சொல் 5

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 5 [ 26 /8/2018 ]

ஒரு நாத்திகர் / பகுத்தறிவாளர் எவ்வளவு பிடிவாதமாய் கொள்கை உறுதியோடு இருப்பினும் வாழும் சமூகத்தில் சில சமரசங்களுக்கு ஆட்படுவது தவிர்க்கவே இயலாது .

இது சறுக்கல் அல்ல ; அது குடும்ப ஜனநாயகம் ,சபை நாகரீகம் , சமூக நல்லிணக்கம் என எதுவாகவும் இருக்கலாம்

ஆனால் ,அதனைச் சுட்டி அவர் பகுத்தறிவு போலியானது என முரட்டு ஆத்திகர் ஒரு புறமும் ;  கொள்கை நழுவிவிட்டார் என வறட்டு நாத்திகர் மறுபுறமும் அவரை வறுத்தெடுப்பர் .

சாராம்சத்தில் இருவரும் அவரை ஆத்திக சகதியில் தள்ளிவிடும் கைங்கர்யத்தையே செய்கின்றனர் .

எந்த ஆத்திகனாவது தலைவலி எனில் தைலம் தேடாமல் இருக்கிறானா ? பிரச்சனை எனில் போராடாமல் இருக்கிறானா ?

எல்லாம் அவன் செயல் என துரும்பையும் அசைக்காமல் இருக்கும் ஆத்திகர் எவரேனும் உண்டா ?

இதனால் எல்லாம் அவர் ஆத்திகத்தை கைவிட்டுவிட்டார் என எந்த நாத்திகரும் சொல்வதில்லை ; ஏனெனில் சமூக யதார்த்தம் அறிந்தவர் நாத்திகர் .
ஆத்திகரிடம் அந்த அணுகுமுறையை , நேர்மையை எதிர்பார்க்க இயலுமோ ?








சொல் 4

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 4 [ 25 /8/2018 ]

கணவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ மனைவிக்கு பலவித நோண்புகளை வழிபாடுகளை கட்டமைத்திருக்கிறது மதமும் பண்பாடும் .

மனைவியர் நலம் வாழ ஏதேனும் ஒரே ஒரு நோண்பையேனும் கணவர்களுக்கு கட்டமைத்திருக்கிறதா அதே மதமும் பண்பாடும் .

முளையடித்து மாட்டைக் கட்டிப் போடுவதுபோல் ஒரே வட்டத்தில் சுற்றிசுற்றி வரும் இயந்திரமாக பெண்களை மாற்றிடத்தான் அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் . 

ஆனால், புனித முலாம் பூசப்பட்டிருக்கும் .

பாலின சமத்துவமும் பொதுவாய் சடங்கு ,சம்பிரதாயங்களும் எதிர் எதிராகவே இருக்கும் ; இதை உணராமலே பெண்கள் அந்த செக்குமாட்டுத் தடத்தில் உழல்வதுதான் விநோதம் .

உணர்ந்தோரும் குடும்ப நிர்ப்பந்தத்தால் அதனோடு வாழும்படியான நிர்ப்பந்தச் சூழல் .என் செய்ய ?


சொல் 3

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 3 [ 24/8/2018 ]

ஒருவர் தான் சார்ந்த மதத்தை விமர்சிப்பது அவரது உரிமை ; அதன் நிறை ,குறைகளை அனுபவித்து உணர்ந்தவர் என்கிற முறையில்  சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டுதானே ?

பிறர் மதத்தை ஒருவர் விமர்சிக்க புகின் அது எல்லை மீறல் ; மதவெறி எனப் பொருள் கொள்ள வழி ஏற்பட்டுவிடுமே .

முன்னதைப் பின்பற்றுவோர் மதநல்லிணக்கம் , அமைதி விரும்புவோர் ;

பின்னதை பின்பற்றுவோரும் உபதேசிப்போரும் மதமோதலுக்கு துணை போவோர் ஆவர் . மூளையுள்ளோர் யோசிக்கக் கடவர் !

