சொற்கோலம்

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம் .8.

ஒவ்வொன்றாய்  கடந்து வந்தோம்  , ஒவ்வொன்றும் இனிதென்று காலம் கடந்த பின்னே அறிந்து கொண்டோம் !!!

குழந்தையாய் மீண்டும் பிறப்போமா ,தாய் தந்தை கொஞ்சுவதில் மகிழ்வோமா ;  நெஞ்சுக்குள் ஓயாது பேராசை ;

சென்றதினி மீளுமோ ?

குழந்தைப் பருவம் கவலை யற்றது எனினும் பிரச்சனை அற்றது அல்ல .

ஆம் தவழ ,உட்கார ,நிற்க ,பேச ,சூழலோடு இயைந்திட ; நாளும் தமக்குள் முட்டி மோதி, விழுந்து, எழுந்து, அழுது, சிரித்து, குழந்தைப் பருவம் பிரச்சனை அற்றது அல்ல . அது வளர்ச்சியின் பிரச்சனை.

சென்றதினி மீளுமோ ?

சிறார் ,மாணவர் என வளர வளர கவலை மெல்ல முளைக்கிறது ;பிரச்சனைகள் ஓய்வதில்லை .

தனது விருப்பமும் ஈடுபாடும் எவை என்பதை விளக்கவும் முடிவதில்லை  பெற்றோர் ,ஆசிரியர், பிறர் விளங்கிக் கொள்வதுமில்லை . முரணும் மோதலும் உண்டு. பகை ஆவதில்லை என்பதே மகிழ்ச்சி.

சென்றதினி மீளுமோ ?
 
வாலிபம் மேலும் சிக்கல் .கனவும் யதார்த்தமும் எதிர் எதிராய் .பிடிபடாத வாழ்வோடு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ..

கொண்டாட்டமும் கொந்தளிப்பும் ஒரு சேர போட்டிபோடும் .தடுமாறும் .தடம் மாறும் .தடம் பதிக்க வடம் பிடிக்கும் வயதின் போர்க்கோலம் .

சென்றதினி மீளுமோ ?

புரிந்தும் புரியாமலும் வாழ்வில் நுழையும் பருவம் .பொறுப்பு கனமாய் தோளை அழுத்தும் . உதறவும் முடியாது உதவவும் யாரும் வரமாட்டார் .

வாழ்க்கை படித்தது போலும் இல்லை .பிடித்ததாகவும் இல்லை .கனவு கண்டது போலும் கைகூடவில்லை .கைக்கு எட்டியதுகூட பல நேரம் வாய்க்கு எட்டுவதில்லை .

ஆனாலும் ஓரு ஈர்ப்பு எப்போதும் நாக்கில் தேன் தடவும் . மறுப்பு அடிநாக்கில் கசப்பாய் ஊறும் . சாதிக்கவும் சோதனையில் துவளவும் என சக்கரம் உருண்டோடும் .

காதலும் அன்பும் லட்சியக் கனவும் நெஞ்சம் நிறைந்தால் ;பயணக் களைப்பு கொஞ்சம் குறையும் .அதன் ஏற்ற இறக்கம் வாழ்வையும் பந்தாடும் . வாழ்வின் பொருளை  ஒவ்வொரு அசைவும் சொல்லிச் செல்லும் .

சென்றதினி மீளுமோ ?

அனைத்தையும் அசைபோடும் முதுமை . ஒவ்வொரு பருவமும் அததற்குரிய பிரச்சனைகளையும் பெரு மகிழ்ச்சியையு கொண்டது போலவே முதுமை என்பதும் .

ஓய்வு ஆனால் ஓய்வதில்லை . உறக்கம் ஆனால் உறக்கமில்லை . உற்சாகம் ஆனால் உற்சாகமில்லை .பிரச்சனை இல்லை .ஆனால் பிரச்சனை .பொறுப்பு இல்லை ஆனாலும் பொறுப்பு உண்டு .
உண்டு ,இல்லை இரண்டுமே  முதுமை  . உணர்ந்தால் இனிமை . இல்லையேல் வெறுமை .

முதுமைக்கு முடிவுண்டு ஆனால் மீளாது ஒரு போதும் .

ஒவ்வொன்றாய்  கடந்து வந்தோம்  , ஒவ்வொன்றும் இனிதென்று காலம் கடந்த பின்னே அறிந்து கொண்டோம் !!!

-         சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment