சொற்கோலம்.7.

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம். 7

பழகிப் போச்சு என்பதற்கும் மரத்துப் போச்சு என்பதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே

பழக்குவது என்பதற்கு அடக்குமுறையோ ,கடும் பயிற்சியோ கூடதேவை இல்லாமல் போகலாம்..

பாரம்பரியம்,பண்பாட்டுப் போதை போதுமானது .மதம் ,சாதி ,இனம் எதன் பேராலும் இருக்கலாம் …

எங்கள் குடும்ப வழக்கம் இதுதான் ,நாங்கள் இப்படித்தான் செய்வோம் ,நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்  இறுகிப்போன , காலத்துக்கு ஒவ்வாத ஒவ்வொன்றையும் பிடிவாதமாய் பற்றிக்கொண்டு மாரடிக்கிறோம்.

ஈரக்கம்பளியை போர்த்திக்கொண்டு மழையில் நனையும் மூடரைப்போல் எத்தனை காலம் திரியப் போகிறோம் ?

சுதந்திரமாய் கைவீசி மழையில் நடந்து நனைந்து மகிழ்ந்து பாருங்கள் அப்போதுதான் தூக்கிய எறியாமல் இத்தனைகாலம் சுமந்தது எதுவென விளங்கும் .

நேற்றின் தொடர்ச்சிதான் இன்று ;அதற்காக நேற்றிலேயே வாழ்ந்துவிட முடியாது .இன்றின் தொடர்ச்சிதான் நாளை ; ஆயின் இன்றை நிராகரித்து விட்டு நாளை இல்லை ;இன்றிலேயே தங்கிவிடவும் போவதில்லை .

கடந்த காலம் மக்கி உரமாகட்டும் ;மக்காததை அப்புறப்படுத்தியாக வேண்டும் . வருங்காலம் இலக்காகட்டும் .நிகழ்காலம் வாழ்வாகட்டும் .

மரத்துப்போன எதுவாயினும் அது பெரும் நோயின் குறியே .பழக்கம் ,வழக்கம் எதன் பொருட்டும் நோய்க்குறிக்கு இடம் தராதீர் !

ஓடிக்கொண்டே இருங்கள் ! மாற்றங்களை உள்வாங்கியபடியே , தகவமைத்தபடியே…. இலக்கு மட்டும் உன்னதமாக இருக்கட்டும் !!

-         சு.பொ.அகத்தியலிங்கம் .




0 comments :

Post a Comment