சொல் 2

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் … 2 [ 23/8/2018 ]

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என பயந்து பயந்து ஒடுங்குதல் சரியா ?

 எந்தச் சிப்பியில் எந்த முத்து இருக்குமோ என தேடித் தேடி அலைந்து ஓயுதல் சரியா ?

ஒரு பக்கப் பார்வை எப்போதும் ஆபத்து .

எல்லா கோணங்களிலும் யோசித்து நம்பிக்கையோடு முன்கை எடுப்பதும் ; எச்சரிக்கையோடு ஒவ்வொரு அடியை எடுத்து வைப்பதுமே புத்திசாலித்தனம் .

சொல் 1

Posted by அகத்தீ Labels:






தினம் ஒரு சொல் … 1 [ 22/8/2012 ]

கணவன் பகுத்தறிவாளராகவும் மனைவி சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடப்பவராகவும் இருப்பின் மனைவி அப்படியே செய்ய தடை இருப்பதில்லை .

ஆனால் ,

கணவன் ஆத்திகராகவும் மனைவி பகுத்தறிவாளராகவும் இருப்பின் மனைவி அப்படி தொடர கணவன் அனுமதிப்பதில்லை .

[ விதிவிலக்கை இங்கு குறிப்பிடவில்லை.]

ஏன் ?

ஆத்திகம் கருத்து சுதந்திரத்தின் பகை ;
பகுத்தறிவு கருத்துசுதந்திரத்தின் உயிர் .

மானுடம் சாகவில்லை

Posted by அகத்தீ Labels:







மானுடம் சாகவில்லை…



மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

மதவெறியால் குதறப்படும்
இனவெறியால் காயப்படும்
குறுகிய அரசியலால் மிரட்டப்படும்
கொடுங்கோலரால் கழுத்து நெரிக்கப்படும்

ஆனாலும்,

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !

கேரளம் உயிர் சாட்சி
மானுடத்தின் மனச்சாட்சி
குறுமதியாளர் வஞ்சகம் வீழ்த்தி
மானுடம் எழுந்ததின் பெருங்காட்சி !

மீட்புப் படையாய் மீனவர் தோழமை
முகம் தெரியாதோரும் உதவும் கரமாய்
நாடெங்கிலும் ஊற்றெடுத்த மனிதக் கருணை
சதிவலை கிழித்தது மானுட மேன்மை !!!

மானுடம் சாகாது ! மானுடம் சாகாது !
ஒரு போதும் மானுடம் சாகாது !




லேகியம்

Posted by அகத்தீ Labels:




லேகியம்


இந்த லேகியம்
நூற்றாண்டுப் பழமையானது
தின்ற நொடியிலேயே
பின்னோக்கி பயணம் துவங்கிவிடும்

அதிலும் முன்னோரின்
நல்லவைகளை அல்ல
அழுகிப் புழு நெளியும்
கெட்டவைகளின் வாரிசாய்
தன்னை வரித்துகொள்ளும்

துர்நாற்றமெடுக்கும்
பழம்பஞ்சாங்கத்தை
மணக்கும் சந்தணமாய்
மார்மீது பூசித்திரியும் …

அறியாமை ,அநீதி
அராஜகம் ,அயோக்கியத்தனம்
பொய் ,பித்தலாட்டம்
பாலியல் , வன்முறை ,
கும்பல் கொலை வெறி
அத்தனை நஞ்சையும்
நாடி நரம்பெல்லாம்
பீறிட்டுக் கொப்பளிக்கச் செய்யும்

மத வெறி ,இனவெறி
பெயர் எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

பாசிசம் ,நாசிசம் ,இந்துத்துவம்
தாலிபானிசம் . ஆண்டசாதி ,
வந்தேறி வாதம் ,இனவாதம்
எதுவாயினும்
லேகியம் ஒன்றுதான்

வெறுப்பு
வெறுப்பு
வெறுப்பு

-    சு.பொ.அகத்தியலிங்கம்