கவியரங்கம் : ஒரு கனாக்காலம்

Posted by அகத்தீ Labels:




கவியரங்கம் : ஒரு கனாக்காலம்


எழுபதுகளிலும் எண்பதுகளிலும்  “கவியரங்கம்” என்பது ஒரு வலிமையான அரசியல் ஆயுதமாய்த் திகழ்ந்ததை இப்போது அசைபோட்டுப் பார்க்கிறேன் .

குறிப்பாக திமுக கவியரங்கை மிகவும் நுட்பமாய் பயன்படுத்திய காலம் ஒன்றிருந்தது .கலைஞரின் கவியரங்கம் பலரை ஈர்த்ததுண்டு .

இடதுசாரி அரசியலிலும் அன்று கவியரங்கம் காத்திரமான பாத்திரம் வகித்தது .

கவிஞர்கள் தணிகைச் செல்வன் ,கந்தர்வன் ,வெண்மணி .இன்குலாப் உள்ளிட்ட கவிஞர் படையின் அனல் பறக்கும் கவிதை வரிகள் அன்று இடது சாரி அரசியலை நோக்கி வரும் இளைஞர்களின் நரம்பை முறுக்கேறச் செய்தன .

கலை இலக்கிய மேடைகளில் மட்டுமல்ல ; வாலிபர் ,மாணவர் ,மாதர் சங்க மேடைகளிலும் கவியரங்கம் ஓர் இடத்தைப் பிடித்தது .இதன் வீச்சை இன்னும் அழுத்தமாய் புரிய ஒரு செய்தி.

சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு ஒன்றின் துவக்க நிகழ்வில் கவிஞர் தணிகைச் செல்வன் கவிதை பேரெழுச்சியாய் அமைந்தது . அக்கவியரங்கில் அவர் பாடிய கவிதை உடனே அச்சிடப்பட்டு ஆபிரம் பிரதிகள் விற்கப்பட்டன . வாலிபர் சங்க மாநில மாநாட்டில் அவரின் கவிதை ஆவேச உணர்ச்சியை ஊட்டியது .

இந்தக் கவிஞர்கள் பலர் துவக்கம் /முடிவு இவற்றை பலமேடைகளில் தொடர்ந்து பயன் படுத்துவர் . இடையில்  தலைப்புக்கு ஏற்ப கவிதை மாறும் .இடையிடையே மின்னல் வெட்டாய் நடப்பு அரசியலை குத்திக் கீறும் வரிகள் ; நெஞ்சை ஆழ உழும் தத்துவ விதைகள் ; நையாண்டி எரிமலை எல்லாம் இருக்கும் . ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் .

கவிதையை ஏற்ற இறக்கங்களுடன் வாசிப்பதே ஒரு பெருங்கலை .

 “கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
மனைவியைப் பறித்ததால் ராமனின் யுத்தம் நியாயம்
 துயிலினை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
உழுநிலம் பறிக்கப்பட்டால் உழவனின் கிளர்ச்சி நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் போர் புரட்சி
அனைத்தும் நியாயம் ! நியாயம் ! நியாயம் !
தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு
 தூக்கிடும் குஞ்சுகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்
 மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்…
 சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !
 சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
 பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
 பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்
 மறித்தவன் வென்றதுண்டா ? மறுப்பவன் உலகிலுண்டா? 
…………………………………………………………….. “
இப்படி ஆவேசமாய் தணிகை பொங்கிய போது சிலிர்த்திடும் இளைஞர் கூட்டம் .

 “நாளும் கிழமையும்
நலிந்தோர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும்
பெண்களுக்கில்லை”

இப்படி நறுக்கென கந்தர்வன் தலையில் கொட்டிய போது



“எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.
எம்.பி.சட்டையில் பல பை வைத்தார்.
மந்திரி, பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்”

எனக் கந்தர்வன் நையாண்டி செய்த போது


 “ பொதுகிளாசில் டீ கேட்க
தனி கிளாசில் டீ கொடுக்க
ஒரு டீயின் விலை
ஒண்பது உயிர்கள் ..”

என கந்தர்வன் சாட்டையைச் சொடுக்கிய போது .


“விதவிதமாய் மீசை வைத்தாய் – உன்
வீரத்தை எங்கே தொலைத்துவிட்டாய் ?”


எனக் கந்தர்வன் எரிமலையாய் பாய்ந்த போது

கவியரங்கம் அதிரும் ;கூட்டத்தில் வந்தோரின் இரத்தம் சூடேறும் .





 “தாயே தமிழ்த் தாயே
நீ தேனாக பாலாக வந்தது போதும்
இனிவரும் போது
சுரண்டலைச் சாய்கின்ற
கூரான வாளாக வா ! ”

என கவிஞர் வெண்மணி அழைத்த போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் .

அந்தக் கவியரங்கங்கள் வீழ்ந்தது ஏன் ? எப்படி ? ஆராய வேண்டும் .

தனிமனித துதி கவியரங்க மேடைகளில் நாற்றமெட்டுக்கத் துவங்கிய போது ;

தான் எழுதிய அனைத்து குப்பைகளையும் ஒரே மேடையில் கொட்டிவிட வேண்டுமென நேரம் காலமின்றி அறுக்கத் துவங்கிய போது ;

லத்திச் சார்ஜ் செய்து கூட்டத்தைக் கலைக்கும் மேடை பேச்சாளர்கள் போல் கவியரங்கிலும் கூர்மை, எளிமை, குத்தல், நக்கல் எதுவுமில்லாமல் அறுக்கத் துவங்கிய போது ;

சில முத்திரை வாக்கியங்களை தொடர்ந்து பயன்படுத்துவது என்பது வேறு ; எல்லா மேடையிலும் கிளிப்பிள்ளைப்போல் சொன்னதையே சொல்லத் துவங்கிய போது ;

மேடைக்கு வந்த பின் காகிதம் பேனா தேடி தன்னை வரகவியாய் பாவித்து கிறுக்க - அதையே வாசிக்கத் துவங்கிய போது ;

கவியரங்கம் என்றாலே  மிரண்டோடும் நிலை உருவானது .

இது என் தனிப்பட்ட கருத்து  .

இப்போதும் கவியரங்கை கூர்மையான ஆயுதமாய் திட்டமிட்டு கூரேற்றி பயன்படுத்த முடியுமே ! முயன்றால் என்ன ?

“ அன்னை விலங்கொடிக்க
ஆதிக்கப் பகை முடிக்க
தன்னைப் பலிதந்த
சிங்க இளைஞர்களே !
சிகப்பு வணக்கம் !

வெள்ளையர்கள் போனபின்பு
ஆளவந்த கொள்ளையர்கள்
அஹிம்சா தடியடியில்
சாத்வீகச் சிறைகளிலே
சரித்திரத்தின் பக்கங்களை
இரத்தத்தால் நிறைத்தவரே!
எம் இதயத்து வணக்கம் !

யுகயுகமாய் புகைந்து கொண்டிருந்த
வர்க்கபகைமையும் வர்ணப்பகைமையும்
வெண்மணியில்
வெறிகொண்டெரிந்த போது
வீழந்த மலர்களே
வீர வணக்கம்!

நான் [சு.பொ.அலி] கவியரங்க மேடைகளில்  வணக்கத்தோடு இப்படித்தான் தொடங்கினேன்..

ஏனோ அந்த காலம் மீண்டும் என் நினைவில் முட்டியது ….

[ இங்கு எடுத்தாளப்பட்ட கவிதைகள் அனைத்தும் நினைவிலிருந்து எழுதப்பட்டதால் சில பிழைகள் இருக்கக்கூடும் ]

சு.பொ.அகத்தியலிங்கம்





அவர்

Posted by அகத்தீ Labels:








a



அவர்


அவர் பலசாலி
ஒரே ஒரு பிரச்சனை
மூளைகிடையாது

அவர் மார்பு 56 இஞ்ச்
ஒரே ஒரு பிரச்சனை
இதயம் கிடையாது

அவருக்கு வாய் ரொம்ப பெரிது
ஒரே ஒரு பிரச்சனை
உண்மை பேசாது

அவர் தைரியசாலி
ஒரேஒரு பிரச்சனை
வீரம் மேடையில்தான் 

அவர் மனிதாபிமானி
ஒரே ஒரு பிரச்சனை
காரில் அடிபட்டு சாகும் நாயென்பார்

அவர் சாதனையாளர்
ஒரே ஒரு பிரச்சனை
பிணங்களின் மீது நிற்கும் போதே ..

இவர் யாரென
அறிவியோ
எம் அப்பாவி இந்தியனே!

அது சரி அவர் நமது
கதாநாயகனா ?
வில்லனா ?

என்னை உண் ! உன் விழிகளால்..

Posted by அகத்தீ Labels:






என்னை உண் ! உன் விழிகளால்



பச்சை வயல் ஏன்
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது ?

வளைந்த தென்னைமரம் ஏன்
என்னைப் பார்த்து கண்ணடிக்கிறது ?

குளமும் ஏரியும் ஓடையும் ஏன்
தாளங்கொட்டி என்னை அழைக்கிறது ?

மலையும் குன்றும் ஏன்
வழிமறித்து கூப்பிடுகிறது ?

கொஞ்சம் காது கொடுத்தேன் ஒரேகுரலில்
ஒவ்வொன்றும் என்னோடு பேசியது

கடைசியாக என்னைப் பார்த்துகொள்
இனியொரு வாய்ப்பில்லை !

ஓவியமாய்த் தீட்டிக்கொள் !
நிழல்படமாய் கிளிக்கிக் கொள் !

கவிதையில் அழகு செய் !
கதையில் வர்ணித்துமுடி !

வளர்ச்சி சுடுகாட்டில்
இனி எமக்கு இடமில்லை !

எட்டும் வழியெல்லாம் விரைந்து
என்னை உண் ! உன் விழிகளால்

சு.பொ.அகத்தியலிங்கம் .









நாடு என்பது

Posted by அகத்தீ Labels:







நாடு என்பது......

வளர்ச்சியின் பொருட்டு
வயல்களை அழிப்பது
தப்பே இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
கிராமங்களை  சுடுகாடாக்குவது
அதர்மம் இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
நீர்நிலை தூர்த்தல்
பிழையே இல்ல!!!!

வளர்ச்சியின் பொருட்டு
வனங்களை அழித்தல்
குற்றமே இல்லை !!!!

வளர்ச்சியின் பொருட்டு
மனிதரைக் கொல்லல்
பாவமே இல்லை !!

யாரின் வளர்ச்சி
என்றா கேட்டீர் ?
சமூகவிரோதியே !

காவி கார்ப்பரேட் வளர்ச்சி
என்பதறியா தேசவிரோதியே !
செத்துத்தொலை !!!!

நாடு என்பது
நாலய்ந்து பெருமுதலையே !
என்பதறிக !!!!

- சு.பொ.அகத்தியலிங்கம்.

ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கவில்லை .

Posted by அகத்தீ Labels:



“ஏதோ ஓர் உபாயத்தால் மனிதனின் மனதில் முழுமையான சமூக உணர்வைப் பரவச் செய்ய முடியாதா ?அது சாத்தியமானால்  ஒரு மனிதன் சிரித்தால் அந்த சிரிப்பின் அலை எல்லோரிடமும் பரவும் .ஒருவன் அழுதால் எல்லோருடைய மனமும் சோகத்தால் கனக்கும் .இதை சாத்தியமாக்க மதம் முயன்று தோற்றது .அரசியலாலும் இதைச் சாதிக்க இயலவில்லை. இதைச் சாதிக்க வேறு ஏதேனும் உபாயம் இருக்கிறதா ?”




ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கவில்லை .


நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பருவ வயதில் வாழ்க்கைப் போராட்டம் நிமித்தம் நகரத்துக்கு குடி பெயர்ந்தவரா ? ஓய்வு பெற்ற பின் அந்த கிராம வாழ்வை மீண்டும் அசை போடுபவரா ? முதல் கதையான ‘மதுபூர் வெகுதூரம்’ உங்களை உலுக்கிவிடும் .

இச்சிறுகதையைப் படித்த பின் ,எனக்கு நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை புழுதி விளையாடிய நான் பிறந்த சுசீந்திரத்தின் நினைவுகள் அலைமோதின ; இரவு தூக்கத்தை கொள்ளையடித்துவிட்டது .

சீல்பத்ரா எழுதிய 12 அசாமிய சிறுகதைத் தொகுப்பு இது .சாகித்திய அகதாமி விருது பெற்றது . 2010 ல் சு.கிருஷ்ணமூர்த்தியின் அருமையான மொழியாக்கத்தில் வந்த நூலை இப்போதுதான் படிக்க நேர்ந்தது .

 “ஒரு பாழடைந்த குடிசையைப் பார்த்தால் பார்ப்பவன் மனதில் தனிப்பட்ட உணர்ச்சி எதுவும் தோன்றாது .ஆனால் பாழடைந்த மாளிகையைப் பார்த்தால் அவனுக்கு ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்படும் .” என்கிறார் .

 “மதுபூர் இவ்வளவு காலமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கவில்லை .மாற்றங்களே இயல்பாகக் கொண்ட இவ்வுலகில் மதுபூரின் மக்களும் அடியோடு மாறியிருக்கிறார்கள் .’ மெய்தானே !

 “ பின்னோக்குப் பார்வை முன்னேற்றத்துக்கு முரணானது என்று சொல்லலாம் ; ஆனால் என் மனம் மீண்டும் மீண்டும் மதுபூருக்கு பறந்து போய்விடுகிறது .எனக்கு வயது ஏற ஏற இந்தப் போக்கு அதிகரிக்கிறது .”

எனக்கும் அப்படித்தான் ; உங்களுக்கு ..?

 “நிலைமை” . “அந்நியமானவன்”, “சூழல்”, “மாசு” , “ஊர்வலம்” ,”தொடர்பு” ஆறுகதைகளும் முதுமையின் உளவியலை மிக நுட்பமாகப் பேசுகிறது .,போற்றும் விழுமியம் ; அன்றாட நாட்டு நடப்பு ; சமூக அக்கறை இவை முதியோரின் உளவியலில் விளைவித்த தாக்கங்களைச் சொல்லும் கதைகள் இவை .

ராமர் ஜென்மபூமி என உருவாக்கப்பட்ட தவறான அரசியல் நிகழ்வுகளை மென்மையாக ஆனால் வலுவாக போகிறபோக்கில் குத்திக்கிழிக்கிற ஆசிரியரின் எழுத்து நுட்பம் வியக்க வைக்கிறது . நாட்டில் விஷமாய் பரவும் “பண்பாட்டு அகங்காரம்” " நெறியற்ற அரசியல்” பற்றி கவலை கொள்கிற மனிதன் . எப்படி பைத்தியக்காரனாய் பிறரால் பார்க்கப்படுகிறான் என்கிற அவலத்தைக் இக்கதைகள் உரக்கச் சொல்கின்றன.

 “போராட்டம்” , “ஜன்னலைத் திறக்காதே” இரண்டு கதைகளும் காதல் ,காமம் ,சந்தேகம் அகம்பாவம் , ஆதிக்க மனோபாவம்  இவற்றினிடையே பந்தடாடப்படும் படும்  வாழ்வைச் சொல்லுகிறது .

காரியம் முடிந்ததும் தூக்கி எறியும் சுயநல அரசியல்வாதியைத் தோலுரிக்கும்  “வட்டம் ” , ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல் வீட்டுக்குள் சுயவட்டத்துள் முடங்கும் நவீன குடியிருப்பின் வாழ்க்கை முறையை படம்பிடிக்கும்  “ஒரு குடியிருப்பு வளாகத்தில்” . மனைவியை அவளின் உணர்வை மறந்து திரியும் ஆண்களை சித்தரிக்கும்  “எரிச்சலூட்டுவது” என ஒவ்வொரு கதையும் நம்மோடு பேசும் செய்திகள்  அப்பப்பா ...

இந்நூல் நெடுக நம் குறிப்பு புத்தகத்தில் எழுதிவைக்கத் தகுந்த பலவரிகள் நிறைந்து கிடக்கிறது ; மாதிரிக்கு இரண்டை மட்டும் கீழே தருகிறேன்.

“ ஓர் ஊர்வலத்தின் முன் வரிசையில் கொடியை ஏந்திக்கொண்டு உற்சாகத்தோடு கோஷங்கள் எழுப்பியவாறு போகும் போது ஓர் இளைஞன் குண்டடிபட்டு இறந்தால் அவன் உண்மையில் பாக்கியசாலி .அழகிய கனவொன்றை உள்ளத்தில் தாங்கிக் கொண்டு சாவது எவ்வளவு சிறந்த அதிருஷ்டம் .கனவு உடைந்து போகும் முன்னரே நேரும் சாவு அது .”

“ஏதோ ஓர் உபாயத்தால் மனிதனின் மனதில் முழுமையான சமூக உணர்வைப் பரவச் செய்ய முடியாதா ?அது சாத்தியமானால்  ஒரு மனிதன் சிரித்தால் அந்த சிரிப்பின் அலை எல்லோரிடமும் பரவும் .ஒருவன் அழுதால் எல்லோருடைய மனமும் சோகத்தால் கனக்கும் .இதை சாத்தியமாக்க மதம் முயன்று தோற்றது .அரசியலாலும் இதைச் சாதிக்க இயலவில்லை. இதைச் சாதிக்க வேறு ஏதேனும் உபாயம் இருக்கிறதா ?”

மதுபூர் வெகுதூரம் , [ அசாமிய சிறுகதைத் தொகுப்பு ],ஆசிரியர் : சீல்பத்ரா,
தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி,வெளியீடு : சாகித்திய அகாதெமி .
பக் : 148 .விலை : ரூ.80/


- சு.பொ.அகத்தியலிங்கம் .
நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை , 10/06/2018.



அன்பும் அறிவும் உடைத்தாயின்...

Posted by அகத்தீ Labels:









அன்பும் அறிவும் உடைத்தாயின்... 

சு.பொ. அகத்தியலிங்கம் 




‘‘தப்பு, சரின்னு புத்திக்கு தெரிகிறது; மனசுக்கு உறைக்கவில்லையே ...”இதே வசனத்தை அல்லது இது போன்ற வசனத்தை எத்தனையோ திரைப்படங்களில், நெடுந்தொடர்களில், மெகா சீரியல்களில் கேட்டுக் கேட்டு காதே புளித்துவிட்டது .ஆனாலும் தொடர்கிறது .ஒவ்வொருவரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் இது போன்று சொல்ல நேர்ந்த சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அப்படியாயின் அன்பும் அறிவும் எதிரெதிர் நிற்பவையா? அல்ல . அல்ல . பின் ஏன் அப்படி ?அன்பையும் அறிவையும் புரிந்து கொள்வதிலும் கையாளுவதிலும் ஏற்படுகிற பிழைகள் ;இப்படி யோசிக்க வைத்து விடுகிறது .

அவன் மனைவியை அளவு கடந்து நேசிக்கிறான்; அவளும் எல்லை கடந்து பாசத்தைக் காதலைப் பிழிகிறாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் இருவருக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு விடுகிறது .ஏன் ? எப்படி ?ஒரு கதை சொல்லலாம் அல்லவா ?

மேலே குறிப்பிட்டது போன்ற காதலால் கருத்தொருமித்த ஒரு தம்பதியர் கொஞ்சி மகிழ்ந்திருக்கும் வேளை-வானுலா வந்த சிவபெருமானிடம் பார்வதி இந்தக் காதல் ஜோடியைக் காட்டி காதல் உன்னதமானது ; அன்பு மழையில் மூழ்கும் தம்பதியரைப் பிரிக்க உலகின் எந்த சக்தியாலும் முடியாது என்கிறார்.நம்ம சிவன் விஷமமாய் புன்னகைக்கிறார் .பார்வதி எரிச்சலுற்று, “ஏன்” என வெடித்துச் சீறுகிறாள் .சிவன் சொன்னார்: “ நாளை காலைக்குள் இருவரையும் பிரித்துக் காட்டுகிறேன்.”சவால் விட்ட சிவன் களத்தில் இறங்குகிறார் .

ஒரு குறி சொல்லும் பெண்ணாக வேடமிட்டு அந்தப் பெண்ணைச் சந்தித்து குறிசொல்லுகிறார் . “உன் வாழ்க்கை பெரும் மகிழ்ச்சி யாய் இருப்பினும், உன் கணவர் போன ஜென்மத்தில் நாயாய் இருந்தார். முழு ஆயுளும் முடியும் முன் இறந்து விட்டார். அதன் மிச்ச சொச்சமாகத்தான் தினமும் நள்ளிரவில் உன்னை நாவால் தீண்டு கிறார், இன்று இரவு நீயே தூங்குவது போல் நடித்து உண்மையை அறிக”

அதே போல் ஒரு பிராமண ஜோதிடராக வேடமிட்டு அந்த ஆணிடம் சென்று சொல்வார்;“உன் மனைவியும் நீயும் இரண்டறக் கலந்து காதல் வாழ்வு வாழினும் ; போன போன ஜென்மத்தில் அவள் (ஒரு சாதியைக் குறிப்பிட்டு) அந்த சாதியில் பிறந்து அந்த சாதிக்குரிய வர்ணக்கடமையை சரியாகச் செய்யாமல் செத்துவிட்டாள். எனவே நள்ளிரவில் அவள் உடம்பில் உப்புகரிப்பு மேலோங்கி இருக்கும்.ஐயம் இருந்தால் நள்ளிரவில் நாவால் தீண்டிப்பார்,!”

இருவரின் தூக்கமும் தொலைந்தது.அவள் தூங்குவது போல் நடிப்பாய் படுத்துக் கிடக்கிறாள்.அவன் மெல்ல எழுந்து அவளை நாவால் தீண்டுகிறான்..

“ச். சீ ... நாய் ஜென்மம்...” “ச்..சீ... ...ஜாதி கெட்டவள்...”வார்த்தைகள் தடித்து விழுந்தன . உறவு நொறுங்கியது .

சிவன் ஜெயித்த எக்காளத்தில் பார்வதியை வம்பிழுக்கிறார். அன்பு தழுவிய குடும்பம் நொறுங்கிவிட்டதே என பார்வதி புழுங்குகிறார் .

ஆனால் மூளையில் உறைந்து போயிருந்த சாதிய அழுக்கும் , வெறுப்பும் யாரோ ஒருவர் நிமிண்டிவிட்டபோது விஸ்வரூபமெடுத்து விளையாடிவிட்டது.

அறிந்த உண்மையக்கூட நொடியில் மறக்க வைத்து பகையாக்கிவிட்டது .அறிவு கொஞ்சம் அசந்த போது அன்பையும் அழிக்கும் வன்மம் விதைக்கப்பட்டுவிட்டது .

ஆக, அன்பைக் காக்கவும் அறிவின் துணை அவசியமாகும் . ஏனெனில் வள்ளுவன் சொல்லுவான்:“ அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்உள்  /அழிக்கல் ஆகா அரண்.”அதாவது வாழ்வின் இறுதிவரை காக்கும் பெரும் கருவி அறிவே ஆகும் . உள் புகுந்து பகைவரும் அழிக்கமுடியா கோட்டை அரணாகும் அது .நான் மேலே சொன்னது வெறும் கதை அல்ல; வாழ்வின் நடப்பு.

எனக்கு தெரிந்த காதல் மணம், சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்ட ஒரு டாக்டர் இணையர் ஒரு நாள் சாதாரணச் சண்டையில் அவசரப்பட்டு பயன்படுத்திய சாதியச் சொல்லாடல் மண முறிவை நோக்கி இருவரையும் விரட்டிவிட்டது. அறிவைக் கொஞ்சம் இழந்தபோது பேரிழப்பாகிவிட்டது. பின்னர் நேர் செய்ய மூன்றாண்டுகள் பெரும்பாடுபட வேண்டியதாயிற்று

.குடும்பம் நடத்துவதில், உறவைப் பேணுவதில், சமூக வாழ்வில் இணைந்து நிற்பதில் - ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறுவதில் அறிவின் பாத்திரம் மிகவும் காத்திரமானது .வெறும் அன்பைக் கொண்டு மட்டுமே வாழ்ந்துவிட முடியாது; வாழ்வின் சவாலை ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ள அறிவில் தெளிவும் உறுதியும் மிகமிக அவசியம்.ஆயினும் அன்பின் வலிமை ஆகப் பெரிது .மீண்டும் ஒரு கதை .

