சொற்கோலம் 10

Posted by அகத்தீ Labels:



சொற்கோலம் .10….

அனைத்துக்கும் ஆசைப்பட வேண்டிய பருவம் ஒன்றுண்டு . ஒவ்வொன்றாய் ஆசையை அறுத்தெறியும் பருவமும் ஒன்றுண்டு .

பின்னது போல் முன்னதில் ஆசையை அறுப்பதென்பது பிஞ்சில் பழுத்ததாகாது ; பிஞ்சில் வெம்பியது ஆகும் .

பின்னதிலும் ஆசையைத் தொலைக்க முடியாது அலைவது ஆரோக்கியமும் அல்ல ஆளுமையும் அல்ல ; ஆதிக்கமும் வெறியும் ஆகும் .

பற்றறு பற்றறு என்பது சுலபம் .பற்றறுப்பது சுலபமல்ல . மணல் கடிகாரம் போல் கடைசி சொட்டுவரை ஏதோ ஒரு பற்றிருக்கும் .

அதிகாரப் பற்றைத் துறப்பது ஆகப் பெரும் துறவாகும் .துறவியும் துறக்காத பற்று அது . அதிகாரம் செய்யாமலிருந்தாலே முதுமை மரியாதையை மாண்பைத் தக்க வைக்கும் .

தவறுகளிலிருந்தே நீ கற்றுத் தெளிந்தாய் ; அடுத்த தலைமுறையும் அவ்வாறே கற்றுத் தெளிவார்கள் . நீ இல்லாமலும் உலகம் இயங்கும் .உணர்ந்து அதிகாரப் பற்றறு !


 “என் அனுபவத்தில் … “என சொல்லுவதை நிறுத்து … உனது அனுபவத் தெளிவே இறுதியானது அல்ல .அனுபவமும் என்பது உன்னோடு முடிந்து போவதுமல்ல .தலைமுறை தலைமுறையாய் அடித்துத் திருத்தி தேவைக்கு ஏற்ப செப்பனிட்டுக் கொண்டே இருப்பது .

எல்லாவற்றிலும்  மூக்கை நுழைப்பதை நிறுத்து ! மூக்கு உடைபடாது .முதுமைக்கு அழகாகும் . கேட்டால் மட்டுமே சொல் .அதுவும் இறுதித் தீர்ப்பாக அல்ல ;பரிசீலனைக்கான முன்மொழிவாய் .

சொன்னதை அப்போதே மறந்துவிடு .நீ சொன்னதை ஏற்பதும் உதறுவதும் அவரவர் முடிவு . அவரவர் தேவை .சூழல் .இதை உணர்ந்து கொள் .

ஒட்டி வாழ வேண்டும் ஆயின் பாசப்பசையோ வெறெந்த பசையோ குழைத்துத் தடவி ஒட்டி விடக்கூடாது . எப்போதும் விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும் .

கொஞ்சங்க் கொஞ்சமாய் உடலை உள்ளத்தை இலகுவாக்கி எந்த நொடியும் பறந்து செல்ல தயார்படுத்திக் கொண்டே இருப்பதே முதுமையின் இனிமை .

சு .பொ.அகத்தியலிங்கம்.



0 comments :

Post a Comment