக்கிறதோ ?

 

கல்வியில் முன்னேறிய குமரிமாவட்டத்தில் சாதியும் மதமும் இன்னும் ஆட்டம் போடுவதை எண்ணி என் மனங்குமைகிறது ;இந்நாவல் அந்த வெப்பிராளத்தை உசுப்பிவிட்டுவிட்டது .

 

நாம் கடந்து வந்த வாழ்வின் ஓர் தடத்தை வாசித்துப் பாருங்கள் !

 

 

அக்கானி  [ நாவல் ] , ஆசிரியர் : இலா.வின்சென்ட் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

www.thamizhbooks .com bharathiputhakalayam@gmail.com

பக்கங்கள் :330 , விலை : ரூ.330/

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

21/3/2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 


0 comments :

Post a Comment