corkolam 5

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .5. அந்த நாய்க்குட்டியின் வலது முன்னங்கால் ஒடிந்து தொங்குகிறது .வாயிலும் பெரிய கிழிசல் . ஒற்றைக்காதும் பிய்ந்து கிடக்கிறது . உடல் முழுக்க அழுக்கு அப்பியுள்ளது . அந்த நாய்க் குட்டிக்காகத்தான் இரண்டு குழந்தைகளுக்குள் சண்டை .அடம் பிடித்து அழுகின்றன . வேறு அழகழகான புதிய நாய் பொம்மைகள் இருந்தாலும் பழைய உடைந்த நாய்க்குட்டி பொம்மை மீதே குழந்தைக்கு அலாதி பாசம் . அன்புக்கு ஊனம் தடையல்ல ; அழகும் பொருட்டல்ல. அந்த காலொடிந்த நாய் பொம்மைக்கு முத்தம் ஈந்து குதுகலிக்கிறது குழந்தை . அது மட்டுமல்ல உடைந்த பேனா மூடி , நசுங்கி கிடக்கும் பழைய தகர டப்பா , பற்பசை வாங்கிய அட்டைப் பெட்டி ,சக்கரம் கறன்றுவிட்ட கார் பொம்மை , உருக்குலைந்து கிடக்கும் குட்டி பாப்பா பொம்மை இப்படி குழந்தையை ஈர்க்கும் ஒவ்வொன்றும் நம்மை ஏதோ சிந்திக்கத் தூண்டுகிறது . விலை உயர்ந்ததில் இல்லை ; விருப்பமானதைக் கொஞ்சி விளையாடவே குழந்தைகள் ஆர்வம் காட்டுகின்றன .கிடைக்காவிடில் அழுது புரண்டு அதை எடுத்துக் கொள்கிறது . அழகு பொம்மைகள் அலமாரியில் கொலுவிருக்க உடைந்த பொம்மைகளோடு படுக்கையில் உறங்கவும் ,சாப்பாடு ஊட்டவும் குழந்தைகள் எப்போதும் பிரியப்படுகின்றன . குப்பையாய்ச் சேர்ந்திருக்கும் உடைந்த பொம்மைகளை தூக்கி எறிந்துவிட அம்மா பலமுறை எண்ணியுள்ளார் .முயற்சித்துள்ளார் . தூங்கும் போது அவற்றை அள்ளிக் கொட்ட முயற்சித்த தாய் ,குழந்தை விழித்ததும் அழுமே என தன் முயற்சியில் தோற்றுப் போகிறாள். குழந்தைகளுக்கு எப்போதும் ஏன் ஒன்றைப் பிடிக்கிறது .காரணமில்லை. .பிடிக்கிறது .அவ்வளவுதான் .அவர்களின் உலகமே தனி. குழந்தைகளின் கட்டற்ற அன்பையும் பிரியத்தையும் வளர வளர எங்கே தொலைத்து விடுகிறோம் ? கொஞ்சம் வெட்கத்தையும் கவுரவத்தையும் விட்டு குழந்தைகளிடம் கற்றுக் கொள்ளலாமே ! சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment