மெல்லத் தொலையும் தடயங்கள் ….
நான்கு வருடங்கள் முன் மகன் இந்த அடுக்ககத்தை காட்டினான்
.
பின் பக்கம் ஏரி .மூன்று பக்கமும் சோளக்கொல்லை .
அங்கொன்றுமாய் தனிதனி வீடுகள் .
சில சிறிய அடுக்ககங்கள் . மக்கள் நெரிசல் இல்லை .
இன்னும் பத்து வருடங்களுக்காவது பசுமையும் ஈரமும் இருக்கும்.
எல்லாவற்றையும்விட வனத்தின் தடயம் இன்னமும் மிச்சமிருந்தது
.
இரண்டாண்டுகளுக்கு முன் குடிவந்தோம் .
கழுகுகள் வட்டமிட்டன .ஆந்தைகள் அலறின .கிளிகள் சிறகடித்தன
.புறாக்கள் இங்கும் அங்கும் பறந்து பறந்து திரிந்தன. நாரைகள் அழகு காட்டின .பாம்புகள்
பயமுறுத்தின . எலிகள் தொல்லை தந்தன .
பேரனுக்கு காட்டி மகிழ்ந்தேன் .
இப்போது சோளக் கொல்லைகள்
மனைகளாக , வீடுகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன . வீடுகள் பெருத்துவிட்டன . மக்கள்
நெருக்கம் நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன . கடைவீதி உருவாகிக்கொண்டிருக்கிறது .
கழுகுகள் தென்படுவது அபூர்வமாகிவிட்டது . ஆந்தைகள் இருக்குமிடம்
தெரியவில்லை . புறாக்கள் அருகிவிட்டன .பாம்புகளும் முன்போல் இல்லை .நாரைகள் காணோம்
,
ஒரே நிம்மதி முன்பைவிட எலித் தொல்லை குறைந்திருக்கிறது .
பெங்களூரின் ஆதி ஏரிகளில் ஒன்றான – இயற்கையான ஏரியான காச்சநாய்க்கன்
ஏரியை பாதுகாக்க வேண்டிய ஏரி பட்டியலில் அரசு அறிவித்திருப்பது ஆறுதல் .
ஆனால் சுற்றிலும் குவியும் குப்பைக்கூழங்களை யார் தடுப்பரோ
? விடுமுறை நாட்களில் குடித்து கும்மாளவிட வரும் இளைஞர் கூட்டத்தை யார் கட்டுப்படுத்துவரோ
?
எப்படியாயினும் இன்னும் ஏரி உயிருடன் இருப்பதே பெருமகிழ்ச்சிதானே
!
திடீர் திடீரென சில நாட்களில் , நள்ளிரவு தாண்டிய பொழுதில்
காற்று திசைமாறி வீசும் போது ஒரே பிண நாற்றம் ,பீ நாற்றம் .
பயகான் என்கிற மருந்து தொழிற்சாலை அவிழ்த்துவிடும் வாயு என்கின்றனர்
. யாமறியோம் ஒரு போதும் உண்மையை…
அது போல் அடை மழை ஓங்கி அடித்து வீதியில் வெள்ளம் கரை புரளும்
போது சிவப்பு ,பச்சை ,நீலம் என பலவண்ணத்தில் சாக்கடை நீர் சுழித்தோடும் ..
எதுவும் ஆபத்து அற்றது என்றே சொல்கிறார்கள் … ஆனாலும் போபாலும்
யூனியன் கார்பைடும் நினைவில் வந்து அச்சுறுத்தத்தான் செய்கிறது …
ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கிறது … போபாலில்
இருந்து கற்றுக் கொண்டிருப்பார்களில்லையா ?
பெங்களூர் நகரின் இதயப் பகுதியிலோ அருகிலோ இடமோ வீடோ வாங்குவதை
சாதாரண நடுத்தர மக்கள் யோசித்தே பார்க்க முடியாது.அவர்களுக்கு இதுபோல்தான் குதிரும்
.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் .வாங்கியதில் பிழை இல்லை
. வாய்த்ததும் பிழையில்லை .மாறுதல் வேகமெடுக்கிறது என்பதே உண்மை .அந்த மாறுதல் எதை
நோக்கி?
வனத்தின் மிச்சசொச்ச தடயங்களும் வேகமாய் விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
வளர்கிறோமோ ?
தொலைகிறோமா ?
சு.பொ.அகத்தியலிங்கம்.
23/02/2019 மாலை
7.31.
1 comments :
சுற்றிலும் பத்து இருபது ஆழ்துணைக் கிணறுகள் போட்டு தண்ணீர் வியாபாரம் கொழுக்கிறது. தண்ணீர் பஞ்சம் தலைநீட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. ( எழுதுவதில் விடுபட்டது)
Post a Comment