sorkolam 4

Posted by அகத்தீ Labels:

சொற்கோலம் .4. “நாற்காலியைத் தேய்க்கிறான் ,நாற்காலிப் பைத்தியம் ,நாற்காலித் திமிர் ,நாற்காலி ஆசை, நாற்காலி சதி ,நாற்காலி வெறி இப்படி என்னைக் குற்றம் சொல்கிறீர்களே நியாயமா ?” “ நான் என்ன பிழை செய்தேன் ? மூடன் உட்கார்ந்தாலும் அறிஞன் உட்கார்ந்தாலும் நான் வேறுபாடு பார்ப்பதில்லை.” “ குபேரன் உட்கார்ந்தாலும் பிச்சைக்காரன் உட்கார்ந்தாலும் நான் பிரித்தறிவதில்லை.” “குற்றவாளி உட்கார்ந்தாலும் அப்பிராணி உட்கார்ந்தாலும் நான் பேதம் பார்ப்பதில்லை . யோக்கியன் அயோக்கியன் எல்லாம் எனக்கு ஒன்றுதான்” “இற்று ஒடியும் வரை என் மீது அமர்வோரை சுமப்பதே என் பணி . நீங்களே உடைக்காத வரை முகத்தைச் சுழிக்காமல் , வெறுப்பைக் காட்டாமல் உழைக்கிறேன். உங்களின் ஆன்மீக அகராதிப்படி நான் ‘கர்ம யோகி’.என்னைப் பழிக்கலாமா ?” “ சரி,சரி நாற்காலி ! நீ ரொம்பவும் அளக்காதே ! உனக்காக நடக்கும் சண்டைகளும் அட்டூழியங்களும் நீ அறியாததா ?” “ குசு போட்டாலும் , குசுகுசுவென ரகசியம் பேசினாலும் நீ அறிவாயே ! என்றைக்கேனும் அதை உரக்கச் சொன்னது உண்டா ?” “ நான் மரக்கட்டை .எனக்கு உயிர் இல்லை .உணர்ச்சி இல்லை .ஆனால் இரத்தமும் சதையும் உயிர்துடிப்பும் உள்ள எத்தைனையோ பேர் கண்ணெதிரே நடக்கும் அநீதிகளைக் கண்டு உதட்டைக்கூட அசைக்காமல் மவுனம் காக்கிறார்களே ! அதற்கு என்ன சொல்கிறீர்கள் ?” “ என்னிடம் பதில் இல்லை .உன் முன் தலைகுனிகிறேன் ..” என்னுள் கேள்வி விஸ்வரூமெடுத்தது , “ தவறு நாற்காலியிடமா ? சகித்து சகித்து ஜடமாகிப் போன நம்மிடமா ?” சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment