பன்முகம் காட்டும் கோசாம்பி ….
மாபெரும் ஆய்வறிஞர் டி. டி. கோசாம்பியின் நினைவு நூற்றாண்டு நடந்து முடிந்துவிட்டது . அதையொட்டி சில வெளியீடுகளும் , அதன் முன்னும் பின்னும் அவரது நூல்கள் சிலவும் தமிழில் வெளிவந்துள்ளன .
தோழர் மூ.அப்பணசாமி எழுதிய “வரலாறு – பண்பாடு- அறிவியல் : டி.டி.கோசம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்” எனும் நூல் மிகவும் காத்திரமானது . இந்திய பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் அக்கறைகொண்ட முற்போக்காளர்கள் அவசியம் இவைகளை வாசிக்க வேண்டும் .
இவற்றின் தொடர்ச்சியாக ’எதிர்பிழை’ வெளியீடாக ரிசி.சரவணன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள, “ டி.டி. கோசாம்பியின் ‘ மனதில் முகிழ்த்த கட்டுரைகள்’ ”[ இயக்கவியல் முறையில் பயிற்சிகள் ] நூல் முக்கிய கவனம் பெறுகிறது .
கோசாம்பியின் பார்வைப் பரப்பையும் நுட்பத்தையும் பன்முகத்தையும் பறைசாற்றும் 11 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் . பெரும்பாலான கட்டுரைகள் ஐம்பதுகளில் எழுதியவை . முதல் இரண்டு கட்டுரைகளும் மார்க்சிய தத்துவம் குறித்த சில குறிப்புகள் போல் டி டி கோசாம்பியின் பார்வையைச் சொல்லும் .
அடுத்துள்ள இரண்டு கட்டுரைகள் ஜவஹர்லால் நேருவை விமர்சனபூர்வமாகப் பார்க்கச் சொல்லுகிறது . ஆர் எஸ் எஸ் அணுகும் எதிர்நிலையில் அல்ல ; காங்கிரஸ் அணுகும் வழிபாட்டு அணுகல் அல்ல ,மாறாக நிறைகுறைகளை தேவையை உள்வாங்கிய கோணம் .
இது நாம் அறிய வேண்டியது . ஜவஹர்லால் நேரு எழுதிய ‘ கண்டுணர்ந்த இந்தியா’ [’டிஸ்கவரி ஆஃப் இந்தியா’] நூலுக்கு கோசம்பி…. எழுதிய விமர்சன மதிப்புரை இதில் உள்ளது .அந்த விமர்சனத்தில் நேரு புத்தகத்தில் இந்திய வரலாறு தொடர்பாக சில பிழைகளைக் கடுமையாக கோசம்பி சுட்டிக்காட்டி இருக்கிறார் . ஆனால் இந்த விமர்சனம் நேரு -கோசாம்பி இருவரின் தனிப்பட்ட நட்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்திய அறிவியல் மாநாட்டின் கணிதவியல் அரங்கின் பொறுப்பு கோசம்பிக்கு தரப்பட்டதன் மூலம் அறியலாம்.
இந்தியாவில் முதலாளித்துவம் காலெடுத்து வைத்த வர்க்கப் பின்னணியை கோசாம்பி சுட்டும் கட்டுரை முக்கியமானது . அதில் சோஷலிசத்தின் ஒரே மாற்றாக தன்னை முன் நிறுத்தும் பாசிசமும் அது முன் மொழியும் ‘பலமான மனிதர்’ [ தலைமை ]யும் என்பதால் வரும் ஆபத்தை முன் உணர்ந்து 1954 லிலேயே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது . நாம் இன்று அனுபவிக்கிறோம்.
சீனப்புரட்சி , ஏகாதிபத்தியம் ஆகிய கட்டுரைகள் மிக ஆழமானவை . அறிவியல் சுதந்திரம் குறித்த கட்டுரை இன்றைக்கும் உரக்கப் பேசப்பட வேண்டிய – அறிவியல் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டிய பிரச்சாரத்தின் தேவையை அடிக்கோடிடுகிறது .
அணிந்துரையில் இரா.முருகவேள் சொல்லி இருக்கிற ஒரு செய்தியுடன் நிறைவு செய்யலாம் .” சாக்ரடீசின் விசாரணை ,புத்தமத்ததின் வீழ்ச்சி, பாத்ரூஹரி ஆகிய கட்டுரைகள் நமக்கு முற்றிலும் எதிர்பாரா திறப்புகளைக் கொடுக்கின்றன.”
கோசாம்பி எனும் மாபெரும் மார்க்சிய அறிஞர் தனக்கு சரியெனப் பட்டதைத் தயங்காமல் உரைத்த மாபெரும் அறிவுஜீவி . எஸ் ஏ டாங்கே [சிறீபத் அம்ரித் டாங்கே] எனும் கம்யூனிஸ்ட் தலைவர் வேதகாலம் குறித்து எழுதியதை கடுமையாக எதிர்த்தவர் கோசம்பி என்பதும் கவனத்துக்கு உரியது .
சரளமான தமிழ்நடையில் நன்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நூல் கோசாம்பி பற்றி மேலும் மேலும் வாசிக்கத் தூண்டும் என்பதில் ஐயமில்லை .
டி.டி. கோசாம்பியின் ‘ மனதில் முகிழ்த்த கட்டுரைகள்’ [ இயக்கவியல் முறையில் பயிற்சிகள் ] , தமிழில் : ரிசி .சரவணன் , எதிர்பிழை பதிப்பகம் ,தொடர்புக்கு : 91 70103 76016 / ethirpizhaipublications@gmail.com பக்கங்கள் :168 , விலை : ரூ.200 /.
சு.பொ.அகத்தியலிங்கம்.
14 /09/26.

0 comments :
Post a Comment