மெல்லத் தொலையும் தடயங்கள் ….

Posted by அகத்தீ Labels:


மெல்லத் தொலையும் தடயங்கள் ….


நான்கு வருடங்கள் முன் மகன் இந்த அடுக்ககத்தை காட்டினான் .

பின் பக்கம் ஏரி .மூன்று பக்கமும் சோளக்கொல்லை .

அங்கொன்றுமாய் தனிதனி வீடுகள் .

சில சிறிய அடுக்ககங்கள் . மக்கள் நெரிசல் இல்லை .

இன்னும் பத்து வருடங்களுக்காவது பசுமையும் ஈரமும் இருக்கும்.

எல்லாவற்றையும்விட வனத்தின் தடயம் இன்னமும் மிச்சமிருந்தது .

இரண்டாண்டுகளுக்கு முன் குடிவந்தோம் .

கழுகுகள் வட்டமிட்டன .ஆந்தைகள் அலறின .கிளிகள் சிறகடித்தன .புறாக்கள் இங்கும் அங்கும் பறந்து பறந்து திரிந்தன. நாரைகள் அழகு காட்டின .பாம்புகள் பயமுறுத்தின . எலிகள் தொல்லை தந்தன .

பேரனுக்கு காட்டி மகிழ்ந்தேன் .

இப்போது  சோளக் கொல்லைகள் மனைகளாக , வீடுகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன . வீடுகள் பெருத்துவிட்டன . மக்கள் நெருக்கம் நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன . கடைவீதி உருவாகிக்கொண்டிருக்கிறது .
கழுகுகள் தென்படுவது அபூர்வமாகிவிட்டது . ஆந்தைகள் இருக்குமிடம் தெரியவில்லை . புறாக்கள் அருகிவிட்டன .பாம்புகளும் முன்போல் இல்லை .நாரைகள் காணோம் ,

ஒரே நிம்மதி முன்பைவிட எலித் தொல்லை குறைந்திருக்கிறது .

பெங்களூரின் ஆதி ஏரிகளில் ஒன்றான – இயற்கையான ஏரியான காச்சநாய்க்கன் ஏரியை பாதுகாக்க வேண்டிய ஏரி பட்டியலில் அரசு அறிவித்திருப்பது ஆறுதல் .

ஆனால் சுற்றிலும் குவியும் குப்பைக்கூழங்களை யார் தடுப்பரோ ? விடுமுறை நாட்களில் குடித்து கும்மாளவிட வரும் இளைஞர் கூட்டத்தை யார் கட்டுப்படுத்துவரோ ?

எப்படியாயினும் இன்னும் ஏரி உயிருடன் இருப்பதே பெருமகிழ்ச்சிதானே !

திடீர் திடீரென சில நாட்களில் , நள்ளிரவு தாண்டிய பொழுதில் காற்று திசைமாறி வீசும் போது ஒரே பிண நாற்றம் ,பீ நாற்றம் .

பயகான் என்கிற மருந்து தொழிற்சாலை அவிழ்த்துவிடும் வாயு என்கின்றனர் . யாமறியோம் ஒரு போதும் உண்மையை…

அது போல் அடை மழை ஓங்கி அடித்து வீதியில் வெள்ளம் கரை புரளும் போது சிவப்பு ,பச்சை ,நீலம் என பலவண்ணத்தில் சாக்கடை நீர் சுழித்தோடும் ..

எதுவும் ஆபத்து அற்றது என்றே சொல்கிறார்கள் … ஆனாலும் போபாலும் யூனியன் கார்பைடும் நினைவில் வந்து அச்சுறுத்தத்தான் செய்கிறது …

ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கிறது … போபாலில் இருந்து கற்றுக் கொண்டிருப்பார்களில்லையா ?

பெங்களூர் நகரின் இதயப் பகுதியிலோ அருகிலோ இடமோ வீடோ வாங்குவதை சாதாரண நடுத்தர மக்கள் யோசித்தே பார்க்க முடியாது.அவர்களுக்கு இதுபோல்தான் குதிரும் .

கூட்டிக் கழித்துப் பார்த்தால் .வாங்கியதில் பிழை இல்லை . வாய்த்ததும் பிழையில்லை .மாறுதல் வேகமெடுக்கிறது என்பதே உண்மை .அந்த மாறுதல் எதை நோக்கி?

வனத்தின் மிச்சசொச்ச தடயங்களும் வேகமாய் விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

வளர்கிறோமோ ?

தொலைகிறோமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
23/02/2019  மாலை 7.31.



1 comments :

  1. அகத்தீ

    சுற்றிலும் பத்து இருபது ஆழ்துணைக் கிணறுகள் போட்டு தண்ணீர் வியாபாரம் கொழுக்கிறது. தண்ணீர் பஞ்சம் தலைநீட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. ( எழுதுவதில் விடுபட்டது)

Post a Comment