பொன்னீலன் எழுதிய “ காமம் செப்பாது” என்கிற கதை .கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? இல்லையா? இந்த திருவிளையாடற் புராண சினிமா காட்சியை அசை போட்டுக் கொள்ளுங்கள் .

பொற்றாமரைக் குளத்தில் இருந்து எழுந்து வந்த பின்னும் நக்கீரனுக்கு ஐயம் தீரவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான் .நள்ளிரவு அரைத் தூக்கத்தில் எழுந்து விறுவிறுவென்று சொக்கன் சன்னதிக்குப் போகிறான். அங்கே சொக்கனில்லை .மீனாட்சி சன்னதியில் கொஞ்சல் மொழி கேட்கிறது .இங்கிதமின்றி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறான் .

அங்கே மீனாட்சி மடியில் படுத்துக் கொண்டு கூந்தலை முகர்ந்தாவாறே சொக்கன் காதல் மொழி பிதற்றிக் கொண்டிருக்கிறான் .நக்கீரன் உள் நுழைய மீனாட்சி அவசர அவசரமாக எழுந்து தன் உடையைத் திருத்துகிறாள் வெட்கத்தோடு.

நக்கீரன் மீண்டும் ஐயம் கேட்கிறான் .சொக்கன் சொல்லுவான்;“ நக்கீரா ! காதலித்திருக்கிறாயா? காதலித்துப் பார், கூந்தல் மணக்கும். எச்சில் இனிக்கும். குழந்தையின் மழலை மொழி யாழைவிட குழலைவிட இனிதாவதைப் போல - சிறுகை அளாவிய கூழ் அமிர்தமாவதை போல ... போ... போ... போய் காதலித்துப் பார்.”

காதலின் மாயாஜாலம் புரிந்தவனாய் நக்கீரன் திரும்புகிறான்.

காதலும் அன்பும் குறையை மறைத்து நிறைவைத் தரும்; அந்த வெள்ள அன்பின் பெருக்கில் வாழ்க்கை சுகிக்கும் .குறை நிறைகளோடு ஒருவரையொரு வர் ஏற்பதே வாழ்வின் வெற்றியாகும் .
ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வ தென்பதன் பொருளென்ன?தமிழீழப் போர்ச் சூழலிலும் நாளாயினி தாமரைச் செல்வி எனும் பெண்கவிஞர் மொழிந்த காதல் வாழ்வு விடையாகும் .

“காதல் என்றால்என்னவென்று தெரியுமா உனக்கு ?

எனக்கே எனக்கான வாழ்வையும்

உனக்கே உனக்கான வாழ்வையும்

நீயும் , நானும்

மனம் கோர்த்து

வாழ்ந்து பார்ப்பதுதான்.

அதற்காக,

என் வாழ்வை,

என விருப்பை வெறுப்பை

எல்லாம் துறந்து

உனக்காய் மட்டும்

உன் விருப்பு வெறுப்போடு

உனக்காய் வாழ

எனக்கு இஷ்டமில்லை .

நீ நினைக்கும்

குருட்டு

செவிட்டு

ஊமைக் காதலியாய்

நான் இருப்பேன் என

நினையாதே!”


அன்பும் அறிவும் சங்கமிக்கும் சமத்துவ வாழ்வின் வாசல் இதுதானே!

“அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது”

-என்ற வள்ளுவரின் அளப்பரிய மெஞ்ஞானத்தோடு
“அன்பும் அறிவும் உடைத்தாயின்... என்ற

பொருள் பொதிந்த புதிய சொற்றொடரையும் சேர்ப்பது காலத்தின் தேவை அல்லவா?

நன்றி ; தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13/05/2018.

அகநெருப்பு

Posted by அகத்தீ Labels: