sorkolam 6

Posted by அகத்தீ Labels:


சொற்கோலம் .6.

முட்டை அழுகினால் சற்று தாமதமாக அப்புறப்படுத்தினும் கேடொன்றும் நிகழ்ந்துவிடாது .

தக்காளி அழுகினால் உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும் ; இல்லையேல் கூடைத் தக்காளியும் அழுகிவிடும் .

முட்டையும் அழுகியது ,தக்காளியும் அழுகியது ஆயினும் இரண்டும் ஒருப்போல் இல்லை . கையாளுவதற்கு ஒரு பக்குவம் தேவை .புரிதல் தேவை .

சமூக உளவியலும் அப்படித்தான் முடை நாற்றமெடுக்கும் பல அழுகல் சித்தாந்தங்களின் குவியலாக உள்ளது .தூய்மைப் படுத்த வேண்டும் .

எங்கிருந்து தொடங்குவது என்பதே அடிப்படையானக் கேள்வி .எங்கே தொட்டாலும் மினனதிர்ச்சி ஏற்படும் .அளவும் தாக்கமும் மாறுபடும் .

 ‘மானுடம் வென்றதம்மா’ எனக் கவிபாடும் பரந்த இதயத்துடன் மானுடம் ஒன்றுபட எவை எவை தடை என ஓர்ந்து நொறுக்குதல் ஓர் புறம் .

பேயிருட்டையும் ஓர் கணத்தில் கொல்லும் தீபச் சுடராய் முயன்று  அறிவொளி ஏற்றுதல் இன்னோர் புறம் .

நல்லது அல்லது பகுத்துப் பார்க்கும் பார்வையைத் தொலைத்து ; ஒரு கலயம் கள்ளுக்கு ஆசைப்பட்டு குடியிருக்கும் வீட்டுக்கு தீ வைக்கும் படித்த மூடரை தீமையின் கருவென அறிந்து அகற்றுக விரைந்து .

தனக்கு அநீதி இழைக்கப்பட்டதென ஓருத்தர் ஆவேசம் கொண்டு பொருதும் வேளையில் ; அவர் வேட்டியை கோவணத்தை உருவி தனக்கென உரிமை கொள்வேன் அழுகிய தக்காளியினும் அழுகிய மனம் கொண்டோன். ஆபத்தின் மூலவேர் .

இல்லாதிருப்பது இரக்கத்திற்குரியதே . தேவையை அடைய தேடிப் பயணித்தல் உயிர்த்தலின் பொருட்டே .

ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் கோடாரிக் காம்பாய் தீட்டிய மரத்தை பதம் பார்த்தல் அறமும் அன்று .மனிதமும் அன்று .

கொல்லும் வறுமையிலும் போராட்ட துணையாகு ! மானுடம் வெல்லும் வழி அது ஒன்றே .இன்றும் .என்றும் .

-         சு.பொ.அகத்தியலிங்கம்.



0 comments :

Post a Comment