பண்டிகைகளைக் கம்யூனிஸ்டுகள் கொண்டாடலாமா ?

Posted by அகத்தீ Labels:

 



தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 4] 

 

பண்டிகைகளைக் கம்யூனிஸ்டுகள் கொண்டாடலாமா ?

 

 

கேள்வி :

கம்யூனிஸ்டுகள் பண்டிகைகளைக் கொண்டாடலாமா ? எந்தெந்த மதப் பண்டிகைகளைக் கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொள்கின்றனர் ? பண்டிகைகளுக்கு மாற்றாக கம்யூனிஸ்டுகள் முன் வைக்கும் நிகழ்ச்சிநிரல் யாது ?

 

பதில் :

 

டக் டன்னு இக்கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட முடியாது . எந்த மதப் பண்டிகையாயினும் பெரும்பாலான மக்களின்  உணர்வுகளுடன் கலந்தது . இதில் சரி ,தவறு என்பதற்கும் மேல் சமூகத் தேவை ஏன் என்கிற கேள்வி கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியம் .

 

பண்டிகைகள் தேவையா ? ஆம் . தேவையே ! பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இல்லாத நாடு தற்கொலை செய்து கொண்ட நாடென்பர் பண்பாட்டு ஆய்வாளர்கள் . எந்த மனிதனும் 24 மணி நேரமும் மூஞ்சியை சிமெண்ட் மூஞ்சியாய் இறுக்கி வைத்துக் கொண்டிருக்கவே முடியாது .ஆண்டு முழுவதும் வேலை ,தொழில் ,சம்பாத்தியம் என அலைந்து கொண்டிருக்கவே முடியாது .இளைப்பாறுதலும் கொண்டாட்டமும் மனித குலத்துக்கு தேவையே.  வரலாறு நெடுக எல்லா தேசத்திலும் ஏதேனும் பண்டிகையும் கொண்டாட்டமும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறதும் .இனியும் அது தொடரவே செய்யும் . அது எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கேள்வி .

 

ஒவ்வொரு சமூகத்துக்கும் பொருளாதாரம் எவ்வளவு முக்கியமோ பண்பாடும் அவ்வளவு முக்கியம் . காரல் மார்க்சின் எழுத்துகளைக் கூர்ந்து வாசித்தால் அவர் வாழ்ந்த சமூகத்தில் பேசப்பட்ட அத்தனை இதிகாசங்களையும் உள்வாங்கி இருப்பதையும் சமூகவியல் நோக்கில் அவற்றை அணுகி இருப்பதையும் புரிந்து கொள்ளலாம் .

எட்டு மணி நேர உழைப்பு ,எட்டு மணி நேர உறக்கம் என்பதோடு நிற்காமல் எட்டுமணி நேரம் பொழுதுபோக்கிற்கும் இதர வாழ்வியல் தேவைகளுக்குமாக கோரியது கம்யூனிஸம் அல்லவா ? இதுவே கொண்டாட்டங்களுக்கு என்றைக்கு கம்யூனிஸ்டுகள் எதிரி இல்லை என்பதைச் சொல்லும் . அது சமத்துவமிக்கதாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை .

 

 

தோழர் ஜார்ஸ் தாம்சன் எழுதிய மனித சமூகத்தின் சாரம்[ Human Essence,  George Thomson ]  என்கிற நூலைப் படித்தால் சமூகப் பார்வை விரியும் . பண்பாட்டை, வேதங்களைக் கொண்டு அளக்காமல் ; வியர்வைக் கொண்டு அளந்தவர் தாம்ஸன் . இசை ,நாட்டியம் எல்லாவற்றின் தோற்றமாக அடிநாதமாக உழைப்பே இருப்பதை அவர் சுட்டுவார் .  [ இதனை எழுத்தாளர் சு.சமுத்திரம் உங்கள் அளவுகோல் பூணூல் ; எங்கள் அள்வுகோல் பனைநார் என்பார் எளிமையாக .]

 

அடுத்து இத்தாலிய மார்க்சிய பேரறிஞன் தோழர் அண்டோனியா கிராம்ஸி பண்பாட்டை நாம் கையில் எடுக்கவில்லை எனில் பாசிஸ்டுகள் அதனை தம் குறுகிய நோக்கில் பயன்படுத்திவிடுவார்கள் என எச்சரித்தார் . இவ்விருவரையும் உள்வாங்காமல் நாம் இப்பொருள் பற்றி பேசவே முடியாது .

 

இனக்குழுவாக வாழ்ந்த போதே ஆடிப்பாடி மகிழ்ந்து இருக்க தலைப்பட்டதுதான் மனித குலம் . இயற்கை சார்ந்து வேட்டையில் பெரிய இரை கிடைத்த போது கூடிக் கொண்டாடி மகிழ்ந்து உண்டான் . பின்னர் வேளாண்மையில் ஈடுப்பட்ட போது வளச்சடங்குகள் என கொண்டாடினால்தான் பயிர் வளரும் என நம்பினான் . மாதவிடாய்க்கு பிறகுதான் பெண் கருத்தரிக்கிறாள் .நிலத்துக்கும் சிவப்பு நீர் தெளித்து மாதவிடாய் சடங்கு வளச்சடங்கு செய்தான் . மழைக்காக இடியைப்போல் மின்னலைப்போல் செய்து ஆடிப்பாடினான் . இந்த போலச் செய்தல்தான் சடங்காக பண்டிகையாக காலகதியில் பரிணாமம் பெற்றன .இந்த கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாய் அறுவடை ,பருவ மாறுதல் என கணக்கிட்டு விழா எடுத்தான் .இதற்கு எந்த மதப் புனைவும் இல்லை .அவை வாழும் வட்டாராம் சார்ந்தது பருவ மாறுதல் சார்ந்தது அறுவடை சார்ந்தது அவ்வளவுதான்.ஒரு வட்டாரம் அல்லது குழு இன்னொரு குழுவுடன் கொள்வினை கொடுப்பினை செய்த போது இந்த பண்டிகைகளும் கொண்டு கொடுத்து விரிந்து பரந்தது ஓங்கின .

 

ஆறாம் போப் ஆண்டவர் சொல்லும் வரை கிறுத்துவுக்கு பிறந்த நாள் கிடையாது .எதுவெனத் தெரியாது . கிறுஸ்துமஸ் கிடையாது . சில பகுதியினர் கிறுஸ்துமஸ் கொண்டாடியபோது வாட்டிகன் கத்தோலிக்க மத பீடம் எதிர்த்தது .மத விரோதம் என்றுகூடச் சொன்னது . குளிர் நாடுகளில் நீண்ட குளிருக்கு பிறகு சூரியனின் வருகையை மகிழ்வோடு வரவேற்றனர் .அதனையொட்டி டிசம்பர் 25 பழங்குடியினர் கொண்டாடினர் .அதுவே பின் கிறுத்துவின் பிறந்த நாளாக ஏற்கப்பட்டு கிறுஸ்துமஸ் கொண்டாடப்படலானது .

 

 

 

உலகெங்கும் மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த விழாக்களை , பண்டிகைகளை கபளீகரம் செய்து ,கதைகட்டி மதம் தன் வயப்படுத்திக் கொண்டன .இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அதுதான் நடந்தது . ஆகவேதான் புராணப் புளுகுகள் எல்லோருக்கும் தெரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் சடங்குகளும் கொண்டாட்டங்களும் தொடர்கின்றன .

 

 

 

மீண்டும் சொல்கிறேன் கொண்டாட்டங்கள் இன்றி தனிமனிதனும் சமூகமும் இருக்காது .எவ்வளவு நெருக்கடியிலும் இருண்ட காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் கொண்டாடி விடுவான் .

 

 

 

 சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை ,துர்க்கா பூஜை , தசரா , ராம்லீலா என மாநிலத்துக்கு மாநிலம் புராணக் கதையும் கொண்டாட்டமும் வேறு வேறு .பெயர் , வழிபாடு ,படையல் , சடங்கு, பார்வை எல்லாமே வேறு வேறு . நம்பிக்கையும் பல்வகைப்பட்டவை.

