ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கவில்லை .

Posted by அகத்தீ Labels:



“ஏதோ ஓர் உபாயத்தால் மனிதனின் மனதில் முழுமையான சமூக உணர்வைப் பரவச் செய்ய முடியாதா ?அது சாத்தியமானால்  ஒரு மனிதன் சிரித்தால் அந்த சிரிப்பின் அலை எல்லோரிடமும் பரவும் .ஒருவன் அழுதால் எல்லோருடைய மனமும் சோகத்தால் கனக்கும் .இதை சாத்தியமாக்க மதம் முயன்று தோற்றது .அரசியலாலும் இதைச் சாதிக்க இயலவில்லை. இதைச் சாதிக்க வேறு ஏதேனும் உபாயம் இருக்கிறதா ?”




ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கவில்லை .


நீங்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பருவ வயதில் வாழ்க்கைப் போராட்டம் நிமித்தம் நகரத்துக்கு குடி பெயர்ந்தவரா ? ஓய்வு பெற்ற பின் அந்த கிராம வாழ்வை மீண்டும் அசை போடுபவரா ? முதல் கதையான ‘மதுபூர் வெகுதூரம்’ உங்களை உலுக்கிவிடும் .

இச்சிறுகதையைப் படித்த பின் ,எனக்கு நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை புழுதி விளையாடிய நான் பிறந்த சுசீந்திரத்தின் நினைவுகள் அலைமோதின ; இரவு தூக்கத்தை கொள்ளையடித்துவிட்டது .

சீல்பத்ரா எழுதிய 12 அசாமிய சிறுகதைத் தொகுப்பு இது .சாகித்திய அகதாமி விருது பெற்றது . 2010 ல் சு.கிருஷ்ணமூர்த்தியின் அருமையான மொழியாக்கத்தில் வந்த நூலை இப்போதுதான் படிக்க நேர்ந்தது .

 “ஒரு பாழடைந்த குடிசையைப் பார்த்தால் பார்ப்பவன் மனதில் தனிப்பட்ட உணர்ச்சி எதுவும் தோன்றாது .ஆனால் பாழடைந்த மாளிகையைப் பார்த்தால் அவனுக்கு ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்படும் .” என்கிறார் .

 “மதுபூர் இவ்வளவு காலமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கவில்லை .மாற்றங்களே இயல்பாகக் கொண்ட இவ்வுலகில் மதுபூரின் மக்களும் அடியோடு மாறியிருக்கிறார்கள் .’ மெய்தானே !

 “ பின்னோக்குப் பார்வை முன்னேற்றத்துக்கு முரணானது என்று சொல்லலாம் ; ஆனால் என் மனம் மீண்டும் மீண்டும் மதுபூருக்கு பறந்து போய்விடுகிறது .எனக்கு வயது ஏற ஏற இந்தப் போக்கு அதிகரிக்கிறது .”

எனக்கும் அப்படித்தான் ; உங்களுக்கு ..?

 “நிலைமை” . “அந்நியமானவன்”, “சூழல்”, “மாசு” , “ஊர்வலம்” ,”தொடர்பு” ஆறுகதைகளும் முதுமையின் உளவியலை மிக நுட்பமாகப் பேசுகிறது .,போற்றும் விழுமியம் ; அன்றாட நாட்டு நடப்பு ; சமூக அக்கறை இவை முதியோரின் உளவியலில் விளைவித்த தாக்கங்களைச் சொல்லும் கதைகள் இவை .

ராமர் ஜென்மபூமி என உருவாக்கப்பட்ட தவறான அரசியல் நிகழ்வுகளை மென்மையாக ஆனால் வலுவாக போகிறபோக்கில் குத்திக்கிழிக்கிற ஆசிரியரின் எழுத்து நுட்பம் வியக்க வைக்கிறது . நாட்டில் விஷமாய் பரவும் “பண்பாட்டு அகங்காரம்” " நெறியற்ற அரசியல்” பற்றி கவலை கொள்கிற மனிதன் . எப்படி பைத்தியக்காரனாய் பிறரால் பார்க்கப்படுகிறான் என்கிற அவலத்தைக் இக்கதைகள் உரக்கச் சொல்கின்றன.

 “போராட்டம்” , “ஜன்னலைத் திறக்காதே” இரண்டு கதைகளும் காதல் ,காமம் ,சந்தேகம் அகம்பாவம் , ஆதிக்க மனோபாவம்  இவற்றினிடையே பந்தடாடப்படும் படும்  வாழ்வைச் சொல்லுகிறது .

காரியம் முடிந்ததும் தூக்கி எறியும் சுயநல அரசியல்வாதியைத் தோலுரிக்கும்  “வட்டம் ” , ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவது போல் வீட்டுக்குள் சுயவட்டத்துள் முடங்கும் நவீன குடியிருப்பின் வாழ்க்கை முறையை படம்பிடிக்கும்  “ஒரு குடியிருப்பு வளாகத்தில்” . மனைவியை அவளின் உணர்வை மறந்து திரியும் ஆண்களை சித்தரிக்கும்  “எரிச்சலூட்டுவது” என ஒவ்வொரு கதையும் நம்மோடு பேசும் செய்திகள்  அப்பப்பா ...

இந்நூல் நெடுக நம் குறிப்பு புத்தகத்தில் எழுதிவைக்கத் தகுந்த பலவரிகள் நிறைந்து கிடக்கிறது ; மாதிரிக்கு இரண்டை மட்டும் கீழே தருகிறேன்.

“ ஓர் ஊர்வலத்தின் முன் வரிசையில் கொடியை ஏந்திக்கொண்டு உற்சாகத்தோடு கோஷங்கள் எழுப்பியவாறு போகும் போது ஓர் இளைஞன் குண்டடிபட்டு இறந்தால் அவன் உண்மையில் பாக்கியசாலி .அழகிய கனவொன்றை உள்ளத்தில் தாங்கிக் கொண்டு சாவது எவ்வளவு சிறந்த அதிருஷ்டம் .கனவு உடைந்து போகும் முன்னரே நேரும் சாவு அது .”

“ஏதோ ஓர் உபாயத்தால் மனிதனின் மனதில் முழுமையான சமூக உணர்வைப் பரவச் செய்ய முடியாதா ?அது சாத்தியமானால்  ஒரு மனிதன் சிரித்தால் அந்த சிரிப்பின் அலை எல்லோரிடமும் பரவும் .ஒருவன் அழுதால் எல்லோருடைய மனமும் சோகத்தால் கனக்கும் .இதை சாத்தியமாக்க மதம் முயன்று தோற்றது .அரசியலாலும் இதைச் சாதிக்க இயலவில்லை. இதைச் சாதிக்க வேறு ஏதேனும் உபாயம் இருக்கிறதா ?”

மதுபூர் வெகுதூரம் , [ அசாமிய சிறுகதைத் தொகுப்பு ],ஆசிரியர் : சீல்பத்ரா,
தமிழாக்கம் : சு.கிருஷ்ணமூர்த்தி,வெளியீடு : சாகித்திய அகாதெமி .
பக் : 148 .விலை : ரூ.80/


- சு.பொ.அகத்தியலிங்கம் .
நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை , 10/06/2018.



0 comments :

Post a Comment