 

 

கல்வியை தமிழகமும் கேரளமும் கொண்டாடின வடக்கே ஏன் கொண்டாடவில்லை ? வடக்கே ராவணன் கொல்லப்பட்ட  ராம் லீலாதானே ! ராவணன் மீது ராமன் அம்பெறிவதுதானே ! வங்கத்தில் மகிஷாசனை துர்க்கா வதம் செய்வதுதானே ! கர்நாடகாவில் தசராதானே ! ஆந்திராவில் கொலு கல்யாண சந்தைதானே ! வடக்கும் தெற்கும் கிழக்கும் மேற்கும் வேறுவேறுதானே !பழகுடியினர் பார்வை முற்றிலும் வேறு . மகிஷாசன் எங்கள் தலைவன் அவனை வதை செய்வதை ஏற்க முடியாது என மகிஷாசனைக் கொண்டாடுவது மத்திய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலப் பழங்குடிகள் வாதம் .

 

 தீபாவளிக்கும் இதுவேதான் . நரகாசுரன் கதை தமிழகத்துக்கு வெளியே இல்லை . கேரளாவில் பார்ப்பனர் தவிர வேறுயாரும் தீபாவளி கொண்டாடுவதே இல்லை .மகாராஷ்டிராவில் நாலுநாள் லட்சுமி பூஜை . கொண்டாட்டம் சடங்கு பூஜை உணவு நாள்  உட்பட எல்லாம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் . சைவம் ஓர் நாள் .அசைவம் ஓர் நாள் . இப்படிகூட அவதாரமெடுக்கும். கர்நாடகாவில் தர்மன் சூதாடியதின் நினைவாக சூதாட்டமும் தீபாவளியில் ஒர் அங்கம். மகாராஷ்டிராவில் லட்சுமி பூஜை.

  

 என் கேள்வி , “ ஒரு நாடு ,ஒரு மொழி ,ஒரு பண்பாடு என வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் இந்துத்துவ வெறிக்கூட்டம் ,ஆர் எஸ் எஸ் பாஜக வகையறாக்கள் இந்தியா முழுவதும் ஒரே போல் சரஸ்வதி பூஜை ,ஆயுத பூஜை .கதையும் ஒன்றுதான் ஒரே போல்தான் கொண்டாட வேண்டும் என்று சொல்ல முடியுமா ? தீபாவளிக்கும் இதே கேள்வி  ஒரே கதை ஒரே பண்டிகைஎனச் சொல்ல முடியுமா ?

 

 இங்கே ஒவ்வொரு நூறு கிலோ மீட்டருக்கும் மொழி ,பழக்க வழக்கம் , உணவு ,உடை ,சடங்கு ,பூஜை ,சம்பிரதாயம் ,புராணாப் புளுகு எல்லாம் மாறும் . அந்த பன்மைத்துவமே இந்தியா . இதனை புரிந்து கொள்ளாத முரட்டு இந்துத்துவாவின் எந்த முயற்சியும் நீடித்து நிலைத்த வெற்றி பெறவே முடியாது . தற்காலிக தேர்தல் வெற்றிகளை சொல்லாதீர்கள் .பண்பாட்டு வெற்றிகளை பேசுகிறேன்.

 

தமிழரின் பொங்கல் பண்டிகைக்கு எந்த புராணப் புளுகும் இல்லை . ஆந்திராவில் கொண்டாடும் பொங்கலுக்கும் அப்படித்தான் .கேரளாவில் கொண்டாடும் ஓணம் மகாவிஷ்னுவுக்கு எதிரான மகாபலியின்  மகிழ்ச்சி கொண்டாட்டமல்லவா ? இவை நமக்கு அட்டி இல்லாத பண்டிகைகள் . எல்லோரும் கொண்டாடலாம் அல்லவா ?

 

 

பண்டிகைகள் நம்பிக்கையா ? பண்டிகைகளுக்கு மதச் சாயம் பூசப்பட்டபோதே அதன் மீது சடங்குகளும் சம்பிரதாயங்களும் திணிக்கப்பட்டன , பழங்குடி சடங்குகளும் புதுவடிவம் பெற்றன.ஆதியில் வேளாண்மை சார்ந்து அறுவடை சார்ந்து பருவமாறுதல் சார்ந்து உருவான பண்டிகைகள் கொண்டாட்டங்களே . அவற்றைப் பண்டிகை என்றுகூட அவர்கள் கருதி இருக்க முடியாது .அவற்றை ஹைஜாக் செய்து மதம் தன் சாயத்தை பூசியபோதுதான் பண்டிகை பிறந்தது . நம்பிக்கையை அதன் தலையில் சுமையாக்கப்பட்டது .

 

 ஆயினும் சம்பிரதாயம் சடங்கு ,வழிபாடு எனும் வட்டத்துக்குள்தான் அவை இன்னும் வட்டமிடுகின்றன .நம்பிக்கை எனும் பெரும் பரப்புக்குள் அரிதாகவே பண்டிகைகள் வருகின்றன . பண்டிகைகளை ஹைஜாக் செய்த மதம் தன் தேவை சார்ந்து புராணக் கதைகளைப் புனைந்து திணித்தன .ஆயின் அந்த புராணப் புனைவுகளை புளுகுகளை சட்டை செய்யாமல்தான் பண்டிகைகளை மக்கள் கொண்டாடுகின்றனர் . மதவெறி அரசியலாக்கப்படும்போது மட்டுமே, ‘ இது எங்கள் நம்பிக்கைஎனப் பீற்றப்படுகிறது.

 

இஸ்லாமியப் பண்டிகைகளின் பின்னால் புராணப் புளுகுகள் இருப்பதாகத் தெரியவில்லை .ஈகை ,சகோதரத்துவம் ,போர் என்கிற பண்புகளும் ,சில வரலாற்றுத் தடங்ளும் பேசப்படுகின்றன . அவற்றின் வேர் எதுவென்கிற ஆய்வு என்னிடம் இல்லை . பழுங்குடியினர் பழக்க வழக்கம் சடங்குகளின் தொடர்ச்சி அதில் இருக்கக்கூடும் .மதப்பிடிமானமும் அழுத்தமான இறை நம்பிக்கையுமே முன்னிறுத்தப்படுகின்றன . அவர்கள் அதையே பலம் என்கின்றனர் . ஆனால் அதுவே பிறரால் கடும் விமர்சனத்துக்கு உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆக ,அவை கொண்டாட்டம் என்கிற வரையறைக்குள் மட்டும் அடங்குபவை அல்ல என்பதால் மதநிகழ்வாகவேக் கருதமுடியும் . அவர்களும் அப்படித்தான் முன்மொழிகிறார்கள்.

 

பண்டிகைகள் கொண்டாட்டமா ? ‘தீபாவளி கொண்டாடினோம்என்கிற போது அது கொண்டாட்டம் . ‘தீபாவளி கும்பிட்டோம்என்கிற போது அது சடங்கு அல்லது வழிபாடு .பொதுவாய் எல்லா பண்டிகைகளுக்கும் இந்த இரண்டு முகமும் இருக்கிறது . சில பண்டிகைகளில் கும்பிடுவது முன்னுக்கு வந்து அதுவே ஓர் கொண்டாட்டமாய் முடிந்துவிடுகிறது . சில பண்டிகைகளில் கும்பிடுவது லேசாக தலைநீட்ட கொண்டாட்டம் மேலோங்கும். இப்போதுள்ள நுகர்வு கலாச்சாரமும் வணிகமயமாக்கமும் ஒரே மாதிரியான கார்ப்பரேட் எண்டர்டைமெண்டாக பண்டிகைகளை மாற்றி வருகின்றன . குழந்தைத் திருமணத்தை நியாயப்படுத்திய வடநாட்டு அட்ஷ்ய திரிதிகை நகை வியாபாரிகளின் மார்க்கெட்டிங் பெஷ்டிவெல்லாக இந்தியா முழுவதும் மூடநம்பிக்கையோடு வலம் வருகிறது .

 

தீபாவளிக்கு இந்து கடையிலேயே சாமான் வாங்கு” ,” திருவிழாவில் முஸ்லீம் கடைகளுக்கு அனுமதி கொடுக்காதே “ “ பண்டிகையில் இதை இதை சாப்பிடு இதை இதை சாப்பிடாதே!” என மதவெறி அரசியல் நகர்வுகள் கொண்டாட்டங்களைக் கலவரங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன . இந்து என்பதாலோ சொந்த சாதி என்பதாலோ கடன் தருவானா ? விலை குறைப்ப்பானா ?

 

நீர்நிலைகளை ரசாயணக் களிவுகளால் நச்சுப்படுத்தும் பண்டிகை நமக்கு வேண்டுமா ? சமையலுக்கு பயன்பட வேண்டிய பூசனிக்காயைத் தெருவெல்லாம்  உடைத்து விபத்தைப் பெருக்கும் மூடத்தனம் தேவையா ? காற்று மாசை ,ஒலி மாசை உருவாக்கும் கொண்டாட்டம் தேவையா ? இதுதான் அறிவு பூர்வமான கேள்வி .

 

பண்டிகைகள் வீண்செலவா ? அப்படி மட்டையடியாய்ச் சொல்லிவிட முடியாது . பண்டிகை சார்ந்து தொழில் ,வியாபாரம் எனும் பொருளாதாரச் சுழற்சி நிச்சயம் உண்டு .இந்த பொருளாதாரச் சுழற்சி இல்லாத பண்டிகையோ விழாவோ காலகதியில் இல்லாமலே போய்விடும். பண்டிகை விழாக்களுகென கடன் படுவதை ,ஆடம்பரமாகச் செலவு செய்வதை ஏற்க முடியாது . விமர்சிக்க வேண்டும் .கண்டிக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.பண்டிகைகளை எல்லோரும்கூடி மகிழ்ந்து கொண்டாடும் நிகழவாக்க வேண்டும் .இருப்பவன் இல்லாதவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் மேல் கீழ் என பேதமின்றி கொண்டாடும் வகையில் கொண்டாட்டங்களின் வடிவம் செதுக்கப்பட வேண்டும்.

 

மீண்டும் சொல்கிறேன் கொண்டாட்டங்கள் இன்றி தனிமனிதனும் சமூகமும் இருக்காது .எவ்வளவு நெருக்கடியிலும் இருண்ட காலத்திலும் ஏதேனும் ஒரு வகையில் கொண்டாடி விடுவான் .

 

 நமக்கு இப்போது தேவை மதச்சார்பு இல்லாத - மூடத்தனங்கள் இல்லாத கொண்டாட்டங்களும் விழாக்களும் பண்டிகைகளும் தேவை .தேவை.தேவை.கும்பிட அல்ல கொண்டாடி மகிழ்த் தேவை .

 

  நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன்,” என்கிற பழைய வைராக்கியத்தை தூக்கி எறிந்துவிட்டு ,பிறந்த நாள் ,திருமண நாள் இவற்றை ஆடம்பரமின்றி வாழ்த்துகளைப் பரிமாறி எளிமையாய்க் கொண்டாடுக!  

 

ஜனவரி 1. புத்தாண்டு , வாலென்டீன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் போன்றவை அனைவரின் கொண்டாட்டமாய் மாறிவருவதோடு கார்ப்பரேட் மார்க்கெட்டிங் டேஆகவும் மாறிவருகிறது என்பதைக் கவனத்தில் கொள்க .

 

 

 வட்டாரம் சார்ந்து ,நாட்டார் வழக்காறு சார்ந்து, சில விழாக்கள் ; சில வரலாற்று நிகழ்வுகளின் நினைவூட்டல் ; அவ்வட்டாரத்திற்கு பெருமை சேர்த்த சில ஆளுமைகளின் பிறந்த நாள் ; இவற்றை சடங்காக அல்லாமல் ; வறட்டுபொதுக் கூட்டமாக இல்லாமல் ,ஆடல் ,பாடல் உட்பட பல வண்ண நிகழவாகக் கூடிக் கொண்டாடுக!.

 

 

 

நமக்கு இருக்கவே இருக்கிறது தமிழர்கள் பண்பாட்டு விழா  பொங்கல் .இதனை ஒவ்வொரு ஊரிலும் பெரும் விழாவாக ஆடல் ,பாடல் ,விளையாட்டு ,விருந்து ,கலை ,இலக்கியம் ,ஓவியம் ,அறிவியல் ,சினிமா என ஒல்லும் வகையெல்லாம் உள்ளம் இணைந்து மகிழ்ந்து உறவாடி கொண்டாடுக! .ஊர் சேரி பேதம் அறக் கொண்டாடுக ! சாதி மத இன்னபிற வேற்றுமை களைந்து இணைந்து கொண்டாடுக !

 

 

 

கொண்டாட்டங்கள் போராட்டங்களின் எதிரி அல்ல ;போராட்டங்களின் ஒரு பகுதி .

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

19 /09 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் கேள்வி -பதில்வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0 comments :

Post a Comment